மருந்துகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மருந்துகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

23.3.16

340 மருந்துத் தடைக் குழப்பங்கள்



Image result for tablets and syrups images

இதுவரை இத்தனை மருந்துகளை ஒரே சமயத்தில் தடை செய்ததில்லை.  தடை செய்ததற்கான காரணமும் சரியாய்த் தெரியவில்லை.  இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிமிசுலைட் பல வருடங்களுக்கு முன்னரே தடை செய்யப்பட்டும் தடையின்றி மார்க்கெட்டில் கிடைத்து வந்தது.  இது  போன்ற இன்னும் சில மருந்துகளும் உண்டு.  இவைகளை மற்ற நாடுகளில் விற்பதில்லை. ஆனால் தடை செய்யப்பட்டதாய்ச் சொல்லப்பட்டாலும்   இந்தியாவில் கிடைத்து வந்தது.  உதாரணமாக சிசாப்ரைட்,  ஆக்ஸிபினைல் பியுடசோன் (சுகான்ரில்) போன்ற மாத்திரைகள்.  
 
 
                         Image result for tablets and syrups images         Image result for corex cough syrup images

இதில் காம்பினேஷன் ட்ரக்ஸ் என்று சொல்லப்படும் ஒன்றுக்கும் மேற்பட்ட மருந்துகளின் கூட்டணியில் விற்கப்படும் மருந்துகளே அதிகம்.  கூட்டில் இணைந்திருக்கும் சில மருந்துகள் தவறான விளைவை ஏற்படுத்துவதாய்ச் சொல்லப்படுகிறது அல்லது  கண்டறியப் பட்டுள்ளதாய்ச் சொல்லப் படுகிறது.  உதாரணமாக Pfizer நிறுவனத்தின் கொரெக்ஸ் மருந்து.   இதற்கு எங்கள் வீட்டிலேயே ரசிகர் மன்றம் உண்டு!  இந்த இருமல் சிரப்பையும், விக்ஸ் ஆக்ஷன் 500 எக்ஸ்ட்ரா  என்று விற்கப்பட்ட மாத்திரைகளையும் உடனடியாக சந்தையிலிருந்து விலக்கிக் கொள்வதாய் சம்பந்தப் பட்ட நிறுவனங்கள் அறிவித்துள்ளன.  இருமல் சிரப்கள் மற்றும் அவில் மாத்திரைகள் போதை மாத்திரை போலப் பயன் படுத்தப் படுகிறது என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.  இந்த மருந்துகளுக்கு நிறைய மக்கள் அடிமைகள்!
 

                Image result for phensedyl cough syrup images         Image result for vicks action 500 extra images
 
சில நிறுவனங்கள் இந்தத் தடைக்கு நீதிமன்றத்தை அணுகித் தடை பெற்றிருப்பதாய்ச் சொல்லப்படுகிறது.  அவர்கள் நஷ்டம் அவர்களுக்கு!  இதுவரை தயாரித்து வைத்திருக்கும், சேமிப்பில் இருக்கும் மருந்துகளை என்ன செய்வார்கள்?  மருந்து விற்பனை என்பது மிக அதிகமான லாபம் வைத்து விற்கும் வியாபாரமாகவே பார்க்கப் படுகிறது.  இந்த நஷ்டம் கூட அவர்களின் லாபத்தில் நஷ்டமாகவே இருக்கலாம்.
 
ஒவ்வொரு பெரிய புகழ் பெற்ற நிறுவனத்தின் மருந்துகளின் பெயரிலேயே, அதே நிறத்தில் உள்ளூர்த் தயாரிப்புகள் சாதாரணமாகக் கிடைக்கும் என்பார்கள்.  அவற்றை வாங்கி 'கவுண்டர் சேல்ஸ்' எனப்படும் விற்பனையில் பெரிய நிறுவனங்கள் விற்கும் விலையிலேயே விற்பார்கள் என்றும் சொல்வாகள்.  இதை எல்லாம் நிரூபித்துக் கொண்டிருக்க முடியாது.  அவை வேறு தளம்.  இங்கு அதைப் பற்றி வேண்டாம்.
 
தடை செய்யப் பட்டிருக்கும் இந்த மருந்துகளின் தயாரிப்பை நிறுத்தச் சொல்லி முதலில் தயாரிப்பாளர்களுக்குச் சொல்லி விட்டு, ஏற்கெனவே சந்தையில் இருக்கும் மருந்துகளை விற்பனை செய்ய நேரம் கொடுத்திருக்க வேண்டும் என்பது மருந்துத் தயாரிப்பாளர்களின் கருத்தாயிருக்கக் கூடும்.  சரி என்றுதான் படுகிறது.

 
பெரு முதலாளிகளுக்குச் சாதகமாய் எடுக்கப்பட்டிருக்கும் முடிவு இது என்று சொல்பவர்கள் முன்வைக்கும் வாதம், 'இத்தனை நாளாய் உபயோகித்துக் கொண்டு வந்த மருந்துகள்தானே?  திடீரென்று நிறுத்தச் சொன்னால் மக்களுக்கு இத்தனை நாளாய் நாம் சாப்பிட்டு வந்த மருந்துகளின் மீது நம்பிக்கையின்மை தோன்றாதா?  அது தவறான மருந்தை நமக்கு பரிந்துரைத்திருக்கிறார்கள் என்று மருத்துவர்கள் மீதும் அவநம்பிக்கைத் தோன்றுமே..  மேலும், இந்த மருந்துகளை மருத்துவர்கள் ஏற்கெனவே பரிந்துரைத்திருக்கும் அடிப்படையில் தயார் செய்யப் பட்டவைதானே?  இது போன்ற கூட்டு மருந்துகளை சிறு நிறுவனங்களே தயாரிக்கின்றன.  அதுவும் இந்திய தயாரிப்புகள். இனி ஒவ்வொன்றையும்தனித் தனியாகப் பரிந்துரைக்கப்பட்டு, அவற்றைத் தனித் தனியாக வாங்க வேண்டும் என்றால் செலவும் அதிகமாகும்.  எப்படி, எப்போது, எதைச் சாப்பிடவேண்டும் என்பதில் நோயாளிகளுக்குக் குழப்பமும் ஏற்படும்' என்கிறார்கள்.
 
இந்தக் கூட்டு மருந்துகளில் நிறைய பாதக அம்சங்கள் உண்டு.  சில மருந்துகளில் நமக்குத் தேவை இல்லாத ஒரு மருந்து இணைந்திருக்கும்.  குறிப்பாக வலி நிவாரணிகளிலும், இருமல் மருந்துகளிலும்.
 
இந்த மருந்துகள் விற்கப் படுகின்றனவா என்று பார்ப்பதில் மருந்துக் கட்டுப்பாட்டு நிறுவன அதிகாரிகளுக்கு பெரிய கஷ்டமாக இருக்கும்.  (லாபமாகவும் இருக்கலாம்!!!)

சில டயாபடிக் மருந்துகள் குழப்பம் விளைவிப்பவை.  உதாரணமாக கிளைமிப்ரமைட் மற்றும் மெட்ஃபார்மின் மாத்திரை கூட்டுத் தயாரிப்புகள் போன்றவை.  இதில் முதலில் சொல்லப் பட்டிருக்கும் கிளைமிப்ரமைட் சாப்பாட்டுக்கு முன்னர் சாப்பிட வேண்டியது.  மெட்ஃபார்மின் சாப்பாட்டுக்குப் பிறகு சாப்பிட வேண்டியது.  இவை இரண்டையுமிணைத்து ஒரே மாத்திரையாகத் தருகிறார்கள்.  இதை சாப்பிட்ட பிறகே சாப்பிடச் சொல்லி மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். 
 
     
                   Image result for janumet images   Image result for janumet images
 
இன்னொரு வகைக் குழப்பம் அதே மெட்ஃபார்மின் உடன் சிடாகிலெப்டின், வில்டாகிலெப்டின், அகர்போஸ் போன்ற மருந்துகளின் சேர்க்கை.  இதில் எப்படிக் குழப்பம் வரும் என்றால் ஒரு சர்க்கரை நோயாளிக்கு சிட்டாகிலெப்டின் ஒரு நாளைக்கு 100 மி கி சேர வேண்டியதாய் இருக்கும்.  அதே சமயம் மெட்ஃபார்மின் 1000 மி கி அல்லது 1500 மி கி சேர வேண்டியதாய் இருக்கும்.  கடைகளில் கிடைப்பது 50/1000 என்றோ 100/1000 என்றோ இருக்கும்.  இதிலும் சாப்பாட்டுடன், சாப்பாட்டுக்குப் பின் பிரச்னைகள் ஒருபுறம் என்றால் மறுபுறம் இந்த 50 மிகி, 100 மி கி குழப்பங்கள்.
 

Image result for vildamet images

தனியார் மருத்துவமனைகளில், சிறப்பு மருத்துவர்களைப் பார்த்து, இந்த மருந்துகளை வாங்கும் நடுத்தர, மேல்தட்டு மக்களுக்கே இந்தப் பிரச்னை என்றால், அரசாங்கப் பொது மருத்துவமனையில் சிகிச்சை எடுக்கும் கீழ்த் தட்டு மக்களுக்கு தாங்கள் என்ன சாப்பிடுகிறோம், எதற்குச் சாப்பிடுகிறோம் என்றே அறியாமல்,  கொடுத்ததைச் சாப்பிடும் கலவர நிலவரம் ஒரு புறம். 

இந்த அரசாங்க மருத்துவமனைகளில் என்ன கிடைக்க வேண்டும் என்பதை அரசாங்கத்தின் அதிகாரிகளும், அவர்களுக்கு நன்மை புரியும் மருந்து நிறுவனப் பிரநிதிகளும் முடிவு செய்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.  மேலே சொன்னபடி ஒவ்வொரு மருத்துவமனைகளுக்கும் நிதி ஒதுக்கீடு கிடைத்த உடன், அவர்கள் மருந்துகளை மொத்தமாக வாங்க ஒரு டெப்போ உள்ளது.  அங்கு சென்று வாங்க வேண்டும். கிடைப்பதைத்தானே வாங்க முடியும்?  ஒன்றும் இல்லாததற்கு இதாவது கிடைத்ததே என்று அதை வாங்கி நோயாளிகளுக்கு வழங்க வேண்டிய நிலைமை.

Image result for imatinib images

இந்தியச் சந்தையின் மீது ஒரு கண்..  இல்லை, இல்லை  பல கண் வைத்திருக்கும் பன்னாட்டுத் தயாரிப்பாளர்கள் எதை, எப்படிக் காசாக்க வேண்டும் என்று தெரிந்தே வைத்திருக்கிறார்கள்.  நோவார்ட்டிஸ் நிறுவனத்தின் இமாடினிப் மாத்திரை மீதான வழக்கு நினைவிருக்கும்.  இப்போது வந்திருக்கும் இந்த நடவடிக்கை மாறாமல் தொடருமா, தொடர்ந்தால் அதனால் என்ன பயன் விளையும், இதனால் யாருக்கு லாபம் என்பதை எல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
 
 
 
நன்றி  :  படங்கள் இணையத்திலிருந்து...