முத்து காமிக்ஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முத்து காமிக்ஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

12.6.13

(முத்து) காமிக்ஸ் நினைவுகள்


ராமலக்ஷ்மி தன் முத்துச்சரம் பக்கத்தில் காமிக்ஸ் நினைவுகளைப் பகிர்ந்திருக்கிறார். அங்கு பின்னூட்டமிட்டபோதும் முகநூலிலும் என்னுடைய காமிக்ஸ் விருப்பத்தையும் கடைசிப் புத்தகத் திருவிழாவில் வாங்கிய மாயாவி புத்தகத்தைத் தொடர்ந்து அது பற்றி எழுத நினைத்திருந்தேன் என்றும் சொன்னேன். பதிவிடுங்கள் படிக்கிறேன் என்று பதில் சொல்லியிருந்தார். வாய்ப்பைத் தவற விடாமல் இந்தப்  பதிவு! நன்றி ராமலக்ஷ்மி.

                  

"இளமை நினைவை இசைக்கும் தெருக்கள்..." பாடல் கேட்டிருக்கிறீர்களா? "அள்ளித் தந்த பூமி அன்னை அல்லவா" பாடலில் வரும் வரி அது. இளமை நினைவை இசைக்க பாடல், கவிதை, காதல் போன்ற நினைவுகளோடு காமிக்ஸ் புத்தகங்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.

                                       

சொல்லப் போனால்  மற்ற எல்லா விஷயங்களையும் விட இது இன்னும் நினைவில் இருக்கிறது. ஆர்வமும் குறையவில்லை. இப்போதும் காமிக்ஸ் புத்தகங்கள், அதுவும் குறிப்பாக மாயாவி, லாரன்ஸ்-டேவிட், ஜானி நீரோ-ஸ்டெல்லா, ரிப் கெர்பி, காரிகன், முகமூடி வேதாளர் கதைகளை விற்கும் கடைகளில் சிறுவர்கள் இருக்கிறார்களோ இல்லையோ, அந்தக் காலச் சிறுவர்கள் கூட்டமாக நிற்கிறார்கள்!

                        

ஒருவருக்கு படிக்கும் பழக்கம் ஆரம்பிப்பதே காமிக்ஸ் புத்தகங்களால்தானோ! அப்போது அப்படித்தான்! புத்தகங்களில் முதலில் கவர்ந்தது இதுதான். இவை புகழ் பெற்றதனால்தான் கல்கி, குமுதம் போன்ற பத்திரிகைகளில் சித்திரக் கதைகள் வந்தன. குமுதத்தில் வந்த சித்திரக் கதை 'ப்ளான் பட்டாபி' நினைவில் இருக்கிறது. 'செல்லம்' சித்திரத்தில். கல்கியில் ஒரு இளவரசன், இளவரசி கதை... தலைப்பு நினைவில்லை.

                           

 ஐம்பது பைசா முதல் தொண்ணூறு பைசா வரை காசு கொடுத்து வாங்கிய முத்து காமிக்சுக்கு முதலிடம்! முத்து காமிக்ஸில் இரும்புக்கை மாயாவிக்கு முதலிடம்! இதைப் படிக்க ஆரம்பித்துதான் மற்ற புத்தகங்கள் படிக்கத் தொடங்கினேன்! ஆரம்பகாலத்தில் எல்லோரையும் போல(த்தானே?) இவர்கள் எல்லாம் நிஜமாகவே இருப்பதாக நம்பிய ஆரம்பகாலம் உண்டு.

                       

"ஹேய்... கிழடுகள் துப்பாக்கி வைத்துக் கொண்டு விளையாடக் கூடாது" , "இதை இங்கிருந்தும் இயக்குவேன்" (அவர் ஒரு இடத்திலும் கை வேறு இடத்திலும் இயங்கும்! எதிரிகளைத் தாக்க கை விரலில் துப்பாக்கி, நச்சுப் புகை என்ற வசதிகள்) போன்ற வசனங்கள் இன்றும் நினைவில். பின்னாளில் 'யாரானா' படத்தில் அமிதாப் கிளைமேக்சில் வயதான வில்லன் இவர் மீது பாயும்போது "ஏய் பெரிசு... இன்னொருமுறை இப்படிச் செய்ய வேண்டாம்...வயதானவர்கள் மேல் நான் கைவைக்க மாட்டேன்" என்று சொல்லும் வசனத்தின்போது மாயாவியின் இந்த வசனம் நினைவுக்கு வந்தது!

                                    

இந்த வசனங்கள் லண்டனில் வெளியான ஒரிஜினல் கதைகளின் வசனங்கள்தானா தெரியாது! ஒவ்வொரு புத்தகத்திலும் மாயாவியின் வரலாறு இருக்கும். அவர் பெயர் க்ராண்டேல். கையில் பொருத்தப்பட்ட இரும்புக்கையை மின்சாரத்தைச் செலுத்தினால் தாங்க முடியாத உடல் வேதனையுடன் அவர் மாயமாக மறைவர் - கை தவிர. ரசிக்கும்படி இருக்கும்!  அந்தக் கால மொழிபெயர்ப்பு,  சீரியல் வசனங்கள் தனி பாணியில் இருக்குமே,  அது போல இதன் வசனங்கள் தனி வாசனை கொண்டவை!

                                      

வாங்கி வாங்கி கள்ளிப் பெட்டியில் சேர்த்து வைத்திருந்த புத்தகங்களை யார் எடுத்துச் சென்றார்கள் என்றே தெரியாது! இப்போது பழைய நினைவில் புத்தகத் திருவிழாவில் மாயாவி புத்தகம் ஒன்று வாங்கினேன். ஐந்து புத்தகங்கள் 400 ரூபாய் என்றெல்லாம் இருந்தது. அதில் நான் தேடும் புத்தகங்கள் இருக்கிறதா என்று கேட்டால், 'பிரித்துப் பார்க்கக் கூடாது. இருந்தால் இருக்கலாம்' என்றார்கள். கண்ணில் பட்ட ஒன்றை மட்டும் 100 ரூபாய் கொடுத்து வாங்கி வந்து படித்தேன். இரண்டு மூன்று கதைகளின் தொகுப்பு. இப்போதைய விகடன் சைஸ். 290 பக்கங்கள்.

                              

ஸ்பானிய சித்திரக்காரரான Jesus Blasco தான் இரும்புகை மாயாவியை வரைந்தவர்.  கதை எழுதியவர் Henry Kenneth Bulmer என்று எஸ் ரா பக்கத்திலிருந்து அறிந்தேன். அந்தப் படங்களில் இருந்த மாயாவி ஒரிஜினல். இப்போது நான் வாங்கியிருக்கும் மாயாவி போலி!!!!!  நல்ல வண்ணக் காகிதத்தில் தெளிவாக அச்சிடப் பட்டிருக்கும் அப்போது. இப்போது பேப்பரின் தரமே சரியில்லை. சிறிய புத்தகமாயினும் ஒரு பக்கத்துக்கு இரண்டு படமாகத்தான் இருக்கும். படிக்க வசதி, எளிது, சுவாரஸ்யம்.

                                 

அப்போதே அந்த மாயாவி, இந்த மாயாவி, என்று மாயாவி பெயரிலேயே நிறைய போலி மாயாவிகள் புத்தகமும் வரும். புத்தகங்களில் முத்து காமிக்ஸ். இந்த்ரஜால் காமிக்ஸ், ராணி காமிக்ஸ், லயன் காமிக்ஸ், வாசு காமிக்ஸ்  என்று வரிசையாக வந்தாலும் முத்து காமிக்ஸ் தான் ஸ்பெஷல். நான் விலை கொடுத்து வாங்கியது முத்து காமிக்ஸ் மட்டும்தான். முல்லைத் தங்க ராசு ஆசிரியர் என்று தெரியும், நினைவில் உள்ளது.

                                  

பொது எதிரி அ கொ தீ க வை எதிர்க்கும் மாயாவி தவிர முத்து காமிக்ஸின் மற்ற ஹீரோக்கள்... மாயாவி போல மறைந்து  நின்று தாக்குவதை விட நேருக்கு நேர் மோதும் லாரன்ஸ் - டேவிட் , துப்பறியும் சாகசத்துக்கு ரசிக்க ஜானி நீரோ - ஸ்டெல்லா, ஏதோ ஒரு கவர்ச்சி அப்புறம் பின்னாளில் வந்த முகமூடி வேதாளர் மீது! அப்புறம் ஆர்ச்சி, டின்டின்..

                                  

அப்போது படித்து இன்றும் நினைவில் நிற்கும் முத்து காமிக்ஸின் சில புத்தகங்கள் விண்ணில் மறைந்த விமானங்கள், காற்றில் கரைந்த கப்பல்கள், இயந்திரத் தலை மனிதர்கள், நடு நிசிக் கள்வன், பெய்ரூட்டில் ஜானி, உறைபனி மர்மம், கொள்ளைகார மாயாவி, நயாகராவில் மாயாவி, Flight 731, வான்வெளிக் கொள்ளையர். நான் வாங்கியிருந்த புத்தகத்தில் முத்து காமிக்ஸின் பழைய அளவிலேயே பத்துப் பத்து ரூபாய்க்கு வெளியிடப்பட இருக்கும் இதுபோன்ற கதைகளின் பட்டியலைக் கொடுத்திருக்கிறார்கள்.

                                 

நாம் செய்ய நினைக்கும், ஆனால் செய்ய முடியாத சாகசங்களின் வடிகால் சிறுவயதில் காமிக்ஸ். பிற்பாடு  சினிமா அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டது. இன்றைய சிறுவர்கள் காமிக்ஸ் படிக்கிறார்களா தெரியாது. ஆனால் அவர்களுக்கு இதற்கு இணையான, இதை அப்படியே கணினியில் விளையாடக் கூடிய வசதி இன்றைய டெக்னாலஜியில் இருக்கிறது! இன்றைய இளைய தலைமுறை நூற்றுக்கு எண்பது பேர் புத்தகங்கள் படிப்பதில்லை.

                                                          

இணையத்தில் இந்தப் பழைய சாகச வீர்களின் கதையைப் படிக்கும் வசதி இருக்கிறது. அதுவும் அகொதீக என்ற பெயரிலேயே ஒரு வலைப்பூ. இவர்களின் சாகசங்களை இங்கேயே படிக்கலாம்! பல மலரும் நினைவுகளைக் கிளறி விடும் வலைப்பூ.



லயன்-முத்து காமிக்ஸ் பக்கம்.  இங்கு இவர் (சிவகாசியிலிருந்து முத்து காமிக்ஸ் வெளியிட்ட சௌந்தர பாண்டியன் அவர்களின் மகன் எஸ் விஜயன்) மிகச் சமீபத்தில் பெங்களுருவில் நடந்த காமிக்ஸ் திருவிழா பற்றி எழுதி இருக்கிறார்.