Appu லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Appu லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

14.10.14

கல்யாணி ஏன் சிரித்தாள்? 07 அப்பு.

                     
முந்தைய பகுதியின் சுட்டி இதோ இங்கே: மறக்கமாட்டேன். 
                
   
"அம்மா! என்ன இப்படி தேன்குழல் எல்லாம் கருங்குழல் ஆகிவிட்டது? ஒரேடியா பகல்கனவு காண ஆரம்பிச்சுட்டியா? தேன்குழல் கல்லு மாமிங்கற பேரு போயிட்டு, கருங்குழல் கல்லு மாமின்னு பேரு வந்திடும்!" என்ற உரத்த குரல் கல்யாணியை இந்த உலகுக்குக் கொண்டுவந்தது. 
                
'யார் அது?' 
         
"டேய் அப்பு! நீயாடா? அச்சச்சோ ஆமாம்! தேன்குழல் கறுத்துப் போகும் அளவுக்கு பழைய நினைவுகளில் மூழ்கிவிட்டேன்!"
               
"அம்மா - யாரை நினைத்துக்கொண்டு பழைய நினைவுகளில் மூழ்கினாய்? மங்கா பாட்டியா? மூர்த்தித் தாத்தாவா? யாராக இருந்தாலும் இப்போ யாருமே உயிரோடு இல்லை! அப்புறம் ஏன் இந்தக் குருட்டு யோசனை?" 
           
"பழைய கதைகளை நினைத்துப் பார்த்தால், யாரிடமும் எந்தத் தவறும் இருந்ததாக இப்போ தெரியலை! ஆனால் அப்போ நான் என்ன நினைத்திருந்தேன் என்று இப்போ என்னால் சரியாகச் சொல்லத் தெரியவில்லை. உனக்கு ஒரு நல்ல பெண்ணாகப் பார்த்து, கல்யாணம் செய்து வைத்துவிட்டால், நான் நிம்மதியாகக் கண்ணை மூடலாம். நல்ல, ஏழைக் குடும்பத்தில் குணவதியான ஒரு பெண் உனக்கு மனைவியாகக் கிடைக்கவேண்டும் என்றுதான் பகவானிடத்தில் நான் எப்பவும் வேண்டிக்கிறேன்." 
               
"அம்மா - ஆரம்பிச்சுட்டியா உன் கதையை? எப்பவும் சொல்லும்போது, நீ கண்ணை மூடியவுடன் நான் கொள்ளி போடணும் என்று சொல்லி, கதையை முடித்துவிடுவாயே, இப்போ என்ன புதுசா ஏழைப் பெண் கதை எல்லாம்? தப்பித் தவறி நான் யாரையாவது லவ் பண்ணினா அவ கிட்டே சாலரி சர்டிபிகேட் முதலில் வாங்கிக்கணுமா? ஊஹூம் இதெல்லாம் சரிப்பட்டு வரும் என்று எனக்குத் தோணலை அம்மா. என்னுடைய ஆபீசில் ரெண்டு மூணு பொண்ணுங்க என்னை லுக் விட்டுகிட்டே இருக்காங்க. அவங்க கிட்டே சாலரி சர்டிபிகேட் கேட்கட்டுமா?" 
           
"டேய் - ஆபீசுல வேலை பார்ப்பவர்கள் யாரும் வேண்டாம்டா. அம்மா அப்பா இல்லாத அனாதை, ஏழைப்பெண் யாரையாவதுதான் நீ கல்யாணம் செஞ்சுக்கணும்!" 
               
"பேங்க் அக்கவுண்ட் இருக்கக்கூடாதா அம்மா?" 
          
"பேங்க் அக்கவுண்ட் இருந்தாலும் பாங்கில் பாலன்ஸ் எதுவும் இருக்கக்கூடாது."
               
"அம்மா பேஸ்புக் அக்கவுண்ட் இருக்கலாமா?" 
         
"அப்படீன்னா என்னடா?" 
             
"ஒனக்குத் தெரியாது. சரி விட்டுடு!" 
            
"டேய் அப்பு! நான் யாரு?" 
     
அப்பு உடனே பக்கத்தில் இருந்த சுவாமி படத்திலிருந்து இரண்டு பூக்களைக் கிள்ளி  எடுத்து, இரண்டு காதுகளிலும் வைத்துக்கொண்டு, முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு, "அம்மாவும் நீயே, அப்பாவும் நீயே, அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே! கல்லூ, கல்லூ, கல்லூ கல்லு!" என்று பாடினான். 
            
  
கல்யாணியின் முகத்தில் புன்னகை அரும்பியது. 
         
(தொடரும்)