Tuesday, October 14, 2014

கல்யாணி ஏன் சிரித்தாள்? 07 அப்பு.

                     
முந்தைய பகுதியின் சுட்டி இதோ இங்கே: மறக்கமாட்டேன். 
                
   
"அம்மா! என்ன இப்படி தேன்குழல் எல்லாம் கருங்குழல் ஆகிவிட்டது? ஒரேடியா பகல்கனவு காண ஆரம்பிச்சுட்டியா? தேன்குழல் கல்லு மாமிங்கற பேரு போயிட்டு, கருங்குழல் கல்லு மாமின்னு பேரு வந்திடும்!" என்ற உரத்த குரல் கல்யாணியை இந்த உலகுக்குக் கொண்டுவந்தது. 
                
'யார் அது?' 
         
"டேய் அப்பு! நீயாடா? அச்சச்சோ ஆமாம்! தேன்குழல் கறுத்துப் போகும் அளவுக்கு பழைய நினைவுகளில் மூழ்கிவிட்டேன்!"
               
"அம்மா - யாரை நினைத்துக்கொண்டு பழைய நினைவுகளில் மூழ்கினாய்? மங்கா பாட்டியா? மூர்த்தித் தாத்தாவா? யாராக இருந்தாலும் இப்போ யாருமே உயிரோடு இல்லை! அப்புறம் ஏன் இந்தக் குருட்டு யோசனை?" 
           
"பழைய கதைகளை நினைத்துப் பார்த்தால், யாரிடமும் எந்தத் தவறும் இருந்ததாக இப்போ தெரியலை! ஆனால் அப்போ நான் என்ன நினைத்திருந்தேன் என்று இப்போ என்னால் சரியாகச் சொல்லத் தெரியவில்லை. உனக்கு ஒரு நல்ல பெண்ணாகப் பார்த்து, கல்யாணம் செய்து வைத்துவிட்டால், நான் நிம்மதியாகக் கண்ணை மூடலாம். நல்ல, ஏழைக் குடும்பத்தில் குணவதியான ஒரு பெண் உனக்கு மனைவியாகக் கிடைக்கவேண்டும் என்றுதான் பகவானிடத்தில் நான் எப்பவும் வேண்டிக்கிறேன்." 
               
"அம்மா - ஆரம்பிச்சுட்டியா உன் கதையை? எப்பவும் சொல்லும்போது, நீ கண்ணை மூடியவுடன் நான் கொள்ளி போடணும் என்று சொல்லி, கதையை முடித்துவிடுவாயே, இப்போ என்ன புதுசா ஏழைப் பெண் கதை எல்லாம்? தப்பித் தவறி நான் யாரையாவது லவ் பண்ணினா அவ கிட்டே சாலரி சர்டிபிகேட் முதலில் வாங்கிக்கணுமா? ஊஹூம் இதெல்லாம் சரிப்பட்டு வரும் என்று எனக்குத் தோணலை அம்மா. என்னுடைய ஆபீசில் ரெண்டு மூணு பொண்ணுங்க என்னை லுக் விட்டுகிட்டே இருக்காங்க. அவங்க கிட்டே சாலரி சர்டிபிகேட் கேட்கட்டுமா?" 
           
"டேய் - ஆபீசுல வேலை பார்ப்பவர்கள் யாரும் வேண்டாம்டா. அம்மா அப்பா இல்லாத அனாதை, ஏழைப்பெண் யாரையாவதுதான் நீ கல்யாணம் செஞ்சுக்கணும்!" 
               
"பேங்க் அக்கவுண்ட் இருக்கக்கூடாதா அம்மா?" 
          
"பேங்க் அக்கவுண்ட் இருந்தாலும் பாங்கில் பாலன்ஸ் எதுவும் இருக்கக்கூடாது."
               
"அம்மா பேஸ்புக் அக்கவுண்ட் இருக்கலாமா?" 
         
"அப்படீன்னா என்னடா?" 
             
"ஒனக்குத் தெரியாது. சரி விட்டுடு!" 
            
"டேய் அப்பு! நான் யாரு?" 
     
அப்பு உடனே பக்கத்தில் இருந்த சுவாமி படத்திலிருந்து இரண்டு பூக்களைக் கிள்ளி  எடுத்து, இரண்டு காதுகளிலும் வைத்துக்கொண்டு, முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு, "அம்மாவும் நீயே, அப்பாவும் நீயே, அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே! கல்லூ, கல்லூ, கல்லூ கல்லு!" என்று பாடினான். 
            
  
கல்யாணியின் முகத்தில் புன்னகை அரும்பியது. 
         
(தொடரும்) 
            

11 comments:

Geetha Sambasivam said...

ஆஹா, எல்லாமே முன்கதை அதாவது ஃப்ளாஷ் பாக்கிலே வருதா! சரியாப் போச்சு போங்க. கல்யாணி இந்தப் பிள்ளையை ஸ்வீகாரம் எடுத்து வளர்க்கிறாளோ? ஏனெனில் அவள் தான் அவனை மறக்க மாட்டேன்னு சொல்லி இருந்தாளே. இல்லைனா அவனோட பிள்ளையோ?

சேச்சே, இந்தத் தமிழ் சினிமா பார்த்துப்பார்த்து அதிலே வரது தான் நினைப்பிலே இருக்கு! :)))))

Geetha Sambasivam said...

அப்புங்கற பேரைப் பார்த்துட்டுத் தான் ஓட்டமா ஓடி வந்தேன். :)) எங்க அப்புவோனு நினைச்சுட்டேன். :)))

Thulasidharan V Thillaiakathu said...

தொடர்கின்றோம்!

Thulasidharan V Thillaiakathu said...

ஆமாம்....கல்யாணிக்கு அப்பு?!!!! அதுவும் ஃப்ளாஷ் பேக்? ம்ம்ம்ம் ஸ்வாரஸ்யமாக உள்ளது! தொடர்கின்றோம்.....

இராஜராஜேஸ்வரி said...

சிச்சுவேசன் சாங் எல்லாம்
சூப்பராக இருக்கிறதே..!

கோமதி அரசு said...

கல்யாணி முகத்தில் புன்னகை அரும்பிவிட்டது. எப்போது சிரிப்பார்கள்?

G.M Balasubramaniam said...


பெண்களுக்கு காதல் தோல்வி எல்லாம் சீக்கிரம் மறந்து போய் விடும். தாடி வளர்த்து பாட்டுப்பாடுவது எல்லாம் கிடையாது. காரியத்தில் எப்பவுமே அவர்கள் கெட்டி...சிலர் அழுவார், சிலர் சிரிப்பார் ஆனால் கல்யாணி அழுது கொண்டே சிரிப்பாளோ.......

Madhavan Srinivasagopalan said...

Well, it doesn't matter whom you love, but matters who loves you.

And interestingly, in life one gets to normalcy (mostly) irrespective of the hard / sad path comes in the way. It's part and parcel of life. Only a few choose wrong path on meeting such hardships.

I appreciate the character 'kalyani' as it appears she chose the better path in her life.

ஜீவி said...

ஓகோ.. கல்யாணியின் சிரிப்பு அடுத்த ஜெனரேஷன் சிரிப்பா?... ஒரு தலைமுறையைத் தாண்டிய வேகம், சாவகாசமாக அசை போட கதையில் நிறைய வாய்ப்பைக் கொடுத்து விட்டது.. வெரிகுட்!

கல்யாணிக்கு ஆண் குழந்தையாக இருக்கவே போச்சு; இதுவே கல்யாணிக்குப் பெண்ணாகப் பிறந்திருந்திருந்தால்.. என்று போகும் யோசனையைத் தவிர்க்க முடியவில்லை. காதல் தோல்வி கண்ட பெண்களுக்கு, தன் பெண்ணும் அப்படியொரு மாயவலையில் சிக்கிக் கொள்ளக்கூடாது என்கிற நினைப்பே மேலோங்குமோ?.. தெரியவில்லை.. அதுவே காதலில் வெற்றிக் கண்ட பெண்கள்?..

ஸ்ரீராமிற்கு தோன்றுவது போலவே எனக்கும் உங்கள் கதையிலிருந்து
நிறைய முடிச்சுகள் தென்படுகின்றன.
ஒவ்வொண்ணா பிரித்தெடுத்தால்
அழகாகத் தான் இருக்கும்!

கமல் படத்தைப் பற்றியும் சொல்ல வேண்டும்.. இந்த அப்பாவிக்களை குழந்தை முகத்தில் எதிர்கால விஸ்வரூபம், நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை,இல்லையா?

வெங்கட் நாகராஜ் said...

திடீர்னு பல வருடங்கள் தாண்டி வந்தாச்சு. Flashback-ல என்ன நடந்ததுன்னு தெரிஞ்சுக்க காத்திருக்கேன்! :)

வல்லிசிம்ஹன் said...

இதென்ன நான் போன எபிசோடை மிஸ் செய்திட்டேனா.ஏகப்பட்ட கேள்விகள். கேஜிஜி சார் சஸ்பென்ஸ் எல்லாம் வேண்டாமே. கதையைச் சொல்லுங்க சார்.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!