பொழுது போகாமல் தொலைக் காட்சிப் பார்த்துக் கொண்டிருந்த நேரம். சுப்பிரமணியம் சுவாமியை ஹார்வர்ட் யுனிவர்சிட்டியிலிருந்து வெளியில் அனுப்பி விட்டார்கள், அவரின் பாடப் பகுதிகளை நீக்கி விட்டார்கள் என்றெல்லாம் செய்திகளை மேய்ந்து கொண்டிருந்தேன்.
ஒரு அரசு கேபிளில் தேவ் ஆனந்தின் பாடல்கள் வரிசையாகப் போட அவ்வப்போது அதையும் பார்த்துக் கொண்டிருந்தேன்.
அப்போது ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியில் ஒரு கேள்வி கேட்கப் பட்டது. அதுவும் நகைச் சுவை நிகழ்ச்சி.
பொதுமக்களைத் தெருவில் மடக்கிக் கேள்விகள் கேட்கும் நிகழ்ச்சி.
"இந்த நாடு உங்களுக்கு என்ன செய்திருக்கிறது"
"ஒண்ணுமில்லை"
இதுதான் எல்லோரது பதிலும்!
இந்த பதில் சரியான பதில்தானா... மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பது ஒரு புறம் இருக்கட்டும்.
அடுத்த கேள்வியும் தொடர்கிறது.
"நீங்கள் என்ன செய்தீர்கள் நாட்டுக்கு, அல்லது என்ன செய்ய விரும்புகிறீர்கள்?"
"நாடு எனக்கு ஒண்ணும் செய்யலை, எனவே நானும் நாட்டுக்கு ஒண்ணும் செய்ய விரும்பல..." - இது ஒரு வகை பதில். ஒன்றும் செய்யாமலிருப்பதே சில சமயம் நல்லது என்றும் தோன்றுகிறது!
"எனக்கு வர்ற வருமானமே ரொம்பக் கம்மி... இதுல நாட்டுக்கு நான் என்னத்தைச் செய்யறது..." - இது ஒரு வகை.
"கொஞ்சம் கொஞ்சமா பணம் சேர்த்து நான் கொடுப்பேன்" இது ஒரு பதில். யாருக்குக் கொடுப்பார்கள்? நாட்டுக்கு!
பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்குக் கூட தற்போதைய மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் பெயர்கள் தெரியவில்லை என்பதும் ஆச்சர்யம்.
இதை நகைச்சுவையாக எடுத்துக் கொள்ளத் தோன்றாததால் பதிவிட்டு விட்டேன்.
நாடு நமக்கு என்ன செய்ய வேண்டும்...?
நாம் நாட்டுக்கு என்ன செய்ய வேண்டும்...?
எங்கள் வாசகர்களின் கருத்துகள் வரவேற்கப் படுகின்றன.




