18.9.26

அலையாத..

 

நேற்று  நான் என் நண்பன் பாடல்கள் கேட்கமாட்டான், புத்தகங்கள் படிக்க மாட்டான் என்று சொல்லும்போது அவன் வெளியில் சுற்றிக் கொண்டே இருப்பான் என்று சொல்லி இருந்தேன். பாட்டு கேட்க மாட்டான் என்பது கூட இல்லை, புத்தகங்கள் படிக்க மாட்டான் என்பது எனக்கு மிக ஆச்சர்யமாக இருந்தது.

"லைப்ரரி போயிருக்கியோ..."

"ஊஹூம்" 

"சுஜாதா பாலகுமாரன் நா பார்த்தசாரதி கதைகள் ஏதாவது படிச்சிருக்கியா?"

"யார் அவங்க?"

"குமுதம், விகடன், குங்குமம்..?"

"எப்பவாவது.."

"நியூஸ்பேப்பரையாவது படிப்பியா?"

"ம்ம்..  அது உண்டு..   எங்க வீட்டுல தினத்தந்தி வாங்கறோமே.."

நான் எப்படி அவனைப் பார்த்து ஆச்சர்யப்படுவேனோ அதே அளவு அவனும் என்னைப் பார்த்து ஆச்சர்யப்படுவான்.  

"எப்படிடா வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கே?"

அவனுக்கு நேர்மாறாய் நான் இருந்தேன் என்றாலும் என் குறை ஒன்று இருந்தது.  பாட்டு கேட்பது, புத்தகங்கள் படிப்பதை விடுங்கள்...    என் குறை வீட்டுக்கு ஓடி விடுவது.  ஸ்கூல் விட்டு உடனே வீடு.  காலேஜ் விட்டு உடனே வீடு.  அலுவலகம் விட்டு உடனே வீடு.  வீட்டுப்பறவை நான். 

காலேஜ் தினங்களில் கொஞ்சம் நண்பர்கள் அறைக்குச் சென்று அரட்டை அடிப்பது, அவர்களுடன் சுற்றுவது, சினிமா செல்வது என்று பொழுது போக்கினேன்தான்.. கல்லூரியில் மாலை வகுப்புகள் கிடையாது என்று சொன்னால் உடனே நண்பர்களுடன் தியேட்டர்!  நான் சைக்கிள்வாலா.  கும்பகோணத்திலிருந்து படிக்க வந்திருந்த நண்பன் ரவி ஒரு அறையில் தங்கி இருப்பான்.  இன்னும் மூன்று நண்பர்கள் நாடார் உறவின்முறை சந்தைப்பேட்டையில் தங்கி இருந்தார்கள்.  அதே இடத்தில லா காலேஜ் மாணவர்கள் இருவரும் பழக்கமாகி சேர்ந்து சுற்றுவோம்.  

என் சைக்கிளை ரவி ஓட்ட, நான் முன்னால் அமர்ந்து தியேட்டர் செல்வோம்!  நடுவே டீக்கடை, பஜ்ஜி, டீ, இத்யாதிகள் உண்டு.  ரவி உட்பட சிலர் சிகரெட் பிடிப்பார்கள்.  எனக்கு அதன் வாசமே ஆகாது.  சமயங்களில் நண்பர்கள் கூட இல்லாமல் சைக்கிளிலேயே மதுரையில் வீதி வீதியாய் இலக்கில்லாமல் அலைந்திருக்கிறேன்.  

அதுவும் வானம் மேகமூட்டமாய் இருந்து மழை பெய்வது போல இருட்டி விட்டால் எனக்கு பைத்தியம் பிடித்து விடும்.  சைக்கிளை எடுத்துக் கொண்டு வானம் தெளிவாய் தெரியும் இடங்களிலெல்லாம் ஓட்டிக் கொண்டே இருப்பேன்.  ஆங்காங்கே நிறுத்தி சூழலை அனுபவிப்பேன்.  ஏதோ பைத்தியம்!

அலுவலகம் செல்லத் தொடங்கியதும் இதே "வீடு நோக்கி ஓடுகின்ற நம்மையே"  பழக்கம் தொடர்ந்தது.  அலுவலக டைமிங்கில் சரியாக இருப்பேன்.  ஒரு நாள்  தாமதமாக சென்றது கிடையாது.  வேலை நேரம் முடிந்த அடுத்த கணமே ஓடத் தயாராகி விடுவேன்!  இது என் பலவீனமாகி சில சமயம் திட்டும் வாங்கியிருக்கிறேன், கிண்டலுக்கும் ஆளாகி இருக்கிறேன்.  மீறி நேரம் தாண்டி இருக்க நேர்ந்தால் நெளி நெளி என்று நெளிவேன்.  அது ஓய்வுபெறும் நாள்வரை கூட தொடர்ந்தது..    நடுவில் சில வருடங்கள் (25) அலுவலகத்தில் நீண்ட நேரம் - அலுவலக நேரம் தாண்டியும் - செலவழித்திருக்கிறேன் என்றாலும்  அப்போது அலுவலகத்திலிருந்து ஐம்பதடியில் வீடு!

எனக்கு பெரிய நண்பர்கள் குழு கிடையாது.  அவனுக்கும்!  அதுதான் ஆச்சர்யம்.  இன்றுவரை நாங்களிருவரும் நல்ல நெருங்கிய நண்பர்களாயிருக்கிறோம்.  அதுவும் ஆச்சர்யம்.  அவனுக்கும் வேறு பெரிய நண்பர்கள் குழு கிடையாது.

============================================================================================


நடிகர் அமிதாப்பச்சன் ஒரு நேரத்தில் சொந்தமாக படங்கள் தயாரித்து நஷ்டமடைந்து கடுமையான கடன் தொல்லைக்கு ஆளானார்.

அமிதாப்பச்சன் ரூ.90 கோடி கடன் கொடுக்க வேண்டியிருந்தது. தினம் தினம் கடன் கொடுத்தவர்கள் அவரது வீட்டிற்கு வந்தனர். இக்கடனில் இருந்து மீண்டு வந்துள்ள அமிதாப்பச்சன் தனது 80 வயதை கடந்த பிறகும் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார்.
தனது கடன் தொல்லை குறித்து ஒரு முறை அமிதாப்பச்சன் அளித்திருந்த பேட்டியில், ''எனது 44 வருட சினிமா வாழ்க்கையில் நான் நிதி நெறுக்கடியில் சிக்கி இருந்த காலம் தான் மிகவும் இருண்டகாலமாகும்.
கடன்காரர்கள் தினம் தினம் வீட்டு வாசலில் வந்து நின்றனர். அவர்கள் மிரட்டல் விடுத்தனர். கடுமையான வார்த்தைகளால் திட்டினர். எனது வீட்டை கூட பிடுங்க முயன்றனர்.
`பணம் வேண்டாம்; எனக்கு வேலை கொடுங்கள்'
டிரைவருக்கு சம்பளம் கொடுக்கக்கூட என்னிடம் பணம் இல்லை. இதனால் ஒரு முறை யாஷ் சோப்ரா வீட்டிற்கு முகத்தை மூடும் வகையில் தொப்பி அணிந்து கொண்டு நடந்தே சென்றேன்.
`கோன் பனேகா குரோர்பதி' நிகழ்வில் அமிதாப் பச்சன்
`கோன் பனேகா குரோர்பதி' நிகழ்வில் அமிதாப் பச்சன்
யாஷ் சோப்ராவிடம் சென்று எனது நிலையை எடுத்துக் கூறியதும் காலி காசோலையை கொடுத்து எவ்வளவு வேண்டுமானாலும் எழுதிக்கொள்ளும்படி சொன்னார். ஆனால் நிதியுதவி வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.
எனக்கு வேலை கொடுங்கள். அதன் மூலம் கிடைக்கும் சம்பளத்தை பெற்றுக் கொள்கிறேன் என்று தெரிவித்தேன். உடனே மொஹாபதியன் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். அதன் பிறகு கோன் பனேகா குரோர்பதி கைகொடுத்தது'' என்று தெரிவித்தார்.
கை கொடுத்த `கோன் பனேகா குரோர்பதி'
அந்த நேரத்தில் கோன் பனேகா குரோர்பதி கை கொடுத்ததால்தான் இது வரை அந்த நிகழ்ச்சியை விடாமல் தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கிறார்.
தந்தைக்காக படிப்பை விட்ட அபிஷேக் பச்சன்
அமிதாப்பச்சன் நிதி நெருக்கடியில் சிக்கி இருந்தபோது அவரது மகன் அபிஷேக் பச்சனின் படிப்பும் பாதிக்கப்பட்டது. அபிஷேக் பச்சன் அந்நேரம் அமெரிக்காவின் போஸ்டன் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்தார்.
இது குறித்து அபிஷேபச்சன் ஒரு முறை அளித்திருந்த பேட்டியில், ''நான் போஸ்டன் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தபோது எனது தந்தை படம் தயாரித்து கடுமையான நிதி நெருக்கடிக்கு ஆளானார். உடனே குடும்பத்திற்கு உதவுவதற்காக நான் படிப்பை பாதியில் விட்டுவிட்டு ஓடிவந்தேன்'' என்று குறிப்பிட்டு இருந்தார்.
ஒரு நேரத்தில் ரூ.90 கோடி கடனில் இருந்த அமிதாப்பச்சன் தற்போது 3 ஆயிரம் கோடி அளவுக்கு சொத்து சேர்த்திருக்கிறார். அவரது கடினமான உழைப்புதான் இந்த அளவுக்கு அவரால் சொத்து சேர்க்க உதவியது.
பாலிவுட்டில் எந்த நடிகரும் இந்த அளவுக்கு தோல்வியை சந்தித்து மீண்டு வந்தது கிடையாது.
நன்றி: சினிமா விகடன்

=================================================================================

இந்த ரங்கராஜன் சுத்த மோசம், தனக்குத் தெரிந்ததையெல்லாம் தனக்குள்ளேயே ஒளித்து வைத்துக் கொள்வார். மற்றவர்களும் தெரிந்து கொள்ளட்டுமே என்கிற எண்ணம் கிடையாது' என்று அமரர் எஸ்.பி. உதவி ஆசிரியர்களிடமும்… நண்பர்களிடமும் அடிக்கடி சொல்வார். வேடிக்கையாக அல்ல. சீரியஸாகவே சொல்லும் பேச்சு அது. எனக்குப் பல விஷயங்கள் தெரியும் என்பது அவருடைய அசைக்க முடியாத நம்பிக்கை கேட்டுக் கொண்டிருக்கும் நண்பர்களுக்கு என்னிடம் எரிச்சல் வருவது உண்டு, அவரிடமே அதை ஆட்சேபித்தவர்களும் உண்டு.

“எனக்கென்று என்ன சார் தனியாகத் தெரியும்? எல்லாம் நீங்கள் சொல்லித் தந்ததுதானே” என்று நான் பதிலளித்தால் ஒப்புக் கொள்ளமாட்டார். குறிப்பாக, சிறுகதைகளும் நாவல்களும் எப்படி அமைக்க வேண்டும், என்னென்ன அம்சங்கள் இருக்க வேண்டும் என்ற அடிப்படைகளை நான் நன்றாகப் புரிந்து கொண்டிருக்கிறேன் என்றும், ஆனால் பிற எழுத்தாளர்களின் கதைகள் வரும்போது அவற்றைத் திருத்தவோ மாற்றவோ நான் யோசனை சொல்வதில்லை என்றும் அவர் எண்ணினார். அதில் ஓரளவு உண்மை இருக்கலாம்.

“எப்படிக் கதை எழுதுவது?” என்பது குறித்து ஆங்கிலத்தில் வெளியான நூற்றுக்கணக்கான புத்தகங்களை வாங்கி வந்து தானும் படித்து என்னையும் படிக்கச் சொல்வார். வாசகர்கள் விரும்பிப் படிக்கக் கூடிய கதையம்சம் நிறைந்த சிறுகதைகளை எழுதுவதிலும் வெளியிடுவதிலும், அவர் தனி ஆர்வம் கொண்டிருந்தார்.

அவர் சொல்லித் தந்த உத்திகளையும் படிக்கக் கொடுத்த புத்தகங்களையும் கொண்டு எனக்கு ஜனரஞ்சகமான கதை எழுதும் ஆர்வம் ஏற்பட்டது யாருக்கும் எதுவும் சொல்லித் தருவதில்லை என்று எஸ்.ஏ.பி கேலி செய்துகொண்டே இருந்ததால், ஏன் நாம் அஞ்சல் வழியில் கதை எழுதச் சொல்லித்தரக்கூடாது என்று எண்ணினேன். எஸ்.ஏ.பியிடம் அதைச் சொன்னபோது, ‘முதலில் குமுதத்தில் வாராவாரம் எழுதுங்கள்' என்று கட்டளையிட்டார்.

'பிரபலமான தமிழ் எழுத்தாளர்களின் கதைகளைப் படித்து மேற்கோள் காட்ட வேண்டும். அதற்கெல்லாம் டயம் வேண்டும்...” என்று நான் தயங்கினேன். 'யாருடைய கதையையும் மேற்கோள் காட்டத் தேவையில்லை. உங்கள் கதையை நீங்கள் எப்படி எழுதினீர்கள். அதில் சிறுகதைக்கான அம்சங்கள் என்னென்ன இருக்கின்றன என்பதை எழுதுங்கள். போதும்' என்றூர் எஸ்.ஏ.பி.

என் தகுதிகளில் அவர் வைத்திருந்த நம்பிக்கையைவிட எனக்கு என் மீது நம்பிக்கை கம்மியாகவே இருந்தது. அப்போதும் லஜ்ஜையாகவே இருந்ததால், தலைப்பில் என் பெயரைப் பெரிதாசப் போட்டுக் கொள்ளாமல் கட்டுகரையின் கடைசியில், சின்ன எழுத்தில் போட்டுக் கொண்டேன். மொத்தம் இருபத்தேழு வாரங்களுக்கு அந்தக் கட்டுரைகள் வெளியாகின. அவ்வப்போது திருத்தங்களும் மாற்றங்களும் செய்து தந்தார் எஸ்.ஏ.பி. முதலில் எப்படிச் கதை எழுதுகிறார்கள்? என்று தலைப்புச் தந்தேன்.

பிறகு அதைச் சுருக்கி “எகஎ” என்றே தலைப்பிடத் தொடங்கினேன். அந்தக் கட்டுரைகள் வெளிவந்து கொண்டிருந்தபோதும், முடிந்த போதும் பல இளம் எழுத்தாளர்கள் பலவகையான சந்தேகங்கள் கேட்டார்கள். அவர்களுக்காகவே “எகஎ” என்று அஞ்சல் வழிக் கல்விக் கூடத்தைத் தொடங்கினேன். இந்த வகையில் எனக்கு எத்தகைய அனுபவமும் கிடையாது.

சிறிய அளவில் பத்து வகையான பாடங்களை எழுதி, பயிற்சிகளும் கொடுக்கும்படி யோசனை கூறியவர் எஸ்.ஏ.பி.தான். ஏற்கெனவே பத்திரிகைகளில் கதை பிரசுரமாகி, ஓரளவு எழுதத் தெரிந்த எழுத்தாளர்களுக்காக வேறு வகைப் பயிற்சியும், எதுவும் தெரியாத ஆரம்ப எழுத்தாளர்களுக்காக வேறு வகைப் பயிற்சியும் அமைக்கும்படி எஸ்.ஏ.பி யோசனை கூறினார்.

‘எழுத்து, பேனா இலக்கியம்' என்று தான் சொன்ன எல்லாப் பெயர்களையும் நிராகரித்து. “எகஎ” என்றே பெயர் வைக்கும்படி சொன்னவரும் அவரே, முதல்வர் என்று நான் பதவியைக் குறிப்பிட்டுச் கொள்ளும்படி சொன்னவரும் அவரே. இந்தப் பாடங்களுக்கு ஒரு “சுலோகம்” இருக்க வேண்டும் என்று கூறி, 'தமிழருடைய அறிவுக்கு எந்த வித்தையும் சுலபம்" என்ற பாரதியாரின் பொன்மொழியைத் தேர்ந்தெடுத்துத் தந்தவரும் அவரே. மாணவர்களுக்கான விண்ணப்பப் படிவம் அச்சாகி வந்ததும், அவரிடம் கொடுத்து, “தாங்கள்தான் முதல் மாணவராகச் சேர்த்து கெளரவிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டேன் படிவத்தில் கையெழுத்திட்டு முந்நூறு ரூபாய் தொகையும் செலுத்தினார். அந்தப் படிவத்தை இன்று வரை பத்திரமாகப் பாதுகாத்து வருகிறேன்.

மூன்று நாலு வருடம் “எகஎ” பள்ளியை நடத்தினேன். சுமார் 2000 மாணவர்கள் பயிற்சி பெற்றார்கள் (தொடர்ச்சியாகப் படித்தவர்கள் சிலரே, பாதி படிப்பதும், பிறகு விட்டு விடுவதுமாக இருந்தவர்கள் பலர்) பத்திரிகைகள் நடத்திய சிறுகதைப் போட்டிகளில் ‘எகஎ' மாணவர்கள் பலர் பங்கேற்றுப் பரிசு பெற்றார்கள்.

என் குருநாதர்களான கல்விக்கும் எஸ்.ஏ..பி.க்கும் இப்புத்தகத்தைப் பயபக்தியுடன் அர்ப்பணம் செய்கிறேன்.

- ரா.கி.ரங்கராஜன்

===============================================================================


I, Nobody - ஜியோ ஹாட்ஸ்டார் - ஒரிஜினல் மலையாளம் - தமிழில் பார்க்க முடியும்.

வஞ்சியூர் ISFC வங்கியில் கொள்ளை நடக்கிறது.  17 கோடி.  கொள்ளையர்கள் ப்ரித்விராஜை பிணையாக பிடித்துத் தப்புகிறார்கள். அவர்கள் ஓரிடத்தில் ப்ரித்வியை இறக்கி விட்டு தப்பும்போது கைகலப்பு ஏற்பட்டு அப்புறம் விபத்தில் கொள்ளையர்கள் இறக்கிறார்கள்.  பணம் எங்கே என்று தியாமல் போகிறது.

ப்ரித்விராஜுக்கு அந்த ISFC வங்கியில் கணக்கு எதுவும் கிடையாது.  அவர் மனைவிக்கும் கிடையாது.  அவர் ஏன் அங்கு சென்றார் என்பது ஒரு ?  அதேபோல அவர் கையில் ஒரு துப்பாக்கியிருந்திருக்கிறது.  அதுவும் ஒரு ?

போலீஸ் ஒருபுறம் சந்தேகப்பட, கொளலியர்களின் உறவுகள், ஆட்கள் ப்ரித்வியைத் துரத்த வேட்டை ஆரம்பமாகிறது.  ப்ரித்விக்கு மனைவியுடன் உறவு சரியில்லை.  பெரிய மகள் தந்தையை மதிப்பதில்லை.  ஒருநாள் வீட்டில் அவ்வளவு பணத்தையும் மனம்வி பார்த்து விடுகிறாள்.

ஊரே ப்ரித்வியை கோபப்பார்வை பார்க்கிறது.  அவனிடமிருந்து பணத்தைப் பறிக்க ஆளாளுக்கு முயல்கிறார்கள். நிம்மதி பறிபோகிறது.  ஊரே  அந்தப்பணத்தைத் தேடுகிறது.

ஜேக்கப் என்னும் பாத்திரம் மாறுதலாக படைக்கப்பட்டிருக்கிறது.  நடுவில் ப்ரித்வியின் மகள் கடத்தபப்டுகிறாள்.  அதிலும் இரட்டை நிலை.  தந்தையே மகளை கடத்தியது போல நாடகம் ஆடுகிறார் என்கிறது போலீஸ்.  அது பாதி உண்மை.  ஆனால் நடந்தது வேறாகி விடுகிறது.  ப்ரித்வியின் ஆள் அங்கு சென்று சேரும் முன்னரே வேறொரு ஆள் கடத்தி விடுகிறான்.

என்ன ஆகிறான் என்பது மீதிக்கதை.  சுவாரஸ்யமாகப் பார்த்தேன்.  பானு அக்காவுடன் பேசும்போது "இந்தப் படம் பார்க்க வேண்டும், ஒத்திப்போட்டுக்கொண்டே வருகிறேன்" என்று சொன்னேன்.  "பார்க்கலாம் பாருங்கள் நன்றாய் இருக்கும்" என்று ஊக்கம் கொடுத்தார்.

மலையாள படத்தில் குழந்தைகள் கூட இயற்கையாக நடிக்கின்றன!

===============================================================================

இது எம் எஸ் சுப்புலக்ஷ்மி என்று நம்பவே முடியவில்லை.  சாவித்ரி, தேவிகா கலவை மாதிரி இல்லை?


அதென்ன முச்சந்தி இலக்கியம்?!

இப்போது இது மாதிரி நிறைய வர ஆரம்பித்து விட்டது!

=========================================================================================



=========================================================================================

கவிதைப் பக்கம் 



வாயிலே
அழுக்கென்று
நீரெடுத்துக் கொப்பளித்தேன்;
கொப்பளித்துக்
கொப்பளித்து
வாயும் ஓயாமல்
அழுக்கும் போகாமல்
உற்றுப் பார்த்தேன்;
நீரே அழுக்கு!

-சுப்ரமண்ய ராஜு


புலி

எதிரில் நீ வரும்போது
இடப்பக்கம் ஒதுங்கிடுவான்
Peak-hour பஸ்ஸில்
பின் பக்க நெரிசலில்
உன் பக்கப் பார்வையை
ஒதுக்கியே வைத்திருப்பான்
மொட்டை மாடிக் குளிர் நிலவில்
கட்டை போல் படுத்திருப்பான்
தியேட்டரின் இருட்டிலே
கைபடாது படம் பார்ப்பான்
பெண்ணே!
உன்னை உரித்துப் பார்க்கத் துடிக்கும்
கற்கால மனிதனொருவன்
என்னுள் உறங்குகின்றான்
எப்போது எழுப்பட்டும்?

– சுப்ரமண்ய ராஜு (1973, ஞானரதம்)


========================================================================================


இளம் வயதில் இறந்துபோன மேதைமை நிரம்பிய தமிழ்ப் படைப்பாளிகளின் பட்டியல் பெரிது. தமிழ் இலக்கிய வானில் ஒரு ஒளிநட்சத்திரம்போல தோன்றி மறைந்த சுப்ரமண்ய ராஜு வாழ்ந்ததும் எழுதியதும் கொஞ்சம்தான். ‘மேதாவிலாசத்துக்கும் அற்பாயுளுக்கும் அப்படி என்னதான் நமக்கு எட்டாதபடி ரகசிய உறவோ’ என்று சுந்தர ராமசாமியின் ‘ஜே.ஜே: சில குறிப்புகள்’ நாவலில் இடம்பெறும் வரியைப் போல, மிகச் சிறந்த அறிவாளியாக மதிப்பிடப்பட்ட சுப்ரமண்ய ராஜு, தனது 39-வது வயதில் நந்தனம் சிக்னல் அருகே மிக மோசமான சாலை விபத்தில் இறந்துபோனார்.

பாண்டிச்சேரியில் பிறந்திருந்தாலும், ராஜு வாழ்ந்தது சென்னையில்தான். சுந்தரம் கிளேட்னிலும், பிறகு டிடிகே நிறுவனத்திலும் ராஜு பணிபுரிந்தார். நவீனக் கவிதைகள் மீது பெரும் ஈடுபாடு கொண்டிருந்த ராஜு, 1970களின் தொடக்கத்தில் ‘கசடதபற’ பத்திரிகையில் கவிதைகள் எழுதுவதன் மூலம் இலக்கிய உலகில் பிரவேசித்தார். அவர் அதிகம் எழுதியவை சிறுகதைகளே. ‘சுப்ரமண்ய ராஜு கதைகள்’ தொகுப்பில் 30 சிறுகதைகளும் 2 குறுநாவல்களும் உள்ளன. அவற்றுள் ‘இன்று நிஜம்’ குறுநாவல் மட்டுமே அவர் வாழ்ந்த காலத்தில் பிரசுரம் கண்டிருக்கிறது. அதற்கு தமிழக அரசின் சிறந்த புத்தகத்துக்கான விருதும் கிடைத்திருக்கிறது.

ராஜு படைப்புகளின் இயங்குதளம் என்பது நகரமும் அது சார்ந்த வாழ்க்கையும். 70களில் சென்னை மாநகரின் மத்தியத்தர வர்க்கத்தின் நெருக்கடிகளும், அவற்றின் அக உலகும் ராஜுவின் கதைகளில் பேசுபெருளாயின. இளைஞர்களை நவீன வாழ்க்கை முறை எப்படி கட்டமைக்கிறது என்பதை மிகவும் நுட்பமாக தன்னுடைய கதைகளில் பதிவுசெய்திருக்கிறார். நேரடியான கதைசொல்லல் முறையில் எளிய வடிவில் எழுதப்பட்டிருக்கும் இக்கதைகளில் அநேக இடங்களில் அசாத்தியமான நகைச்சுவை உணர்வு ததும்பும். பெரும்பாலான கதைகள் உரையாடல் மூலமாகதான் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. ‘இன்று நிஜம்’, ‘நாலு பேர்’, ‘இன்னொரு கனவு’ போன்ற கதைகளை வாசிக்கும்போது, “இந்த சிக்கல்களையும் இந்த நெருக்கடிகளையும் இவர்தான் எழுதியிருக்க முடியும்” என்ற ராஜுவின் கதைகள் குறித்த அசோகமித்திரனின் குறிப்பு நினைவுக்கு வருகிறது.

சிறுகதைகள், குறுநாவல்கள் மட்டுமல்லாமல் புனைபெயர்களில் சினிமா விமர்சனங்களையும் ராஜு எழுதியிருக்கிறார். ‘குடிசை’ ஜெயபாரதியின் (இவரது தங்கையைத்தான் ராஜு காதலித்து திருமணம் செய்திருந்தார்) ‘24C வேதபுரம் முதல் வீதி’ என்ற வெளிவராத படத்துக்கு ராஜு எழுதியிருந்த ஒரு பாடல், கங்கை அமரனின் இசையமைப்பில் சுசீலா பாடி ஒலிப்பதிவும் ஆகியிருக்கிறது.

ராஜுவின் எதிர்பாராத மரணம் இலக்கிய உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. ராஜுவின் நெருங்கிய நண்பர்களான பாலகுமாரனும் மாலனும் இணைந்து 20 எழுத்தாளர்களின் சிறுகதைகளைத் தொகுத்து அவரது நினைவைப் போற்றும் விதமாக ‘அன்புடன்’ என்ற தொகுதியைக் கொண்டுவந்தனர். ராஜுவின் 70வது பிறந்தநாளையொட்டி அவரது நூலுக்கு 51% தள்ளுபடி விலையை அறிவித்திருக்கிறது கிழக்கு பதிப்பகம். அரை நூற்றாண்டுக்கு முந்தைய காலத்துக்கு செல்ல விரும்புபவர்களுக்கு இந்நூல் உதவும்!

- சு.அருண் பிரசாத்,

தொடர்புக்கு: mails2arunprasath@gmail.com

(ஜூன் 6, சுப்ரமண்ய ராஜுவின் 70வது (2018ல்) பிறந்தநாள்)

========================================================================


விலை சரசம்!


1938 கலைமகளில் விளம்பரம் 


1935 மணிக்கொடி இதழிலிருந்து,,,,,  மங்கலான எழுத்துகள்.  படிக்க முடிகிறதா?

===========================================================================
அண்ணாமலை விடியோக்கள் தொடர்ந்து வந்ததது போல, நெல்லை கண்ணன் விடியோக்கள் தொடர்ந்து வந்ததது போல இப்போது தீபக் வோராவின் விடியோக்கள் சக்கைபோடு போடுகின்றன.  ரொம்பவே ரசிக்க முடிய்க்கிறது.  75 வயதிலும் என்ன ஸ்டைலாய் இருக்கிறார் மனிதர்...  நாட்டின் மீது தனக்கு இருக்கும் பற்றையும், பக்தியையும் அர்னாப் போல வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறார்.

=========================================================================================

1975ம் ஆண்டு வெளிவந்த ஏழைக்கும் காலம் வரும் படத்திலிருந்து V. குமாரின் இசையில் வாலியின் பாடல் SPB குரலில்..     நான் இந்தப் படத்தை தஞ்சை ஹவுசிங் யூனிட்டில் பார்த்தேன்.  SPB குரலில் குமாரின் அற்புதமான பாடல்.

31 கருத்துகள்:

  1. உற்றுப் பார்த்தேன்
    நானே அழுக்கு

    -- என்று சுயவிமர்சனமாய் சு.ராஜூவின் கவிதை முடிந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

    எல்லாம் நம் ஆதங்கம் தான். ஏன் இவர்களால் அப்படி தன்னைத் தானே பார்க்க முடிந்ததில்லை என்பது யோசனைக்குரியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜீவி ஸார்..  எனக்கென்னவோ சு ரா எழுதி இருப்பதுதான் பொருத்தமாயிருக்கிறது.

      நீக்கு
    2. ஹா ஹா ஹா இந்தக் கவிதை இப்படி இருந்து விட்டால் அவர்கள் தன்னைத்தானே பார்த்துக் கொள்ளவில்லை என்று ஆகிவிடுமா?

      நீக்கு
    3. @ஜீவி சார்: இந்தக் கவிதை சுப்ரம்ண்யராஜு அரசியல் என்பதைப் பற்றி எழுதிய கவிதை.

      நீக்கு
    4. அப்படியா... வாங்க பானு அக்கா.

      நீக்கு
    5. பெண்ணே !
      உன்னை உரித்துப் பார்க்கத் துடிக்கும்
      கற்கால மனுதனொருவன்
      என்னுள் உறங்குகிறான்

      -- இது தான் சுத்த சுயப்பிரகாச மனவியலோ?...

      நீக்கு
    6. அதுவும் மனதின், வாழ்வின் பகுதி!

      நீக்கு
  2. விலை சரசம். சரசம்ன்னா?
    ஐந்தாம் வேத வார்த்தையானா இருக்கு?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவர்ச்சி, கம்மி, வாங்கக் கூடிய விலை என்று கொள்ளலாம். அந்தக் கால பாஷை.

      நீக்கு
    2. வியாழன்,வெள்ளி பதிவுகளுக்கு அதிகம் வித்தியாசம் இல்லாவிட்டாலும், வெள்ளிக்கு பத்து மதிப்பெண்கள் அதிகம் தரலாம். இன்றைய பதிவும் 'பேஷ் பேஷ் ரொம்ப நன்னாயிருக்கு"

      நீக்கு
    3. நன்றி பானு அக்கா.

      நீக்கு
  3. இன்றைய பதிவில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அமிதாப், ரா.கி.ரங்கராஜன், சுப்ரமண்யராஜு எல்லோருமே Iconic personalities.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை.  அவர்களை பற்றி செய்தி வந்தால்தானே பார்ப்போம், படிப்போம்!

      நீக்கு
  4. அந்தக் கால விளம்பரங்கள் சுவாரஸ்யமாக இருக்கின்றன.
    தினமணிகதிரின் அட்டைப்படத்தில் இருப்பது நிச்சயமாக எம்.எஸ்.ஆக இருக்காது. உள்ளே எம்.எஸ்.பற்றிய கட்டுரை படத்தோடு இடம் பெற்றிருக்கிறது என்பதைத்தான் குறிப்பிட்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். சம்பந்தப்பட்ட கதிரின் தேதியை கஷ்டப்பட்டு பார்த்ததில் 1964 என்பது போல தெரிந்தது. அப்போதெல்லாம் எம்.எஸ். தோற்றம் வேறு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்வது Valid Point ஆகத் தெரிகிறது.  இது கூட யோசிக்காமல் இருந்திருக்கிறேன்!  

      நீக்கு
  5. ஆக, நான் சொல்லி நீங்கள் பார்த்த இரண்டு படங்களும் உங்களுக்கு பிடித்திருக்கின்றன(IKKa, I,Nobody). எனக்கு பிருத்விராஜ் பிடிக்கும். படத்தில் சண்டைக் காட்சிகளை குறைத்திருக்கலாமோ என்று தோன்றியது. நான் மலையாள, கேமிரா பிரிண்ட் பார்த்தேன். தமிழ் டப்பிங்கில் நல்ல பிரிண்ட் வந்து விட்டது. இன்னொரு முறை பார்க்கலாம் என்று தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.   இக்கா முற்றில்லும் நீங்கள் சொல்லி நான் பார்த்த படம்.  இது நான் பார்க்க நினைத்திருந்த லிஸ்ட்டில் இருந்த படம்.  உங்கள் பதில் என்னை ஒத்திப்போடாமல் சீக்கிரமே பார்க்கத் தூண்டி விட்டது!

      நீக்கு
    2. ப்ளாக்கில் கருத்து கூறும் பொழுது தம்ஸ் அப் போன்ற ஸ்மைலிகள் போட முடிந்தால் நன்றாக இருக்கும்.

      நீக்கு
    3. அதைதான் பிராக்கெட்டுக்குள் கேபிடல் ஒய் போடுவது.  (Y) முன்பு மெயில்களில் அது தம்ஸ் அப் சைன் காட்டும்.

      நீக்கு
  6. நானும் ஒரு வீட்டுப் பறவைதான்.
    என்ன இன்று பாஹே கவிதைகளைக் காணோம்?
    பழுவூரில் என் தோழி இருந்தாள். அவள் வீட்டிற்கு ஒரு முறை சென்றிருக்கிறேன், ஆனால் அந்த் ஊர் கோய்லுக்குச் சென்றதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்று நெல்லை கண்ணனையும் காணோம். பார்க்கவில்லையா? கொஞ்சம் மாறுதலாய்....

      நீக்கு
  7. *அந்த ஊர் கோயிலுக்கு என்று வாசிக்கவும்.

    பதிலளிநீக்கு
  8. ரா.கி.ரங்கராஜன் அவர்கள் எழுதிய 'எ க எ' தொடரில் அவர் சொல்லியிருந்த இரண்டு விஷயங்கள் நினிவில்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரா.கி.ர. குமுதத்தில் எழுதிய 'எ க எ' தொடரில் அவர் சொல்லியிருந்த இரண்டு விஷயங்கள் நினைவில் இருக்கின்றன.
      1. ஒரு பேப்பரில் இங்கை(ink) தெளித்து, அந்த பேப்பரை கசக்கி,பின்னர் பிரித்தால் ஒரு வடிவம் ஃபார்ம் ஆகியிருக்கும், அதற்கு கதை எழுதுங்கள். (இப்போது அழகியசிங்கர் படத்திற்கு கதை எழுதச் சொல்கிறாரே அப்படி)
      2. செய்தித் தாளில் வந்திருக்கும் செய்திகளை வைத்து கதை எழுத முயற்ச்சி செய்யுங்கள்
      எதிர்பார்க்க முடியாத ட்விஸ்டோடு ஒரு பக்க கதை எழுத வந்து விட்டால், கதை எழுத வந்து விட்டது என்று பொருளாம். இப்பொழுது ஒரு பக்க கதை என்பது அரை பக்கம், 1/4 பக்கம் என்று குறைந்து கொண்டே போகிறதே.

      நீக்கு
    2. சொல்லுங்கள்.  ஆனால் நான் இதையோ, சுஜாதாவின் 'திரைக்கதை எழுதுவது எப்படி' புத்தகமோ படித்ததில்லை.  எழுதுவது தானாக வருவது.  அதை இப்படி பாடம் போல படித்து வந்தால் சரியாயிருக்காது என்பது என் எண்ணம்.

      நீக்கு
    3. ஆனால் இதைப் படிக்காமலேயே படத்துக்கு கதை எழுதுவதும், செய்தித்தாள் செய்திக்கு கதை எழுதுவதும் நான் செய்திருக்கிறேன்.  செய்திக் கதை இரண்டு எழுதி இருக்கிறேன் என்று நினைவு.

      நீக்கு
  9. வெள்ளிச் சிதறல் அருமை நிறைய பகுதிகள் மெதுவாகப் படிக்கணும்

    இன்று கும்பகோணத்தில்

    பதிலளிநீக்கு

பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!