1.10.26

"யாராவது இருக்கிறீர்களா?" + மனசாட்சியம் - புதிய தொடர் அறிமுகம்

 

வொய்ஜாபோர்ட்  என்பது ஆங்கில எழுத்துகள் இருக்கும் ஒரு போர்ட்.  ஒரு பொருளை கையில் பிடித்துக் கொண்டு அதன் முன் உட்காருவார்கள்.  சுற்றிலும் மற்றவர்களும் உட்காருவார்கள்.  கையில் பொருள் பிடித்திருப்பவர் மீடியம் என்று அழைக்கபப்டுகிறார்.  எளிதாக அவர்மேல் ஆவி இறங்கக் கூடியவர்.

அங்கிருப்பவர்களின் செத்துப்போன உறவுகள் யாரிடமாவது கேள்வி கேட்கவேண்டும் என்றிருந்தால் அவர்களை, அதாவது அவர்களின் ஆவியை  அழைப்பார்கள்.  உதாரணமாக சமீபத்தில் செத்துப்போன ஏதோ ஒரு உறவின் தாத்தா தான் வைத்திருந்த பத்தாயிரம் ரூபாய் பணத்தை எங்கு மறைத்து வைத்திருக்கிறார் என்று சொல்லாமலேயே போய்விட்ட சோகத்திலிருப்பவர் அவரை அழைத்துக் கேட்க முயற்சிக்கலாம் வீட்டில் தேடித்தேடி அலுத்துப் போனவர்.

ஒரே ஒரு மெழுகுவர்த்தி மட்டும் ஏற்றி வைத்து விட்டு மின் விளக்குகளை அணைத்துவிட்டு போர்ட் முன் உட்கார்ந்து அழைக்க வேண்டும்.  பொறுமையாக காத்திருக்க வேண்டும்.  அப்படி ஆவி வந்தால் சில அறிகுறிகள் தென்படும்.  சினிமாவில் காட்டுவது போல திரைசீலை அசையலாம்.  மெழுகுவர்த்தி தீபம் பெரிதாக ஆடலாம்.  ஆனால் அணையாது.  அறையில் இருக்கும் ஏதாவது ஒரு பொருள் நழுவி கீழே விழுந்து திடுக்கிட வைக்கலாம்.  சமயத்தில் ஆவி வந்திருக்கிறதா என்று உறுதிப்படுத்திக்கொள்ள அந்த மீடியம் இப்படி ஏதாவது ஒரு செயலைச் செய்யச்சொல்லி வேண்டி நிரூபணம் கேட்கலாம்.

ஆமாம், இதற்கு ஏன், எப்படி எப்போது வொய்ஜா போர்ட் என்று பெயர் வந்ததது?  தேடுபொறியில் தெரியபோது கிடைத்த தகவல்கள்..

ஒய்ஜா" (Ouija) என்ற பெயர் அந்தப் பலகையே தனக்குத்தானே சூட்டிக்கொண்ட பெயர் என்று அதன் வரலாற்றுப் பதிவுகள் கூறுகின்றன. 1890 ஆம் ஆண்டில், அமெரிக்காவைச் சேர்ந்த எலியா பாண்ட் (Elijah Bond) மற்றும் சார்லஸ் கென்னார்ட் (Charles Kennard) ஆகியோர் இந்தத் தொடர்புப் பலகையை (Talking Board) வணிகரீதியாகத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 

ஆனால், அதற்கு ஒரு கவர்ச்சிகரமான பெயர் வைக்க வேண்டும் என்று அவர்கள் யோசித்தனர்.இதற்காக, ஆவிகளுடன் பேசும் ஆற்றல் கொண்டவராகக் கருதப்பட்ட எலியா பாண்டின் மைத்துனி ஹெலன் பீட்டர்ஸ் (Helen Peters) என்பவரை அவர்கள் அழைத்தனர். அவர்கள் மூவரும் அந்தப் பலகையிடம், "உனக்கு என்ன பெயர் வைக்கலாம்?" என்று கேள்வி எழுப்பினர்.அப்போது அந்தப் பலகையின் நகர்த்தி (Planchette), "O-U-I-J-A" என்ற எழுத்துக்களை நோக்கி நகர்ந்து அந்தப் பெயரை உருவாக்கியது. அதன்பிறகு, "அதன் பொருள் என்ன?" என்று கேட்டதற்கு, அது "நல்வாழ்த்துகள்" (Good Luck) என்று பொருள் தந்தது.

ஆக, கேரம்போர்ட் போல இந்த வொய்ஜாபோர்டையும் நாம் ரெடிமேடாக கடையில்தான் வாங்கவேண்டும் போல.  வீட்டில் தயார் செய்தால் அதற்கு அந்த சக்தி இருக்காது போல!!

Planchette  என்ற கருவியின் மேல் விரல்களை வைத்துக்கொண்டு கேள்விகளை கேட்க, வேண்டும் என்றாலும் சிலர் ஒரு நாணயத்தை வைத்துக் கொண்டே முயற்சி செய்வார்கள்.  இங்கும் அதுதான் நடந்தது.

தாயத்து காட்டியவர் கையில் ஒரு நாணயத்தை வைத்துக் கொண்டு விரலால் தொட, மற்றவர்களும் அந்த நாணயத்தை தொட்டுக் கொண்டார்கள்.

"யாராவது இருக்கிறீர்களா?" என்று மெதுவான குரலில் கேட்டார்.  பதில் இல்லை. எதிரே அமர்ந்திருந்தவர் சுற்றுமுற்றும் பார்க்க, இன்னொருவர் "டேய் முண்டம்..  பதில் குரலாக வராது..  இங்கே நாணயம் நகர்ந்து S எழுத்தைத் தொடும் -  'அது' வந்து இருந்தால்" என்று கிசுகிசுத்தார்.  உடனே மற்றவர்கள் "உஷ்" என்று மெல்லிய சத்தத்தில் பாம்பு போல சீறி அமைதியை நிலைநாட்ட வலியுறுத்தினார்கள்.  கேட்டவருக்கு சிலிர்த்தது.

ஜாடையில் 'தண்ணீர் குடிக்கலாமா?' என்று கேட்டார் ஒருவர்.  இன்னொருவர் 'நடுவில் எழுந்திரிக்கக் கூடாது' என்று சைகை செய்தார்.

தண்ணீர் விரும்பியவர் ஓரமாக அமர்ந்திருந்தவரை தலையை சற்றே சாய்த்து ஒரு பார்வை பார்த்தார்.  அர்த்தம் : "நீ போய் எடுத்து வாயேன்.."

ஓரமாக அமர்ந்திருந்தவர் திரும்பி இருளான சமயலறையைப் பார்த்தார்.  தலையை இடம் வலமாக ஆட்டினார்!

மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் போர்டைச் சுற்றியும், ஓரமாகவும் அவர்கள் காத்திருந்தார்கள்.  பொறுமையாகக் காத்திருந்தார்கள்.

=====================================================================================

புதிய தொடர் அறிமுகம் - மனசாட்சியம் 

மனசாட்சியம் என்கிற தலைப்பில் தன் எண்ணங்களை பகிர வருகிறார் எங்கள் ஆசிரியர்களில் மூத்த K G Y Raman.  எந்த நாட்களில் எப்போது வரும் என்று சொல்ல முடியாது.  ஆனால் வரவேண்டிய நேரத்தில் சரியாக வரும்!


மனசாட்சியம் - 1

K G Y Raman

மனசாட்சியம் -  இந்த தலைப்பில்  தொடர்ந்து எழுத எண்ணியிருக்கிறேன்.

மனம் சரி, சாட்சி சரி, சாட்சியம் கூட சரி -- அது என்ன மனசாட்சியம் ? 

காதில் விழுகிற, கண்ணில் படுகிற பலவும் நம் மனதுள் (சில சமயம்) பலமான எண்ணங்களைத் தூண்டுகின்றன.  அதை வெளியே நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வரை அந்த எண்ணங்கள் உள்ளே சுழன்று சுழன்று வந்து ஒரு சங்கடத்தை விளைவித்தவாறு இருக்கின்றன. சங்கடம் மட்டுமே தான் என்பதல்ல சில செய்திகள் சந்தோஷத்தையும் கொடுப்பது உண்மைதான். அதையும் கூட பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிற ஒரு உந்துதல் இருப்பதையும் காண்கிறேன்.

எனவே நல்ல ஒன்றோ பொல்லாத ஒன்றோ அதை பற்றி கொஞ்சம் சொல்லி அது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற எண்ணத்துடன் இதை ஆரம்பிக்கிறேன். 

முதலாவது என்னை சங்கடப்படுத்தும் ஒரு விஷயம் பொது வாழ்வில் நாணயத் தன்மை, நேர்மை குறைந்து போய் அதனால் ஏற்பட்டிருக்கிற பயங்கரமான பின் விளைவுகள். 

அந்த காலத்தில் அரசு வேலையில் இருப்பவர்கள் மேல் வரும்படி என்று ஒரு தலைப்பின் கீழே அற்ப சொற்பமாக சம்பளத்துக்கும் அதிகமாக ஏதோ கொஞ்சம் சம்பாதித்து வந்தார்கள். ஒரு ஆஸ்பத்திரியில் நோயாளிகளை பார்க்க அந்த குறிப்பிட்ட நேரம் தாண்டி யாரோ ஒருவர் போவதனால் காவல்காரராக உட்கார்ந்து இருக்கிற மனிதரிடம் ஒரு இரண்டணா (ரூபாய்க்கு பதினாறு அணா) கொடுத்தால் உள்ளே போ என்று சைகை காண்பிப்பார். இதை மீறி அரசு ஆஸ்பத்திரியில் லஞ்சம் இல்லாமல் தான் இருந்தது. 

பதிவுத்துறை தாலுகா ஆபிஸ் போன்ற இடங்களில் பியூன்களும் குமாஸ்தாக்களும் மட்டுமே அணாக் கணக்கிலும் ஒரு சில ரூபாய் கணக்கிலும் மேல் வரும்படி பார்த்து வந்தார்கள். அதற்கு மேலே இருப்பவர்கள் கைநீட்டி காசு வாங்குவது அகௌரவம் என்று நினைத்தார்கள். 

அரசியல் மட்டத்தில் பார்த்தால் இப்போது இருக்கிற மாதிரி இவ்வளவு பரவலாகவும் இவ்வளவு ஆழமாகவும் மேல் வரும்படி பார்க்கிற மனோபாவம் இல்லாமல் தான் இருந்தது. 

மாகாணத்தில் மிகப் பிரபலமாக நீண்ட நாள் ஆட்சியில் இருந்த ஒருவரை பற்றி அவர் பெயரோடு "10 லட்சம்" என்ற சொற்களை சேர்த்து அவரைக் குறிப்பிடுவது அவரை அதிகபட்ச இழிவு படுத்துவதாகப் பார்க்கப்பட்டது.   " *** அண்ணாச்சி, பருப்பு விலை என்னாச்சி " என்ற கோஷம் ரொம்ப பிரபலமாக இருந்தது. பத்து லட்சம் நாணயக் குறைவாக சம்பாதிப்பது அவ்வளவு பெரிய பஞ்சமா பாதகம் என்று பார்க்கப்பட்டது. 

இப்போது அப்படி இல்லை. 100 கோடி 500 கோடி ஏன் ஆயிரம் கோடி கூட ஏதோ சில்லறை போல பார்க்கப்படுகிறது. 

வெற்றிகரமான தொழில் முனைவர் ஓரிருவர் 25000 கோடி 50 ஆயிரம் கோடி என்ற சொத்துகளுக்கு அதிபதிகளாக இருக்கிறார்களாம். ஒரு குறுகிய காலகட்டத்தில் ஒரு குறிப்பிட்ட வியாபாரம் செய்து அதில் சில கள்ளத்தனங்களைப் புகுத்தி இவ்வளவு பெரிய தொகைகளை லாபமாக ஈட்ட முடிகிறது என்பது உண்மையானால் அந்த வியாபாரங்களுக்கு அதிக அளவில் வரி போட்டு அல்லது இடுகையின் விலையை நியாயமான அளவுக்கு உயர்த்தி நிர்ணயம் செய்து இந்த லாபத்தை சற்று கட்டுப்படுத்த வேண்டும் என்கிற யோசனை ஏன் நமது அரசினருக்கு இல்லாமலேயே போய்க் கொண்டிருக்கிறது? 

10 ஆண்டுகளுக்கு முன் நீ பரதேசி இன்று உன்னிடம் 500 கோடி இருக்கிறது என்றெல்லாம் பொது மேடைகளிலே குற்றம் சாட்டுகிறார்கள். என்ன வியாபாரம் செய்து இவ்வளவு பெரிய லாபம் வந்தது என்று தட்டி கேட்கிற அதிகாரம் அரசுக்கு இருக்க வேண்டுமா இல்லையா ? ஏற்கும் படியான விவரங்கள் கொடுக்காதவர்களை பிடித்து உள்ளே போடுகிற மாதிரி ஒரு சட்டம் இருக்க வேண்டுமா வேண்டாமா ?

வருகிற வருமானத்தை கணக்கில் காட்டி அதற்கான வரியை சந்தித்து விட்டால் அந்த நபரை எதிர்த்து அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்று சொல்லுகிறார்கள். இதில் எந்த அளவு நியாயம் இருக்கிறது ? 


இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?

========================================================================================


T S பாலையாவை படத்தில் சேர்க்காவிட்டால் நான் அந்தப் படத்தில் நடிக்க மாட்டேன் என்று சொல்லி விட்டாரா ம் MGR.  இது பற்றி தினமலரில் நான் படித்த கட்டுரை.


தமிழ் திரையுலகில் எம் ஜி ஆரை வைத்து திரைப்படங்கள் இயக்காத பிரபல இயக்குனர்களில் குறிப்பிடும்படியானவர்கள் இயக்குனர் ஏ பீம்சிங்கும், இயக்குனர் கே எஸ் கோபாலகிருஷ்ணனும். பெரும்பான்மையான இவ்விருவரின் திரைப்படங்கள் அழுத்தமான, உணர்வுப்பூர்வமிக்க, உறவுகளைச் சுற்றிச் சுழலும் குடும்பப் பின்னணி கொண்ட கதைகளை உள்ளடக்கியவையே.

அதனால் அதற்கேற்ற நடிகர்களையே தங்களது படங்களுக்கு தேர்வு செய்து, பல வெற்றித் திரைப்படங்களைத் தந்து கொண்டிருந்த இவ்விருவரில் இயக்குனர் கே எஸ் கோபாலகிருஷ்ணன், தான் எடுக்க இருந்த ஒரு திரைப்படத்திற்கு எம் ஜி ஆரை நாயகனாக ஒப்பந்தம் செய்ய விரும்பி, எம் ஜி ஆரிடம் கதை சொல்ல, கதையைக் கேட்ட எம் ஜி ஆர், அந்தக் கதையில் வரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்திற்கு நடிகர் டி எஸ் பாலையாவை பயன்படுத்துமாறு இயக்குனர் கே எஸ் கோபாலகிருஷ்ணனிடம் சொல்ல, அந்தக் கதாபாத்திரத்திற்கு நடிகர் எஸ் வி ரங்காராவை ஒப்பந்தம் செய்துவிட்டதாகவும், அவர்தான் அந்தக் கதாபாத்திரத்திற்கு சரியான தேர்வாக இருப்பார் என்று பதிலளிக்க, நடிகர் டி எஸ் பாலையாவை அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க வைப்பதாக இருந்தால் இந்தப் படத்தில் நான் நடிக்கின்றேன்; இல்லை என்றால் நீங்கள் வேறு யாரையாவது வைத்து படத்தை எடுத்துக் கொள்ளுங்கள் என்று இயக்குனர் கே எஸ் கோபாலகிருஷ்ணனிடம் கூறி, அந்தப் படத்தை நிராகரித்தார் எம்ஜிஆர்.

அவ்வாறு எம் ஜி ஆர் நடிக்க மறுத்த அந்தத் திரைப்படத்தில் அவருக்குப் பதிலாக நடிகர் ஜெமினிகணேசனை நாயகனாக நடிக்க வைத்து, படத்தை இயக்கி முடித்தார் இயக்குனர் கே எஸ் கோபாலகிருஷணன். அந்தத் திரைப்படம்தான் 1963ம் ஆண்டு வெளிவந்த "கற்பகம்". நடிகை கே ஆர் விஜயா நாயகியாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாக காரணமாய் அமைந்த இத்திரைப்படம், மிகப் பெரிய வெற்றியை அப்போது பெற்றிருந்தது.

எம் ஜி ஆரும், டி எஸ் பாலையாவும் இரண்டு கதாநாயகர்களாக இணைந்து நடித்து, 1948ம் ஆண்டு "ஜூபிடர் பிக்சர்ஸ்" தயாரிப்பில் வெளிவந்த "மோகினி" திரைப்படத்தில் நாயகன் யார்? என்ற ஒரு பிரச்னை எழுந்தபோது, எம் ஜி ஆர் கதாநாயகனாக இருக்கட்டும் நான் துணை நாயகனாக இருக்கின்றேன் என நடிகர் டி எஸ் பாலையா அப்போது விட்டுக் கொடுத்திருந்ததை மனதில் வைத்து, அந்த நன்றிக்காக எம் ஜி ஆர் தனக்கு வந்த "கற்பகம்" திரைப்படத்தில் அவரையும் நடிக்க வைக்க முயற்சித்து, அது நடக்காமல் போக, அந்த வாய்ப்பையே எம் ஜி ஆர் நிராகரித்திருக்கின்றார். கலையுலகில் டி எஸ் பாலையாவிற்கும், எம் ஜி ஆருக்கும் இருந்த நட்பின் ஆழம் எத்தகையது என்பதை தெளிவாகக் காட்டும் ஓர் நிகழ்வாகத்தான் நம்மால் காண முடிகின்றது.

எனக்கு உடனே ஆதாரமாக ஒரு சந்தேகம் வந்தது.  இருவரும் இணைந்து எத்தனை படத்தில் நடித்திருக்கிறார்கள்?  இருக்கவே இருக்கிறது சாட்ஜிபிடி..  கேட்டேன்.  அது சொன்ன பதில் :

மக்கள் திலகம் எம். ஜி. இராமச்சந்திரனும் (MGR), நடிப்புச் சக்கரவர்த்தி டி. எஸ். பாலையாவும் இணைந்து மொத்தம் 6 படங்களில் நடித்திருக்கிறார்கள். [1, 2, 3]
அவர்கள் இருவரும் இணைந்து நடித்த திரைப்படங்களின் பட்டியல் இதோ:
வ.எண்திரைப்படம்வெளியான ஆண்டு
1சதிலீலாவதி (இருவருக்குமே இதுதான் அறிமுகத் திரைப்படம்)1936
2ராஜகுமாரி1947
3மோகினி1948
4மதுரை வீரன்1956
5தாய்க்குப்பின் தாரம்1956
6பெற்றால்தான் பிள்ளையா1966
இவர்களில் 'சதிலீலாவதி' திரைப்படம் எம்.ஜி.ஆர், டி.எஸ். பாலையா மற்றும் என்.எஸ். கிருஷ்ணன் ஆகிய மூவருக்குமே திரையுலகில் முதல் படமாகும்.
============================================================================================

நாயகன் படத்தில் ஒரு ரசிக்கக் கூடிய காட்சி..


=================================================================================

வருடம் 1990.  படம் பொண்டாட்டி தேவை.  நடிகர்கள் பார்த்திபன் அஸ்வினி.  இயக்கம் பார்த்திபன்.  இசை இளையராஜா.  (இந்தப்) பாடல் கங்கை அமரன்.  பாடியவர்கள் அருண்மொழி சித்ரா.  இனிமையான பாடல்.  அருண்மொழிக்கு நல்ல இனிமையான குரல்.  ஏனோ அவர் பாடுவதைத் துறந்து புல்லாங்குழல் வாசிப்பதை மட்டுமே தொடர்கிறேன் என்று இருந்து விட்டார்.

ஆரீராராரோ பாட்டு பாட நானும்  தாய் இல்லை 


========================================================================================

படம் சூரசம்ஹாரம்.  கமல் நிரோஷா நடித்த படம்.   நம்ம 'சாய் வித் சித்ரா' புகழ் (!) சித்ரா லட்சுமணன் எழுதி இயக்கிய படம். இளையராஜா இசை.  அருண்மொழி குரலில் இன்னொரு பாடல்.  இன்னொரு பாடல் என்று இங்கு நான் சொன்னாலும் திரைப்படத்துக்கு அவர் பாடிய முதல் பாடல் இதுதான்.

நான் என்பது நீயல்லவோ தேவதேவி..  கங்கை அமரன் எழுதியிருக்கும் பாடல்.    சித்ராவுடன் இணைந்து பாடி இருக்கிறார்,


=====================================================================




()()()()()()()()()()()()()()()()()()

எதிரே வந்து நின்ற 
கடவுளை 
ஒதுக்கிக்கொண்டு
விரைகிறேன் கோவிலுக்கு

============================================================================

OTT யில் பார்த்த படம்  - அகதா - மூலம் தெலுங்கு - தமிழில் பார்க்க முடிந்தது 

த்ரில்லர், ஹாரர், மிஸ்ட்ரி என்றெல்லாம் போட்டு பார்க்க வைத்து விட்டார்கள்.  இப்போதெல்லாம் ஹாரர் என்று வரும் படங்களை பார்த்து பயமே வருவதில்லை.  அந்த வகையில் இதுவும்!  கிராமத்தில் ஒரு பெண் திடீரென அம்மன் அருள் பெற்று குறி சொல்வது, நன்மை செய்வது, பேய் பிடித்தவர்களைக் காப்பது என்று இருக்கிறாள்.  இளம்பெண்.  அவளை பேட்டி காண ஒரு யுவனும், யுவதியும் வருகிறார்கள்.  இமயமலையிலிருந்து ஒரு  முனிவர் திடீரென அங்கு தோன்றி, சக்திகளை உபதேசித்துச் செல்கிறார்.  அகதா என்று ஒரு கெட்ட சாத்தான்.  காளி தெரியாமல் அதற்கு சாகாவரம் கொடுத்து விட்டு,  அழிப்பது எப்படி என்று தெரியாமல் விழித்து, இந்தப் பெண்ணை உருவாக்கி கொஞ்சம் கொஞ்சமாக இவளுக்கு சக்திகள் கொடுத்து அழிக்க முயல்கிறாள்.  அகதாவை அழிக்க முடியாது, முடியவில்லை.  கடைசியில் கொஞ்சம் 'மாத்தி யோசிச்சு' காளி அகதாவை கட்டுப்படுத்துகிறாள்.  

இந்த மாத்தி யோசிச்ச டெக்னிக்கை மட்டும் ரசித்தேன்.  படத்தில் கதாநாயகன் என்று யாரும் இல்லை.  நாயகிதான், கதைதான்.

======================================================================================

இந்த ஓவியத்தில் புதுமை என்னவென்றால் மொபைலை அல்லது படத்தை எப்படித் திருப்புப் பார்த்தாலும் ஓவியம் மாறாது!



=======================================================================================







"அப்பா...  அவன் மூக்கு வேடிக்கையா இருக்குப்பா...

"ச்சீ அசடு..  அப்படி சொல்லக்கூடாது அவர் மூக்குன்னு சொல்லணும்"


2 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா.. வணக்கம். இணைந்து பிரார்த்திப்போம். 'அதிகாலை நேரமே... இனிதான ராகமே' என்று பாடி விடுவோம்!

      நீக்கு

பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!