2.10.26

சில சமயங்களில்..

 

சில சமயங்களில்..


========================================================================================

2014 ல் என் பேஸ்புக் நண்பர் TNR எழுதியது இது.  இங்கு வெளியிட பொருத்தமான நாளுக்காக காத்துக் கொண்டிருந்தேன்.  TNR எழுதிய கடைசி குரு என்கிற புத்தகம் பற்றியும் முன்னர் ஒரு பதிவிட்டிருந்தேன்.  இந்தப் பதிவில் வரும் சம்பவம் பற்றி நெல்லை கண்ணனும் ஒரு பேச்சரங்கில் சொல்லியிருந்ததைக் கேட்டேன்.

.
ஒரு துளி ஒளி - T N ராதாகிருஷ்ணன் 
---------------------------------------------------


"இப்பம்தான்னு இல்லே - எப்பமும் ஒமக்கு ஊர் வேலைதான்யா முக்கியம்.
இங்கிட்டு பொம்பளையாளு உத்தியோகத்துக்கும் போய்ட்டு வந்து - வீட்டுச் சொமையையும் சொமக்கிறேனே - எனக்கு எள்ளத்தனை ஒபகாரம் பண்றீரா? "
காயப் போட்டிருந்த சட்டை - வேட்டி உலர்ந்து விட்டதா - என்று தொட்டுப் பார்த்து உறுதி செய்து கொண்ட பிறகு - அதைக் கொடியிலிருந்து அப்படியே உருவி - இரண்டாக மடித்து தொபீர் தொபீரென்று அதை உதறி விட்டு - இடுப்பில் கட்டிக்கொண்டு - சட்டையையும் உதறி - அணிந்து கொள்ள யத்தனித்த போது - அந்தச் சட்டையில் நேற்று பித்தான்கள் அறுந்து போயிருந்தது நினைவுக்கு வந்தது அவருக்கு.

அணிந்த பிறகுதான் பார்த்தார் - பித்தான்கள் அனைத்தும் கனகச்சிதமாகத் தைக்கப் பட்டிருந்தன.

முதலில் மனைவியின் வார்த்தையால் கோபப் பட்டிருந்த அவர் - தைக்கப்பட்ட பித்தான்களைப் போட்டுக் கொண்டு - நன்றியோடு மனைவியைப் பார்த்தார்.

"நேத்தே பட்டனைத் தைச்சுடுன்னு சொல்லணும்னு இருந்தேன். மறந்து போச்சு - ஆனா - நீ மறக்காம என் சட்டைய ஆராய்ஞ்சு நான் சொல்லாமலேயே தைச்சு வச்சுட்ட தாயி"

ஒரு பெருமிதத்துடன் அந்தக் கிராமத்து நடுத்தர வயதுப் பெண்மணி - "ஆமா - இதெல்லாம் சொல்லித்தான் தெரியணுமாக்கும் - நாங்க எங்க வேலையச் சொல்லாமத்தான் செய்றோம். ஒரு வாரமா மன்னாடிகிட்டு இருக்கேன் - நீங்கதான் காதுலயே வாங்க மாட்டறீய"

"சட்டைய மட்டுமில்லே - ஒங்க செருப்புல கட்ட விரல மாட்ற வளையம் அந்து போச்சு - அத்தையும் தச்சு வச்சிருக்கேன் " என்று சொல்லிவிட்டு அவர் அருகில் ஓடி வந்தாள்.
"இன்னிக்கும் பெரிய ஆபீசுக்குத்தான போறீய - எங்கண்ணனையும் போய்ப் பாத்துட்டு வந்துருங்களேன். அவுகதான எனக்கு இந்த உத்யோகம் வாங்கிக் கொடுத்தாக - இந்த மாதிரி - எனக்கு இடம் மாத்தற ஒத்தரவு வந்துடுச்சு - அந்தப் புது எடம் ரொம்பத் தொலைவு - அதக் கேன்சல் பண்ணிட்டு பழய எடத்துக்கே என்னை மாத்தணும்னு சொன்னா எங்கண்ணன் செய்ய மாட்டாகளா என்ன - ஒரு வார்த்த - ஒரேயொரு வார்த்த - நீரு எங்கண்ணன் காதுல போட்டீகன்னா - அவுக கேக்க மாட்டாகளா என்ன!" என்று கெஞ்சும் தொனியில் கேட்ட மனைவியைப் பார்த்து அவருக்குப் பரிதாபமாக இருந்தது.

ஆர் ஆருக்கோ செய்றோம் - மொகம் தெரியாதவங்களுக்கெல்லாம் செய்றோம் - பாவம் - ஒரு வாரமா அனத்திகிட்டே இருக்குது - இவ வேலையையும் முடிக்கப் பாப்போம் -

என்று நினைத்தபடி "சரி தாயி - இன்னிக்கு ஒங்கண்ணங்காரனப் பாத்துப்புடறேன்" என்று அவர் சொன்னதும் - உடனே உற்சாகமாகி உள்ளே ஓடிய அந்தப் பெண்மணி - கையில் ஒரு பையோடு வந்தாள்.

"இந்தாருங்க - இந்தப் பைக்குள்ள இருக்கற பாத்திரத்துல குளிப்பணியாரமும் - அவல் பாயசமும் இருக்கு. அண்ணங்கிட்ட குடுங்க"

"இதெல்லாம் எதுக்கு தாயி" என்று அதை மறுக்கப் போனவரைப் பிடிவாதமாக நிறுத்தி அந்தப் பையை அவர் கைகளில் திணித்தாள்.

"எங்கண்ணனுக்கு இப்புடி வகையா ஆக்கிப் போட ஆரு இருக்காக! அண்ணனுக்குக் குளிப்பணியாரமுன்னா அம்புட்டு இஸ்டம் - பாவம் - கண்ட எடத்துல கண்டதத் தின்னு நாக்கே மரத்துல்லா போயிருக்கும் "
"அதுஞ் சரிதான் " என்று சொல்லிப் பையை வாங்கிக் கொண்டார் அவர்.

அந்தப் பெண்மணிக்குப் பரம திருப்தி. வாசல் வரை வந்து அவரை வழியனுப்பினாள்.

"வர்றேன் தாயி " என்று சொல்லி விட்டு வெளியே வந்தார்.

மனைவியின் அண்ணன் பட்டணத்தில் பெரிய அரசாங்க வேலையில் இருக்கிறார். அவரால் அரசாங்கத்தில் முடிக்க முடியாத காரியமே இல்லை. அம்புட்டுப் பெரிய உத்யோகம்!

இவர் குடும்பத்தின் வறுமையைப் பார்த்து - அண்ணன்காரர்தான் இவரது மனைவிக்கு - அதாவது அவருடைய தங்கச்சிக்கு உத்யோகம் வாங்கித் தந்தார்.

அதுவும் வீட்டுக்குப் பக்கத்திலேயே வேலை செய்யும் இடம் என்பதால் அந்தப் பெண்மணிக்குச் சௌகரியமாகத்தான் இருந்தது. இவர் வீட்டில் ஒரு உபகாரமும் செய்ய மாட்டார். அந்தப் பெண்மணிதான் இழுத்துப் போட்டுக் கொண்டு எல்லா வேலைகளையும் செய்வாள்.

எல்லாம் ஒழுங்காகத்தான் போய்க் கொண்டிருந்தது - அப்போதுதான் அவள் வேலை செய்யும் தலைமை அலுவலகத்திலிருந்து அவளுக்குத் தொலைதூரத்துக்கு இடம் மாற்ற உத்தரவு வந்து விட்டது. அந்த இடத்துக்கு நேரடியாக பஸ் வசதி கிடையாது. மூன்று பஸ் மாறி இரண்டு மைல் நடக்க வேண்டும். இவளால் பாவம் - முடியாது! அதற்காகத்தான் அந்த இடமாற்ற உத்தரவை ரத்து செய்யக் கோரி - அண்ணனைப் பார்த்துச் சொல்ல வேண்டும் என்று ஒரு வாரமாக வீட்டில் பஞ்சாயத்து ஓடிக் கொண்டிருக்கிறது.

அண்ணன் என்றால் இவர் மனைவியின் சொந்த அண்ணன் இல்லை அவர். அந்தப் பெரிய உத்தியோகஸ்தர் இவருக்குத்தான் பல்லாண்டு கால நண்பர். இருவரும் ஒருவரையொருவர் ஒருமையில் பேசிக் கொள்ளும் அளவுக்கு நெருக்கம்.

அவர் மனைவி அந்தப் பெரிய உத்தியோகஸ்தரைப் பார்த்தவுடனேயே "அண்ணே" என்று அழைக்க - இவரும் நெகிழ்ந்து போக - இருவருக்கிடையேயும் அம்புட்டு சகோதர பாசம் முற்றிப் போய் விட்டது.

அண்ணனின் மிகப் பெரிய அலுவலகத்தை அடைந்தவுடன் - வாசலிலிருந்து அந்த அண்ணனின் அலுவலக அறை வரை இருந்த எல்லோரும் இவரை எழுந்து நின்று வணங்கி விட்டு அமர்ந்தார்கள்.

பின்னே..... ஐயாவுக்கு ஆத்ம சிநேகிதமாச்சே -

என்றைக்கும் காத்திருந்து பழக்கமில்லை என்பதால் திடுமென்று நேராக ஐயாவின் அறைக்குள் நுழைந்தார்.

"வாடா" என்று எழுந்து நின்று வரவேற்றார் அண்ணன்.

"மொதல்ல ஒக்காரு - எதாவது குடிக்கிறியா" என்று கேட்ட அண்ணன்காரருக்கு "ஒணணும் வாணாம் - சுடுதண்ணி குடு போதும் " என்று சொல்லி - வந்த சுடுநீரைப் பல் படாமல் உயர்த்திக் குடித்தார்.

"தங்கச்சி நல்லா இருக்குதா?" என்று அந்த அதிகாரி கேட்டதும்தான் இவருக்கு நினைவுக்கு வந்தது. உடனே கையோடு வைத்திருந்த பையிலிருந்து பாத்திரத்தை எடுத்து அந்த அதிகாரியின் கைகளில் கொடுத்தார்.

"இந்தா - ஒன் தங்கச்சி ஒனக்காகக் கொடுத்தனுப்பி இருக்குது "

அந்தப் பாத்திரத்தைக் கைகளில் பெற்று அதை மேஜை மீது வைத்து அதன் மூடியை அகற்றிப் பார்த்தவுடன்.....

அந்தப் பெரிய உத்தியோகஸ்தரின் முகம் பெரிதாக மலர்ந்தது.

ஏழெட்டுக் குழிப் பணியாரங்கள் - ஒரு சின்ன தாமரை இலையில் மடித்துக் கொஞ்சமாகச் சட்னியோ துவையலோ... அது கொத்தமல்லித் துவையலா - புதினாத் துவையலா... அதுவுந் தெரியவில்லை.

பெரிய உத்தியோகஸ்தருக்கு அவற்றைப் பார்த்ததும் - அவருடைய தாயாரின் ஞாபகம் ஒரு விநாடி வந்து போனது. அப்பம் சாப்பிட்டது - இப்பம் யாரு இங்கே வகையாப் பண்ணித் தர்றாக? பட்டணத்துல ஹோட்டல்ல என்னென்ன கருமாந்திரமோ பண்றான். இந்தப் பணியாரம் பண்றதுக்கு ஆளிவ்லையே!

கூடப் பிறக்காத அந்தத் தங்கையின் பாசத்தையும் - அந்த நாளில் நீராடி விட்டு வந்த தன் தலையைத் துவட்டியபடி - இந்த மகனுக்குப் பணியாரம் ஊட்டிய தன் தாயின் பேரன்பையும் ஒரு சேர நினைத்து உணர்ச்சி வசப்பட்டார் அந்த உத்தியோக அதிகாரி.

அவர் அப்படியெல்லாம் உணர்வு வயப் படுபவர் இல்லைதான் - குடும்ப உறவு - வாய் ருசி இரண்டையும் மறந்தே போனவர்தான் - மரத்துப் போனவர்தான்.

ஆனால் அவர் உடம்பில் எங்கேயோ கொஞ்சூண்டு ஒளிந்திருந்த அந்தச் சராசரி மனித ரத்தம் அவரை ஒரு விநாடி செயலிழக்கச் செய்தது.

அந்தப் பணியாரத்தை அகற்றி உள்ளே பார்த்தால் ஒரு சின்ன டப்பா இருந்தது. அதை எடுத்துத் திறந்தால்.... அதன் உள்ளே அவல் பாயசம்! சின்ன வயசில் மாமன் வீட்டில் குடித்துப் பார்த்தது -

அதன் சுவை நாற்பத்து நாலு வருடம் கழித்து இப்போது எட்டிப் பார்த்தது.

இதயம் அநியாயத்துக்குக் குழைந்து போனது அவருக்கு. அந்த அதிகார வர்க்கக் கண்ணோரம் - கொஞ்சமே கொஞ்சம் கசிந்ததே - அது என்ன கண்ணீரா?

இவருக்குத் தன் நண்பரான உத்தியோகஸ்தரின் நிலையைப் பார்த்து ஆச்சரியம் தாளவில்லை - "இவனை இம்புட்டு நாள் மனுசன் இல்லே - எந்திரம்னு அல்லவா நெனைச்சுகிட்டு இருந்தோம் - ஓ! இவங் கூட மனுசன்தான் போலிருக்கு"

ஒரு குழிப் பணியாரத்தைக் அந்தக் கொத்துமல்லி புதினா காம்பினேஷனில் அரைத்த அந்தத் துவையலில் துவட்டி - வாய்க்குள்ளே தள்ளி - அந்த அவல் பாயசத்தை ஒரு மிடறு குடித்தபடி....

"உம் - என்ன விஷயமா வந்திருக்கே சொல்லு" என்றார் அந்த உத்யோகஸ்தர்.

அப்போதுதான் இவருக்கு சட்டென்று நாக்கு செயலற்றுப் போனது. எவ்வளவோ முயன்றும் வாயிலிருந்து ஒரு வார்த்தை வரவில்லை.

மறுபடியும் குழிப் பணியாரத்தையும் பாயசத்தையும் அநுபவித்துச் சாப்பிட்டபடி - அந்த உத்யோகஸ்தர் "டேய் - ஒன்னைத்தாண்டா கேக்கேன் - என்னடா இம்புட்டு தூரம் வந்திருக்கே - என்ன சமாச்சாரம்?" என்று மீண்டும் கேட்டும் கூட -

நம்மவருக்கு வாயிலிருந்து ஒரு சொல் - ஒரு வார்த்தை - ஒரேயோர் எழுத்து - ஊஹும் - ஒரேயொரு சின்ன சப்தம் கூட வரவில்லை.

நம்மவருக்கே தன் நிலைமை வியப்பாக இருந்தது - அந்த உத்யோகஸ்தர் எவ்வளவோ பெரிய அதிகாரிதான் - ஆனால் ஒவ்வொரு முறையும் சந்திக்கும் போதும் அந்த அதிகாரியைப் பேசவே விடாமல் - ஊர் மக்கள் சேவைக்காக முத்து முத்தாக முழங்கியவர்தான் - ஆணித்தரமாகத் தன் வாதங்களை முன் வைத்தவர்தான்!

அடுக்கடுக்காக மக்கள் பிரச்சினைக்குக் குரல் கொடுத்துத் தீர்த்து வைப்பவர்தான்.

இன்றைக்கு இவருக்கு என்ன ஆயிற்று? தன் மனைவியின் இடமாற்றறத்தை ரத்து செய்ய வேண்டும் - என்கிற ஒரு சிறிய விஷயத்தைக் கூடச் சொல்ல முடியாமல் - எது தன் வாயை அடைத்துக் கொண்டது?

இதுவரையில் அவர் பேசியது ஊர்ப்பிரச்சினைகள் பற்றி - அதனால் அவரால் முழங்க முடிந்தது - இன்றைக்கு அவர் பேச வேண்டியது தன் சொந்த விஷயத்தைப் பற்றி. இதுவரையில் யாரிடமும் தன் தேவைக்காக எதையும் கேட்டுப் பெறும் அநுபவமே சிறிதும் அற்ற நம்மவர் - அந்த அதிகாரியின் முன்னால் - பேசவே பேசாமல் - பேச முடியாமல் - வாய்க்குள்ளே இருந்த வார்த்தைகளை வெளியே எடுத்துக் கொட்டுவதற்கு வழி தெரியாமல்.....

பேய் அடித்தது போல் பிரமை பிடித்து நின்றார்.

"ஏலேய் - ஒன்னைத்தாம்லே கேக்கறேன் என்ன சமாச்சாரமா என்னயப் பாக்க வந்தே?"
"............................."
"எலேய் - இப்புடிப் பெசாசு அடிச்சாம் போல நின்னா எனக்கு என்னடா புரியும்?"
அதற்கும் ஓர் அசட்டுச் சிரிப்புதான் பதில்.

பிறகு அந்த அதிகாரியே அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார் "ஓ! இந்தக் குளிப்பணியாரத்தையும் - பாயாசத்தையும் கொடுக்கத்தான் வந்தியோ? தங்கச்சி குடுத்து அன்ப்பிச்சுதோ - " என்று அந்த அதிகாரியாகவே ஒரு காரணத்தைக் கண்டுபிடித்துச் சொன்னவுடன் - சட்டென்று அதைப் பிடித்துக் கொண்டு முகம் மலர்ந்தார் நம்மவர். "ஆமா ஆமா அதேங்"

"கிறுக்குப் பய - இத்தக் கூடச் சொல்ல முடியலியா ஒன்னாலே! சரி சரி! தங்கச்சிகிட்ட சொல்லு - பணியாரம் தங்கம் மாதிரி ஒசத்தியா இருந்திச்சு - பாயாசம் தேவாமிருதம் மாதிரி இருந்துச்சுன்னு சொல்லு - என்ன - சொல்லுவியா?" என்று அந்த அதிகாரி கேட்டவுடன் தலையை ஆட்டி விட்டு - அந்த இடத்தை விட்டு உடனே கிளம்பினார் நம்மவர்.

அவர் கிளம்பினதுதான் தாமதம் - நம்மவரின் சேஷ்டை ஏதோ ஒரு சந்தேகத்தை அந்த அதிகாரிக்கு ஏற்படுத்தி விட்டது போலும்.

உடனே தன் செயலாளரை அழைத்தார் "இவன் இப்படியெல்லாம் சும்மா குசலம் விசாரிச்சுட்டுப் போகிற ஆளில்லை. ஏதோ சொல்ல வந்திருக்கான் - அவனால அத்தைச் சொல்ல முடியலை.

நீங்க என்ன செய்றீங்க - இவன் ஏன் என்னைப் பார்க்க வந்தான்

அப்படீங்கறதுக்கான காரணத்த ஒடனே கண்டுபிடிச்சு எனக்குத் தெரியப் படுத்துங்க - நீங்க என்ன செய்வீங்களோ - ஏது செய்வீங்களோ - எனக்குத் தெரியாது - இன்னம் ஒரு மணி நேரத்துல அந்தக் காரணத்த எனக்குக் கண்டுபிடிச்சு எனக்குச் சொல்லியே ஆகணும் " என்று ஆணையிடும் தோரணையில் கண்டிப்பாகச் சொல்லி விட்டார் அந்த அதிகாரி.

ஆனால் - அந்த அதிகாரியின் செயலாளர் லேசுப் பட்டவரில்லை. அதிகாரி கொடுத்த ஒரு மணி நேர அவகாசம் வரை பொறுக்காமல் - அரை மணி நேரத்திலேயே சரியான தகவலுடன் வந்துவிட்டார் அவர்.

அதிகாரியின் முன்பு பணிவோடும் - பெருமிதத்தோடும் நின்றார் செயலாளர்.
"ஐயா - வந்துட்டுப் போன ஒங்க ஸ்நேகிதரோட ஒய்ஃபுக்கு அவங்க அபெக்ஸ் பாடியிலேர்ந்து ஒரு டிரான்ஸ்ஃபர் ஆர்டர் போயிருக்குது - அந்த இடம் ரொம்பத் தூரம் - இந்த அம்மாவால அந்த இடத்துக்கு டெய்லி போய்வர முடியாது. அதனால அந்த டிரான்ஸ்ஃபர் ஆர்டரைக் கேன்சல் செய்யத்தான் உங்க ஸ்நேகிதர் இங்கே வந்திருக்கார் - இதுவரைக்கும் மத்தவங்களுக்காகவே போராடின உங்க ஸ்நேகிதருக்குத் தன் சொந்த விஷயமா ஒரு கோரிக்கை வைக்கணும்னு சொன்னவுடனே அதைச் சொல்றதுக்கு நாக்கு வராமத் தயங்கித் தயங்கி நின்னிருக்கார். இதான் விஷயம்" என்று சொல்லி முடித்தவுடன் - அந்த அதிகாரியின் முகம் பூரித்துப் பொலிந்தது.

"அதானே பாத்தேன் - ஊரார் பிரச்சினைன்னா எம்புட்டு மல்லு கட்டுவான் - எப்படியெப்படி கொரல் எழுப்புவான் - இன்னிக்குத் தனக்குன்னு ஒரு கோரிக்கை வைக்கறதுக்கு எம்புட்டு தயங்கி நிண்ணிருக்கான்! தனக்குன்னு ஒரு சின்ன விஷயத்தக் கூடக் கேக்கத் தெரியலியே! பொதுவாழ்க்கைல இருகிறவங்களுக்கான சாபமே இதுதான். அடா அடா அடா அடா! இந்த மாதிரி ஆள் இருக்கற வரைக்கும் இந்த தேசத்த ஒண்ணுமே செய்ய முடியாது" என்று சொல்லி விட்டு முகத்தைத் தன் துண்டால் துடைத்து விட்டுக் கொண்டவர் - சட்டென்று நிமிர்ந்து தன் செயலாளரைப் பார்த்து "‌ஒடனே அந்த டிரான்ஸ்ஃபர் ஆர்டரைக் கேன்சல் பண்ணிட்டு - அந்த கேன்சலேஷன் தகவலை ஒரு ஸ்பெசல் மெசஞ்சர் மூலமா அவன் வீட்டுக்குக் கொடுத்தனுப்புங்க. ஸ்பெசல் மெசஞ்சரை ஒரு கார் மூலமோ இல்லேன்னா மோட்டார் சைக்கிள் மூலமோ அனுப்புங்க - இவன் வீட்டுக்குப் போய்ச் சேர்றதுக்கு முன்னாடி - அந்தக் கேன்சல் ஆர்டர் அவன் வீட்டுக்குப் போய்ச் சேந்துடணும் " என்று சொல்லி விட்டுத் தன் மேஜை மீதிருந்த அடுத்த ஃபைலை எடுத்து ஆராயத் தொடங்கினார் அந்த அதிகாரி.

**********************************************

வெளியே வந்த நம்மவருக்குத் தன் மீதே கோபம் வந்தது. ச்சே! நானெல்லாம் ஒரு மனுஷன்ல சேர்த்தியா?

தன் மனைவி - தன்னை நம்பி வந்த பெண் - அது இதுவரைக்கும் வாயைத் திறந்து எனக்கு அது வேணும் இது வேணும்னு ஒண்ணாவது கேட்டிருக்குமா - எல்லாப் பெண்டுகளையும் போல - கூத்து பாக்கவோ - பயாஸ்கோப்பு பாக்கவோ ஆசப் பட்டிருக்குதா?

நம்ம வீட்டுக்கு வந்து பல காலம்

பாதிக்குப் பாதி நாள் பட்டினியாதானே கெடந்துச்சு! ஏதோ இவங்க அண்ணங்காரன் - அதுதான் என்னோட சிநேகிதன் - பெரிய மனசு பண்ணி - இவளுக்குப் பொருத்தமா ஒரு உத்யோகத்த வாங்கிக் கொடுத்தானோ - பசியில்லாம இருக்கோமோ - இப்பம் கூட அது என்னத்த கேட்டுச்சு - வானத்த வில்லா வளைக்கச் சொல்லியா கேட்டுச்சு - ஒரு எடம் மாத்த உத்தரவ ரத்து பண்ணக் கேட்டுச்சு - அத்தைக் கூடச் சாதிக்க முடியாம நாம என்ன பிடுங்கிகிட்டு இருக்கோம்?

ரயிலில் ஏறி தன் ஸ்டேஷனில் இறங்கி விட்டு - தன் வீட்டுக்கு நடந்தார் நடந்தார் - தளர்வாக நடந்தார் -

காலில் அவள் தைத்துச் சரி செய்து கொடுத்த செருப்பு - அவரைப் பார்த்து இளிப்பது போல -

தைக்கப் பட்ட சட்டைப் பித்தான்கள் "நீயெல்லாம் ஒரு ஆளு" என்று கேட்டு அவர் உடம்பை இறுக்குவது போல -

வீட்டுக்குப் போகத்தான் வேணுமா - ஐயோ - அவ மொகத்த நான் எப்புடிப் பாப்பேன் - பார்க்கப் போனால் - மனைவி கூடப் பொதுமக்களில் ஒருத்திதானே - அவளுடைய கொறையையும் நாம தீர்க்கணுமில்லா! அதான பொதுமனிசனுக்கு அழகு!

இதோ வீடு வந்து விட்டது - கூனி - குறுகி- குமைந்து - மருகி - அவர் வீட்டினுள் நுழையப் போவதைப் பார்த்த அவர் மனைவி உள்ளேயிருந்து ஓடோடி வந்தாள் - உற்சாகமாக வந்தாள் - உணர்வு பரபரக்க வந்தாள்.

நம்மவருக்கு நாக்கு மறுபடியும் மக்கரானது.

"என்னாங்கறேன் - இது நீங்களாங்கறேன் - அடா அடா அடா அடா! எம் புருசனுக்கு இப்படியெல்லாங் கூடச் செய்யத் தெரியுமாங்கறேன் -
இவுக எங்கிட்டு கேக்கப் போறாகன்னு இந்த முட்டாக் களுத அபசகுனமால்ல நெனைச்சுட்டேன் - சாதிச்சு வந்துட்டீகளே என் ராசா - என்னய வாயடைக்க வச்சுட்டீயளே என் சாமி..." என்று ஆனந்தமாய் அடுக்கிய தன் மனைவியைப் பார்த்து ஒரு கணம் பிரமை பிடித்தது போல் நின்றார் நம்மவர்.

"இத்தைப் பாருங்க - யாரோ ஒரு தாணாக்காரரு - இந்த மாத்தல் உத்தரவ ரத்து செஞ்சு கடிதாசி கொடுத்துட்டு போயிருக்காரு - எங்கண்ணன் கண்டிசனாச் செய்வாரு - எனக்குத் தெரியும் - ஆனா அவரு காதுல இந்தத் தகவல கொண்டு போகணுமே - நீங்கதான் செய்யவே மாட்டீயளே - அப்பேர்க்கொத்த நீங்க - எனக்காக - ஒங்க கொள்கைய நெகிழ்த்திகிட்டு - எனக்கே எனக்காக அண்ணங்கிட்ட பேசி இத்தை முடிச்சுட்டு வந்துட்டீயளே என் கருப்பண்ணசாமி - ராசா - மகாராசா..."

அவள் கையிலிருந்த கவரும் காகிதமும் அவள் சொன்னதை உண்மைதான் என்று நிரூபித்தன - அந்த மிகப் பெரிய உத்தியோகஸ்தர் அலுவலகத்திலிருந்து ஒரு டபேதார் இவர் வீடு தேடி வந்து - இந்தத் தபாலை மோட்டார் சைக்கிளில் வந்து கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார்.

அவருக்கு நிலம் கீழே நழுவியது -

எந்த விஷயத்தையும் நம் சிநேகிதனிடம் சொல்லவே இல்லையே - ஒரு குறிப்பு கூடக் கொடுக்கவில்லையே - ஒரு கோடு கூடக் காட்டவில்லையே!

நம் தயக்கத்தின் உள்ளே ஒளிந்திருந்த காரணத்தை ஆராய்ந்து - உடனுக்குடன் - கண்ணிமை நேரத்தில் செய்து முடித்த சிநேகிதனை மனத்தால் கைகூப்பி வணங்கினார்.

நம்மவருக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை - அவர் தன் நண்பனுக்குக் கடிதம் எழுதினார்

"புராணமெல்லாம் பொய்யென்று நினைக்கும் கூட்டத்தைச் சேர்ந்தவன் நான் - ஆனால் நண்பா - நான் நம்பவே நம்பாத கிருஷ்ணன் குசேலன் கதையை என் வாழ்க்கையிலேயே நடத்திக் காட்டி - உண்மை என்று என்னை ஒப்புக் கொள்ள வைத்து விட்டாயே - நண்பா - நீ இன்னும் ஒரு நூற்றாண்டு இரடா - இந்த மக்களைக் காப்பாற்றடா - நண்பா - என் உயிரே - உனக்குத் தேவைப்படாமல் போனாலும் - இந்த மண்ணுக்கு உன் உயிர் தேவையடா"

-----------------------------------------------
இதில் குறிப்பிடப் பட்டுள்ள நம்மவர் மானுட மகத்துவர் தோழர் ஜீவா!
அந்தப் பெரிய உத்தியோகஸ்தர் -

பெருந்தலைவர் காமராஜர்! அவர் அன்று பார்த்தது முதலமைச்சர் உத்தியோகம்!
இப்படியெல்லாம் பேரொளிகளால் - வெளிச்ச சமுத்திரத்தில் மிதந்து கொண்டிருந்தது நம் நாடு.

ஆனால் - இப்போது - இருண்டு போயிருக்கிறது.

இந்த நாட்டை மீட்க - இவர்களைப் போன்ற பெரிய பேரொளிகள் வேண்டாம் - பிரகாசங்கள் வேண்டாம் - அவையெல்லாம் நமக்கு வரவும் வராது - ஏனென்றால் நாம் செய்த பாவத்தின் அளவு மிக மிக அதிகம்.

இவ்வளவு கருமையான அழுக்கு இருட்டில் - அவல இருட்டில் - எம்மைக் காப்பாற்ற ஒரு சிறிய ஒளி தேவை -

சின்னஞ்சிறு ஒளி - ஒரு துளி ஒளி - ஒரேயொரு துளி......

அருள்வாயா இறைவா! 14-4-2014


இதற்கு நான் இட்ட கமெண்ட்... : படித்துக் கொண்டு வரும்போதே குசேலர் கதை நினைவுக்கு வந்தது. கற்பனை என்று எண்ணியிருந்த என்னை அடித்துப் போட்டது கீழே சொல்லி இருக்கும் நிஜக்கதை என்கிற வார்த்தைகள். நிஜமா? தோழர் கொண்டு சென்று சொல்லாமல் வந்த கோரிக்கை இடமாற்றல்தானா நிஜமாகவே? நான் இதற்கு முன் இந்த சம்பவம் படித்ததில்லை.


அதற்கு அவர் பதில் :   Sriram Balasubramaniam ஜி

சத்தியம் சத்தியம் சத்தியம்!

இது முழுக்க முழுக்க உண்மைச் சம்பவம்.

ஜீவா குறித்த நூல்களில் இச்சம்பவத்தைக் காணலாம்.  காமராஜர், ஜீவா இருவர் வாழ்விலும் இம்மாதிரி ஏராளமான சம்பவங்கள் கொட்டிக் கிடக்கின்றன.
அக்காலத்தில் என் தந்தை - ஒன்றுபட்ட காங்கிரஸ் மற்றும் பின்னாளில் காமராஜர் தலைமையிலான ஸ்தாபன காங்கிரஸ் இரண்டிலும் திருஅண்ணாமலை மாவட்டச் செயலாளராக இருந்தார். காமராஜரிடத்தில் எனக்கே பர்சனலாக இரண்டு நல்ல சம்பவங்கள் உண்டு.
இந்தச் சம்பவத்தை முதன் முதலில் கிருஷ்ணன் குசேலன் கதையோடு இணைத்து எழுதிப் பார்த்தேன். மிகப் பெரியதாக அது அமைந்து விட்டதால் - இந்த அவசர யுகத்தில் யாரும் அதைச் சீண்ட மாட்டார்கள் - (இதைத் தொடராகப் பதிவதில் எனக்கு விருப்பமில்லை) என்று கருதி - கிருஷ்ண குசேல சிநேகிதத்தை மட்டும் தனிப் பதிவாக நம் முகநூலில் இட்டேன். அது "கடைசி குரு" நூலிலும் இடம் பெற்றது.

ஒரு நாள் - நம் Aaranyanivas R Ramamoorthy அவர்களிடம் பேசிக் கொண்டிருந்த போது - இந்த சம்பவத்தைச் சொன்னேன்.

"சார் - இதை முதலில் எழுதுங்கள் சார்" என்று அவர் வலியுறுத்திய பிறகே இப்போது இதை மட்டும் முகநூலில் பதிகிறேன்.

இது மட்டுமின்றி - காமராஜர் முதலமைச்சராக இருந்த பத்து வருடங்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வோர் அற்புதம் நிகழும். அவர் மனதில் தோன்றுகிற திட்டங்களுக்கு அதிகாரிகள் ஏதாவது தடை போடுவது போலச் சில பாய்ண்ட்டுகளை அடுக்குவார்கள் - அவை ஒவ்வொன்றையும் தன் சமயோசித மற்றும் அநுபவ அறிவால் காமராஜர் பதிலளித்து அவற்றைத் தீர்த்து - தம் திட்டங்களை நடைமுறைப்படுத்துவார்.

எல்லோருக்கும் இலவசக் கல்வி திட்டத்தைக் காமராஜர் எப்படிச் செயல்படுத்தினார் - என்பதைப் பற்றி மாபெரும் எழுத்தாளரான ஜெயந்தன் - தன் சிறுகதை ஒன்றில் விளக்கமாகக் குறிப்பிட்டிருப்பார்.

நான் பணிபுரிந்த ஒவ்வோர் ஊரிலும் (திருக்கோயிலூர் - உளுந்தூர்பேட்டை - செங்கல்பட்டு - பூவிருந்தவல்லி - பரமக்குடி - கள்ளக்குறிச்சி) அங்கே வந்த காமராஜர் செயல்படுத்திய திட்டங்கள் உருவான கதைகள் பற்றி அந்தந்த ஊர் மக்கள் என்னிடம் விலாவரியாக எடுத்துரைத்திருக்கிறார்கள்.

அவ்வளவு ஏன் - எங்கள் ஊருக்கு நீர் வசதி ஏற்படுத்த வேண்டிக் கட்டப்பட்ட சாத்தனூர் அணையில் காமராஜரின் பங்களிப்பு பற்றி ஒரு நாவலே எழுதலாம்.

அவர்கள் எல்லோரும் மகான்கள் சார்!

==============================================================================

7 கருத்துகள்:

  1. திரு. KGY பகுதி அந்தக் கால எபி வாசித்த ஆர்வத்திற்கு புத்துயிர் கொடுத்த மாதிரி இருக்கிறது.
    போகிற போக்கில் அல்லாது அவர் பகுதியை உள்ளார்ந்து வாசித்து கருத்துக்கள் வந்தால் அந்தப் பகுரிக்கு இன்னும் சிறப்பு சேர்த்த மாதிரி இருக்கும்.
    அதுவே எழுதுவோருக்கு மேலும் மேலும் புதுப்புது செய்திகளை எழுத வேண்டும் என்ற ஆர்வத்தைத் தருவதாக அமையும்.

    பதிலளிநீக்கு
  2. இனிய காலை வணக்கம். அனைவரும் நலமுடன் இருக்க இறைவன் அருளுவான்.

    பதிலளிநீக்கு
  3. கிருஷ்ண குசேல கதை. அபாரம். அபாரம். என்ன ஒரு அருமையான நிகழ்வு. மனம் மிக நெகிழ்கிறது மா ஶ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  4. காமராஜர் ஜீவா நட்பும் பெருந்தன்மையும் அசர வைக்கின்றன. மஹா மனிதர்கள்.

    பதிலளிநீக்கு
  5. அந்தப் பெண்குழந்தையின் எதிர்பார்ப்பும் பாஸின் பரிசளிப்பும் மகிழ் நிகழ்வுகள். ஏஐயின் படமும் அருமை.நன்றிமா.

    பதிலளிநீக்கு
  6. ''அவர்கள் எல்லோரும் மகான்கள் சார்!'' இதுதான் உண்மை. நன்றி ஜெயந்தன் சார்.

    பதிலளிநீக்கு
  7. ஒரு துளி ஒளி. சூப்பர். யானைகள் கதைகள் எவ்வளவு படித்தாலும் போதாது.

    பதிலளிநீக்கு

பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!