மருதூர் கோபால மேனன் ராமச்சந்திரன்.
MGR!
ஜனவரி 17. (1917) அவர் பிறந்த நாள்.
அவரை நினைவு கூரும் வகையில் ஒரு பதிவு தேத்தலாம்னு.. ஹி ஹி .. போடலாம்னு... ஹி...ஹி...
சினிமாவும் அரசியலும் எம் ஜி ஆர் பார்வையில் : மக்களை 'நம்பவைக்கும்' துறைகள்.
இதைக் கேட்டால் தனியா ஒரு கட்டுரை தேவையா என்ன?
இசையில் அபார ஆர்வம் ஞானமுடையவர். கர்நாடக சங்கீத ராகங்களை அவ்வப்போது ஹம்
செய்து கொண்டிருப்பாராம். எம் ஜி ஆர் மேஜிக் என்று அழைக்கப் படும் எம் ஜி
ஆர் கவர்ச்சியின் மீது அவருக்கு நம்பிக்கை அதிகம். எங்கு அபபடி அதை
உபயோகிக்க வேண்டும் என்று அவர் நன்றாக அறிந்திருந்தார்.
மலைபோலே வரும் சோதனை யாவும் பனிபோல் நீங்கி விடும்.....
தன் ஊழியர் ஒருவரிடம் அவருக்கு அதிருப்தி இருந்தால் அவரை வேலையை விட்டு
நிறுத்தி விடுவார். ஆனால் அவருக்குரிய சம்பளம், உணவு எல்லாம் அவருக்கு
சேர்ந்து கொண்டுதான் இருக்குமாம். சில மாதங்களுக்குப் பிறகு அவரை மறுபடி
வேலைக்குச் சேர்த்துக் கொள்வாராம். எம் ஜி ஆர் ஸ்டைல்!
இன்னொரு நல்ல பாட்டு என்ற வகையில் (மட்டும்) அடுத்த பாடல்
தன்னைப் பற்றிய ஒரு நிச்சயமற்ற தன்மையையும், மர்மத்தையும் அவர்
உடையாமல் பார்த்துக் கொண்டார் என்கிறார் அவருடன் பணிபுரிந்த ஒரு அதிகாரி.
அமைச்சர்கள் உட்பட எல்லோரையுமே ஒரு படபடப்பில் வைத்திருந்ததும் அவர்
இயல்பே. எந்த நிமிடம் எதைச் செய்வார் என்பது யாருக்குமே தெரியாது. ஒரு
கட்டத்தில் தி மு கவுடன் மறுபடி இணைவதற்குக் கூட கிட்டத் தட்ட அருகில்
வந்து அப்புறம் நொடியில் மாறிப் போனார் என்று படித்திருக்கிறேன்.
இன்னொரு சம்பவம் படித்ததும் நினைவுக்கு வருகிறது. அப்போதைய ஜனாதிபதி
சென்னை வந்திருந்த போது அப்போதைய முதல்வரான எம் ஜி ஆரை மதிய உணவுக்கு
அழைத்தாராம். பதினொன்றரை மணி முதலே கோட்டையில் இருந்த முதல்வர் மற்ற
அமைச்சர்களுடன் விவாதத்தில் தொடர்ந்து இருக்க, 12.30 மணி முதலே ஜனாதிபதி
அலுவலகத்திலிருந்து தொடர்ந்து விசாரித்துக் கொண்டேயிருக்க, எம் ஜி ஆரிடம்
கேட்ட போது "நான் ரொம்ப பிசியாக இருக்கிறேன் முப்பது அல்லது நாற்பது
நிமிடங்கள் தாமதமாகலாம் என்று ஜனாதிபதியிடம் சொல்லி விடுங்கள். என்
வருத்தத்தையும் தெரிவித்து விடுங்கள்" என்றாராம். அதுதான் எம் ஜி ஆர்!
தலைவரைப் பற்றி எழுதறியா.... காந்திக்குப் பிறகு அதிகபட்ச மக்களால்
நேசிக்கப் பட்டவர் எங்கள் தலைவர் என்று சேர்த்து எழுது என்கிறார் விசு!
அமெரிக்காவிலிருந்து
அவர் மீண்டு வந்தபோது மதுரைக்கு வந்திருந்தார். அப்போது ரிசர்வ் லைனில்
ஒரு பொதுக் கூட்டத்தில் பேச அவர் சென்ற போது, அவரைப் பார்க்க நின்ற
கூட்டமும், கைக்குழந்தையோடு நின்ற ஒரு பெண் அவர் வந்ததும் ஜீப்போடேயே
'தலைவா...தலைவா' என்று கத்தியபடி ஓடியதும், அப்போது அவர் இடுப்பில் இருந்த
குழந்தை நழுவிக் கீழே விழ, அதைக் கூட கவனிக்காமல் அவள் ஓடி, எம் ஜி ஆர்
கண்ணிலிருந்து மறைந்து நீண்ட நேரம் கழித்து திரும்பி வந்து குழந்தையைத்
தேடியதும் இன்னும் கண்ணில் நிற்கிறது!
சாவித்திரியின் நடை....
எம் ஜி ஆர் மறைந்து இத்தனை வருடங்கள் கழிந்த பிறகும் அவர் பெயருக்கு இருக்கும் கிரேஸ் ஆச்சர்யப் பட வைப்பது.
அவரை
எதிர்த்தவர்கள் கூட, அரசியலிலும் சரி, திரைத் துறையிலும் சரி, அவரை
ஒருமுறை நேரில் சந்தித்து விட்டால் போதும், அந்தக் கவர்ச்சியில் மனம் மாறி
விடுவார்கள் என்பதை, அவரும் அதை உணர்ந்து இருந்தார் என்பதோடு தேவையான
இடங்களில் உபயோகப் படுத்தியும் கொண்டார்.
"இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்... இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்"
மது
அருந்தும் பழக்கங்கள் கிடையாது. புகைப் பிடிக்கும் பழக்கம் கிடையாது.
உடற்பயிற்சி செய்யாத நாள் கிடையாது. தன் உடல் மேல் அவருக்கு இருந்த அதீத
நம்பிக்கையால் தனக்கு எதாவது உடம்பு சரியில்லாமல் போகும் என்பதையே அவர்
நம்பாதவராக இருந்தார். அவசியமான சமயங்களில் உணவுக் கட்டுப்பாட்டைக் கூட
ஏற்க மறுத்தாராம். அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியுடன் தஞ்சை பெரிய
கோவில் சென்ற போது அவர் கண்கள் இருண்டு, மயங்கி சில நிமிடங்கள்
அமர்ந்துதான் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதன் முதற் கட்டமாம். ஆனால்
அதுபற்றி அவர் அலட்டிக் கொள்ளாமல் மருத்துவர்களின் அட்வைசை மீறி
அலட்சியமாக இருந்தது ஒரு உதாரணம்.
அமெரிக்கா செல்லுமுன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டபோது உடல்நிலை
சரியில்லை என்ற தன்னைப் பற்றிய செய்தியோ படமோ வெளியில் வரக் கூடாது
என்பதில் உறுதியாக இருந்தாராம். ஆஸ்பத்திரியில் அவரைச் சந்திக்க, குறிப்பிட்ட இரண்டு பேருக்கு மட்டுமே அனுமதி, அதுவும் மிகக் கஷ்டப்பட்டே
வாங்க முடிந்ததாம்!
என்ன சொல்லுங்கள்....அவர் படங்களில் இருந்த ஜனரஞ்சகமும், சுவாரஸ்யமும்
மறுக்க முடியாதவை. அவர் படங்களில் இடம் பெற்ற பாடல்களும் அவர் பேர்
சொல்பவை. இத்தனை வருடங்கள் கழித்தும் அவரை நினைக்கும் ரசிகர்களையும்,
தொண்டர்களையும் பெற்றுத் தந்திருப்பவை அவர் இமேஜ்.
"நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் இங்கு ஏழைகள் வேதனைப் பட மாட்டார்..."