New rice லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
New rice லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

12.4.10

வயலில் அவல் அகோனிபோரா !



அட இன்னொரு முறை படித்தாலும் அதே தான், அவளல்ல - அவல் - வெறும் வாயை மெல்லுவதற்குப் பதில்.

ஆனா செய்தி என்னவோ மெய்தாங்க.   அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள திட்டாபார் ஆராய்ச்சி நிலையத்தில் இருக்கும் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள "கோமல் சௌள்" (Komal saul) என்னும் புது அரிசி வகை பற்றி அறிய நேர்ந்தது.

இந்த ரக அரிசி மற்ற வகைகளைப் போலவே ஒரு ஹெக்டேருக்கு நான்கு முதல் ஐந்து டன் வரை கண்டு முதல் தரக் கூடியது.  வயலில் விளையும் காலம் மட்டும் நூற்று நாற்பது அல்லது நூற்றைம்பது நாட்கள்.  அவல் என்று சொல்லிவிட்டு நெல், அரிசி என்று ஏதேதோ சொல்கிறீர்களே, இது நியாயமா என்கிறீர்களா, இதோ விஷயத்துக்கு வந்து விட்டோம்:

அரிசிக்குக் கடினத் தன்மை கொடுக்கும் அமைலோஸ் (amylose) என்னும் பொருள் வேறு ரகங்களுடன் ஒப்பிடும் பொழுது ஐந்தில் ஒரு பங்கு தான் இதில் இருக்கிறது. அதனால்... 

"அதனாலென்ன? சீக்கிரம் சொல்லேன்யா, இன்னும் நாலு ப்ளாகு பார்க்கப் போக வேண்டாம்?" 

"அட கொஞ்சம் பொறுமையா இருங்க ஏன் இப்படி ராப்பிச்சைக்காரர் மாதிரி பறக்குறீங்க?" 

"சரி சொல்லுங்க - அரிசி, சோறுன்னு வந்ததும் ராப்பிச்சை ஞாபகம் வந்துடுச்சா!" 

இந்த அரிசியை அரை மணி நேரம்  குளிர்ந்த நீரில் ஊற வைத்தால் போதும் - சாப்பிட முடியும்.  ஹார்லிக்ஸ் மாதிரி அப்படியேயும் சாப்பிடலாம் என்கின்றனர் இதைத் தோற்றுவித்த பிரம்மாக்கள். - அதனால் தான் அவல் என்றோம்.

நம் வாழ்க்கையில் இதன் தாக்கம் எவ்வாறிருக்கும் என்று யோசித்ததில் ,

1. சமையல் நேரம் குறைந்து, வீட்டில் சமைப்பவர்களுக்கு சற்று சங்கடக் குறைவு.

2. சமையல் நேரம் குறைவதால் எரிபொருள் செலவு குறைவு.

3. எரி பொருள் உபயோகம் குறைவு என்பதால் கரியமில வாயு உற்பத்தியும் குறைந்து, பூமியின் வெப்பமாதல் குறையும் வாய்ப்புகள் அதிகம் [பின்னே இருக்காதா ? - உலக ஜனத்தில் பாதிப் பேர் அரிசி சாப்பிடுபவர்கள் ஆயிற்றே! ]

4. உணவகங்களில் காத்திருத்தல் குறையும். 

5. அப்படியே சாப்பிடும் சாத்தியம் இருப்பதால், பிரயாணங்களில் கெட்டுப் போய் விடும் என்ற பயமின்றி எடுத்துச் செல்லலாம். [மூட்டை முடிச்சு அதிகம் ஆனாலும் - செலவு குறையும் ]

6. உணவுப் பொருள் வீணாவது குறையும்!

இட்டிலி தோசை போன்ற பண்டங்கள் தரம் மாறாமல் இருந்தாலும், தட்டை, முறுக்கு போன்ற பண்டங்கள் ரப்பர் மாதிரி இருக்குமோ?

நம் ஆராயச்சியாளர்களிடமிருந்து இது போன்ற வரவேற்கத் தக்க கண்டுபிடிப்புகளை மேலும் எதிர்பார்க்கிறோம்.