நம்பிக்கை என்ற திரை
நீங்கள் கடவுளை நம்புகிறவர்; மற்றவர் கடவுளை நம்பாதவர். எனவே உங்கள் நம்பிக்கை உங்களை மற்றவரிடமிருந்து பிரிக்கிறது.
உலகெங்கிலும் நம்பிக்கை இந்து, பவுத்தம், கிறித்துவ மதங்களாக அமைக்கப்படுகிறது. எனவே அது மனிதனிடமிருந்து மனிதனைப் பிரிக்கிறது.

நாம் குழப்பம் அடைந்திருக்கிறோம். நம்பிக்கை எல்லாக் குழப்பங்களையும் தீர்த்து விடலாம் என்று நினைக்கிறோம். அதாவது நம்பிக்கையை நம் குழப்பங்கள் மீது சாத்துகிறோம். அதன் மூலம் நம் குழப்பங்கள் அகற்றப்படும் என்று நம்புகிறோம். ஆனால் குழப்பம் என்ற நிஜத்திலிருந்து தப்பித்தலே நம்பிக்கை. அது நம்மை குழப்பத்தை எதிர்கொள்ளச் செய்வதில்லை. மாறாக, நாமிருக்கும் குழப்பத்திலிருந்து நம்மைத் தப்பியோடச் செய்கிறது.
குழப்பத்தை அறிய நம்பிக்கை தேவை இல்லை. நம்பிக்கை நமக்கும் நம் பிரச்னைக்கும் நடுவில் ஒரு திரையாக செயல்படுகிறது. எனவே நம்பிக்கையால் அமைக்கப் பட்ட மதம், உள்ளதிலிருந்து, (what is), குழப்பம் என்ற நிஜத்திலிருந்து தப்புவதற்கான வழியாக அமைகிறது.
கடவுள், மறுமை வாழ்வு ஆகியவற்றில் நம்பிக்கை உள்ள மனிதன் அல்லது வேறொரு வித நம்பிக்கை உள்ளவன், தான் எதுவாக இருக்கிறானோ அதிலிருந்து தப்புகிறான்.
கடவுளை நம்புகிறவர்கள், பூஜை செய்கிறவர்கள், மந்திரங்களை ஜபிக்கிறவர்கள் தங்களுடைய அன்றாட வாழ்வில் ஆளுகை செலுத்துபவர்களாக, கொடூரக்காரர்களாக, முன்னேறும் அவா உடையவர்களாக, ஏமாற்றுபவர்களாக இருக்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? அவர்கள் கடவுளைக் கண்டு பிடிப்பார்களா? அவர்கள் உண்மையில் கடவுளைத் தேடுபவர்களா?
ஜபிப்பதன் மூலம், நம்பிக்கையின் மூலம் காணக் கூடிய விஷயமா கடவுள்? ஆனால், அப்பேர்ப்பட்ட மனிதர்கள் கடவுள் நம்பிக்கை உடையவர்கள், கடவுளை வழிபடுபவர்கள், தினமும் கோவிலுக்குச் செல்பவர்கள், தன்னுடைய நிஜத்திலிருந்து தப்புவதற்கு எல்லாவற்றையும் செய்பவர்கள்.
ஆனால் அப்பேர்ப்பட்ட மனிதர்கள் மதிப்பிற்குரியவர்கள் என்று நீங்கள் எண்ணுகிறீர்கள்.
ஏனெனில் அவர்கள் நீங்கள்தான்.

