முதலிலேயே சொல்லி விடுகிறேன், இது இசை விமர்சனம் அல்ல. சதுச்ர ஜாதி ஜம்பை தாளம் என்றால் ஏதோ பித்தளைப் பாத்திரம் என்று நினைக்கும் அளவுக்கு தான் எனக்கு சங்கீத ஞானம். அதற்காக மோகனத்துக்கும் முகாரிக்கும் வித்தியாசம் தெரியாத ஜடம் என்றோ, பக்கத்து இருக்கைகளில் இருக்கும் ஞானஸ்தி மாமி ஒருவரை கண்டுபிடித்து அவர் போடும் சங்கீர்ண ஜாதி கண்ட ஏக தாளத்தை இமிட்டேட் செய்யத் தெரியாத மண்டு என்றோ எண்ணிவிட வேண்டாம். (போதும் தற்புகழ்ச்சி). ஏதேதோ படே சலாம் கச்சேரிகளுக்கு அலைந்து டிக்கெட் கிடைக்காமல் கடைசியில் போனால் போகிறது என்று பிரம்ம கான சபாவில் சாகேத ராமன் கச்சேரிக்கு டிக்கெட் கிடைத்து. அரை மணி முன்பாகவே அரங்கை அடைந்தோம்.
டிக்கட் கச்சேரிக்கு முன் நடந்த இலவச கச்சேரியில் அக்ஷய் பத்மநாபன் பாடிய சங்கராபரணம், செஞ்சுருட்டி தில்லானா கேட்டு மரியாதையாக பலத்த கரகோஷம் செய்தோம். வயலின் வசித்தது அக்கரை சுவர்ணலதா என்று அடையாளம் சொல்லிப் பெருமை அடைந்தோம்.
அவையில் ஐம்பது அறுபது பேர்களே இருந்தனர். சாகேதராமன் பாட ஆரம்பிப்பதற்கு முன் பக்கத்தில் இருக்கும் காண்டீனை நோக்கி படை எடுத்தோம். வீட்டிலிருந்து டப்பாவில் கொண்டுவந்து சூடு செய்து விற்கிற மாதிரி இருந்தது தோற்றம். கீரை வடை காபி விமரிசனத்துக்கு அப்பாற்பட்டு விளங்கியது. அந்த இடம் கூட்டத்துக்கு அதுவே அதிகம் என்று எங்களை நாங்களே சமாதானம் செய்து கொண்டு மேடைக்கு அருகில் (கூட்டம் குறைந்த நிகழ்ச்சிகளில் இது ஒரு சௌகரியம். எனக்கு பாடுபவர் பக்கவாத்தியக்காரர்கள் முகம் சாதரணமாக சரிவரத் தெரிவதில்லை. வயது காரணம் சுவாமி. கண்ணை இடுக்கி, விரல் குவித்து ஒரு சிறு துளை செய்து கொண்டு பார்த்து வயலின் மைசூர் நாகராஜா மஞ்சுநாத்தா என்று குழம்பினேன். மிருதங்கம் மன்னார்குடி ஈஸ்வரன் என்று கண்டுபிடித்தேன். (வயலின் மஞ்சுநாத் என்று பிற்பாடு தெரியவந்தது.)
பாடகர் இளைஞர். நல்ல குரல் வளம்;நல்ல கற்பனை. சுபபந்து வராளியில் பிரமாதமாக ஆலாபனை செய்து 'என்னாள்ளு ஊரகே' என்ற தியாகராஜர் கிருதியை மிக நன்றாகப் பாடினார். அதற்கு முன்பு ஒரு எக்ஸ்பிரஸ் பிலஹரி முடிவில் லால்குடி தில்லானாவும் 'அனுமனை நினை மனமே' என்ற ராகமாலிகையும் பாடி மகிழ்வித்தார். அருமையாக இருந்தது. சாகித்தியத்தில் சற்று கவனக் குறைவு உச்சரிப்பில் சிறு சிறு சறுக்கல்கள் சற்றே நெருடியது.
வயலின் மிருதங்கம் இருவரின் வாசிப்பையும் ஒரே வார்த்தையில் விளக்கி விடலாம். பிரமாதம். வயலின் எம். எஸ். கோபால கிருஷ்ணனை நினைவூட்டியது. மிருதங்கம் பாட்டுக்கு இசைந்து ராஜநடை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சபை ஒரு நூற்றைம்பது இருநூறு ரசிகர்களைக் கொண்டிருந்தது என்பதை சொல்ல மறந்து விட்டேன்.
வேறு இடங்களில் சீனியர்கள் வழக்கமான பாடல்களை சிறப்பாகப் பாடியிருக்கக் கூடும். ஆனாலும் சாகேதராமன் எங்களை ஏமாற்றவில்லை. நிறைவுடன் வீடு திரும்பினோம்.

