Sweet Kaaradai லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Sweet Kaaradai லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

14.3.16

'திங்க'க்கிழமை 160314 :: வெல்லக் காரடை.

   
இன்று காரடையான் நோன்பு அல்லவா?

அதற்கான சிறப்புப் பதிவு இது.

நன்றி: செந்தில்வயல். ("உங்களுக்காக" வலைத்தளம்)

தானியங்களுக்கே உரித்தான உயர்ந்தரக புரதச்சத்து, குறைந்த கொழுப்பு, உயர்ந்த நார்ச்சத்து, நிறைந்த பொட்டாசியம், குறைந்த சோடியம் என சத்துக்களின் பெட்டகமாக விளங்குவது காராமணி. மிகமிக சுலபமாக வேகக்கூடிய தன்மை வாய்ந்தது.

தொடுபதத்தில் மிகமிக மென்மையானதும், மணத்தில் மிகமிக சிறந்ததுமான காராமணி, சைவ உணவு உட்கொள்வோருக்கு உயர்ந்த ரக புரதச் சத்தையும், நார்ச்சத்தையும் வாரி வழங்க வல்லது.




காராமணியின் சுவையோ சுவை
வெறும் வாணலியில் மிதமான தீயில் கை பொறுக்கும் சூட்டில் காராமணியை வறுப்பதானது அதன் மணத்தை அதிகரிக்கும். காராமணியை தண்ணீரில் 6 மணி நேரம் ஊற வைத்து, நீரை வடித்து விட்டு, வெறும் வாணலியில் வறுத்து, பிரஷர் குக்கரில் நேரிடையாக சிறிது தண்ணீருடன், ஒரு விசில் விட்டு குழையாமல் வேக வைத்து உபயோகிக்கலாம், அல்லது தண்ணீரில் 2 மணி நேரம் ஊற வைத்து, நீரை வடித்து, வறுத்து, குக்கரில் தண்ணீருடன் 2 அல்லது 3 விசில் விடும் வரையும் வேக வைக்கலாம்.
இயற்கை இனிப்பும், இரும்புச்சத்தும் நிறைந்த வெல்லம், மணத்தையும், செரிமானத்தையும் அதிகரிக்கும். ஏலக்காய்த்தூள், பதப்படுத்தப்பட்ட பச்சரிசி மாவு, மிதமான கொழுப்புச் சத்து நிறைந்த சில தேங்காயத் துண்டுகள் மற்றும் நெய் உபயோகித்து இம்முறை வெல்லக் காராமணி காரடை செய்வோமா?

இனிப்புக்காராமணி காரடை

தேவையான பொருட்கள்
வெள்ளைக்காராமணி – 1/2 கப்
பச்சரிசி மாவு – 1 கப்
வெல்லம் – 11/4 கப்
பொடியாய் அரிந்த தேங்காய் துண்டுகள் – 12
ஏலக்காய்த்தூள் – 1/2 டீஸ்பூன்
நெய் – 6 டேபிள் ஸ்பூன்
உப்பு – 1 சிட்டிகை
செய்முறை
* தண்ணீரில் 6 மணி நேரம் ஊற வைத்த காராமணியை நீர் வடித்து வெறும் வாணலியில் மிதமான தீயில் வாசனை வர வறுத்து, பிரஷர் குக்கரில் ஒரு விசில் விட்டு குழையாமல் வேக வைக்கவும்.
* வெல்லத்தை அரை கப் தண்ணீரில் கொதிக்க வைத்து பின்னர் தூசு போக வடிகட்டவும்.
* அடிகனமான ஒரு வாணலியில் பதப்படுத்தப்பட்ட அரிசி மாவை சிறு தீயில் இளஞ்சிவப்பாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
* வாணலியில் நெய் ஊற்றி வேக வைத்த காராமணி, தேங்காய்த் துண்டுகள் இவற்றை சற்றே வறுக்கவும். பிறகு 2 கப் தண்ணீர், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
* நீர் கொதிக்கையில் வறுத்த பச்சரிசி மாவை தூவினாற்போல் சேர்த்து கட்டி தட்டாமல் நன்கு கிளறவும்.
* பச்சரிசி மாவு முக்கால் பதம் வெந்ததும், வடிகட்டி வைத்துள்ள வெல்ல நீர் சேர்த்து, விடாமல் நன்கு கிளறி இறக்கி வைத்து, ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கலந்து ஆற வைக்கவும்.
* ஆறிய மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, உள்ளங்கையில் வடை போன்று தட்டி நடுவில் ஓட்டை போடவும்.
* இட்லித் தட்டில் காரடைகளை அடுக்கி, 15 நிமிடம் ஆவியில் வேக வைத்து பரிமாறவும்.
உபயோகமான குறிப்பு
* பதப்படுத்தப்பட்ட பச்சரிசி மாவு தயாரிக்க பச்சரியை நன்கு களைந்து 5 அல்லது 6 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து தண்ணீரை வடித்தெடுத்து நிழலில் ஒரு சுத்தமான துணியில் உலர்த்தி, காய்ந்ததும் மிக்சியில் பொடித்து சலித்து உபயோகிக்கவும்.
சுவைக்கான குறிப்பு
* வெல்லக் காரடையின் மேல் உருகாத வெண்ணை சிறிதளவு போட்டு உண்டால் மிகவும் சுவையாக இருக்கும்.
* இயற்கை இனிப்பு சுவையுடன், சக்தியும் சத்தும் மிகுந்த வெல்லக் காராமணி காரடை ஆவியில் வேக வைப்பதால் ஆரோக்கியமும் மிகுந்தது!
கீதா பாலகிருஷ்ணன். 
நன்றி: senthilvayal.com