இரவு பத்தரையை நெருங்கிக் கொண்டிருந்தது.... பாடம் படித்துக் கொண்டிருந்தவன் ஏதோ அசைவை உணர்ந்து 'சட்'டெனத் திரும்பினான்...ஒன்றும் இல்லை என்று தோன்றியது...திரும்பப் புத்தகத்தைப் புரட்டத் திரும்பியவன் மறுபடி உடனே கவனம் கலைந்தான்....
இருக்கிறது...ஏதோ அசைவு தெரிகிறது....வெளிச்சத்திலிருந்து இருட்டைப் பார்ப்பது கஷ்டம்....கண்ணைப் பழக்கப் படுத்திக் கொண்டு பார்க்கும்போது இருட்டில் மின்னிய இரு கண்கள்.....
எழுந்து விட்டான்...
"அப்பா...அப்பா..." அதிக சத்தமில்லாமல் அலறினான்....சின்னவன் பயம் கலந்த ஆர்வத்துடன் பக்கத்தில் வந்து ஒண்டினான்.
அப்பாவும் அருகில் வந்து அதைப் பார்த்து விட, இப்போது அடுத்த கட்ட நடவடிக்கைகள் ஒரு மௌனப் புரிதலில் அரங்கேறத் தொடங்கின...
அடுத்திருந்த அறைக் கதவுகள் அடைக்கப் பட்டன. அதற்குள் மின்னிய கண்களைக் காணமல் தேடினால் ...அதோ.....சோஃபா பின்னால்....சட்டென மறைந்தது.
அதிகம் யோசிக்க நேரமில்லை...
அசைவு அதிகம் காட்டாமல் அப்பா மெல்ல அங்கிருந்த தண்ணீர்க் கேன்களை வரிசையாக இடைவெளி இல்லாமல் அமைத்தார். ஓரளவு இருந்த இடைவெளியில் கேஸ் சிலிண்டர் வைக்கப் பட்டது..
இளையவன் அங்கிருந்த கிரிக்கெட் ஸ்டம்பை கொண்டுவந்து கொடுத்தான். அம்மாவும், பெரியவனும் கட்டில் மேல் உட்கார்ந்து கால் கீழே படாமல் உஷாரானார்கள்.
மீண்டும் தேடினால் பழைய இடத்தில் காணோம். சுற்றுமுற்றும் தேடிய போது டிவிக்குப் பின்னே வால்பாகம் தெரிந்தது. அந்த ஏரியாவை ஒரு ஆட்டு ஆட்டிய உடன் அது நகர்ந்த வேகம் கண்டு அம்மா, பாட்டி, இவன் எல்லோரும் அலற...அப்பா ஒரு கடும் பார்வையால் அவர்களை அடக்கினார். "சத்தம் அதுக்கு கேக்குமாப்பா..." இளையவன். அப்பா பேசும் நிலையில் இல்லை.
இரவு இதை இப்படியே விட்டு விட்டுத் தூங்க முடியுமா என்ன? எங்காவது போய் ஒளிந்து கொண்டால் தேடிக் கண்டுபிடிப்பது கஷ்டம்...கொல்ல முடியுமா என்று தெரியவில்லை....
இப்போது குச்சியால் தட்டிய வேகத்தில் அது வெளியே ஓடிவந்தது...புகுவதற்கு இடமில்லாமல் அப்பாவினால் அமைக்கப் பட்ட வழியில் ஓடி, எதிர்பாராத் திருப்பமாக ஹால் கட்டிலின் கீழே உள்ள அடைசலில் காணாமல் போக...திரும்பவும் ஒரு அவசர வியூகம் போர்க்கால அடிப்படையில் அமைக்கப்பட்டது...நேரம் அதிகமில்லை...
கட்டிலின் திறந்தபக்கம் இளையவனை தைரியப் படுத்தி ஒரு குச்சியுடன் 'சேரி'ல் நிற்கவைத்து இந்தப் பக்கம் அது நகராதிருக்கும்படி 'டர்...டர்..' எனச் சத்தம் ஏற்படுத்தி எதிர் திசையில் தூண்டிவிடச் சொல்லி விட்டு, அவசர அவசரமாக தண்ணீர்க் கேன்களை மறுபடி கட்டிலின் தலை மாட்டில் வரிசையாக அமைத்து கொஞ்சம் இருந்த இடைவெளியை சற்றே தயக்கத்துடன் ப்ரிண்டரினால் மூடி, முதலமைச்சருக்கு ஏற்பாடு செய்யப் பட்ட கான்வாய் பாதை போல வாசல் கதவுக்கு வழி ஏற்படுத்தி விட்டு இளையவனுக்கு சைகை காட்டினார் அப்பா.
"அப்பா.. ஸ்டம்ப் கைல இருக்கு இல்லே..அடிச்சுக் கொல்ல முடியாதா..."பயத்துடன் இளையவன் நழுவ முயற்சி...
"முண்டம்...அடிவாங்கிட்டு சாகாம மேல பாய்ந்துட்டா...உள்ளே ஓடிட்டா...டைம் இல்லே சீக்கிரம்...."அடிக்குரலில் அப்பா உறுமினார். பையன் குச்சியால் கீறி முயசிக்கத் தொடங்கினான்...
அம்மா கட்டிலின் இந்த முனையை எட்டிப் பார்த்துகொண்டிருந்து விட்டு உதட்டைப் பிதுக்கி கொண்டிருந்தவள் திடீர் என மெல்லிய குரலில் கத்தினாள்..."இதோ...இதோ..முகம் தெரியுது....இன்னும் தட்டு..." என்றவள்
"அதோ...அதோ..." என்று கிரீச்சிட்டாள்
இந்த சத்தங்களாலும் தொடர்ந்த குச்சித் தொல்லைகளாலும் பீதியடைந்த அந்த பெரிய எலி தன்னைக் காப்பாற்றிக் கொள்ள, வெளியேவந்த வேகத்தில் நின்றிருந்த பெரியவன் கால்களைத் தூக்கி நடனமாடுவது போல இங்கும் அங்கும் தாவ, யார் யாரைத் துரத்துகிறார்கள் என்று குழம்பும் அளவு முன்பின்னாக ஓடி, நாங்கள் அமைத்த பாதை வழியே கதவை அடைந்து படியிறங்கி ஓடி மறைந்தது....
அப்பாடா...இனி நிம்மதியாகப் படுக்கலாம்....மணி பதினொன்றரையை நெருங்கிக் கொண்டிருந்தபோது படுக்கப் போனோம்.