Tuesday, February 21, 2012

எனக்குத் தோன்றியவை....பாஹே


"உடம்பைப் பார்த்துக்குங்க"

"உடம்பைப் பார்த்துக்குங்க"
"உடம்பைப் பார்த்துக்குங்க"
    
வீட்டுக்குப் பார்க்கவரும் ஒவ்வொருவரும் திரும்பிப் போகும்போது என்னிடம் சொல்லிச் செல்லும் வார்த்தை இது.
    
"ஏன் இப்படி?"  
    
என் மீது தனக்குள்ள அக்கறையைக் காட்டிக் கொள்ளும் முயற்சியா அல்லது வெறும் உபச்சார மொழி மட்டுமா?
    
என்னால் புரிந்துகொள்ள முடிந்ததில்லை. ஒரு கட்டத்திற்குமேல் இதைக் கேட்கும்போதெல்லாம் எனக்கே அலுப்பாக இருக்கும். ஓரிரண்டு தடவை நான் இப்படி குறுக்கு வெட்டுவதும் உண்டு. 
   
"பார்த்துட்டேங்க...! அடிவயிறு, தோள்பட்டை, கைகள், கால்கள், முழங்கால், பாதங்கள், விரல்கள் எல்லாமே கரெக்டா இருக்குங்க - ஆனா..."
    
வந்தவர் முகத்தில் வியப்பு கலந்த கேள்விக்குறி - ஏதோ பயங்கர வியாதி பற்றிச் சொல்லப் போகிறேனோ என்ற எதிர்பார்ப்பு -
   
"தலையை மட்டும் காணோங்க... எங்கே போயிருக்கும்?"
      
முறைக்க முடிவதே அவர் காட்ட முடிகிற அதிகபட்ச எரிச்சல்.
            
'எனக்கு மட்டும் சொல்லப்படும் வார்த்தை இது' என நான் நினைத்தது தவறு என்று பிறகு புரிந்தது.
   
யாரோ, யாரிடமெல்லாமோ, பேசிவிட்டுப் பிரியும்போது தவறாமல் இந்தத் தாரக மந்திரத்தை உதிர்த்துக் கொண்டே செல்கிறார்கள்.
            
யுனிவர்சல் ஹிப்பாகரசி.
                
பிறகு நானும் ஆரம்பித்தேன், முந்திக் கொண்டு -
            
"உடம்பைப் பார்த்துக்குங்க...."
               
ஒரு நேச உணர்வுடன் அவர்கள் "நன்றி" சொல்லி விட்டுப் புறப்படும்போது எனக்குத் தோன்றியது - "நான் இதிலும் பின்தங்கி இருக்கிறேனோ?"  
=================================================

ரொம்ப நாளா சில சந்தேகங்கள்....
    
காகங்கள் என் கூட்டமாகவே பறந்து செல்கின்றன? ஒன்றுமட்டும் தனியாகப் பறப்பது ரொம்ப அபூர்வமாக எப்போதாவது என் பலகணிக் காட்சி.   பழைய படப் பாட்டு வரிகள் நினைவுக்கு வருகிறது...
     
"காக்காக் கூட்டத்தைப் பாருங்க - அதுக்குக்
கத்துக் கொடுத்தது யாருங்க..."
        
"பட்சமா இருங்க, பகிர்ந்துண்டு வாழுங்க, பழக்கத்தை மாத்தாதீங்க..."
***********************
(முன்பே ஒரு பதிவில் கேட்டிருந்தோம்) 
நாய்கள் தெருவில் நடந்து செல்வதே இல்லை. அவை எப்போதும் ஓடிக் கொண்டேதான் இருக்கின்றன இலக்கின்றி. ஏன்?
                 
என் மனைவி அவ்வப்போது சொல்லும் பழமொழி இது -
                        
"நாய்க்கு வேலை இல்லே, நிக்க நேரம் இல்லே.."
                          
நாமும் இப்படிதான் இருக்கிறோமோ நமக்கே தெரியாமல்? எதிலும் ஒரு அவசரம், விரைவு காட்டிக் கொண்டு, ஏதோ வெட்டி முறிக்கிறாற்போல...!    
************************
   
சிங்கம் புலி போன்றவை மான் முயல் ஆகியவற்றைப் பிடித்துக் குதற, நாலுகால் பாய்ச்சலில் விரட்டுவதும், அவை தப்பிக்க வளைந்து வளைந்து ஓடுவதும் டிஸ்கவரி சேனலில் பார்த்துப் பார்த்துப் பதறி இருக்கிறோம். ஒரு நண்பர் சொல்கிறார், "பசி இருந்தால்தான் சிங்கம், புலி எல்லாம் அவற்றைப் பாய்ந்து கவ்வும். பசி தீர்ந்துபோன சமயங்களில் அவை அவற்றிற்கு வெகு அருகில் வந்து விளையாடினாலும் தீண்டவே தீண்டாது"
     
தினமணி பாஷையில் 'மெய்யாலுமா'? யாராவது டெஸ்ட் பண்ணிப் பார்த்துச் சொல்லுங்களேன்.    
**********************
                      
நம் தமிழ் சினிமாக்களில் இருவர் காரசாரமாய்ப் பேசிக் கொண்டிருக்கும்போது, திடீரென்று ஒருவர் மற்றவரை ஓங்கி அறைந்து விடுவார். அடிபட்டவர் கன்னத்தைத் தடவிக் கொண்டு பரிதாபமாக பதில் சொல்வார்.
                   
இன்னொரு விதம். பேசிக் கொண்டே இருக்கும்போது ஒருவர் மற்றவரைத் துப்பாக்கியை எடுத்துச் சுட்டு விடுவார், அல்லது கத்தியால் குத்தி விடுவார். பாக்கெட்டில் தயாராக வைத்துள்ள சிவப்பு மையில் நனைந்த பச்சைச் சட்டையில் அழுத்தியபடி அவர் கீழே விழுந்து சாவார்.  
       
நம்பவே முடியாத அருவருப்பான காட்சிகளும் நிறைய.
       
நாயக, நாயகியர் ஆர்கெஸ்டிராவுடன் பாடிக் கொண்டே ஓடிப் பிடிப்பார்கள். நாயகன் முழு பேண்ட், முழுக்கைச் சட்டை, பூட்ஸ், தலையில் தொப்பி இத்தியாதி போர்த்தியிருக்க, நாயகிக்கு ரெண்டு கைக்குட்டைதான் கிடைத்திருக்கும். பெரும்பாலும் மேல்பக்கம் மூட வேண்டிய பகுதி பாதிக்கு மேல் திறந்தும், பாக்கிப் பிரதேசம் அநாவசியமாகக் கவராகியும் இருக்கும். நிஜத்தில் எந்தக் குடும்பத்தில் கணவன்-மனைவியர் இப்படி நடந்து கொள்கிறார்கள்?
               
வில்லன் கூட்டம் பத்துப் பேர் வந்து நாயகியை டீஸ் செய்ய நாயகன் தனி ஒருவனாக அந்தப் பத்துப் பேரையும் அடித்து வீழ்த்துவான்.  நாயகி அவன் அணைப்பில் பயந்த மாதிரி நடிக்க வேண்டும். சில படங்களில் நாயகி வெட்கப் படுவது போல முகத்தை மூடிக் கொள்வாள். இதுதான் அசல் நடிப்பு - உண்மைக்கு நேர் எதிராக.
                           
பி யு. சின்னப்பா காலம் முதல் இன்றுவரை இந்த அலங்கோலங்கள்..... கேட்க நாதியின்றி, நம் இளைய சமுதாயம் ஓட்டு மொத்தமும் இந்த சினிமா மாயையில் விழுந்து கிடக்கிறது. சுதந்திரப் போராட்டம் பற்றியோ அதில் சர்வபரித் தியாகம் செய்தவர்கள் பற்றியோ விஞ்ஞானிகள், இலக்கிய ஆசிரியர்கள், கவிஞர்கள் பற்றியோ இவர்கள் ஏதும் அறியார்கள். 
                  
இதில் கொடுமை. சில வீடுகளில் பெற்றோரும் இதே மாதிரி கூத்தடித்து தம் மக்களைத் தவறான பாதையில் திசை திருப்பி விடுவதுதான்.
             
நம் செய்தி ஊடகங்களும் இதில் மிகமிக மோசமாகவே நடந்து கொள்கின்றன. பேட்டிகள் என்ற பெயரில் பக்கம் பக்கமாகவும், நடிகையின் முக்கால் நிர்வாணப் படங்களுடனும் நம் பத்திரிக்கைகள் பிரசுரிப்பதைக் காணும்போது 'ஆஹா வென்பதோ யுகபோ புரட்சி' என்றே வயிற்றெரிச்சல் பட வேண்டியிருக்கிறது. நம்மால் முடிந்தது அவ்வளவுதானே!
                          

22 comments:

தமிழ் உதயம் said...

உங்களுக்கு தோன்றியவை - எங்களுக்கு தோன்றாமல் போய் விட்டதே. நன்றாக சொல்லி இருந்தீர்கள்.

ராமலக்ஷ்மி said...

சிங்கம் புலி.. கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் டெஸ்ட் செய்து பார்க்க முடியாது:)!

----

சினிமா அபத்தக் காட்சிகள் குறித்த ஆதங்கம் சரியே.

----

வானம்பாடிகள் said...

ஒய் ப்ளட்...சாம் ப்ளட்:)))

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
நன்றி.

இராஜராஜேஸ்வரி said...

யுனிவர்சல் ஹிப்பாகரசி.

கீதா சாம்பசிவம் said...

ஹும், என்னத்தைச் சொல்றது! :((((( இது குறித்து ஆறு வருஷங்களாகப் புலம்பிட்டு இருக்கேன். :((((( ஒண்ணும் பலன் இல்லை. இன்னும் மோசமாத் தான் போகுது!

ஹேமா said...

உடம்பைப் பார்த்துக்கொள்ளுங்கோ....மனசையும் சேர்த்து !

Ramani said...

சிந்தனைச் சிதறல்கள் அருமை
ரசித்துப் படித்தேன்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

வல்லிசிம்ஹன் said...

ஆட்டம் கூடி இருக்கிறதே தவிர யரும் குத்துப் பாடல்களையோ திடுக்கிடும்,படபடவைக்கும் அரிவாள்,கத்திகளையோ விடுவதாக இல்லை. பிரகாஷ் ராஜின் தோனி மாதிரி சில படங்கள் நல்ல ஆறுதல்.
பத்ரமாக இருங்கன்னு சொல்கிறது, டேக் கேர்னு சொல்ற மாதிரிதான். நானும் நிறைய சொல்வேன். அதற்கு இந்த மாதிரி மாற்றுசிந்தனை இருக்கும்னு தோணாமல் போய்விட்டது.:)

கணேஷ் said...

மனதளவில் வராமல் பெரும்பாலும் உதடளவிலிருந்துதான் இந்த ‘உடம்பைப் பாத்துக்கங்க’ வரும். வில்லன் ஆட்கள் கடோத்கஜன்களாக இருக்க, ஒட்டடைக் குச்சி உடம்பு ஹீரோ அவர்களை தூக்கி அடிக்கும் காமெடியும் சரி, ஹீரோ துருவ்ப் பிரதேச நபர் போல உடையணிந்திருக்க, ஹீரோயின் வெப்ப பிரதேசத்தவள் போல உடையணியும் அபத்தமும் நானும் மிக நொந்தவையே!

மோகன் குமார் said...

ரொம்ப சூடா இருக்கீங்க போல தெரியுது ! கூல் டவுன் :))

ஹுஸைனம்மா said...

’உடம்பைப் பாத்துக்கோங்க” - இது நானும் மூத்தவர்களிடம் சொல்வதுதான். ஆனா, இதுக்கு இப்படியோரு பக்கம் இருக்கும்னு நினைக்கலை!! ஆனா, எங்கம்மாகிட்ட “பிபி மாத்திரை ஒழுங்காச் சாப்பிடறியா”ன்னு கேக்க பயம் எனக்கு. பயங்கரமா “back fire" ஆக சான்ஸ் இருப்பதால்!! :-))))

//பிறகு நானும் ஆரம்பித்தேன், முந்திக் கொண்டு - "உடம்பைப் பார்த்துக்குங்க...."//

மாற்றம் நல்லது!!

//'மெய்யாலுமா'? /
இதை டிஸ்கவரிக்கு எழுதிப்போட்டா, அதையும் படம்பிடிச்சு போடுவாங்களா... :-))))

டிவி & மீடியா: ஒண்ணும் சொல்றதுக்கில்லை. டிவிக்காவது ரிமோட் & சுவிட்ச் இருக்குது. பேப்பர், புஸ்தகங்களுக்கு...??

அமைதிச்சாரல் said...

//"உடம்பைப் பார்த்துக்குங்க...."//

ஊர்லேர்ந்து திரும்ப வரச்சேயும், போன்லயும் ஆளாளுக்குச் சொல்றப்ப 'ஐயோ.. போதும்ப்பா'ன்னு இருக்கும். அப்றம் நிதானமா உக்காந்து யோசிக்கிறப்பதான் நம்ம மேல உள்ள அக்கறையிலதானே சொல்றாங்கன்னு மனசு சமாதானப்பட்டுரும்.

சினிமா அபத்தங்கள்... க்ளைமாக்ஸ் கட்டக்கடைசியில் போலீஸ் வர்றதை விட்டுட்டீங்களே லிஸ்டில் :-))

சென்னை பித்தன் said...

நன்று!

RAMVI said...

//உடம்பை பார்த்துக்கங்க//

நாம் சாதாரணமாக சொல்லுவதுதான். ஆனால்,இந்த பதிவை படித்ததும் இந்த மாதிரி கூட நினைத்துக் கொள்வார்களா? என்று தோன்றிவிட்டது.

சிங்கம்,புலி பற்றி நானும் கேள்வி பட்டிருக்கிறேன்.ஆனால் யாரு டெஸ்ட் பண்ணறது?

அப்பாதுரை said...

ஜனங்க பார்ப்பதால சினிமா எடுக்கறாங்களா சினிமா எடுக்கறதால ஜனங்க பாக்குறாங்களா?
சிங்கம் புலிகள் பசி எடுக்கும் பொழுது பிற மிருகங்களை அடிக்கும் என்பது உண்மை. பிற மிருகங்களைப் பார்க்கும் பொழுது அவற்றுக்குப் பசி எடுக்கும் என்பதும். :)

எங்கள் ப்ளாக் said...

//சிங்கம் புலிகள் பசி எடுக்கும் பொழுது பிற மிருகங்களை அடிக்கும் என்பது உண்மை. பிற மிருகங்களைப் பார்க்கும் பொழுது அவற்றுக்குப் பசி எடுக்கும் என்பதும். :)//
அப்பாதுரை கொன்னுட்டீங்க! (சாப்பிட்டீங்களா?!! :))

கீதா சாம்பசிவம் said...

அப்பாதுரை கொன்னுட்டீங்க! (சாப்பிட்டீங்களா?!! :)//

ஆஹா, ஜாக்கிரதையா இருக்கணும்! :))))))))

கீதா சாம்பசிவம் said...

யாரைக் கொன்னார்? யாரைச் சாப்பிட்டார்? புரியலையே?? டவுட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு!

மோ.சி. பாலன் said...

டிஸ்டன்ஸூல லயனு லயனு .. பயந்து கிடக்கு மானு...

மோ.சி. பாலன் said...

டவுனு பொண்ணு போட்டா கவுனு
வில்லேஜி ஹீரோ கல்லீஜி

சினிமான்னா இப்படித்தான்! இதையெல்லாம் நினைத்து கஷ்டப்பட்டால் 'உடம்பைப் பார்த்துக்கொள்' என்றுதான் சொல்வார்கள்!

எங்கள் ப்ளாக் said...

மோ சி பாலன் அசத்திட்டீங்க!

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!