வியாழன், 11 ஏப்ரல், 2024

கண்மணி... அன்போடு... நான்.. நான்...

 நீங்கள் பேனாவைத் தொட்டு எத்தனை வருடங்கள் ஆகின்றன? 

எல்லாம் கணினி மயம் ஆகிவிட்ட இந்நாளில் அரசு அலுவலகங்களில் அரசுமுறைக் கடிதங்கள், அட்டெண்டன்ஸ் ரெஜிஸ்தரில் கையெழுத்து என்று பேனாவுக்கு மிகச் சில உபயோகங்கள்தான் இப்போது!  

உயிரானவர்களுக்கும், உறவுகளுக்கும் கடிதம் எழுதுவதற்கென்றே சில ஸ்பெஷல் பேனாக்கள் வாங்கி வைத்திருப்பவர்கள் உண்டு.  மற்றும் ஸ்பெஷல் தாள்கள்.  நான் வைத்திருந்தேன்.

அப்படி ஸ்பெஷல் தாளில் கடிதம் எழுதலாம் என்பதை என் நண்பன்தான் எனக்கு கற்றுக் கொடுத்தான்.  கடைக்குச் சென்று இதற்காகவே நல்ல மனதுக்குப் பிடித்த டிசைன்களில் லாங் சைஸ்  நோட்புக், ஸ்க்ரிப்ளிங் பேட் வாங்கி அந்தத் தாளில் கடிதம் எழுதி எனக்கு அனுப்ப, அதில் அயர்ந்து, அந்த ஐடியாவைக் கவர்ந்து, நானும் அதே போல வாங்கி எழுதி அனுப்பினேன் - காதலிக்கு!  அதுவரை நோட்டு பேப்பரைக் கிழித்து எழுதி ஒரு ரூபாய்க் கவரில் மடித்து அனுப்பிக் கொண்டிருந்தேன்!

அந்த நண்பனுக்கு இன்னொரு பழக்கம், சில ஸம்ப்ரதாயக் கடிதங்கள்.  என்னை வந்து சந்தித்து விட்டுச் சென்றால் எங்கள் அனுசரணையான உபசரிப்பு பற்றி ஊருக்குச் சென்ற உடனே ஒரு கடிதம் எழுதி விடுவான்.  முதல் வரி அதுவாகத்தான் இருக்கும்.  அப்புறம் மற்ற விவரங்கள்.  


கடிதம் எழுதுவது ஒரு கலை.  ஆனால் என்னைப் பொறுத்தவரை அது படிப்பவரைப் பொறுத்து அதன் தரம் நிர்ணயிக்கப் படுகிறது!

கடிதமே எழுதாத மகன் "அம்மா, நல்லாயிருக்கியா?" என்று கார்டில் ஒரு வரி எழுதி போட்டால் அது தேவலிபி அந்த அம்மாவுக்கு.  கருநீல மலைமேலே தாயிருந்தாள்...  காஷ்மீர பனிமலையில் மகனிருந்தான்....

நான் ஒரு மூன்று வார்த்தை காவியத்தை சேமிக்காமல் போனேன்!

நிறைய வீடுகளில் உத்தரத்திலிருந்து தொங்கும் ஒரு நீண்ட S கம்பியில் பழைய கடிதங்களைக் குத்தி சேமித்து வைத்திருப்பார்கள்.  

சிலர் மனத்தைக் கவர்ந்த மிகச்சில கடிதங்களை மட்டும் பொக்கிஷமாய் பாதுகாத்து வைத்திருப்பார்கள்.  அதில் சாதாரண 'நலம், நலமறிய ஆவல், இப்பவும் இங்கு நான் சௌக்கியம்' போன்ற ஸம்ப்ரதாயக் கடிதங்கள் கூட எழுதிய நபர் மறைந்து விட்டிருப்பதால் முக்கியத்துவம் பெற்று சேமிப்பில் இருக்கும்.  

அதே போல எல்லோரும் கடிதம் எழுதி விடுகிறார்களா என்ன?  அபூர்வமாக கடிதம் எழுதும் சிலரின் கடிதங்களும் பொக்கிஷமாய் இருக்கும்.

நீங்கள் யாருடைய கடிதங்களை பொக்கிஷமாய் பாதுகாத்து வைத்திருக்கிறீர்கள்?  ஏன்?


மனதில் பொங்கும் உணர்வுகள் வார்த்தைகளில் வழியும் கடிதங்கள் அமரத்துவம் பெறுகின்றன.  அத்தகைய கடிதங்கள் படிக்கும்போது அவர்களே அருகில் நின்று, நேரில் நம்மிடம் பேசுவது போல இருக்கும்.  உபதேசக் கடிதங்களை எவ்வளவு பேர் பத்திரமாய் வைத்திருப்பார்கள்?

நீங்கள் யாருக்காவது கோபக் கடிதங்கள் எழுதி இருக்கிறீர்களா?  வார்த்தைகளில் வெடித்திருக்கிறீர்களா?  பதில் என்ன?

என் அப்பா, தாத்தா எல்லாம் கடிதப் பிரியர்கள்.  காபி குடிப்பது, கக்கூஸ் போவது போல கடிதம் எழுதுவது அவர்கள் தினசரி கடமைகளில் ஒன்று!  கடிதத்தில் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு வரும் கடிதத்தில் பதில் இருக்கிறதா என்று பார்ப்பார்கள்.  இல்லா விட்டாலோ, பூசி மெழுகி இருந்தாலோ கோபம் வரும்.  ஏனென்றால் சில கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாதே....

என் அப்பா இன்லேண்ட் லெட்டரின் மடிப்புகளில் கூட எழுதுவார்.  ஏன், அந்தக் கடிதத்தை ஒட்டிய பிறகு அனுப்புபவர் விலாசம் எழுதும் இடத்தில் கூட ஓரிரு விவரங்களை சுருக்கமாக எழுதுவார்.  அவர் கையெழுத்தைப் படித்து புரிந்து கொள்வதுதான் கடினம்.  அவர் குடும்ப விவரங்கள் எல்லாம் எல்லோருக்கும் தெரிந்திருக்க வேண்டும் என்று விவரங்களை அடுக்குவார்.  டைரி எழுதுவது போல கடந்த நாட்களில் அவர் என்னென்ன செய்தார் என்று விலாவரியாக எழுதுவார்.  தப்பில்லை, நானும் அப்படி எழுத வேண்டும் என்று எதிர்பார்ப்பார்!

இந்த எதிர்பார்ப்பு அனுபவத்தால்தான் நான் என் காதலியிடம் என்னைப்போலவே உணர்வுகளால் நிரம்பிய கடிதங்களை எதிர்பார்ப்பதை நிறுத்தினேன்!

கடிதங்களை சுவையாகக் கொடுக்கிறேன் என்று இலக்கியச் சுவை சொட்டச் சொட்ட காவிய வரிகளை எல்லாம் மேற்கோள் காட்டி,  ரெபரென்ஸ் வைத்துக் கொண்டு எழுதும் கடிதங்கள் என் ரசனைக்கானவை அல்ல.  அவை தமிழ் இலக்கண, துணைப்பாட நூல் போல...  கடமைக்கு படிப்பேன்!

ஒரு கடிதத்தைப் படித்ததும் அல்லது நெருங்கிய ஒருவருக்கு எழுதும்போது மனதின் உணர்வுகளை மறைக்காமல் இயல்பாக எழுதும் கடிதங்கள் என் தேர்வு.  நானும் அப்படித்தான் எழுதுவேன்.


என் காதலை முன்னரே என் மாமாவிடம் சொல்லவில்லை என்று கடுமையாக கோபித்துக் கொண்ட என் மாமா - அக்கா கணவர் - என்னுடன் பேசவில்லை, கடிதங்களில் என் பெயர் குறிப்பிடவில்லை, எனக்கும் தனிக் கடிதங்கள் எழுதவில்லை.  கொஞ்சம் ஆறப்போட்டு அவருக்கு நான் தனியாக ஒரு கடிதம் எழுதினேன்.  (என்) சிறந்த கடிதங்களில் ஒன்றாக அதை பாதுகாத்து வைத்திருப்பதாக மாமா சொல்லி இருக்கிறார்.  (அது இருக்கிறதா என்று அக்காவிடம் கேட்க வேண்டும்)

ஒவ்வொரு முறையும் இப்படி உணர்வுபூர்வமாக கடிதம் எழுத முடியுமா என்றால், அது காதலில் பெருமளவு சாத்தியம்.  மற்றபடி சில உணர்வுபூர்வமான பிரிவுகளில் இது சாத்தியம்.


கடித சம்பந்தமாக ஏராளமான பாடல்கள் உண்டு, எனக்கும் தெரியும் என்றாலும் அவற்றை நான் இங்கு பட்டியலிடப் போவதில்லை.  எனக்கு இந்தப் பாடல் மிகவும் பிடிக்கும்.  காட்சி அமைப்புக்காகவே பிடிக்கும்.  பிளாக்மெயில் படத்தில் வரும் கிஷோர்குமார் பாடல். தன் காதலன் தர்மேந்திராவிடமிருந்து வந்திருக்கும் கடிதத்தை ராக்கி படிப்பதாகக் காட்சி.  காட்சி அமைப்பு மிகவும் கற்பனை நயத்துடன் எடுக்கப்பட்டிருக்கிறதென்றால் பாடல் சுகமோ சுகம்.  வரிகளும்தான்.  புரிந்தவர்கள் ரசிக்கலாம்.  சாதாரணமாக கடிதத்தை திரையில் காட்டும்போது அதில் எழுதியவரின் முகம் வந்து பேசுவது போல காட்சிகள் அமையும்.  இங்கு வேறு ரகம்.  பாருங்களேன்.  அதுதான் காதல்.  தூக்கத்திலும் தொல்லை தருவது, தூங்க விடாமல் அடிப்பது!


=============================================================================================================
நிலவின் நடுவே ஓடும் 
சிறு மேகவரிகளாய் 
கூந்தல் இழைகள் 
முகத்தில் அலைய 
மாசற்ற பளிங்கு போன்ற 
முகத்துடன் 
எதிர்பாராமல் எதிரே 
நீ 
தோன்றியபோது 
அந்தி மாலையில் 
எழும் 
முழு நிலவென தெரிந்தாய் 

பச்சைசேலையில் 
பசுமை சோலை 
தோள்களில் 
இளநீல வண்ணம்.. 
செந்தணல் கம்பிகள் போலவும் 
விரல்களால் 
கூந்தல் நீ 
ஒதுக்கியபோது 
புரண்டு விழுகிறது மனம்.

திரும்பிய உன் 
நடையில் 
இடைகளின் ஒசிவு 
மண்டைக்குள் பாய்கிறது 
மின் அலைகளின் கசிவு 

உன் 
அழகின் அனல் 
அரற்ற வைக்கிறது என்னை 

====================================================================================================

ரவி சாரங்கன் பக்கம்...

பஞ்சாங்கமும் - ஜோதிட பலனும்.
ஒருவருக்கு பலன் சொல்லும்போது முதலில் அன்றய பஞ்சாங்கம் அவசியம் பார்க்க வேண்டும்.
அடியேனின் பஞ்சாங்கத்தை எத்தனைபேர் ஆழ்ந்து படிக்கிறார்கள் என தெரியவில்லை (புதியதாக எதுவும் செய்யவில்லை வாக்கியம் திருக்கணிதம் பஞ்சாங்கம் என்ன தருகிறதோ அதை மனதில் பதியும் படி விளக்கமாக தருகிறேன் அவ்வளவே)
எதற்கு இது எனில் ஒருவருடைய ஜாதகத்தில் கிரஹங்கள் நன்றாக இருக்கலாம் அன்றய தசை புக்திகள் சாதகமாக இருக்கலாம் ஆனால் செயல்பாடுகள் எதிர்வினையாக இருக்கும் அதற்கு காரணம் அன்றய பஞ்சாங்கத்தின் (கிழமை, நக்ஷத்திரம், திதி, யோகம், கரணம்) நிலை எதிராக இருக்கும்.
அடியேன் சொல்வது சிலருக்கு உடனே அப்படியே பலிக்கிறது சிலருக்கு சில மாதங்கள் கடந்து நடக்கிறது சிலருக்கு நடக்கவே இல்லை இதை பற்றி யோசிக்கும் போது பல விஷயங்களை கவனிக்க ஆரம்பித்தேன்
ப்ரச்சனம் எனப்படும் அந்த நேரத்தில் போடப்படும் சார்டின் நிலை அன்றய நாள், நக்ஷத்திரம் அந்த விநாடியின் திதி,யோகம்,கரணம், ஹோரை, காரக திதி இப்படி பல, ஜனன ஜாதகத்துடன் மாறுபடுகிறது.
தற்போது பலன் சொல்லும்போது சிலருக்கு குறிப்பிட்ட நாள், ஹோரை இவற்றை குறித்து தருகிறேன் செயல்படுங்கள் என சொல்கிறேன்.
தற்போது கசர யோகம் (இந்த யோகம் இருந்தால் செயல்பாடுகளில் தடை அல்லது பக்க விளைவு தரும்) கொடுக்க ஆரம்பித்து இருக்கிறேன்
விரைவில் இன்னும் சில முக்கியமான விஷயங்களை பஞ்சாங்கத்தில் சேர்க்க இருக்கிறேன். ஒவ்வொருவரும் அவரவர் அன்றய நாளில் என்ன செய்யலாம் என்ன செய்ய கூடாது என அவர்களே எப்படி நிர்ணயம் செய்வது (ஜோதிடம் கற்றுக்கொடுப்பதல்ல) என்ற அடிப்படையை சொல்லி கொடுக்க ஆசைப்படுகிறேன்.
பஞ்சாங்கம் படிக்க ஆர்வம் உள்ளவர்கள் உங்கள் அபிப்ராயங்களை தெரிவிக்கவும் கூகுள் பிளாக்கில் ரிப்ளை ஆஃப்ஷன் இல்லை. வாட்ஸப் எண் 8056207965 க்கு எழுதவும் முடிந்தவரை பதில் தருகிறேன்.
எல்லாம் ந்ருஸிம்ஹன் திருவுளம்

======================================================================================

நியூஸ் ரூம் 


Newsroom-11.04.24

ஆரத்தி எடுக்க ₹100, ஓட்டுக்கு ₹200. சில்லறையை சேகரிக்கும் கட்சிகள். பிரசாரத்தின் பொழுது வேட்பாளர்கள், மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் பெண்கள், வயதானவர்கள், குழந்தைகளிடம் 100 ரூபாய் கொடுக்கின்றனர். அதற்கான சில்லறையை நாடி டாஸ்மாக் மற்றும் பெட்ரோல் பங்குகளுக்கு வருகின்றனர்.

அணு ஆயுதங்களை சுமந்து சென்று, இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கக் கூடிய அக்னி ப்ரைம் ஏவுகணை ஓடிசாவில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.

கேரளாவிலிருந்து பாட்னா சென்று கொண்டிருந்த விரைவு ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்து கொண்டிருந்த வடநாட்டு கூலித் தொழிலாளிகளிடம் டிக்கெட் கேட்ட டி.டி.இ.யிடம் தகராறு செய்து அவரை ஓடும் ரயிலிலிருந்து கீழே தள்ளி விட, அதே சமயம் எதிர்சாரியிலிருந்து வந்து கொண்டிருந்த ரயில் டி.டி. இ. மீது ஏறி விட தளத்திலேயே மாண்டார் அந்த பாவப்பட்ட டி.டி.இ.

தட்சிண கன்னடாவில் இருக்கும் குக்கே சுப்ரமண்யா கோவில் 14 வருடங்களாக அதிக வருவாய் ஈட்டி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.2023-24ல் அதன் வருவாய் 146.01 கோடி.

பெங்களூருவில் யுகாதி பண்டிக்கைக்காக ஹாலிடே மனு எனப்படும் போளி ஸ்டால்களில் குவிந்த ஆர்டர்கள், சமாளிக்கத் திணறிய போளி ஸ்டால்கள். தற்கால இளம் பெண்கள் வேலைக்குச் செல்வதால் அவர்களுக்கு போளி செய்யத் தெரியவில்லை,எனவே இனிப்பகங்களுக்கு நிறைய ஆர்டர்கள். பாரம்பரியமான தேங்காய் போளி, பருப்பு போளி மட்டுமல்லாமல் புதுமையான வேறு பல போளிகளையும் விரும்பி வாங்ககின்றார்களாம். முன்னதாகவே புக் பண்ணி டோக்கன் பெற்றுக்கொண்டால் தங்களுக்கு செளகரிமாக இருக்கும் என்று போளி ஸ்டால் உரிமையாளர்கள் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள்.

=========================================================================================
``உங்கள் முதுமையை எப்படி உணர்கிறீர்கள்?’’
``என்னை நான் தாத்தாவாக உணர்ந்ததே இல்லை. இதில் ஒரு சுயநலமும் உண்டு. ஏனென்றால், நம்மை தாத்தா என நினைத்து விட்டாலே நம்முடைய க்ரியேட்டிவிட்டி அடிபட்டுப்போகும். இந்தியன் பொயட், ரைட்டர்... எல்லாருமே முப்பது முப்பத்தைந்து வயதுக்கு உட்பட்ட வாழ்க்கையைத்தான் எழுதிக்கொண்டிருக் கிறார்கள். எர்னெஸ்ட் ஹெமிங்வேக்கு போர்முனைக்கு ரிப்போர்ட்டராகப் போனது போன்ற வாழ்க்கை எல்லாம் இந்தியன் ரைட்டருக்கு இல்லை. இந்திரா பார்த்தசாரதி... தாத்தா! மூத்தவர் கி.ராஜநாராயணன் தாத்தா! ஆனால், என்றைக்கும் விக்ரமாதித்யன் தாத்தாவாக மாட்டான் (சிரிக்கிறார்). தாத்தாவாகிவிட்டால் ஓய்வுக்குள் போக வேண்டும். ரிட்டையர்மென்ட் ஆகவேண்டும். எனக்கு என்றைக்கும் ரிட்டையர்மென்ட் கிடையாது. இப்போதும் கோவிலனின் `தட்டகம்’ படிக்கிறேன். எம்.முகுந்தனின் `கடவுளின் குறும்புகள்’ படிக்கிறேன். தமிழில் இப்போது எழுதுகிற இளம்கவிஞர்களின் கவிதைகளைப் படித்துவிட்டு, அபிப்ராயம் சொல்லி அறிமுகப்படுத்துகிறேன். பின்னர் எப்படி நான் முதுமையை உணர்வேன்?’’
விக்கிரமாதித்தியன் பேட்டி
இணையத்தில் இருந்து எடுத்தது  - நன்றி கந்தசாமி ஸார்.

===================================================================================


===========================================================================================


=====================================================================================

எழுதுவது நானல்ல..   எடுத்துப் போடுவது...

நடிகையர் திலகம் சாவித்திரியைப் பேட்டி காணச் சென்றேன். முகம் மலர வரவேற்றார். முகத்தில் முதுமை தெரிந்தாலும், மகிழ்ச்சி குறையவில்லை.
சிறிய அழகான வீடு. வீட்டின் முன் நின்றிருந்த பியட் கார் அவர் ஓரளவுக்கு வசதியாக இருப்பதை அறிவித்தது.
“நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்திருக்கிறீர்கள் போலிருக்கிறது”
“இடைவெளியா?” சற்று அழுத்தமாகப் பார்த்தார்.
“ஆமாம் நடுவே சுமார் இரண்டு வருடங்களாக ஃபீல்டில் காணோமே?”
“தமிழ் சினிமாவில் என்று வேண்டுமானால் சொல்லுங்கள். ஆனால் எந்த இடைவெளியும் இன்றி தெலுங்கு, கன்னட படங்களில் நடித்துக் கொண்டுதான் இருந்தேன்” கொஞ்சம் கோபத்துடனேயே சொன்னார்.
“ஓகோ! ஆனால், நீங்கள் ஏதோ போதைப் பொருளுக்கு அடிமையாகி, அதனால்தான் இந்த இடைவெளி என்பதுபோல பேசிக் கொண்டார்களே…"
சற்றே சிறிது கூர்ந்து பார்த்துவிட்டு, பிறகு “வெல், அதைச் சொல்ல நான் ஏன் பயப்பட வேண்டும்?, நான் குடிக்கு அடிமையாகி இருந்தது உண்மைதான்.
இப்போது அதன் பக்கமே போவதில்லை. காரணம், அந்தப் பழக்கம் எவ்வளவு பைத்தியக்காரத்தனமானது என்று புரிந்து கொண்டதால்தான்.
ஏதோ கவலைகளை மறக்க அந்தப் பழக்கத்தை மேற்கொள்ளலாம் என்று சொல்லிக் கொடுத்தார்கள்.
ஆனால், யாரோ சொல்லிக் கொடுத்தார்கள் என்பதற்காக, அதை அப்படியே ஏற்றுக்கொண்டது தவறுதான்.
இந்த விஷயத்தில் எனக்கு அந்தப் பழக்கத்தை கற்றுக் கொடுத்தவர்களை முழுமையாகக் குற்றம் சாட்ட முடியாது. என் பங்கும் அதில் உண்டு.
ஆனால், கவலைகளை மறக்க முடியவில்லை. குடிப்பழக்கத்தை மேற்கொண்டதால் குடும்பத் தொல்லைகள் மேலும் மேலும் பெருகியதே, தவிர குறைவதாகக் காணோம்.
உடம்பு அநியாயமாகப் பெருத்துவிட்டது. பலவீனத்தைப் பயன்படுத்திக் கொண்டு பலர் என்னை மோசம் செய்து விட்டார்கள்.
என் இழப்பின் பெரும்பகுதி போதையால் ஏற்பட்டதுதான். உடலும் கெட்டுவிட்டது. கவலைகள் மேலும் பெருகி, குடிப்பழக்கமும் அத்தியாவசியமாகிவிட்ட என் வாழ்க்கை எனக்கே பெரிய பாரமாக இருந்தது.
வாழ்வில் நிம்மதி, நாமாக ஏற்படுத்திக் கொள்ளும் கெட்ட பழக்கத்தால் கிடைப்பதில்லை என்ற உண்மை புரிந்தது. அந்தப் பழக்கத்தை அறவே விட்டொழித்தேன்.
என் கணவர், மகள் சம்பந்தப்பட்ட விஷயங்களால் நான் பெரிதும் பாதிக்கப்பட்டு இருந்தது உண்மை.
ஆனால், குடிப்பழக்கம் எனக்கு அழிவைத் தந்ததால் இப்போது அதை முற்றிலும் விட்டொழித்து விட்டதும் உண்மை."
இப்போது ஏழு படங்களில் நடிக்கிறாராம். அந்த ஏழில் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிப் படங்கள் அடங்கும்.
“இப்போ நீங்க எந்த மாதிரி வேடத்திலே நடிக்க ஒத்துக்கறீங்க? கிளாமா் வேடத்திலே நடிக்க ஒத்துக்க மாட்டீங்கன்னு தொியும்”
“நான் ஒத்துக்கறது இருக்கட்டும். என்கிட்ட வந்து அப்படி யாா் தைரியமா கேட்பாங்க? கிளாமர் ரோலில் தொடர்ந்து நடிக்க முடியாமல் போனதற்குக் காரணம் ஆயுர்வேதம் என்றும் சொல்லலாம்.
உடம்பு இளைப்பதற்காக அந்த மருத்துவத்தை மேற்கொண்டேன். உடம்பு என்னவோ இளைத்துதான் விட்டது. முகம் மட்டும் உப்பி விட்டது.
பிறகு ஒரு அலோபதி மருத்துவரை அணுகி அந்த மருத்துவத்தை மேற்கொண்ட பிறகுதான் இப்போது கொஞ்சம் சுமாராகி இருக்கிறது என் உடம்பு.
நடுவே மஞ்சள் காமாலை நோய் வேறு என்னை ஆட்டி வைத்ததா, ஒரு வருடம் ரொம்பவும் துன்பப்பட்டேன். பிறகு தெலுங்கில் அம்மா, அண்ணி போன்ற வேடங்களை மேற்கொண்டேன்.
இப்போது அதே மாதிரி வேடங்களையே, பிற மொழிப் படங்களில் மேற்கொள்கிறேன்.
“உங்கள் குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் இப்போது தீர்ந்து விட்டதா?”
“குழப்பங்கள் எந்த வீட்டில்தான் இல்லை? என்னவோ பெரிதாக கேட்கிறீர்களே? நான் நடிகை என்பதால், பொது வாழ்வில் ஈடுபட்டவள் என்பதால், அதற்கு இவ்வளவு பெரிய முக்கியத்துவமும் விளம்பரமும் கொடுக்க வேண்டுமா, என்ன?”
புதுமுகங்களை வேதனை கலந்த வியப்புடன் கவனிக்கிறார் சாவித்திரி. “ஓரிரு படங்களில் நடிப்பதற்குள்ளாகவே தனி மேக்கப் மேன்.
தனி ஹேர் டிரஸ்ஸர். தலைவாரிப் பின்னிக்கக் கூடவா தெரியாது, ஒரு பெண்ணுக்கு? விக் வைக்க, அலங்கார கொண்டை போட இன்னொருவர் உதவி தேவைதான்.
ஆனால் சாதாரணமாக வாரிவிட்டு பின்னிக்கொள்ளக் கூடவா இன்னொருத்தர் வேண்டும்? டேக் எடுப்பதற்கு முன்னால் “வசன ஒத்திகை பார்க்கலாம்” என்றபோது ஒரு புதுமுக நடிகை, “டேக்-கிலேயே பார்த்துக் கொள்ளலாம்“ என்றாள் ஆச்சரியமாக இருந்தது எனக்கு.
“நீ நடிப்பதைப் பார்த்து என் ரியாக்ஷனை நான் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். அதனால் நடித்துக் காண்பி.
அநாவசியமாக டேக்கில் தவறு செய்து தயாரிப்பாளரின் பணத்தை வீணாக்க நான் விரும்பவில்லை” என்று உறுதியாகச் சொல்லி ஒத்திகை பார்த்தேன்.
அவ்வாறு செய்வது தங்கள் திறமையை மேலும் வளர்த்துக் கொள்ளத்தான் என்ற உண்மை ஏன் அவர்களுக்கு தெரியாமல் போகிறது?
புது நடிகைகள் எல்லாம் தனக்கென்று தனி நாற்காலி ஒன்று வீட்டில் இருந்து கொண்டு வருகிறார்களே, அந்தக் காலத்தில் இப்படி முடியுமா? யாரேனும் ஏதேனும் சொல்லிவிடுவார்களோ என்ற பயம்.
வெகுநாள் தயக்கத்துக்குப் பின் ஒரு பிரபல நடிகர் எடுத்துச் சென்றதைப் பார்த்ததும்தான் நானும் கொண்டுபோக ஆரம்பித்தேன். பயபக்தி எல்லாம் இப்போது இல்லை.
அவுட்டோரில் யார் வீட்டிலாவது சூட்டிங் எடுக்கிறார்கள். இதற்காக சென்னை நகரை விட்டு எத்தனையோ மைல் தொலைவில் இருக்கும் இடங்களுக்குப் போக வேண்டி இருக்கிறது.
அவ்வாறு படமெடுக்கும் தன் வீட்டை, சூட்டிங் முடிந்த பிறகு வீட்டுக்காரர்கள் பார்த்தால் கண்ணில் ரத்தம்தான் வரும். அந்த அளவுக்கு அலங்கோலமாகிவிடும். அப்படியும் சிலர் ஏன் வீடுகளை படபிடிப்புக்குக் கொடுக்கிறாா்கள்?
அந்த வீட்டுப் பெண் யாருக்காவது வேஷம் தருவதாகச் சொல்லி ஆசை காட்டுவதால்தான். அந்தப் பெண்ணுக்கு நடிக்கத் தெரியுமா என்றெல்லாம் பார்ப்பதில்லை.
ஏதோ வேஷம் கொடுத்து விடுகிறார்கள். அதிர்ஷ்டம், திறமை இருந்தால் முன்னுக்கு வரும். இல்லாவிட்டால், அவ்வளவுதான்.”
அவர் குரலில் இனிமை மறையவில்லை. பேசும்போது முகபாவனைகள் இயற்கையாகவே உள்ளன. அனாவசியமாக முக சுளிப்பு இல்லை. படாடோபம் ,டாம்பீகம் இல்லை.
இடையில் தன் கலை வாழ்வுக்கு ஏற்பட்ட தொய்வுக்கு தன் குடிப்பழக்கம்தான் காரணம் என்று வெளிப்படையாக ஒப்புக்கொள்ளும் மனப்பக்குவம் தொிகிறது.
அதுவே, அவர் நடிப்பது சினிமாவில் மட்டும்தான் என்பதையும் விளக்குகிறது.
– பேட்டி : பிரபுசங்கா்
நன்றி : விசிட்டர் இதழ் 15.10.1979

============================================================================================
பொக்கிஷம்  :-

71 கருத்துகள்:

 1. எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண் டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு..

  வாழ்க தமிழ்..

  பதிலளிநீக்கு
 2. பதிவின் முதல் பகுதியைப் போல ஒன்று வைத்திருக்கின்றேனே..

  தாங்கள் முந்திக் கொண்டீர்கள்..

  வாழ்க வாழ்க..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடடே..  நீங்களும் ஒன்று எழுதி வைத்திருக்கிறீர்களா?

   நீக்கு
 3. கற்பக கணபதி
  கனிவுடன் காக்க..
  முத்துக்குமரன்
  முன்னின்று காக்க..
  தையல் நாயகி
  தயவுடன் காக்க..
  வைத்திய நாதன்
  வந்தெதிர் காக்க..

  இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
  பிரார்த்திப்போம்..

  எல்லாருக்கும் இறைவன்
  நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

  நலம் வாழ்க..

  பதிலளிநீக்கு
 4. நாற்பது வருடங்களுக்கு முன்பு என் தந்தையின் பெரியம்மா மகன் (தம்பி முறை) எழுதிய கடிதத்தினால் உறவு விட்டுப் போயிற்று..

  அவன் வீட்டு வாசலை மிதிக்கக் கூடாது என்ற வார்த்தைகளோடு என் தந்தையும் வாழ்ந்து காட்டி விட்டார்..

  இத்தனைக்கும் நான் பியூசி படிக்கும் போது பல உதவிகளைச் செய்தவர்
  அந்த சித்தப்பா..

  அவரைப் பற்றி ஏதும் தெரியவில்லை..

  என்ன செய்வது என்றும் புரியவில்லை..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கடித்ததால் அல்லாமல் வேறு காரணங்களால் பேசிக்கொள்ளா உறவுகள், நட்புகள் பார்த்திருக்கிறேன்.  இப்படி கோபம் சுமந்து, வெறுப்பு சுமந்து இதைச் சாதிக்கிறார்கள் என்று தோன்றும்.

   நீக்கு
  2. // கடித்ததால் அல்லாமல் //

   கடிதத்தால் அல்லாமல்!

   நீக்கு
 5. @ நடிகையர் திலகம்..

  /// இந்த விஷயத்தில் எனக்கு அந்தப் பழக்கத்தை கற்றுக் கொடுத்தவர்களை முழுமையாகக் குற்றம் சாட்ட முடியாது. என் பங்கும் அதில் உண்டு... ///

  என்னே பெருந்தன்மை..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹிஹிஹி...   பலவீனத்தை ஒப்புக்கொள்ள தனி தில்லு இருக்கணுமில்ல....

   நீக்கு
 6. /// வடநாட்டு கூலித் தொழிலாளிகளிடம் டிக்கெட் கேட்ட டி.டி.இ.யிடம் தகராறு செய்து அவரை ஓடும் ரயிலிலிருந்து கீழே தள்ளி விட, ///

  தமிழக நகரங்களில் வடக்கன்களின் ஆக்ரமிப்பைப் பார்க்கும்போது பயமாக இருக்கின்றது...

  இங்கு பீஹாரிகளின் மேற்பார்வையில் பாவப்பட்ட டம்ளர்கள் கட்டிட வேலை செய்து புது வீடு கட்டிக் கொண்டு இருக்கின்றனர்.

  கீழத் தஞ்சை பகுதியில் நடவு செய்வதுடன் அறுவடை வரைக்கும் டேரா போட்டு இருக்கின்றனராம்...

  கூலி வேலைக்கும் லாயக்கற்றுப் போனான் நவீனட் டம்ளன்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஈஸ்ட் இந்தியா கம்பெனி இந்தியாவுக்குள் நுழைந்து போல...     என்னென்ன விளைவுகள் பிற்காலத்தில் ஏற்படுமோ...!

   நீக்கு
 7. இன்றைய பகுதிகள் நன்றாக இருந்தன, சாவித்ரி பேட்டி தவிர (நிறையதடவை அதைப் படித்துத் தொலைத்தாகிவிட்டது).

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி நெல்லை..  அட, சாவித்ரி பேட்டி நிறைய தடவை ஏற்கெனவே படித்திருக்கிறீர்களா...

   நீக்கு
 8. கடிதங்கள்..... எங்கள் ஊரில் (78) பார்த்த ஐம்பது வருடக் கடிதங்கள் (பொக்கிஷங்கள். காரணம் ஸ்டாம்ப்) தொங்கவிட்டிருந்த முறை. எவ்வளவோ தசாப்தங்களைத் தாண்டிய அந்தக் கடிதங்கள் அப்பா வீட்டை விற்றபோது குப்பைக் கூடைக்குப் போயிருக்கும்.

  கோபத்தினால் விளைந்த கடித்த்தால் உறவுமுறை முழுமையாக பாதிக்கப்பட்டது. அந்த எண்ணம் பிரிவு மனதளவில் சரியாக முப்பது நாற்பது வருடங்களாகிவிட்டது. இன்னும் சிலரிடம் உறவுமுறை சரியாகவில்லை.இடையில் எத்தனையோ மறைவுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அந்த அளவு விரோதம் எங்கள் இல்லங்களில் இல்லை என்றே எண்ணுகிறேன்.  பாஸ் இல்லத்தில் உண்டு!  கடிதங்களில் வரும் ஸ்டாம்ப் கலெக்ட் செய்வது தனி பொழுதுபோக்கு.  ஆனாலும் வெளிநாட்டு ஸ்டாம்ப்களுக்குதான் மவுசு!

   நீக்கு
  2. நான் சொல்லும் ஸ்டாம்ப் 1950க்கு வெகுகாலம் முற்பட்டது.

   நீக்கு
  3. ஓ...  அதுவும் சுவாரஸ்யம்தான்.  அப்போதைய தமிழ் எழுத்துகளிலும், நடையிலும் கூட  கொஞ்சம் வித்தியாசம் இருக்கும்.

   நீக்கு
 9. என் பெரியப்பா, கடிதம் என்பது அதைப் பெற்றுக்கொள்பவர் படிக்க வேண்டும் என்பதை எப்போதும் நினைவில் எஒண்டதில்லை போலிருக்கு. அவர் கடித்த்தை ஒழுங்காகப் படிக்க முடியாது. அட்ரசைத் தவிர எல்லா இடங்களிலும் நுணுக்கி நுணுக்கி எழுதுவார். வாய்ப்பு கிடைக்கும்போது பெஇர்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா.. ஹா... ஹா... என் அப்பா கிட்டத்தட்ட அந்த ரகம்தான்! கையெழுத்தும் புரியாது. முடிந்தால் ஒரு ஆபத்தில்லாத கடிதம் அப்புறம் ஒரு வியாழனில் பகிர்கிறேன்!

   நீக்கு
 10. இடையில் ரொம்பவே வழுக்கி விழுந்ததனால் எழுந்த கவிதையோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இடையிலா?  யாருடைய இடையில்?!!!  அபுரி.

   நீக்கு
  2. /இடையில் ரொம்பவே வழுக்கி விழுந்ததனால் எழுந்த கவிதையோ?/

   ஹா ஹா ஹா. அப்போ இடையில்தானா? முதலில் இருந்தே இல்லையா? :)) .

   நீக்கு
  3. அதற்கேற்ற அனுஷ்கா படமா இல்லை படத்தினால் எழுந்த கவிதையா?

   நீக்கு
  4. எபியில் எழுத்தாளர் உஷா சிறுகதையைப்
   படித்துமா அனுஷ்கா பற்றிய நினைவுகள்?
   இப்பொழுது இல்லை என்றாலும் இன்னொரு காலம் தங்கள் மனதை வாட்டும் பொழுது சுட்டிக் காட்டத் தயங்காதவர்கள் பெண்கள்.

   நீக்கு
  5. கமலா அக்கா...  அந்தக் காலத்தில் தேவிகா, (குண்டு) சாவித்ரி, பத்மினி போன்றோரைப் பார்த்து "ஓடிவந்து போல் இடை இருக்கும்" என்று கவிஞர் கண்ணை மூடிக்கொண்டு பாட்டு எழுதினர்!  கசபைப்பிஹ்சிக்கு பொய் என்றாலும் அது ஆகாசப்புளுகு!

   நீக்கு
  6. கவிதைக்குதான் அனுஷ்கா படம் நெல்லை.

   நீக்கு
  7. அனுஷ்காவை அப்படி எல்லாம் மறக்க முடியாது ஜீவி ஸார்.  மூங்கில் கூடை கொண்டு நிலவை மூட முடியுமோ! 

   நீக்கு
 11. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 12. இந்த நவீன டெக்குனாலஜி இன்னும் என்னென்ன கொடுமைகளைச் செய்வதற்குக் காத்திருக்கின்றதோ..

  எழுதுவதை நெருக்கி ஒழித்து விட்டது..

  நடைபெரும் என்றும் கம்மங்கூல் என்றும் பிரஸ் ஜீஸ் என்றும்
  தட்டச்சு செய்யப்பட்ட விளம்பரங்கள் ஏராளம்...

  மொழிக்கான பல்கலைக்கழகம் இங்கு தான் இருக்கின்றது..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தமிழர்கள் கடந்த ஐம்பது வருங்களுக்கும் மேலாக தமிழை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.  அதுதான் இவர்கள் கையில் சிக்க மாட்டேன் என்கிறது!

   நீக்கு
  2. குறைத்து மதிப்பிட்டு விடாதீர்கள்.

   தமிழ்ச் செல்வன்,
   தமிழ்ச் செல்வன்

   போன்ற மொழியை முன்னிருத்திப் பெயரிடுபவர்கள்
   தமிழர்களில் தான் அதிகம்.

   முடிந்தால் வேற்று மொழிகளில் இப்படி தங்கள் மொழிப் பற்றில் இடப்படும் பெயர்களை உதாரணம் காட்டிச் சொல்லுங்களேன்.

   நீக்கு
  3. பேரு வச்சியே, சோறு வச்சியா என்பார் கவுண்ட்டர் ஒரு படத்தில்.  அது மாதிரி தமிழ்ச்செல்வன் என்று பெயர் வைத்தால் போதுமா?  கண்ணன் என்று பெயர் இருக்கும்.  சோடா புட்டி கண்ணாடி போட்டிருப்பார்.  TB ஆஸ்பத்திரியில் படுத்திருப்பார்.  பெயர் கேட்டால் ஆரோக்கியசாமி என்பார்!

   நீக்கு
 13. பல்கலைக் கழகமா..

  பழ்களைக் கலகமா?..

  பதிலளிநீக்கு
 14. கடிதம் எனும்போது நான் எழுதிய கடிதங்கள் நினைவிற்கு வந்தன. நான் அதிகம் கடிதம் எழுதியதில்லை. கல்யாணம் ஆன புதிது வைகாசியில் கல்யாணம், ஆடியில் பிரிவு. அப்போது எழுதிய கடிதங்களை நினைத்தால் இப்போதும் சிரிப்பு வரும். ஒரு கடிதம் வெறும் சினிமா பாடல் வரிகளின் கோர்வையாக எழுதியிருந்தேன். மற்றுமொரு கடிதம் mirror image ஆக எழுதியிருந்தேன். அதாவது முகம் பார்க்கும் கண்ணாடியில் கடிதத்தை காட்டி கண்ணாடியில் படிக்க வேண்டும்.

  கவிதை சுமார் தான். கல்லூரிக் கானா போல் உள்ளது.

  பஞ்சாங்க, ஜோதிட பகுதி ஏதாவது எங்கள் பிளாகில் துவங்க உத்தேசமா?

  போளி கேரளா பக்கம் செய்வது மிகவும் மெலிதாக இருக்கும். பிய்த்து வாயில் போட்டால் அப்படியே கரைந்துவிடும். போளி பால் பாயசம் கல்யாண விருந்துகளில் (Sadya) கண்டிப்பாக இருக்கும்.

  ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி போன்று ஆயிரம் கார் திருடியதால் ஏதாவது பிரத்யேக பலன் உண்டா?

  இந்த தேவிகா ராணி ரசியர் ரோரிச் மனைவி தானே? இங்கு ரோரிச் ஆர்ட் கேலரி உண்டு.

  பொக்கிஷ ஜோக்குகள் நன்றாக உள்ளன. குறிப்பாக ' நான் கண்ட கனவுகள்' அநாதை இல்லது வாசலில் கலர் டிவி. (டிஸ்போஸ் செய்ய கஸ்டப் படுகிறேன்) மற்றும் கொசுவத்தி. ஆமாம் கொசுவத்தியும் ஆபீஸ் சப்ளை தானா?
  Jayakumar​

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என் கடிதங்களை நான் இங்கு பிரசுரிக்க முடியாமல் இருப்பதற்கு வருந்துகிறேன்!  நோ...  நோ...   நீங்கள் நினைப்பது போல இல்லை.  நான் பாஸ் கடிதங்களை பத்திரமாக வைத்திருப்பது போல் அவர் என் கடிதங்களை பாதுகாக்கவில்லை.  ஆனால் நான் கோபத்தில் எழுதிய கடிதங்கள் மட்டும் பத்திரமாக இருக்கின்றன!!!!

   வயதாகி விட்டதால் உங்களுக்கு கவிதை போர் அடிக்கிறது!!!!  எங்களை போன்ற இளைஞர்கள் உருகி உருகி எழுதுகிறோம்!!

   //ஜோதிட பகுதி ஏதாவது எங்கள் பிளாகில் துவங்க உத்தேசமா?//

   அடடே...  ஆரம்பிக்கலாமா?

   போளி இந்த முறை எங்கள் வீட்டிலும் ஹார்டவெர்தான்!

   1000 ஜார் திருடியதால் செய்தியில் இடம்பிடித்து போட்டோ வெளியாகி இருக்கிறதே...  இன்னும் பிடிபடாத திருடர்கள் எத்தனையோ...

   தேவிகா ராணி பற்றி மேலதிக தகவல்கள் தேடினால் கிடைக்கலாம்.  இப்போதைக்கு யாமறியோம்...


   ஜோக்ஸ் ரசித்ததற்க்கு நன்றி.

   நீக்கு
 15. சென்ற முறை எஸ் குமார் எழுத்துகளை பகிர்ந்திருந்தேன்.  அது கண்டுகொள்ளப் படாமலேயே போனது.  இந்த முறை,

  பாடல் யாரும் கேட்டீர்களா, காட்சியை ரசித்தீர்களா?

  விக்ரமாதித்யன் பற்றி சொல்லி இருக்கிறேனே....   படிக்கவில்லையா?!!

  எதெது கண்டுகொள்ளபபடவில்லை என்று பார்த்து அவற்றை - அது மாதிரி பதிவுகளை - நிறுத்திக் கொள்ள உத்தேசம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹிந்திப் பாடல்களை நான் ரசிப்பதில்லை. அதனால் கேட்கவில்லை (இதுபோலவே ஹிந்திப் படம் நடிகர்கள் பற்றி எழுதினாலும்). விக்ரமாதித்யன் பகுதி படித்தேன். ஒன்றும் தோன்றவில்லை.

   நேற்று வெற்றிமாறனின் விடுதலை படம் ஓடிடியில் பார்த்தேன். வித்தியாசமான களம். ஓரளவு இயல்பாக எடுத்திருந்தார். அந்தப் படத்தில் விக்ரமாதித்யனுக்கு ஒரு ரோல் கிடைத்திருந்திருக்கலாம் அவர் இருந்திருந்தால்.

   நீக்கு
  2. ரசிப்பதில்லை என்று மா பு  வா பு என்று சொல்லாதீர்கள் நெல்லை.  காட்சிக்காகவே பாட்டை ஒருதரம் பாருங்கள்.

   நீக்கு
 16. வணக்கம் சகோதரரே

  இன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமையாக உள்ளது.

  கடிதங்கள் பற்றிய அலசல்கள் நன்றாக உள்ளது. அருமையாக எழுதி உள்ளீர்கள். பாராட்டுக்கள்.

  கடிதங்கள் எழுதிய அந்த காலங்களை மறக்க இயலாது. நான் பிறந்த வீட்டு உறவுகளுக்கு மட்டுமே (திருமணமானவுடன்) அதிகமாக கடிதங்கள் எழுதியுள்ளேன். எங்கள் அப்பா, அம்மா பதிலுக்கு எழுதிய கடிதங்களில் சிலதை இன்னும் நான் பொக்கிஷமாக வைத்திருக்கிறேன். அவற்றை இப்போது எடுத்து படித்தால் கூட அவர்கள் அருகிலேயே இருப்பது போல உணர்கிறேன்.

  முன்பு பிறந்த வீட்டிலும், கம்பியில் கோர்த்த உறவுகளின் கடிதங்கள் இப்போதைய அலங்கார விளக்குகள் மாதிரி தொங்கிக் கொண்டிருக்கும். பழைய நினைவுகளை தங்கள் கட்டுரை நினைவுக்கு கொண்டு வருகிறது.

  இப்போது நினைத்தவுடன் மனதில் உள்ளதை (சரியோ, தப்போ, தவறோ) கைப்பேசியில் பேச முடியாததை அந்தக் கால கடிதங்கள் நிறைவேற்றி தந்திருக்கின்றன. ஆனால், இப்போதும் அதே மாதிரி எப்போதாவது பேசினாலும், எதிராளிக்கு கேட்க விருப்பமில்லாவிட்டால், எதிரில் யாருமே இல்லாத மனிதரையோ, வேலையையோ காரணம் காட்டி, கைப்பேசி தொடர்பை துண்டிக்க முடிகிறது. விஞ்ஞான வளர்ச்சி மனிதர்களின் மனங்களை மாற்றும் சக்தி கொண்டது என்பதை உணர்கிறோம்.

  கவிதையும், கவிதைக்கேற்ற புகைப்படமும் நன்றாக உள்ளது. ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கடிதங்கள் பற்றிய பகிர்தலுக்கு நன்றி. பாட்டு கேட்டீர்களா? பார்த்தீர்களா?

   நீக்கு
  2. எப்போதாவது கிடைத்தால்தான் அது அருமை. எப்போதும் கிடைத்தால் அதன் அருமை தெரியாது. கடித்த்திற்கும் கைபேசிக்கும் அதுதான் வித்தியாசம். நேரம் காலம் பார்க்காமல் கூப்பிடுவதால் கைபேசி எனக்கு அந்நியன்தான்.

   நீக்கு
  3. என்ன சொன்னாலும் இனி கடிதங்கள் வராது...  கைபேசிதான்!

   நீக்கு
 17. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

  இப்போது மகன் ஊரில் இருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 18. பதிவு அருமை. கடிதம் பதிவு அருமை. கடிதங்களுக்கு காத்து இருந்த காலங்கள் மறக்க முடியாது.
  சின்ன மாமனார் அவர்கள் கார்டில் அவ்வளவு விஷயங்களை எழுதி விடுவார்கள்.

  என் அம்மா, அப்பா, அண்ணன், அக்கா, என் மாமனார் , என் கணவர் கடிதங்களை சில வற்றை வைத்து கொண்டு பலவற்றை கிழித்து போட்டு விட்டார்கள் . இப்போது அவை எல்லாம் இருந்து இருந்தால் காலத்தின் நினைவுகளை சொல்லி கொண்டு இருக்கும்.

  இவ்வளவு சேமிப்பிக்கு வீட்டில் இடம் இருக்கும் பல நாள் சேமித்த கடிதங்களை கிழித்து விட்டு வருத்தப்பட்டு இருக்கிறோம் இருவரும்.

  இப்போது தினம் பேசி கொண்டாலும் கடிதங்களில் பேசிய காலங்கள் போல வருவது இல்லை.

  பாடல் கேட்டேன். அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களுக்கு நல்வரவு..

   நலமே வாழ்க..

   நீக்கு
  2. சேர்த்து பொக்கிஷமாய் வைத்திருந்த சில விஷயங்களை சடாரென ஒரு நாள் கழித்து (கிழித்து) போடுவது என்பது ரொம்பக் கஷ்டம் கோமதி அக்கா.  அந்தப் பாட்டைப் பார்த்திருந்தீர்கள் என்றால், சில கடிதங்கள் எழுதியவர் நேராய் நம்மோடு பேசுவது போலிருக்கும்.

   நீக்கு
 19. பச்சைசேலையில்
  பசுமை சோலை //

  கவிதைக்கு ஏற்ற பச்சை சேலை படம் கிடைக்கவில்லையோ!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் முதலில் சந்தனச்சேலை, சிலை என்றெல்லாம் எழுதி இருந்தேன்.  சந்தனச்சேலை படம் கிடைக்கவில்லை.  இந்த நிறம் கிடைத்ததும் வார்த்தையை மாற்றி விட்டேன்!

   நீக்கு
 20. யுகாதி பண்டிகை வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி அக்கா. வலிகள் இல்லாமல் வளமாய் இருங்கள்.

   நீக்கு
 21. பிரபு சங்கர் எல்லாம் சும்மா. உப்பு சப்பில்லாத
  விஷயங்களை நடிக, நடிகையரின் மார்க்கெட் உயர்வுக்காக அவர்கள் ஏற்பாட்டில் செய்தியாகப் பண்ணுபவர்களே. என்ன, இருந்தாலும் ப..ல்..ன் போல வருமா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // என்ன, இருந்தாலும் ப..ல்..ன் போல வருமா? //

   என்னவாக இருக்கும் என்று இன்னமும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்!

   நீக்கு
 22. கடிதம் போலக் கதைகளும் எழுதலாம். குமுதத்தில் எழுதியுமிருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்னுடைய கடிதக் கதை ஒன்று கூட இங்கே வெளியாகி இருக்கின்றது..

   ஆனால் எனக்குத் தான் எழுதத் தெரியாது..

   நீக்கு
  2. கடித(த்திலேயே)க்கதை அநேகமாக எல்லோரும் ஒருமுறை முயற்சித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

   நீக்கு
  3. // ஆனால் எனக்குத் தான் எழுதத் தெரியாது.. //

   :))

   நீக்கு
 23. இங்கு யாருக்கானும் கோவிலனைத் தெரியுமா!
  எம். முகுந்தனை?.. அப்போ எதற்கு அவர்களைச் சொல்லித் தன்னை முன்னிலைப்படுத்தும் விக்கிரமாதித்யனைத் தெரிஞ்சிருக்கணும்?

  பதிலளிநீக்கு
 24. இந்த வார நியூஸ் ரூமில்
  'பெங்களூருவில் யுகாதி பண்டிக்கைக்காக ஹாலிடே மனு எனப்படும்... என்று ஆரம்பிக்கும் செய்தியை வாசித்து முடித்து புரிந்து கொள்வதற்குள் தட்டுத் தடுமாறிப் போனேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வீட்டில் செய்பவர்கள் குறைவு என்கிறார்.

   நீக்கு
  2. //'பெங்களூருவில் யுகாதி பண்டிக்கைக்காக ஹாலிடே மனு எனப்படும்... என்று ஆரம்பிக்கும் செய்தியை வாசித்து முடித்து புரிந்து கொள்வதற்குள் தட்டுத் தடுமாறிப் போனேன்.// மன்னிக்கவும், அது ஹாலிடே மனு அல்ல, 'ஹோளிகே மனே' என்று வந்திருக்க வேண்டும். நம் ஊரில் போளி ஸ்டால் என்பதை கன்னடத்தில் ஹோளிகே மனே என்கிறார்கள். ஸ்பெல்லிங் மிஸ்டேக்கை நானும், கவனிக்கவில்லை, ஸ்ரீராமும் கவனிக்கவில்லை. மற்றபடி இந்த செய்தியை புரிந்து கொள்வதில் என்ன பிரச்சனை?

   நீக்கு
  3. ஹாலிடே மனு, பெங்களூருவில் ஹாலிடே மனு என்றெல்லாம் கூகுள் தேடலில் தேடினேன்.
   ஹாலிடே மெனுவைத் தான் ஹாலிடே மனு என்று குறிப்பிட்டிருக்கிறீர்களோ என்று சந்தேகம் வேறு.

   ஒரு வழியாக அந்த ஹோளிகே மனே-யைத் தெரிந்து கொண்டேன்' என்பதைத் தான் தட்டுத்தடுமாறிப் போனேன் என்று சொன்னேன்.

   மற்றபடி? வேறு ஒன்றுமில்லை

   நீக்கு
 25. கடிதம் எழுதி அனுப்புதல், நெருக்கமான ஒருவரிடமிருந்து கடிதம் வரலாம் என அதற்காகக் காத்திருத்தல், தபால்காரர் தெருவில் நம் வீடிருக்கும் பக்கம் திரும்பிவிட்டதைக் கண்டாலே, ஏதோ கிடைக்காதது கிடைக்கப்போகிறது என்பதாக எதிர்பார்த்தலில் கண்விரிதல் - என்பதெல்லாம் ஒரு காலகட்டத்தின் மறக்கமுடியா சுவாரஸ்யங்களில் ஒன்று. திரும்பாது அந்தக்காலம் இனி.

  இதை யார் படிப்பார்கள், குறிப்பாக யாருக்கு அந்த வீட்டில் படித்துக் காண்பிப்பார்கள், அங்கே யாரிதை ஆவலோடு ரசிப்பார்கள் என மனக்கண் முன் கொண்டுவந்து, கடிதத்தை மிகவும் ஜாக்ரதையாக எழுதிய நாட்கள், எனது பதின்மவயது நாட்கள். குறிப்பாக இன்லேண்ட் லெட்டரில் சரியான மார்ஜின் கொடுத்து, முறையாக பாராக்கள் அமைத்து, படிப்போர் மெச்சும்படியான அழகான கையெழுத்தில் (சுயமெச்சல் அல்ல, உண்மை!), அடித்தல், திருத்தல் இல்லாமல் எழுதியிருக்கிறேன். நெருக்கி நெருக்கிக் கடுகுக்கணக்காக எழுதுவது, சந்துபொந்துகளில் வார்த்தைகளைத் திணிப்பது எல்லாம் நம்ப ஸ்டைலல்ல!

  வேலைக்குப் போனபின் உறவினர்களுக்கு, நண்பர்களுக்கு வரைந்த கடிதங்களுக்காக, வண்ணத் தாள்களை ஸ்டேஷனரி ஷாப்களில் தேடி வாங்கி, எழுதியிருக்கிறேன். பச்சை அல்லது பர்ப்பிள் இங்கில் கையெழுத்திட்டிருக்கிறேன். பேனாக்களும் விதவிதமாக வைத்திருந்தேன் (இப்போதும் அந்தப் பைத்தியக்காரத்தனம் தொடர்கிறது). சில வாழ்த்துக் கடித ஓரங்களில், மெல்லிய இலைகள், பூக்கள் எனவும் வரைந்து அனுப்பிய ஞாபகம்.

  பெரும்பாலும் சராசரி மொழிவழக்கில்தான் கடிதங்கள் என்னை நோக்கி வந்தன அந்தக்காலத்தில். இருப்பினும் வந்தவற்றில் சில கடிதங்கள், உணர்ச்சிப் பெருக்கில் எழுதப்பட்டிருப்பதை கவனித்திருக்கிறேன். சுருக்கமான, காத்திரமான வார்த்தைகளைக் கொண்டவையும் உண்டு.

  போஸ்ட் கார்டை எங்கள் குடும்பத்தில் கவனமாகத் தவிர்த்தோம். குறைவாகவே, வெகு செலக்டிவாகவே கடிதங்களை எழுதிவந்தேன். இன்லண்ட் லெட்டர், அல்லது அந்த என்வலப் - இவைதான் பயன்படுத்தப்பட்டன. உபரியாக ஸ்டாம்ப் ஒட்டி, சிலவற்றை இணைத்து, அபூர்வமாக நிறைய எழுதியதும் உண்டு. இந்தியத் தபால்துறையின் அந்த வெளிர்மஞ்சள் நிற என்வலப்பில் கடிதங்களை அனுப்புவதும், பெறுவதும் பிடிக்கும் எனக்கு.

  நிறுத்துகிறேன். நீ..ண்..டு, இதுவே ஒரு பதிவுபோல் ஆகிவிடப்போகிறது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சில கடிதங்கள் நானும் இன்லேன்ட் லெட்டரில் மார்ஜின் விட்டெல்லாம் எழுதியது உண்டு.  ஒவ்வொரு நபருக்கும் ஒவ்வொரு நிறத்திலும் எழுதி உள்ளேன்.  மிகச்சிலருக்கு எப்போதும் கடமையே என்றுதான் லெட்டர்!  ஒரு ரூபாய் என்வெலப் தவிர சற்றே பெரிய கவர் எல்லாம் ஸ்டேஷனரி கடையில் வாங்கி அதில் வைத்தும் அனுப்பி உள்ளேன்!  உங்கள் நீண்ட பதிலுக்கு நன்றி ஏகாந்தன் ஸார்.

   நீக்கு
 26. கடிதங்களைப் பற்றிய பகிர்வு நினைவுகளை மலரச் செய்தது. பள்ளி வயதிலிருந்தே அத்தைகள், சித்திகள் மற்றும் பெரியம்மாவுக்கு, அவர்தம் பிள்ளைகளுக்கு, கோடை விடுமுறையில் தோழிகளுக்கு என எழுதிய கடிதங்கள் ஏராளம் :). இன்லேண்ட் லெட்டரின் இண்டு இடுக்குகளில் எழுதி அனுப்புவார் என் பெரியம்மாவும் அம்மாவுக்கு:). கடிதங்களுக்காகவே வரும் பூக்களுடன் கூடிய கெட்டித் தாள்கள், உறைகளும் உபயோகித்ததுண்டு. Cousins அத்தனை பேரின் பிறந்தநாளுக்கும் கைப்படத் தயாரித்த வாழ்த்து மடல் அனுப்புவோம். இப்போது எல்லாமே வாட்ஸ் அப் உள்ளே சுருங்கி விட்டது.

  ந்யூஸ் ரூம்: டி.டி.இ மரணம் பரிதாபத்துக்குரியது.

  தொகுப்பு நன்று.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆக, நிறைய பேர் இன்லேன்ட் லெட்டர்களில் இண்டு இடுக்கு விடாமல் எழுதும் பழக்கம் வைத்த்டிருந்திருக்கிறார்கள்!!  நன்றி ராமலக்ஷ்மி.

   நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!