செவ்வாய், 31 மே, 2011

கே யைத் தேடி 04


அத்தியாயம் 4: "அகப்பட்டதை சுருட்டுடா ...!"

பொன்னுசாமி தொடர்ந்து சொல்லத் தொடங்கினார்.

"நான் வேலையில் சேர்ந்த புதிதில், மகாபலிபுரம் ஏரியால டூட்டி.
ஒருநாள், இதேமாதிரி ஒரு கார் கேட்பாரில்லாமல் குகைக் கோயில் அருகே நின்றிருந்தது. சாதாரணமாக காலை அல்லது மாலை நேரத்தில் வருகின்ற டூரிஸ்ட் கூட்டம் எல்லாம் அன்று இரவு அல்லது மறுநாள் காலையில் திரும்பிப் போயிடுவாங்க. ஆனால் நான் சொன்ன கார் இரண்டு நாட்களாக அங்கேயே நின்றிருந்தது,
      
அது ஒரு வெளி நாட்டுக் கார். பிரிட்டிஷ் கார் என்று உள்ளூர் போக்குவரத்து  அலுவலகத்தில் பேசிக்கொண்டார்கள்.  காரின்  சொந்தக்காரரைக் கண்டுபிடிக்க அந்தக் காலத்தில் அதிக வசதிகள் கிடையாது. எங்கள் உயர் அதிகாரி ஒருவர் சொன்ன யோசனையின் படி, அது பிரிட்டன் வண்டி என்பதால், சென்னையில் உள்ள வாகனங்கள் தயாரிக்கும் ஒரு தனியார்  கம்பெனியில் அந்தக் காரை கொண்டுபோய் நிறுத்தி விடுவது என்றும், அந்தக் கம்பெனிக்காரர்கள், தங்கள் பிரிட்டிஷ் தலைமை அலுவலகங்கள் வழியாக டெலக்ஸ் அனுப்பி,காரின் சொந்தக்காரரைக் கண்டுபிடித்து, அவர்களிடம் காரை சேர்ப்பித்து விடுவார்கள் என்றும் கூறப்பட்டது. அதன்படி நாங்க அந்தக் காரை, அப்படியே கொண்டுபோய் அந்தக் கம்பெனியில் நிறுத்திவிட்டு வந்துவிட்டோம். அவர்கள் ஒரு மாத காலத்தில், அந்தக் காரின் உரிமையாளரை அல்லது வாரிசுதாரரைக் கண்டு பிடித்து அவர்களிடம் வண்டியை ஒப்படைத்துவிட்டார்கள் என்றும் கேள்விப்பட்டேன். "

"இதுல போலீசுக்குத் தெரியாம மறைப்பதற்கு என்ன இருக்கு பொன்னுசாமி?"

"இதுல இதுவரையிலும் ஒண்ணும் இல்லை அம்மா. ஆனால் அதற்குப் பிறகு நான் கேள்விப்பட்ட விஷயம் ஒன்று இருக்கின்றது."

"அது என்ன? யார் மூலமாகக் கேள்விப்பட்டீங்க?"

"அவர்களின் இங்கிலாந்து கம்பெனியிலிருந்து, அந்தக் காரை அனுப்பச் சொல்லும்பொழுது காரையும் அது சம்பந்தப்பட்ட பொருட்களையும் மட்டும்தான் அனுப்பவேண்டும். மற்ற பொருட்கள் எதையும் சுங்கவரி பிரச்னைகள் வரும் என்பதால், ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொல்லிவிட்டார்களாம். அந்தக் காரினுள் இருந்த சில வெளிநாட்டுப் பொருட்கள் சில அதிகாரிகளின் உபயோகத்திற்காக எடுத்துக் கொள்ளப்பட்டன என்று அங்கு வேலை பார்த்த ஒரு நண்பர் சொன்னதாக எனது உயரதிகாரி சொன்னார். மேலும் அவர் சொல்லும்பொழுது, பொன்னுசாமி, நம்ம ஒரு நல்ல சான்சை விட்டுவிட்டோமே, என்று வருத்தப்பட்டுக் கொண்டார்."

"அதனால - இப்போ அதே மாதிரி கேட்பார் இன்றி நின்று கொண்டிருந்த காரில் ஏதாவது மாட்டினால், அதை எடுத்துக் கொள்ளலாம் என்று உங்களுக்குத் தோன்றியதா?"

"ஆமாம் அம்மா - அதனாலத்தான் புத்தி கேட்டுப் போயி சொல்லாம விட்டுட்டேன். அதனாலத்தான் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை யாரோ ஒருவர் ரிப்பேர் செய்துகொண்டு இருந்ததும், அவரைப் பற்றிய முழு விவரங்களும், அடையாள அட்டை உட்பட எல்லாவற்றையும் பார்த்து, கேட்டுத் தெரிந்துகொண்டேன்."

இதுவரையிலும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த சோணகிரி "அப்போ அந்த ஆளு, இந்த நகரத்தின் எந்த மூலையில் இருந்தாலும், அடையாளம் காட்டுவீர்களா?" என்று கேட்டார்.

சோபனா உடனே. "ஐயோ, அழகு சொட்டுது. அந்த தீனதயாள் இப்போ நரகத்தின் ஏதோ ஒரு மூலையில் அல்லவா இருப்பார்!" என்றார்.

"ஓ ஆமாம் ஆமாம் - நிறைய பாக்கெட் நாவல் படித்துப் படித்து,கொஞ்சம் உணர்ச்சிவசப் பட்டுவிட்டேன்" என்றார் சோணகிரி, அசடு வழிய.

"சரி பொன்னுசாமி - இப்போதைக்கு இறந்துபோன தீனதயாளை நன்கு பார்த்தவர் நீங்க ஒருவர்தான். எப்போ எங்களுக்கு அதிகப்படி விவரங்கள் வேண்டுமோ அப்போது உங்களைத் தொடர்பு கொள்கின்றோம். இப்போ டூட்டிக்குப் போறீங்களா? நாங்களும் அந்தப் பக்கம்தான் போகிறோம். உங்களை உங்க டூட்டி ஸ்பாட்டில் இறக்கி விட்டுவிடுகிறோம். வாங்க" என்று கூறியபடி, வெப் காமில் ஒட்டியிருந்த சூயிங் கம்மை எடுத்து, உருட்டி, குப்பைக் கூடையில் போட்டு, கம்பியூட்டரின் ஆடியோ சிஸ்டத்தை மியூட் நிலையிலிருந்து மீட்டார் சோபனா. மறுமுனையில் ரங்கன் முன்பே தன சிஸ்டத்தை மூடி மங்களம் பாடிவிட்டு சென்றிருந்தது புரிந்தது.

எ சா காரை ஓட்ட, காரில் சென்றுகொண்டு இருந்தனர் மற்ற மூவரும். அப்பொழுது சோபனாவின் அலைபேசியிலிருந்து, 'வெற்றிவேண்டுமா போட்டுப் பாரடா எதிர்நீச்சல்' என்றது ரிங் டோன்.

"குரங்கன் காலிங்" என்று அதன் சின்னத் திரை அறிவித்தது. 

(தொடரும்)  
                                 

4 கருத்துகள்:

  1. என்னோட காத்து ஏதாவது அடிசிடுச்சா ? இவ்ளோ குட்டி குட்டியா போஸ்ட் போடறீங்க

    பதிலளிநீக்கு
  2. எல் கே - எப்போ பார்த்தாலும் அடிதானா - முந்திய போஸ்ட்ல எங்களையும் அப்பதுரையையும் அடிச்சுடுவேன் என்றீர்கள். இப்போ காத்து அடிச்சிடுச்சா என்று கேட்கின்றீர்கள்!!

    பதிலளிநீக்கு
  3. ஒவ்வொருவர் பேச்சுக்கு தனித்தனியா கலர் - நல்லாயிருக்கே!!

    பதிலளிநீக்கு
  4. குரங்கன்...என்னவொரு அழகான பெயர்.குரங்கன் கையில பூமாலையா...இல்ல தொடர்கதையா !

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!