புதன், 4 ஜனவரி, 2012

Y THIS கொலைவெறி....? (எங்கள் வலையங்கம்)

                        

பிரசவத்துக்கு தன்னிடம் சிகிச்சை பெற்று வந்த பெண் திடீரென ஒரு நாள் வயிற்று வலி என்று வந்ததும் குழந்தை உள்ளே இறந்து விட்டது என்று கண்டறிந்து உடனே தனியார் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த தூத்துக்குடி டாக்டர் சேதுலட்சுமியை,

                     
தனியார் மருத்துவ மனையில் சேர்ந்து சிகிச்சை பெறும்போது இறந்து விட்ட அந்தப் பெண்ணின் கணவர் தன் நண்பர்களுடன் வந்து கொடூரமாகக் கொலை செய்து விட்ட செய்தி இரண்டு நாட்களாக செய்தித் தாள்களில்...
                      
குழந்தை இறந்து பிறந்ததும் உடலில் ஏற்பட்ட வேறு கோளாறுகளினால் பெண் இறந்து விட்டதும் நடந்திருந்தால் வருந்தக் கூடியதுதான். ஆனால் உடனே அந்தப் பெண்ணைத் தனியார் மருத்துவ மனைக்கு அனுப்பி விட்டார் என்று செய்திகள் சொல்லும்போது கொடூரமாகக் கொலை செய்யுமளவு இந்த மருத்துவர் செய்த பிழை என்ன? 
            
சமீப காலங்களில் தோன்றியுள்ள ஒரு விபரீத விழிப்புணர்வு என்ற மாயையின் விளைவு இது.
                  
மருத்துவம் தவறினால் இப்படிக் கொலைகள், அடி உதை கிடைக்கும் என்றால் மருத்துவர்கள் எந்த நம்பிக்கையில் மக்கள் உடலைப் பரிசோதிக்க முன் வருவார்கள்? சிறிய வியாதிகளுக்குக் கூட பெரிய சோதனைகளைக் காட்டுவதும், கை கழுவ நினைப்பதும் ஆரம்பித்து விடுமே...   
              
இது ஒரு புறம்.... இன்னொருபுறத்தைப் பார்க்கையில்... 
                  
கொலை தவறுதான்...மன்னிக்க முடியாத குற்றம்தான். அதைத் தொடர்ந்து தமிழகமெங்கும் மருத்துவர்கள் தங்கள் சேவையைப் புறக்கணித்திருக்கிறார்களே... (தங்கள் வேலைக்கு அவர்கள் சம்பளம் பெறுகிறார்கள் என்றாலும் இதை சேவை என்றே இங்கே குறிப்பிட விரும்புகிறேன்) இது நியாயமா... ? எதிர்ப்பு காட்ட பாதி மருத்துவர்கள் ஒரு நாளும் மீதி மருத்துவர்கள் இன்னொரு நாளும் பேரணியோ, கோஷமோ எழுப்பி தங்கள் உணர்வுகளை வெளிப் படுத்தலாம்.
             
கருப்பு பேட்ஜ் அணிந்து வேலையில் ஈடுபடலாம். 
                 
கடமை முதலில் என்று முடித்து விட்டு வேலை நேரம் முடிந்த பிறகு அமைதியான முறையில் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தலாம். 
                    
சென்னை, மதுரை, கோவை, திண்டுக்கல் திருநெல்வேலி என்று தமிழ்நாடெங்கும் அப்பாவிப் பொது மக்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்து அங்கு செய்தி கேள்விப் பட்டு ஏமாந்து நிற்கையில்  மக்களுக்கு  மருத்துவர்கள் மீது  என்ன உணர்வு எழும்? கற்றதனாலாய பயனென் கொல்.... 
                 
சென்னை பொது மருத்துவமனை தலைவர் திரு கனகசபை நல்ல முறையில் தெளிவாகவே இது பற்றிக் கூறி இருக்கிறார். உணர்வுகள் நியாயமானவை. ஆனால் வேலையைப் புறக்கணிக்க வேண்டாம் என்று சொல்லியுள்ளார். 
                 
மருத்துவத்துறைக்கு இது சோதனை நேரம். மருத்துவ உதவி தேடி வரும் அப்பாவி பொது மக்களுக்கும் .... 
                    

18 கருத்துகள்:

  1. மிகவும் பொறுப்பான வலையங்கம்.கொலைக்கு கூட கொலை தீர்வாகாது என்று நாகரிக சமுதாயம் ஏற்றுக்கொண்டு நூறாண்டுகள் கடந்துவிட்ட காலத்தில், மருத்துவத்துறையில் காலம் கடந்த சிகிச்சையினால் கூடநோயாளி இறந்து போனால் மருத்துவரை கொடூரமாக கொலை செய்வது எந்த வகையில் நியாயம்.( அதுவும் நோயாளி தரப்பு தாமதம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.)
    விழிப்புணர்வு தவறான வகையில் ஜனங்களிடம் சென்றடைந்திருப்பதாகவே கருதப்படுகிறது.கொலையாளியும் ஏற்கெனவே கொலை குற்றப்பின்னணி உடையவர் என்பதும் ,தொடர்ச்சியாக மருத்துவரை மிரட்டி விட்டு ,நான்கு ரவுடிகளுடன் சென்று கொலைசெயலில் ஈடுபடுகிறார் என்றால் சமூகம் எந்த அவல நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறதென்று அறியலாம்.குற்றவாளிகளுக்கு தண்டனை உறுதி என்கிற நிலை ஏற்படவில்லை என்றால் மீண்டும் காட்டுமிராண்டி சமூகத்தையே சென்றடைவோம் என்பது உறுதி.

    பதிலளிநீக்கு
  2. இதற்கு உண்மையான காரணம்
    மனைவி இறந்ததாக உறுதியாக இருக்காது
    அவர்கள் மருத்துவமனையில்
    மனிதாபிமானமற்ற முறையில்
    நடந்துகொண்டதாக இருக்கும்
    பார்ப்போம்

    பதிலளிநீக்கு
  3. அந்தப் பாட்டால வந்திச்சோ ?
    (தலைப்பைச் சொன்னேன்..)

    பதிலளிநீக்கு
  4. நமது கவலையெல்லாம், இந்த வேலை நிறுத்தத்தால் - எத்தனை அசம்பாவிதம் (மருத்துவமின்றி) நேரப்போகிறதோ?

    பதிலளிநீக்கு
  5. தண்ணீர் வரவில்லையென்றால், பேருந்து வரவில்லையென்றால், இன்ன பிற காரணங்களுக்கு எல்லாம் ‘உடனடி சாலை மறியல்’ செய்யும் மனப்பான்மை, இப்போது இப்படி முன்னேறியிருக்கிறது. குடிபோதைதான் நிதானம் தவறக் காரணம்.

    பதிலளிநீக்கு
  6. அந்த டாக்டரில் என்ன பிழை.எல்லாமே சில சந்தர்ப்பங்கள்தான்.கோவம் எத்தனை விபரீதங்களையும் அழிவுகளையும் தருகிறது !

    பதிலளிநீக்கு
  7. //மருத்துவம் தவறினால் இப்படிக் கொலைகள், அடி உதை கிடைக்கும் என்றால் மருத்துவர்கள் எந்த நம்பிக்கையில் மக்கள் உடலைப் பரிசோதிக்க முன் வருவார்கள்?//

    நியாயமான கேள்வி நண்பரே

    பதிலளிநீக்கு
  8. வாழ்வதே கேள்விக்குறியாகிவிட்டது. அந்த அளவுக்குக்குடிபோதை அனைவரையும் கண்ணை மறைக்கிறது. இது குடிபோதையில் செய்தது தான் எனச் சொல்கின்றனர். :(((((

    எப்படியானாலும் கொலையை நியாயப் படுத்தமுடியாது. :((((

    பதிலளிநீக்கு
  9. மிகமிக நியாயமான விஷயத்தைச் சொன்ன ‌தலையங்கம். கறுப்பு பேட்ஜ் அணிந்து எதிர்ப்பை வெளிப்படுத்தியபடி வேலை செய்வது என்ற நல்ல நாகரீகம் நம்மவர்களுக்கு எக்காலத்திலும் வராது என்பதில்தான் எனக்கு வருத்தம்.

    பதிலளிநீக்கு
  10. எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத குற்றம். அதேநேரம் மருத்துவர்களின் போராட்டம் குறித்து சொல்லியிருப்பதும் மிகச் சரி.

    பதிலளிநீக்கு
  11. நாற்பத்தெட்டு வயதுக்கான அனுபவம் அந்த டாக்டருக்கு இருந்திருக்கும் அல்லவா.
    ஏற்கனவே படங்கள் மூலம் பலவித அபிப்பிராயங்கள் கிளம்பி இருக்கின்றன.
    இருந்தாலும் குடிபோதையில் தன் செயலை நியாயப் படுத்த ஒரு கூட்டம் கிளம்பினால், மருத்துவம் நல்ல மருத்துவம் நீடிக்குமா.
    ஷிஃப்ட் முறைப்படி இந்த மருத்துவர்கள் ஆட்சேபம் தெரிவிக்கலாமே. பத்திரிகை பிரித்து படிக்கவே பயமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  12. ரொம்பவும் பொறுப்பான தலையங்கம். போன உயிர்களை திரும்ப கொண்டு வர முடியாதுதான். ஆனா, ஒட்டு மொத்தமா எல்லா டாக்டர்களும் வேலை நிறுத்தத்துல இறங்கிட்டா மருத்துவ உதவி கிடைக்காம எத்தனை நோயாளிகள் அவதிப்படுவாங்க. அதுவும் அவசர உதவி தேவைப்படற நிலையில் இருப்பவங்க பாடு பரிதாபம்தான்.ஷிப்ட் முறை வேலை நிறுத்தமோ, அல்லது எதிர்ப்பு காட்ட கறுப்பு பேட்ஜ் அணிஞ்சுக்கறதையோ அவங்க ஆலோசிச்சா நல்லது.

    பதிலளிநீக்கு
  13. http://avargal-unmaigal.blogspot.com/2012/01/blog-post_05.html மனிதர்களை கொல்லும் உரிமை எங்களுக்கே வேண்டுமென்று தமிழக டாக்டர்கள் போராட்டமா


    நேரம் கிடைத்தால் எனது பதிவை படியுங்கள்

    பதிலளிநீக்கு
  14. சரியான சமயத்தில் சிறப்பான் பதிவு.

    மருத்துவர்கள் கடமையை முதலில் முடித்துவிட்டு பிறகு அமைதியான முறையில் தங்களுடைய எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்கிற உங்களுடைய கருத்து அருமை.

    பதிலளிநீக்கு
  15. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  16. புத்தாண்டுக்கான சிறப்பு பகுதியா வலையங்கம்? அந்தப் பெண்ணின் கணவர் செய்தது வன்முறைதான். ஆனால் இப்பொழுதெல்லாம் மருத்துவர்கள் மேல் முழு நம்பிக்கை வரா வண்ணம் மருத்துவம் வியாபாரமாக மாறியிருப்பதையும் வன்மையாகக் கண்டிக்க வேண்டும்.
    மருத்துவர்கள் அனைவரும் வேலை நிறுத்தம் செய்ததால்தான் இது செய்தியானது. இல்லாவிட்டால் வழக்கம் போல் அந்த மருத்துவரைக் குறை சொல்லிவிட்டுப் போயிருப்போம் அல்லவா?!

    பதிலளிநீக்கு
  17. இன்றைய செய்திகளில் வாசித்தது:

    மயக்க மருந்தியல் நிபுணரான டாக்டர் சேதுலட்சுமி, மகப்பேறு மருத்துவராகவும், அறுவை சிகிச்சை (சர்ஜன்) நிபுணராகவும் மாறியிருக்கிறார். இதுவும் மருத்துவ விதிமீறல் என்பது குற்றச்சாட்டு.இதுமட்டுமின்றி, "தன்னிடமே பல முறை, வழக்கமான பரிசோதனை செய்து வந்த கர்ப்பிணிக்கு, அறுவை சிகிச்சை செய்ய, பணம் கொண்டு வரும் வரை காத்திருந்தார்' என்பது, கர்ப்பிணி குடும்பத்தாரின் குற்றச்சாட்டு. இந்த இடத்தில், உயிருக்கு முன், பணம் பிரதானமாக இருந்துள்ளது.

    பதிலளிநீக்கு
  18. வணக்கம்....
    தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!