ஓ ஏ யின் கடிதம் # 1:
இதை நான் எங்கு தொடங்கி எங்கு முடிப்பது என்னும் குழப்பத்தில் ஆரம்பிக்கின்றேன். என்னை, 'எது' இந்த சிறைச்சாலைக்குக் கொண்டு வந்தது என்று யோசித்துப் பார்க்கையில் ....
பிங்கியின் மரணத்திற்கு நான் காரணம் என்று சந்தர்ப்ப சாட்சியங்கள் அமைந்துவிட்டதுதான் என் சிறைவாசத்தின் காரணம் என்பது ஒருபுறம் இருக்கட்டும். ஆனால் பிங்கி அருந்திய பானத்தில் விஷம் வந்தது எப்படி என்பது எனக்கும் புரியாத ஒரு புதிர். நான் அருந்தியிருக்கவேண்டிய கோக்க கோலாவை, பிங்கி அருந்தியது ஏன் என்பதும் மற்றொரு ஆச்சரியமான புதிர்.
என் அறையில் கண்டு எடுக்கப்பட்ட மாத்திரை என் மனைவி மாயாவின் கையிலிருந்து நழுவி விழுந்த மாத்திரை. என் மனைவி மாயா தற்கொலை செய்துகொள்ளவில்லை; பிங்கியால் கொலை செய்யப்பட்டாள். மாயாவை, பிங்கி ஏன் கொல்லவேண்டும்?
மாயாவை, வல்லம் சென்றிருந்தபோது, முதன் முறையாக பார்த்த பொழுதே, அவள்தான் என் மனைவி என்று தீர்மானித்தேன். அவளுடைய சம்மதம் பெற்று அவளை இந்தூருக்கு அழைத்து வந்து, திருமணம் முறையாக செய்துகொண்டேன். மாயாவின் அப்பா, கோவிந்தராஜன் அவர்களை, நானும் மாயாவும் எவ்வளவோ அழைத்தும், அவர் எங்களுடன் வந்து இருக்க சம்மதிக்கவில்லை. மாயா என்னுடன் வந்த பொழுது அவருக்கு நான் அளித்த ஐந்து லட்ச ரூபாய் காசோலையைக் கூட தீண்டாத அதிசய மனிதர் அவர்.
என்னை விட, எங்களுக்குக் குழந்தை இல்லையே என்று அதிகம் ஏங்கியவள், என் மனைவி மாயாதான். அவள் குறையைத் தீர்க்க, எங்கிருந்தோ வந்து சேர்ந்த பிங்கியை தத்து எடுத்துக் கொள்வது என்று முடிவு எடுத்தோம். ஆனால், என்னுடைய அப்பாவுக்கு, இந்த யோசனை பிடிக்கவில்லை. சினிமா சம்பந்தப்பட்டவர்கள் யாரும் ஒல்லேவாலா குடும்பத்தில் நுழையக் கூடாது என்று பிடிவாதமாக மறுத்துவிட்டார், அவர்.
அப்பாவின் மறைவுக்குப் பிறகு, பிங்கியை இரண்டாம் தாரமாக மணந்துகொண்டால் என்ன என்று எனக்குத் தோன்றியது. மாயாவின் சம்மதத்துடன், இரண்டாம் திருமணம் செய்துகொள்ளலாம் என்று நம்பினேன். ஆனால், மாயாவுக்கு இதில் துளிக் கூட சம்மதம் இல்லை. 'இரண்டாம் தாரமாக வேறு யாரை வேண்டுமானாலும் மணந்துகொள்ளலாம் - ஆனால், மகளாக மனதில் நினைத்துவிட்ட ஒருத்தியை மணப்பது என்ற நினைப்பு விசித்திரமாக இருக்கின்றது; உங்களின் அந்த நினைப்பே எனக்கு பெரும் துக்கத்தை ஏற்படுத்துகின்றது' என்று சொன்னாள் மாயா.
2006, ஆகஸ்ட் ஒன்றாம் தேதி மாயா, எங்களுக்கு ஒரு வார அவகாசம் கொடுத்துவிட்டு சென்றபோது, தீவிரமாக யோசித்து, நான் மாயா ஏற்றுக் கொள்ளுகின்ற வேறு ஒருத்தியை மணந்துகொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தேன். ஆனால் பிங்கி இதற்கு சம்மதிக்கவில்லை. 'நான் ஆகஸ்ட் எட்டாம் தேதி, மாயா அக்காவிடம் பேசி, அவர் சம்மதத்தை வாங்கிவிடுகின்றேன்' என்று சொன்னாள். நாங்கள் இருவரும் மாயாவை ஆகஸ்ட் எட்டாம் தேதி சென்று பார்த்து, அவளுக்குப் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துவிட்டு, பிங்கி மாயாவின் சம்மதத்தைப் பெற்றவுடன், இருவரும் மணந்துகொள்வது என்று முடிவெடுத்தோம்.
ஆனால், சற்றும் எதிர்பாராத வகையில், அன்று மாயா எங்களைப் பார்க்க வந்துவிட்டாள். அப்பொழுது நடந்த நிகழ்வுகளை, சுருக்கமாகக் கூறினால், (விரிவாகப் படிக்க சுட்டி: பகுதி 11 ) மாயா ஏதோ ஒரு மாத்திரையை எனக்குக் கொடுப்பதில் முனைப்பாக இருந்தாள். அந்த மாத்திரையை அவள், நான் பருகப் போகின்ற கோக்க கோலாவில் போட வரும்பொழுது, கால் தவறி கீழே விழுந்தாள். அவள் கையில் இருந்த மாத்திரை, எங்கோ சென்று விழுந்துவிட்டது. மாயா அதை விரைவாகத் தேடிய பொழுது அவளுக்குக் கிடைக்கவில்லை. வேறு ஒரு மாத்திரை கொண்டு வருவதற்காக, அவள், காலுசிங் அறையை நோக்கி ஓடினாள். சற்று நேரத்தில். பிங்கியும் காலுசிங் அறையை நோக்கி ஓடினாள். சில நிமிடங்கள் கழித்து அவர்கள் யாரும் திரும்ப வராததால், நான் அங்கு சென்றேன். மாயாவை, அவளுக்குப் பின்புறம் நின்றிருந்த பிங்கி, கழுத்தை பிடித்து இறுக்கிக் கொண்டிருந்ததை, பார்த்தேன்.
உடனே, பிங்கியின் பிடியிலிருந்து மாயாவை விடுவிக்க, அவர்கள் அருகில் சென்று, பிங்கியின் கைகளை விலக்கிவிட முயன்றேன். நான் அவள் கைகளை விலக்கிவிட முயற்சிக்கின்றேன் என்று தெரிந்தவுடன், பிங்கி இன்னும் பலமாக மாயாவின் கழுத்தை அழுத்தி, அவளைக் கொன்றுவிட்டாள்.
மாயாவின் கொலையை, பிங்கி மீது இருந்த இரக்கத்தால் மறைத்து, அதைத் தற்கொலையாக உலகுக்குக் காட்டினேன். ஆனாலும் அதன் பின் பிங்கியைப் பார்க்கும் பொழுதெல்லாம், 'மாயாவைக் கொன்றவள்' என்றுதான் தோன்றும். மாயாவின் உடலை வீட்டில் வந்து பார்த்தபோது, காலுசிங் அழுது புரண்டது என் மனதை விட்டு அகலவே இல்லை. 'மாயா மீது, ஒரு வேலைக்காரனுக்கு இருக்கின்ற அன்பு, பாசம் கூட எனக்கு இல்லாமல் போய்விட்டதோ' என்று அடிக்கடி தோன்றுகிறது.
பிங்கியிடம், என்னுடைய மும்பை ஹோட்டல் திட்டம் வெற்றிகரமாக முடிந்தால்தான் திருமணம் என்று சொன்னேன். ஆனால், மும்பை ஹோட்டல் திட்டத்தில் அதிக ஈடுபாடு காட்டாமல் இருந்துவந்தேன். பிங்கியோ அந்த ஹோட்டல் திட்டத்தில் முழு மூச்சாக முனைந்து, அந்தத் திட்டத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டாள். இறந்து போவதற்கு முன்பாக அவள் கூறிய வார்த்தைகள் இன்னும் என் செவிகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றது. "ஓ ஏ - நான் மிகவும் சந்தோஷமாக இருக்கின்றேன். இந்த சந்தோஷத் தருணத்திலேயே என் உயிர் போய்விடாதா என்று கூட ஏங்குகின்றேன். சந்தோஷ சமாச்சாரத்தை, ஃபோனில் கேட்டவுடனேயே, 'ஸ்வீட் எடு, கொண்டாடு' என்று என் மனம் துள்ள ஆரம்பித்துவிட்டது. அதனால், அருகில் இருந்தது ஆரஞ்சு ஜூஸா அல்லது கோக்க கோலாவா என்று கூட நான் பார்க்கவில்லை. கோக்க கோலா என்ன, இனிமேல் நீங்க குடிக்கின்ற எல்லாமே என்னுடையதுதான். இல்லை, இல்லை, இனிமேல் நீங்க குடித்து வைத்த மீதிகளைத்தான் நான் குடிப்பேன். பொன்னுலகம் என்னை அழைக்கின்றது. இனிமேல் ஆயிரம் மாயாக்கள் வந்தாலும், இந்த சொத்துக்களை என்னிடமிருந்து பிரித்துவிட முடியாது...... ..... ஆ அம்மா - இது என்ன வலி? ......."
*********************
இறுதியாக, மாயா எனக்குக் கொடுக்க நினைத்த இந்த மாத்திரை எப்படி சிறையில், என் கைகளுக்கு வந்து சேர்ந்தது என்பது எனக்குத் தெரியாது, தெரிந்துகொள்ளவும் விருப்பமில்லை. இந்த மாத்திரையை இன்று நான் சாப்பிடப் போகும் கோக்க கோலா + ஆஸ்பிரின் பானத்துடன் சேர்த்து சாப்பிட்டு, என்னுடைய மாயா உலகத்திற்குப் போய்ச் சேருகின்றேன்.
வணக்கம் உலகமே. ...
**********************************
ஓ ஏ எழுதிவைத்த உயில்: (கடிதம் 2)
என் சொத்து விவரங்கள் :
------------------
------------------
இவை யாவும், முழுவதுமாக, என்னுடைய மாமனார், கோவிந்தராஜனிடம் ஒப்படைக்கின்றேன். அவருடைய காலத்திற்குப் பிறகு, காலுசிங் மற்றும் அவனுடைய சந்ததியினர் இந்த சொத்துக்களை அடையவேண்டும் என்று இந்த உயில் மூலம் தெரியப்படுத்துகின்றேன். கோவிந்தராஜன் அவர்கள், காலுசிங்கின் திருமணம் தொடங்கி, காலுசிங் வாரிசுகள் படிப்பு வரையிலும், எல்லா விஷயங்களையும் முன்னின்று நடத்தி, அவர்களை, இந்த ஹோட்டல் சாம்ராஜ்யத்தை நிர்வகிக்கின்ற வகையில் தயார் செய்யவேண்டும், தயார் செய்வார் என்று உறுதியாக நம்புகின்றேன்.
இதை சுயமாக சிந்தித்து, சுய நினைவோடு, யாருடைய வற்புறுத்தலும் இல்லாமல் எழுதி கையொப்பம் இடுகின்றேன் என்று உறுதியளிக்கின்றேன்.
அன்புடன்,
ஓ ஏ.
*********************************
முடிவுரை:
1) மாயாவும் ஓ ஏ யும், ஆவியுலகில் மிகவும் சந்தோஷமாக சுற்றிக் கொண்டிருக்கின்றார்கள். கே வி, எ சா மற்றும் கா சோ ஆகியோரின் கனவுகளில் வந்து அவர்கள் நன்றி தெரிவித்து சென்றார்களாம்.
2) பிங்கி - இறக்கும்பொழுது ஆசைப் பட்டபடி, அந்த சொத்துக்களை அடைய - காலுசிங்கின் வாரிசாகப் பிறப்பதற்குக் காத்திருக்கின்றாள்.
*************************************
கா சோ : "சாமி - அன்றைக்கு போஸ்ட் மார்ட்டம் டாக்டரைப் பார்க்கச் சென்றீர்களே, பிங்கி திருமணம் ஆகாதவர் என்று அவர் எப்படி போஸ்ட் மார்ட்டத்தில் கண்டுபிடித்தாராம்?
எ சா: " ரொம்ப சிம்பிள் சோ. போலீஸ் அதிகாரி சொன்ன விவரம்தானாம். இறந்து போனவர் பெயர் விவரங்கள் கொடுக்கும் பொழுது - கணவர் / தகப்பனார் பெயர் : என்பதற்கு நேராக 'இல்லை / தெரியவில்லை, மணமாகாதவர்' என்று குறிப்பிட்டிருந்தாராம். :)))"
***************************************
பொறுமையாகப் படித்த வாசகர்கள் எல்லோருக்கும் என் நன்றி. கதையில் சந்தேகம் எதுவும் இருந்தால், அதைப் பின்னூட்டமாகப் பதியுங்கள். பதில் கூறக் கடமைப் பட்டுள்ளேன். (பதிவாசிரியர்)
நிறைவான முடிவு...
பதிலளிநீக்குநன்றி… வாழ்த்துக்கள்...
மாயாவின் மரணம் பிங்கியால் என்பது தெரிந்தாலும் இந்த முடிவு எதிர்பாரா முடிவு. ஸ்வீட் எடுத்துக் கொண்டாடிடறேன்.
பதிலளிநீக்குஅப்பாடா, ஒரு வழியா முடிஞ்சதேனு. :)))))))
ஹிஹி.. நானும்.
பதிலளிநீக்குதொடர்கதை எழுதி முடிக்கிறது சுலபமில்லே. ஆவியானாலும் சரிதான்.
முயற்சிக்கும் உழைப்புக்கும் பாராட்டா நீங்க ரெண்டு ஸ்வீட் எடுத்துக்குங்க.
கதைதான் முடிந்துவிட்டதே, இப்பவாச்சும் எழுதியவர் யார் என்று சொல்லுங்களேன்!
பதிலளிநீக்குஎன் பார்வையில் ..இடையில் கொஞ்சம் பாதையிலிருந்து விலகியது போல் தோன்றினாலும்... கடைசி பகுதிகள் நச் என முடித்திருக்கின்றீர்கள்...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் பதிவாசிரியரே...
படங்கள் எதுவும் இல்லாமல் வார்த்தையிலேயே..எல்லா உணர்ச்சிகளையும் எழுத்தில் வடித்து இருக்கிறீர்கள்... அதுவும் சிறப்பாக வந்துள்ளது...
முழு நீள நாவல் எழுத முயலுங்கள்..உங்கள் முயற்சிக்கு வெற்றி கிடைக்கட்டும்..
......
இப்போ...
செத்து போன பிங்கியும் மாயாவும்...
ஆவி உலகில் எ.ஒவுக்காக சண்டை போட்டா...
ஆவி..எ.ஒ என்ன செய்வார்..?
இங்கிருந்து தப்பிக்க செத்து போகலாம் .. அங்கிருந்து எப்படி தப்பிக்க முடியும்..?
//இங்கிருந்து தப்பிக்க செத்து போகலாம் .. அங்கிருந்து எப்படி தப்பிக்க முடியும்..?
பதிலளிநீக்குஎன்ன Vinoth Kumar காணமேனு பாத்தேன்.
//செத்து போன பிங்கியும் மாயாவும்...
பதிலளிநீக்குஆவி உலகில் எ.ஒவுக்காக சண்டை போட்டா...
ஆவி..எ.ஒ என்ன செய்வார்..?
இங்கிருந்து தப்பிக்க செத்து போகலாம் .. அங்கிருந்து எப்படி தப்பிக்க முடியும்..?//
பிங்கியின் ஒரே குறிக்கோள், ஓ ஏ யின் சொத்துக்களை அடைவது.
மாயாவின் ஒரே சொத்து ஓ ஏ.
ஓ ஏ, மாயா(வின்) உலகிற்கு வந்து சேர்ந்ததும்,
சொர்கமே தன் சாம்ராஜ்யமாக உருவெடுத்துவிட்ட
ஓர் உணர்வு மாயாவுக்கு.
ஓ ஏ பூவுலகில் என்ன சொத்து இருந்தாலும், மாயா என்ற ஒரு
அன்புள்ளத்திற்கு முன்பு மீதி யாவுமே தூசி என்று எண்ணுகின்றார்.
பிங்கி ஓ ஏ யின் சொத்துக்களை அடைய, காலுசிங்கின் வாரிசாகப்
பிறக்கக் காத்திருக்கின்றார். எல்லோரும் அவரவர்கள் குறிக்கோளை
அடைவதில், மற்றவர்கள் யாருக்கும் எந்த ஆட்சேபணையும் இல்லை.
இங்கு வெறுத்தால் சாகலாம், அங்கு செல்லலாம். அங்கு விருப்பப்பட்டால், மீண்டும் பிறக்கலாம்.
கதை நல்லா வந்திருக்கு. முடிவு பிரமாதம். நிறைவா இருக்கு. முடிவு நிறைவா இருந்தாதான் எனக்கு நிம்மதியா தூக்கம் வரும். :)
பதிலளிநீக்குஆனா மாயவோட அம்மா கட்டியிருந்த பட்டு புடவை மாதிரி ஒண்ணு வாங்கற வரைக்கும் எனக்கு தூக்கம் வராது போங்க! :)
கமெண்ட் போடலையே தவிர கதையை தொடர்ந்து படிச்சேன். அடுத்த தொடரை விரைவில் எதிர்பார்க்கலாமா?!
//கமெண்ட் போடலையே தவிர கதையை தொடர்ந்து படிச்சேன். அடுத்த தொடரை விரைவில் எதிர்பார்க்கலாமா?!//
பதிலளிநீக்குகதையை விடாது படித்த வினோத்குமார், கீதா சாம்பசிவம், திண்டுக்கல் தனபாலன், குரோம்பேட்டை குறும்பன் (இவங்க ரெண்டு பேரும் மெய்யாலுமே கதையைப் படிச்சாங்களா, இல்லையா தெரியாது!), அப்பாதுரை, மீனாக்ஷி ஆகியோருக்கு என் நன்றி. கதையைப் படிச்சவங்க வேறு யாரும் இருந்தா இங்கே கருத்துகளைப் பதிஞ்சுடுங்க. இதைப் புத்தகமாக வெளியிடும்பொழுது, உங்கள் கருத்துகளும் அதில் சேர்க்கப்படும்.