புதன், 15 ஆகஸ்ட், 2012

எப்படியும் முடிச்சுடலாம்!

                     
கணினியில் எழுதும் இடத்தைத் திறந்து 'டைப்ப' ஆரம்பிக்கலாம் என்று நினைக்கும்போதுதான் கதைக்குக் கரு இன்னும் யோசிக்கவில்லையே என்ற எண்ணம் தோன்றியதும், கதை எழுதாமல் எதாவது கட்டுரையாக எழுதி விடலாம் என்ற முடிவுக்கு வந்து, எதைப் பற்றி எழுதுவது என்று அரை மணிநேரத்துக்கும் மேலாக யோசித்தும் அதற்கும் எந்த உருப்படியான பொருளும் அகப்படாததால் கவிதை முயற்சிக்கலாம் என்றும் தோன்றிய எண்ணத்தைச் செயல் படுத்த முடியாமைக்குக் காரணம் நான் எழுதியிருப்பது கவிதைதான் என்று நான் சொல்வேன்தான் என்றாலும் படிப்பவர்கள் அதை வசனமாகத்தான் பார்க்கிறார்கள் என்ற உண்மை மனதில் உடனே நினைவுக்கு வந்து விட்ட பொழுதினில் கவிதை எழுதும் எண்ணமும் உடனடியாக மனதை விட்டு அகல, 
 
                 
'சட்'டெனத் தோன்றிய அலுப்பில் எதையாவது எழுதித்தான் ஆகவேண்டும் என்ற கட்டாயம் இப்போது என்ன வந்தது, இன்னும் கொஞ்சம் 'டைம்' கொடுத்துக் கூட பிறிதொரு நாளில் ஒரு கரு என்று கிடைத்தவுடன் எழுதலாம் என்ற எண்ணம் ஏன் வருகிறது என்றால் வலுக்கட்டாயமாக எதையாவது எழுதித்தான் ஆக வேண்டும்  என்று எழுதினால் எழுதப் படும் விஷயத்தில் இயற்கையான 'ஃப்ளோ' இல்லாது போய், ஒருவித சுவாரஸ்யமும் இல்லாமல் போய் விடும் என்பதால் நல்லதொரு கருப்பொருள் கிடைத்தவுடனேயே எழுதினால், மனம் நினைக்கும் வேகத்துக்கு கைகள் ஈடு கொடுக்க முடியாமல் எழுதியோ, டைப் செய்தோ ஒரு வரியையோ, வாக்கியத்தையோ முடிக்குமுன்னரே அடுத்து எழுத வேண்டியவை மனதில் வரி வரியாக அலைமோத, முதலில் நினைத்தவைகளை எழுத மறந்து போகும் அளவு விஷயம் கிடைப்பதோடு, படிப்பவர்களுக்கும் ஏதோ கொஞ்சம், கொஞ்சமாவதுதான்,  படிப்பதில் சுவாரஸ்யம் கிடைக்கும்  என்கிற உணர்வினால்தான் இத்தனை நாளும் எழுதுவதை ஒத்திப் போட்டுக் கொண்டே வந்து, 
            
மிக நீண்ட இடைவெளி வந்து விட்டதோ என்ற நினைப்பில் படிக்க எடுத்து வைத்திருந்தவைகளைக் கூட எடுத்து ஓரமாக வைத்து விட்டு, மற்ற வேலைகளையும் ஒதுக்கி வைத்து, முறைக்கும் மனைவியையும் லட்சியம் செய்யாது வேகமாக வந்து உட்கார்ந்து கணினித் திரையை முறைத்துக் கொண்டே கையில் குறித்து வைத்திருந்த குறிப்புகளோடு கதை எழுதும் ஆசையில் அல்லது அவஸ்தையில் என்று கூடச் சொல்லலாமோ என்னவோ ஆரம்பித்து விடலாம் என்று நினைத்தால் அந்த 'ஃப்ளோ' இன்னும் கைக்கும் மனதுக்கும் அகப்படாததன் காரணம் நம் மனதில்தான் சரக்கில்லையா அல்லது எழுதி வைத்த குறிப்புகளில் சாரம் இல்லையா, இன்னும் வேறு எதாவது காரணமா என்றும் ஒரு முடிவுக்கும்  வரமுடியாமல் எழுத ஆரம்பிக்கும்போது இதைப் படிப்பவர்கள் மனதில் என்ன தோன்றும், எத்தனை பேர் பொறுமையாக படிப்பார்கள் போன்ற கேள்விகளும் இதற்கு என்ன பதில் சொல்வார்கள் என்ற எண்ணமும் வந்து விடுவதால் எழுதும் விஷயத்தில் ஏதாவது சுவாரஸ்யம் காட்ட/கூட்ட வேண்டிய நிர்ப்பந்தங்கள் வந்து விடுகின்ற சூழ்நிலை இருக்கிறதே, 
               
இது எனக்கு மட்டுமல்ல எழுதும் ஒவ்வொருவருக்கும் இருக்கும் என்று நான் நினைத்துக் கொள்வது என்னையே ஏமாற்றிக் கொள்வதாகுமா இல்லை நிஜமும் அதுதானா என்று மனதில் எழும் கேள்விகளுக்கு விடை தேடிக் கொண்டிருந்தால் எதை எழுதுவது என்று எப்போது முடிவு செய்து எப்போது எழுதி அதை ஒப்பேற்றுவது என்ற எண்ணங்களுக்கு நடுவிலேயே இப்படி எழுதிக் கொண்டு வந்தால் எழுதப்படும் விஷயம் இயற்கை இல்லாமல் செயற்கை ஆகி விடுவதாலும் கூட இதற்கு என்ன வகைப் படங்களை இணைக்க முடியும் என்ற  குழப்பமும், உடனேயே என் மனமே இதற்கு எதாவது படம் இணைக்கத்தான் வேண்டுமா, படம் இல்லாமலேயே பதிவிட்டால் என்ன என்ற கேள்வி எழுப்பும் தைரியத்தால் எழுதத் தொடங்கி எங்கேயாவது ஆரம்பித்து எங்கேயாவது முடித்து விடலாம் என்று அல்ப தைரியத்தில் தொடங்கி விட்ட இந்த வரிகளை ஏதாவது ஓரிடத்தில் நிறுத்தி விடலாம் என்றும், 
                 
நிறுத்தி முற்றுப் புள்ளி வைத்து விட்டு உருப்படியாக ஒரு கதையோ கவிதையோ கட்டுரையோ எழுதி விடுவேன் என்ற நம்பிக்கை எனக்கு நிச்சயம் இருக்கிறது என்று சொல்வதற்குக் கூட தைரியம் வராததற்குக் காரணம் நான் சொல்லித்தான் உங்களுக்குத் தெரிய வேண்டும் என்பதில்லை என்பதும், இதைப் படிக்கும் உங்களுக்கு இந்நேரம் தெரிந்திருக்கும் என்பது எனக்குப் புரிகின்ற காரணத்தினால்தான் இதுவரை உருப்படியாய் எதுவும் எழுதாத நான் இந்த முறை மட்டும் அபபடி எப்படி எழுதி விடுவேன் என்ற எண்ணத்தோடேயே கணினியைத் திறந்து எழுதுமிடத்தை எடுத்து...  
                                                                                                   

                                                                                                                                        ( Go to Top) ....   
   
ஓய் பதிவாசிரியரே! இதைவிட, பிரதமரின் சுதந்திரதின உரை சுலபமாகப் புரியும் போல இருக்கே! 
           

23 கருத்துகள்:

 1. இதுவும் நல்லாத்தான் இருக்கு போங்க.

  பதிலளிநீக்கு
 2. ஆஹா... என்ன எழுதறதுன்னு யோசிச்சதே ஒரு பதிவா! :) இப்படி ஒரு பதிவு எழுதறதுக்கும் திறமை வேணும்தான்.
  படிக்க சுவரசியமாவே இருந்துது.

  இளையராஜாவோட ஒரு பாட்டு ஞாபகம் வரது. 'என்ன பாட்டு பாட, என்ன தாளம் போட'.

  பதிலளிநீக்கு
 3. "எங்கள் ப்ளாக்”ங்கிற பேருக்குப் பொருத்தமா, வாசகர்களாகிய எங்களின் மனவோட்டத்தையும் பகிர்ந்தது மட்டுமல்லாமல், அதையே வித்தியாசமாக ஒரு பதிவாகவும் ‘தேத்தி’, இப்படியும் ஒரு பதிவெழுதலாமென வாசக நேயர்களுக்கு ஒரு பாடமும் நடத்தி, இதுக்குள்ளேயே ஒரு வித்தியாச முயற்சியும் செய்து, அதையே இப்பதிவுக்கான புதிர்க் கேள்வியாகவும் ஆக்கி, அதே சமயம் பின்னூட்டங்களையும் அள்ள வழிவகுத்துக் கொண்டு விட்டீர்கள், சபாஷ்!!

  பதிலளிநீக்கு
 4. என்ன எழுதலாம்ன்னு யோசிச்சதே ஒரு பதிவாகிப்போச்சே.நல்லாத்தானே இருக்கு !

  பதிலளிநீக்கு
 5. ஆயிரத்தெட்டு பாட்டு தெரியும். ஆனா..... யாராவது பாடுன்னு சொல்லிட்டா...... எல்லாம் அம்பேல்.

  அதேதான் எழுத்தும். பொழுதன்னிக்கும் மனசுலே ஓடிக்கிட்டே இருக்கும்.. பிச்சுப்பிடுங்கும்.

  தட்டச்ச உக்கார்ந்தால் எல்லாம் ஓடிப் போச்:(

  பதிலளிநீக்கு
 6. வல்லவனின் கையில் புல்லும் ஆயுதம்
  ஏதுமில்லாததைக் கூட அருமையான
  பதிவாக்கிவிடுதல் கூட வல்லமைதான்
  ரசித்துப் படித்தேன்.வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 7. ஆஹா... இப்படி கூட இருக்கா...

  ஹா.. ஹா.. நன்றிங்க..

  வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 8. ஆம், மனதின் ஓட்டத்தை எழுத்தில் வடித்த விதத்தில் எங்கேயோ போய் விட்டீர்கள்:)! ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 9. அசத்தல் ஸ்ரீராம்.செய்வன திருந்தச் செய். அதை அழகாகச் செய்துவிட்டீர்கள். நான் கரு' பற்றி எல்லாம் யோசிப்பதில்லை. மனசில் தோன்றியது விரல் வழி தளத்தில் ஏறிவிடுகிறது. இப்பொழுது நீங்கள் செய்தது போல.:)

  பதிலளிநீக்கு
 10. முற்றுப்புள்ளியற்ற பதிவு. சபாஷ்!

  பதிலளிநீக்கு
 11. வை.கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களிடம் விருது பெற்றதற்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
 12. ஆஹா, மாயச்சுழலில் சிக்குண்டு வேதனைப் படும் எனக்கு ஒரு துணை கிடைத்ததே!

  பதிலளிநீக்கு
 13. / நிஜமும் அதுதானா என்று மனதில் எழும் கேள்விகளுக்கு விடை தேடிக் கொண்டிருந்தால் // ஹா ஹா ஹா ரசித்துப் படித்தேன் ஸ்ரீ ராம் சார்... ஒவ்வொரு வரிக்கும் கமென்ட் போடலாம் அவ்வளவு அருமை..... என்ன எழுதலாம் என்று நினைத்ததையே அழகாக எழுதி உளீர்கள் சிறுமை சார்......

  பதிலளிநீக்கு
 14. ஶ்ரீராம் சாரைத் தான் சிறுமை சாராக்கிட்டார்.

  அது சரி, ஸ்ரீராம் எப்போ அதிமுகவில் சேர்ந்தார்? எனக்குத் தெரியவே தெரியாதே? எம்ஜிஆரின் தீவிர ரசிகர் போலிருக்கு! :P :P:P:P

  பதிலளிநீக்கு
 15. // ஸ்ரீராம் எப்போ அதிமுகவில் சேர்ந்தார்? எனக்குத் தெரியவே தெரியாதே? எம்ஜிஆரின் தீவிர ரசிகர் போலிருக்கு!//


  அப்போ துரை சார் கூட அ தி மு க தான் !!

  பதிலளிநீக்கு
 16. ஆஹா! எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க! சூதானமாத்தான் நடந்துக்க வேண்டியிருயிக்கு!

  இன்று என் தளத்தில்
  அஞ்சு ரூபாயில் 180 கிமீ செல்லும் ஸ்கூட்டர்
  http://thalirssb.blogspot.in/2012/08/180.html
  பொரியரிசி கல்யாணம் ! பாப்பா மலர்!
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_18.html

  பதிலளிநீக்கு
 17. எங்கள் ப்ளாக்19 ஆகஸ்ட், 2012 அன்று 6:34 AM

  நன்றி குமார்,
  நன்றி மீனாக்ஷி,
  நன்றி ஹுஸைனம்மா,
  நன்றி ஹேமா,
  நன்றி துளசி மேடம்,
  நன்றி ரமணி சார்,
  நன்றி தனபாலன்,
  நன்றி ராமலக்ஷ்மி,
  நன்றி மோகன் குமார்,
  நன்றி வல்லிம்மா,
  நன்றி HVL,
  நன்றி இராஜராஜேஸ்வரி மேடம்,
  நன்றி கந்தசாமி சார்,
  நன்றி ஸாதிகா,
  நன்றி சீனு,
  நன்றி கீதா மேடம்,
  நன்றி பாஸ்கரன்,
  நன்றி சுரேஷ்,
  நன்றி அப்பா ஜி.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!