Wednesday, October 8, 2014

கடவுள் அனுப்பிய மனிதர்.                                                      Jadav Payeng, Courtesy: Wikipedia


கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்....   இந்த வரிகள் நினைவிருக்கிறதா? காதலிக்கத்தான் கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டுமா என்ன?

ஒரு மனிதனுக்கு எந்த அளவு கருணை உள்ளம் இருக்கும்?  எந்த அளவு தான் நினைத்த காரியத்தை முடிப்பதில் பொறுமை இருக்கும்?  தான் நினைத்த காரியத்தை முடிக்க ஒருவர் எத்தனை காலம் பாடுபடுவார்?  

ஒரு மாதம்? ஆறு மாதங்கள்? ஒரு வருடம்? ஐந்து வருடங்கள்? 

                                                      

பயன் கருதிச் செய்யும் காரியங்களுக்குத்தான் இவைகள் எல்லாம் தேவை.


                                                        

நான் சொல்லப் போகும் மனிதர் கால நிர்ணயம் எதுவும் செய்து கொள்ளவில்லை. தோல்விகளைக் கண்டு துவளவில்லை. உண்மையில், என்னென்ன இடர்பாடுகள் வருமென்று முன்பே கணித்திருக்க வேண்டும். கவலைப்படாதிருக்க உறுதி பூண்டிருக்க வேண்டும்.

ஜாதவ் மோலை பாயெங். (Jadav “Molai” Payeng )

                                       Jadav Payeng Walking through the Forest he Created. Image Courtesy: paperblog.com

1979. பிரம்மபுத்த்ரா நதிக்கரையில் மணல்வெளியில் எண்ணிறந்த ஊர்வன வகை உயிரினங்கள் வாழ வகையின்றி செத்து கிடப்பதைப் பார்த்தபோது இதயம் வெடித்தது 16 வயது ஜாதவுக்கு.

                                     

கடவுள்தான் அவரை அங்கு அனுப்பி இருக்க வேண்டும். இன்னும் சொல்லப் போனால் கடவுள் அவரை இந்தப் பணிக்காகவே படைத்திருக்க வேண்டும். 
                                        
                                                     

தம் வசிப்பிடத்தில் பாம்பையோ வேறு உயிரினங்களைக் கண்டாலோ அதைக் கொல்ல வேண்டும் என்று துடிக்கும் மனிதர்கள்தான் அதிகம்.  மனிதன் மட்டுமே வாழப் பிறந்தவன் என்று நினைப்பவர்கள் அதிகம். 

                                             

இந்தக் காட்சியை ஜாதவ் தவிர வேறு யாரேனும் பார்த்திருந்தால் தாண்டிச் சென்றிருக்கக் கூடும். அதிகபட்சம் ஹிந்து லெட்டர்ஸ் டு தி எடிட்டருக்கு ஒரு கடிதம் தட்டியிருக்கக் கூடும்.


                                                   

ஆனால் ஜாதவ் உயிரிழக்கும் அந்த உயிரினங்களின் விதியையும், துன்பத்தையும் கண்டு பலமணிநேரம் கதறி அழுதாராம்.

இந்த மணல் வெளியை இவ்வகை உயிரினங்கள் வாழும் சூழலாக மாற்ற மரங்கள், செடிகள் வளர்க்கலாம் என்று தோன்றி இருக்கிறது.  வனத்துறையை அணுகி இருக்கிறார். வனத்துறை என்ன சொல்லும்? உடனே 'இதோ வந்தேன்' என்று மனுவேட்டியும் கையுமாகப் புறப்பட்டு வந்து விடுமா என்ன? 

                                         

'அங்கெல்லாம் செடி கொடிகள் வளராது' என்று சொல்லி விட, அசராத ஜாதவ் தனி மனிதராய் களம் இறங்கினார். 

30 வருடங்கள். 

                                      
 
கண் துஞ்சாது, மனம் தளராது கருணை மனத்துடன் சேவை ஒன்றே குறியாக முழு மூச்சாகக் களம் இறங்கினார். மரங்கள் நட்டார். சுற்றுச்சூழல் தேவைக்காக எறும்புகளை அங்கு இறக்கினார். 

                                      

2008 ஆம் வருடம் வேறு ஏதோ வேலையாக அந்தப் பக்கம் வந்த வனத்துறை கண்டது அழகிய முழுமையான ஒரு காடு.  பாம்பு, முதலை, பல்லி, ஓணான் போன்றவைகளுக்கு மட்டுமல்ல புலி, யானை, காண்டாமிருகம், மான்கள், பறவைகள் என்று சகல ஜீவராசிகளும் வசிக்கும் அழகிய காடு. 

                                   

இன்று அவர் பெயாராலேயே அந்தக் காடு அழைக்கப்படுகிறது. அதைப் பற்றியெல்லாம் அவருக்குப் பெருமையுமில்லை, கவலையுமில்லை. 

                                        


6 comments:

kg gouthaman said...

அவன்தான் மனிதன்

Bagawanjee KA said...

வித்தியாசமான மனிதர் ,அவரின் சேவை போற்றத்தக்கது !

ராமலக்ஷ்மி said...

தன்னலமற்ற மனிதர். மகத்தான சேவை.

கரந்தை ஜெயக்குமார் said...

ஜாதவ் போற்றப்பட வேண்டியவர்
நினைக்கவே வியப்பாக இருக்கிறது
இப்படியும் ஒரு மனிதரா
போற்றப்படவேண்டியவர் மட்டுமல்ல, நாம் எல்லாம் இரு கரம் கூப்பி வணங்கத் தக்கவர்.
நன்றி நண்பரே இத்தகு மனிதரை அறிமுகம் செய்து வைத்தமைக்கு

Geetha Sambasivam said...

போற்றப்பட வேண்டிய மனிதர்

Thulasidharan V Thillaiakathu said...

உயர்ந்த மனிதர்! அபாரமான சாதனை. மணலைக் கண்டால் நம்மூர் மக்களுக்கு அரித்துவிடும்!!! அதை லாரி லாரியாகக் கொள்ளை அடிக்க!அப்படித்தானே நமது தென்னக ஆறுகள் வற்றி மணற்படுகை ஆகிவருகின்றன! எப்போதாவது அரிதாய் வெள்ளம் வந்தால் ஊருக்குள் வருவதும் இதனால்தான்!

அப்படிப்பட்ட மக்களுக்கு இடையில் இப்படிப்பட்ட மாமனிதர்!!!! கண்டிப்பாக அங்கு வரும் விலங்குகல் எல்லாம், ஏன் எறும்புகள் கூட இவரது நண்பர்கள் ஆகியிருக்குமோ?!! சுயநலவாதியான மனிதர்களுக்கு இடையில் இப்படிப்பட்ட ஒருமனிதர்!! எத்தனை பாராட்டினாலும், போற்றினாலும் தகும்!

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!