திங்கள், 13 அக்டோபர், 2014

'திங்க'க் கிழமை 141013 : பார்பெக் அனுபவம்!

           
இது நடந்து, ஐந்தாறு வருடங்கள் ஆகியிருக்கும். 
                
(அவர்களுடைய) திருமண நாளைக் கொண்டாட, என்னுடைய பையனுக்கும், மருமகளுக்கும் புதுமையான ஓர் ஐடியா தோன்றியது. இந்த ஊரில் பார்பெக் நேஷன் என்று ஒரு ஹோட்டல் (ஹோட்டல் என்று சொல்லலாமா கூடாதா என்று தெரியவில்லை. நவீன யுகத்தில் வேறு ஏதாவது பெயர் இருக்கலாம்! எனக்குத் தெரிந்து காபி கிளப் என்றால் சிறிய உணவகம்; ஹோட்டல் என்றால் பெரிய உணவகம் - அவ்வளவுதான்!) இருக்கு அங்கே போய் சாப்பிடலாம் என்றார்கள். 
               
'அங்கே என்ன ஸ்பெஷல்?' என்று கேட்டேன். 
               
'அங்கே நமக்காக ஒரு அடுப்பு, பாத்திரம், பண்டம் எல்லாம் தருவார்கள், நமக்கு வேண்டியதை நாமே செய்து சாப்பிட்டுக்கொள்ளலாம்' என்றார்கள். 
                
"அட! இது புதுசா இருக்கே! நான் இப்போ ப்ளாக் எழுத ஆரம்பித்திருக்கின்றேன், இந்த அனுபவங்கள் எனக்கு உதவும்" என்றேன். 
                
"சரி. அப்போ கிளம்பு. ஆன் லைனில் நாலு சீட் ரிசர்வ் செய்துள்ளேன்" என்றான் பையன். 
             
"இரு, இரு இதோ வரேன்" என்று சொல்லி மஞ்சள் பை, கட்டைப் பை எல்லாம் எடுத்துக்கொண்டு கிளம்பினேன். 
    
"அப்பா! பை எல்லாம் எதுக்கு?" 
     
"நீதானே சொன்னே - நமக்கு வேண்டியது எல்லாம் நாமே செய்து சாப்பிடலாம் என்று? இந்தப் பை காய்கறி வாங்க, இது குமுட்டி அடுப்புக்கு கரி வாங்க!"
               
"லூஸாப்பா நீ? எல்லாம் அவங்களே வாங்கி வெச்சிருப்பாங்க. நாம போன உடனே அவங்க அடுப்புப் பத்த வெச்சு, அப்புறம் நாம் என்ன ஆர்டர் செய்கின்றோமோ அதை எல்லாம் கொண்டுவந்து கொடுப்பாங்க, நாம் நம்முடைய பதத்திற்கு சமைத்துக்கொள்ளலாம்." 
      
"அப்போ அடுப்பை ஊதுவதற்கு ஊதுகுழாய் கூட வேண்டாமா?" 
     
"அப்பா .... " என்று கூறி, பையன் பல்லைக் கடித்தவுடன் மறுபேச்சு பேசாமல் கிளம்பினேன். 
                  
சந்தோஷமாக காரில் சென்று இறங்க முயன்றால், அந்த மதிய வேளையில் ஹோட்டலைச் சுற்றி ஏகப்பட்ட கார்கள். பக்கத்துத் தெருவில் கொண்டுபோய் காரை நிறுத்திவிட்டு வந்தான், பையன். 
           
பையன், மருமகள், பேரன், நான் நால்வரும் ஹோட்டலில் நுழைந்தோம். 
                
எங்க ஊருல எல்லாம், ஹோட்டலில் நான் என்னுடைய தந்தையோடு நுழைந்தால், கல்லாவில் இருப்பவர், அகமும் முகமும் மலர, "வாங்கோ வாங்கோ " என்று அழைத்து, சர்வரிடம், "டேய்! அண்ணாவைக் கவனி!" என்று கட்டளை இடுவார். 
              
 
    

இங்கே அதெல்லாம் ஒன்றும் இல்லை. கம்பியூட்டர் முன்பாக அமர்ந்திருந்த பெண்மணியிடம் எங்களுடைய ரிசர்வேஷன் விவரங்களைக் காட்டியதும் அவர், ஒருவரை அழைத்து, எங்களைக் காட்டி, D1, D2, D3, D4 என்றார். 
                    
அந்த மற்றவர் எங்களை உள்ளே அழைத்துச் சென்று, ஒரு மேஜை + சுற்றிலும் நான்கு இருக்கைகள் கொண்ட அமைப்பைக் காட்டினார். அந்த மேஜை அமைப்பினுள் மூன்று கரியடுப்புகள் அமைந்திருந்தன. ஒருவர் வந்து இரண்டு கரியடுப்புகளைப் பற்றவைத்துச் சென்றார். அந்த அடுப்புகளின் தணலை கூட்ட, குறைக்க, பக்கத்தில் ஏதேதோ சுவிட்சுகள் இருந்தன. 
               
ஒருவர் ஒரு தட்டில் ஆப்பிள், கொய்யா, பைனாப்பிள் மற்றும் பெயர் தெரியாத சில பழங்களைக் கொண்டுவந்து வைத்தார். பக்கத்திலேயே பட்டாக்கத்தி ஒன்று. 
                
நான் கத்தியைக் கையில் எடுக்க முயன்ற போது ஒருவர் ஓடிவந்து, எல்லாப் பழங்களையும் ரவுண்டு ரவுண்டாக நறுக்கி, தட்டில் போட்டார்.  
               
சரி, இப்பவாவது அதை சாப்பிடலாம் என்று நறுக்கப்பட்ட பழத் துண்டு ஒன்றைக் கையில் எடுக்கப் போனேன். 
                 
இன்னொருவர் ஓடிவந்து, அந்தப் பழத்துண்டுகளை ஒரு கம்பியில் கோர்த்தார். அவற்றின் மீது ஒரு பாட்டிலிலிருந்து ஒரு திரவத்தை ஒரு பிரஷ்ஷால் தடவினார். அந்தக் கம்பிக் கோர்ப்பு அலங்காரத்தை மேஜை நடுவில் எரிந்து கொண்டிருந்த அடுப்பில் மாட்டிவிட்டுப் போய்விட்டார். 
                      
    

எல்லா பழங்களும் தீயில் கருகிப்போய்விடுமோ என்று அஞ்சுகின்ற நேரத்தில் மாட்டியவரே வந்து அவற்றை மீட்டுக் கொடுத்தார். கையில் தொட்டால் சூடு, வாயில் போட்டால் சூடு, நாக்கில் சுட்ட வடு, எச்சில் எல்லாம் சூப்பர் ஹீட்டட் ஸ்டீம் ஆகி, சுவையரும்புகள் கருகி, வாயில் போட்ட எல்லா பழங்களும் ஒரே சுவையில் இருந்தன. 
              
அங்கே எதையும் பச்சையாக சாப்பிட விடமாட்டார்கள். எல்லாவற்றையும் தீயில் சுட்டுச் சாப்பிடவேண்டும். 
               
நாக்கு செத்துப் போயிடுச்சு, வேறு உணவு வகைகள் இருந்தால் அவற்றை வயிற்றினுள் இட்டு சமாதி கட்டலாம் என்று பார்க்கும்பொழுது, ஒருவர் வந்து சமைக்கப்பட்ட உணவு வகைகள் அதோ இருக்கின்றன எடுத்துப் போட்டுக்கிட்டுச் சாப்பிடுங்க என்றார். 
                   
    

ஓடோடிப் போய், ஒரு தட்டு, ஒரு பெரிய ஸ்பூன், ஒரு சின்ன ஸ்பூன், முள் கரண்டி எல்லாம் எடுத்துக்கொண்டு, சுற்றிலும் உள்ள அலமாரித் தட்டுகளில் என்னவெல்லாம் இருக்கின்றன என்று நோட்டமிட்டேன். 
              
பாதாம் அல்வா போல ஒன்று சுடச் சுட இருந்தது. அதை நாலு கரண்டி அள்ளிப் போட்டுக்கொண்டு தட்டு நிறைய எடுத்து வந்து, சாப்பிட்டு முடித்தேன். 
              
மீண்டும் அங்கே போய்ப் பார்க்கும் பொழுது, அந்தப் பாத்திரத்தைக் காணவில்லை. பழத்தைக் கம்பியில் கோர்த்தவர் அங்கே நின்றுகொண்டு, என்னைப் பார்த்துப் புன்னகை செய்தார். 
               
    

இதற்கெல்லாம் அசந்துவிடுவேனா! அடுத்த டார்கெட் - தயிர் சாதம். ஆனால் பாருங்க - அதுதான் அங்கே இல்லை. ரொம்பத் தேடி, பிறகு ரைஸ் ஐந்தாறு கரண்டி, இரண்டு மண் கலயத்தில் சீல் செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்த தயிர் என்று அள்ளிக்கொண்டு வந்துவிட்டேன். ஊறுகாய் ஒரு கரண்டி, தயிர் சாதக் குவியல் இவற்றை சம்ஹாரம் செய்து வெற்றிக் களிப்புடன் வெளியே வந்தேன். 
               
இந்தக் கூத்துகளுக்கு எல்லாம் என்ன செலவு என்று பையனிடம் கேட்டேன். பெரியவர்கள் என்றால் ஒருவருக்கு ஐநூறு ரூபாய் என்றும் குழந்தைகள் என்றால் ஒருவருக்கு நானூறு ரூபாய் என்றும் சொன்னான். இது அந்தக் காலத்தில். இப்போ இன்னும் அதிகம் இருக்கும்! 
            
ஒருவேளை பார்பேரிக் நேஷன் என்ற பெயர் இன்னும் பொருத்தமாக இருக்குமோ? 
                 

32 கருத்துகள்:

 1. ஹாஹாஹா, அருமையான "திங்க" கிழமை. காலங்கார்த்தாலே சிரிக்க வைச்சதுக்கு நன்னி ஹை!

  பதிலளிநீக்கு
 2. இப்படியான அடுப்பு, துடுப்பு ஏதும் இல்லாமலேயே வெளிநாடுகளில் நீங்க சொன்ன முறையில் திரு திரு என விழித்தவண்ணம் சாப்பிடும்போது திணறியது உண்டு. ஒரு தரம் அதைப் பார்த்த பையர் அதுக்குப் பின்னர் இந்தியன் ரெஸ்ட்ரான்ட் தவிர வேறெங்கும் கூட்டிச் செல்வதில்லை. அப்பாடானு இருக்கும். வீட்டிலே ரசம் சாதமும், சுட்ட அப்பளத்தில் நெய் விட்டுச் சாப்பிடும் சுகானுபவமும் இதிலெல்லாம் வருமா என்ன? ::))))))))

  பதிலளிநீக்கு
 3. அது சரி, மறந்துட்டேனே, கடைசியிலே எதுவுமே நீங்க சமைக்கலை போலிருக்கே! அப்புறமா இன்னொண்ணும் கேட்கணும்! ஏன் உங்க மனைவியை விட்டுட்டுப்போனீங்க?

  நாராயணா, நாராயணா!

  பதிலளிநீக்கு
 4. சுவையான அனுபவம் தான்! :)

  இவ்விடங்களில் பல விஷயங்கள் நமக்குப் புரிவதில்லை! சில உணவு வகைகளை எப்படிச் சாப்பிடுவது என்று தெரியாமல் விழி பிதுங்கிய அனுபவமுண்டு!

  பதிலளிநீக்கு
 5. பார்பேரிக் நேஷன்-
  முறைப்பை எல்லாம் லட்சியம் செய்யவேண்டாம்.

  பதிலளிநீக்கு
 6. வணக்கம்

  சுவையான அனுபவ பகிர்வுநன்றாக உள்ளது..

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 7. வணக்கம்

  சுவையான அனுபவ பகிர்வுநன்றாக உள்ளது..

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 8. //அது சரி, மறந்துட்டேனே, கடைசியிலே எதுவுமே நீங்க சமைக்கலை போலிருக்கே! அப்புறமா இன்னொண்ணும் கேட்கணும்! ஏன் உங்க மனைவியை விட்டுட்டுப்போனீங்க?
  //
  அவங்க வீட்டுலேயே சக்கரவள்ளிக் கிழங்கு சுட்டு சாப்பிட்டுக்கிறேன்னு சொல்லிட்டாங்க!

  பதிலளிநீக்கு
 9. அநியாயமா இருக்கே! நீங்க ஐநூறு ரூபாய்க்குத் தயிர்சாதம், அவங்க வெறும் ஐந்தே ரூபாய் பெறுமான சர்க்கரை வள்ளிக்கிழங்கோடு திருப்தி அடையணுமா? மிச்சம் 495 ரூபாயை அவங்க கிட்டே கொடுத்திருக்கக் கூடாதோ! ஒரு மதுரை காட்டன் புடைவைக்கு ஆச்சு! :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குடும்பத்துல குழப்பம் ஏற்படுத்தாமல் விடமாட்டீங்களா !

   நீக்கு
 10. வித்தியாசமான அனுபவத்தை ஹாஸ்யமாக பகிர்ந்தவிதம் சிறப்பு! நன்றி!

  பதிலளிநீக்கு
 11. //குடும்பத்துல குழப்பம் ஏற்படுத்தாமல் விடமாட்டீங்களா !//
  அது எப்பூடி? வாய்ப்புக் கிடைக்கிறச்சே நழுவ விடுவோமா என்ன? நாராயணா, நாராயணா!

  பதிலளிநீக்கு
 12. கேஜிஜியின் குறும்பு டைட்டிலை பார்த்தவுடன் நேரே கிளம்பி இங்கே வந்துவிட்டேன்! சிரிப்பு ரயட் போங்க நாட்டாமை! அசத்தல் போஸ்ட்! ஆல்ஸோ, பார்ப்க்யூ நேஷனைப்போய் ஹோட்டல் சொன்னதுக்கே விழுந்து விழுந்து சிரிச்சேன். கட்டைப்பை, குமுட்டி அடுப்புக்கரி இப்படி வியாஸம் பட்டாசுச்சரம்! ஆஹா! என்ன ஒரு ரசனை! பழத்தை நறுக்கப் போனாராம்.. திங்கப் போனாராம்.. கடைசியில் வழக்கம் போல மோர்சாதம் சாப்பிட்டு வந்திருக்கார்! கஷ்டங்கஷ்டம் சாமியோவ்! உங்களையெல்லாம்... சரி வுடுங்க!
  அந்த மஞ்சள் திரவம் என்னன்னு கடைசிவரைக்கும் சொல்லவேயில்லையே? ;-) ;-) என் ஃபேஸ்புக் சுவற்றில் இதை பதிவிடுகிறேன்.. செம்ம ரகள பாஸு!

  பதிலளிநீக்கு
 13. கேஜிஜியின் குறும்பு டைட்டிலை பார்த்தவுடன் நேரே கிளம்பி இங்கே வந்துவிட்டேன்! சிரிப்பு ரயட் போங்க நாட்டாமை! அசத்தல் போஸ்ட்! ஆல்ஸோ, பார்ப்க்யூ நேஷனைப்போய் ஹோட்டல் சொன்னதுக்கே விழுந்து விழுந்து சிரிச்சேன். கட்டைப்பை, குமுட்டி அடுப்புக்கரி இப்படி வியாஸம் பட்டாசுச்சரம்! ஆஹா! என்ன ஒரு ரசனை! பழத்தை நறுக்கப் போனாராம்.. திங்கப் போனாராம்.. கடைசியில் வழக்கம் போல மோர்சாதம் சாப்பிட்டு வந்திருக்கார்! கஷ்டங்கஷ்டம் சாமியோவ்! உங்களையெல்லாம்... சரி வுடுங்க!
  அந்த மஞ்சள் திரவம் என்னன்னு கடைசிவரைக்கும் சொல்லவேயில்லையே? ;-) ;-) என் ஃபேஸ்புக் சுவற்றில் இதை பதிவிடுகிறேன்.. செம்ம ரகள பாஸு!

  பதிலளிநீக்கு
 14. //அந்த மஞ்சள் திரவம் என்னன்னு கடைசிவரைக்கும் சொல்லவேயில்லையே? //

  எந்த மஞ்சள் திரவம் ?

  பதிலளிநீக்கு
 15. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 16. பார்ப்க்யூவில்(அமெரிக்கா கரி அடுப்பில்) கலர் கலர் குடைமிளகாய்களை இப்படி கம்பியில் கோர்த்து சுட்டு தந்தார்கள் மகனும், மருமகளும். சோளத்தை சுட்டு தந்தார்கள் மிக நன்றாக இருந்தது.

  நீங்கள் பெரிய ஓட்டலில் இப்படி சாப்பிட்ட அனுபவங்களை அழகாய் நகைச்சுவையாக கூறி இருக்கிறீர்கள்.

  பதிலளிநீக்கு
 17. வித்தியாசமான அனுபவம்தான்:)! சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

  பதிலளிநீக்கு
 18. நல்ல பொருத்தம் 'பார்பேரிக் நேஷன்'தான் ...இது எந்த ஊர் அனுபவம் ?எதுக்கு கேட்டேன்னா ,அந்தப் பக்கம் தலை வச்சுகூட படுக்காம இருக்கத்தான் )

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பகவான்ஜீ! என்னைத் தவிர மற்ற மூவரும் உணவை ரசித்தனர்.

   நீக்கு
 19. "இரு, இரு இதோ வரேன்" என்று சொல்லி மஞ்சள் பை, கட்டைப் பை எல்லாம் எடுத்துக்கொண்டு கிளம்பினேன்.

  "அப்பா! பை எல்லாம் எதுக்கு?"

  "நீதானே சொன்னே - நமக்கு வேண்டியது எல்லாம் நாமே செய்து சாப்பிடலாம் என்று? இந்தப் பை காய்கறி வாங்க, இது குமுட்டி அடுப்புக்கு கரி வாங்க!"

  "லூஸாப்பா நீ? எல்லாம் அவங்களே வாங்கி வெச்சிருப்பாங்க. நாம போன உடனே அவங்க அடுப்புப் பத்த வெச்சு, அப்புறம் நாம் என்ன ஆர்டர் செய்கின்றோமோ அதை எல்லாம் கொண்டுவந்து கொடுப்பாங்க, நாம் நம்முடைய பதத்திற்கு சமைத்துக்கொள்ளலாம்."

  "அப்போ அடுப்பை ஊதுவதற்கு ஊதுகுழாய் கூட வேண்டாமா?"

  "அப்பா .... " என்று கூறி, பையன் பல்லைக் கடித்தவுடன் மறுபேச்சு பேசாமல் கிளம்பினேன்.//

  ஹாஹஹஹாஹ்...மிகவும் ரசித்தோம்! மஞ்சப் பை.....

  ரொம்ம்ம்ம்ம்ம்ப ரசித்தோம் பதிவை!!!!

  பதிலளிநீக்கு
 20. அப்போ? என்னாச்சு நீங்க சமைக்கவே இல்லையே! எல்லாம் அவங்களே கொடுத்துட்டாங்க?

  இந்த பார்பெக் - அடுப்பு இப்போது கடைகளில் விற்கின்றார்கள். நமக்கு அதுவும் தென்னகத்தார்களுக்கு, வெஜிட்டேரியன் உணவுக்காரர்களுக்கு உதவுமா என்பது மிகப் பெரிய சந்தேகம் தான். இது வட இந்திய உணவுகள் சில, மாமிச உணவுகளுக்குப் பொருந்தலாம்......

  ம்ம்ம்ம் கடைசியாக தயிர் சாதம் தான் வாழ்வு கொடுக்கும்...அதுவும் இல்லைன்னா (பல இடங்களில் அப்படித்தான்) போயே போச்சு......-கீதா

  பதிலளிநீக்கு

 21. வித்தியாசமான அனுபவம் சொல்லிச் சென்றவிதம் ரசிக்க வைத்தது.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!