புதன், 25 நவம்பர், 2015

மன்னர் சரபோஜியின் நீர் மேலாண்மை - இன்றையத் தேவை


இன்றைய காலத்தை நாம் பல்வேறு துறைகளிலும் முன்னேறிய துறையாக நினைக்கிறோம்.  ஆனால் அன்று கரிகாலன் கட்டிய கல்லணைக்கு ஈடாக இன்று நம்மால் ஒரு அணையைக் கட்ட முடியவில்லை.  ஆறுகளில் மணல் அள்ளி, கருவேலமரம் வளர்த்து, வாய்க்கால்களில் சாலை அமைத்து, ஏரிகளில் கட்டிடம் கட்டி,  நாம் ஒன்றுமறியாதவர்கள், தொலைநோக்குப் பார்வை இல்லாதவர்கள், சுயநல வாதிகள் என்று நிரூபித்து வருகிறோம்.

மன்னர் சரபோஜி தஞ்சையில் எவ்வளவு முன்யோசனையுடன் செயல்பட்டிருக்கிறார் என்பதைச் சொல்லும் கட்டுரை இது. சென்ற வருடம் தினமணியில் வெளியான இதை எழுதி இருந்தவர் கே என் ராமச்சந்திரன்.

அந்தக் கட்டுரை கீழே அப்படியே தருகிறேன்.

====================================================================

தற்போது எல்லாரும் மழை நீர் சேகரிப்பின் அவசியத்தைப் பற்றிப் பேசி வருகிறார்கள். ஆனால் பல்லாண்டுகளுக்கு முன்பு தஞ்சாவூரின் மன்னராக இருந்த இரண்டாம் சரபோஜி (1778 - 1832) ஒரு பிரம்மாண்டமான மழை நீர் சேகரிப்புத் திட்டத்தை உருவாக்கி மழை நீரைத் தேக்கி வைக்கப் பல குளங்களையும் அமைத்திருக்கிறார். எல்லாக் குளங்களும் கால்வாய்கள் மூலம் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருந்தன. அவை நகர மக்கள் அனைவருக்கும் சுவையான குடிநீரை வழங்கின.

 
தஞ்சை சரஸ்வதி மகாலில் உள்ள மோடி மொழியிலான ஆவணங்கள் அந்த அமைப்பை "ஜல சூத்திரம்' எனக் குறிப்பிடுகின்றன. அதை நிறுவவும் சீராகப் பராமரிக்கவும் எடுத்த நடவடிக்கைகளையும் அவற்றுக்கான செலவுக் கணக்கையும் அந்த ஆவணங்களிலிருந்து விவரமாகத் தெரிந்து கொள்ள முடிகிறது.


தஞ்சை பெரிய கோயில் மதிலுக்கு மேற்கில் சேவப்ப நாயக்கன் ஏரி என்று ஒரு பரந்து விரிந்த நீர் நிலை இருந்தது. மழைக் காலங்களில் அதில் செந்நிற நீர் தேங்கி கடல் போலத் தோற்றம் அளிக்கும். 50 ஆண்டுகளுக்கு முன் வரை அந்த நிலை நீடித்தது. 


அந்த ஏரியின் நீரைக் கோட்டைக்குள்ளிருக்கிற சிவகங்கைக் குளத்திற்கு வடிகட்டி அனுப்பும் வகையில் ஓர் அமைப்பு இருந்தது. சேவப்ப நாயக்கன் ஏரியையும் சிவகங்கைக் குளத்தையும் ஆழப்படுத்திச் செப்பனிட்டதாக சரபோஜி காலத்து மோடி ஆவணங்கள் செலவுக் கணக்குகளுடன் விவரிக்கின்றன.


சிவகங்கைக் குளத்தையொட்டி ஒரு பெரிய பூங்காவை நிர்மாணித்து அதில் சரபோஜி பல அரிய உள்நாட்டு மற்றும் அயல்நாட்டு மரங்களை நட்டு வளர்த்திருக்கிறார். இன்றைக்கும் அந்தப் பூங்கா, நகர் மத்தியில் அமைந்து ஒரு சிறந்த பொழுது போக்குமிடமாக விளங்குகிறது.
 

சிவகங்கைக்குளம் பெரிய கோயிலின் இறைவனுக்கானது. அதை கரிகாற் சோழன் வெட்டியதாக தல புராணம் கூறுகிறது. அதன் நீர் லேசான வெண்மை கலந்த நிறத்தில் ஒரு தனிச் சுவையுடன் இருக்கும். 

அருகிலுள்ள தெருக்களில் வசிக்கும் பெண்கள் மாலை நேரங்களில் குடங்களை எடுத்துக் கொண்டு வந்து குளக்கரையில் அமர்ந்து கூடிப் பேசிப் பொழுது போக்கிவிட்டு, குடிநீர் எடுத்துப் போவார்கள். 


சரபோஜி சிவகங்கைக் குளத்திலிருந்து பல மூடப்பட்ட கால்வாய்கள் மூலம் நகரிலிருக்கும் பல குளங்களுக்கு நீர் பாயும்படி செய்திருந்தார்.

அந்தக் கால்வாய்களை ஒட்டியமைந்த வீடுகளில் உள்ள கிணறுகளுக்கும் அந்த நீரை செல்லும்படியாக இணைப்புக் கொடுக்கப்பட்டிருந்தது. பெருமழைக் காலங்களில் சேவப்ப நாயக்கன் ஏரியும் சிவகங்கைக் குளமும் நிரம்பி, நகரின் பல குளங்களுக்கும் கிணறுகளுக்கும் அந்த நீர் செல்லும். குளங்களிலும், கிணறுகளிலும் வெண்மை நிறமான தண்ணீர் நிரம்பும். அந்த நீரைப் பானையில் நிரப்பி விளாமிச்சை வேரையும் போட்டு வைப்பார்கள்.


அந்த நாள்களில் ஒரு வீட்டுக் கிணற்றில் சிவகங்கை நீர் வரும் என்றால் அந்த வீட்டின் விலை மதிப்பு கூடுதலாயிருக்கும். அந்த நீரை எவ்வளவு வடிகட்டினாலும் அதன் நிறம் மாறாது. தேத்தாங்கொட்டையை இழைத்துப் போட்டாலும் அடியில் வண்டல் படியாது.


தஞ்சை நகரின் தென் திசையில் வஸ்தாத் சாவடி என்ற கிராமம் வரை வெறும் பொட்டலாகவும் முந்திரிக்காடாகவும் ஒரு காலத்தில் இருந்தது. அந்த விரிந்த பரப்பில் பெய்யும் மழை நீர் ஓடிய போக்கை ஆராய்ந்து அதன் வழியிலேயே ஒரு வாய்க்காலை சரபோஜி உருவாக்கி, அந்த நீர் முழுவதும் சேவப்ப நாயக்கன் ஏரிக்கு வருமாறு செய்தார். அந்த வாய்க்கால் காட்டாறு எனப்பட்டது.


பிற்காலத்தில் கல்லணைக் கால்வாயை வெட்டியபோது அதைத் தரை மட்டத்திலிருந்து பல அடி ஆழமுள்ளதாக வெட்டி அதன் மேலாகக் காட்டாற்று நீர் தடங்கலின்றித் தாண்டிச் செல்லும்படி குறுக்கே ஒரு பாலத்தைக் கட்டினார்கள். அது இன்றும் காட்டாற்றுப் பாலம் எனப்படுகிறது.


காட்டாற்றின் நீர்ப் பிடிப்புப் பகுதி செம்பூராங்கற்களும் செம்மண்ணும் உள்ளதானதால் மழை நீர் செம்புலப் பெயல் நீராகச் சிவந்த நிறத்துடன் ஏரியில் வந்து நிறையும். அதன் காரணமாக ஏரி சேப்பண்ணா (சிவப்பு அண்ணா) வாரி என்று பெயர் சூட்டப்பட்டதாகச் சிலர் கூறுவார்கள்.
ஏரி நீரை வடிகட்டித் தெளிய வைத்துக் கோட்டைக்குள்ளிருக்கும் சிவகங்கைக் குளத்திற்கு அனுப்பும் ஓர் அமைப்பைப் பெரிய கோயிலின் மேற்கு மதில் பகுதியில் அமைத்திருக்கிறார்கள். அதை இன்றும் காண முடியும்.


1863ஆம் ஆண்டில் தஞ்சாவூர் நகராட்சி ஜல சூத்திர அமைப்பைக் காட்டும் படத்தை வெளியிட்டது. அதைக் காணும்போது சிவகங்கைக் குளத்திலிருந்து ஒரு கால்வாய் மேல ராஜவீதி வழியாகச் சென்று அய்யன் குளத்தை அடைவது தெரிகிறது.


அய்யன் குளத்தின் தென்மேற்கு மூலையில் ஒரு நந்திச் சிற்பம் உண்டு. சிவகங்கைக் குளம் நிரம்பி விட்டால் நந்தியின் வாயிலிருந்து வெள்ளை நிற நீர் கொட்டும். குளமும் சில வாரங்களுக்கு வெள்ளையாகக் காட்சி தரும். குளத்தை ஒட்டியுள்ள வீட்டுக் கிணறுகளிலும் நீர் வெள்ளையாகி விடும்.


அய்யன் குளத்திற்குச் செல்லும் கால்வாயிலிருந்து ஒரு கிளை பிரிந்து கடைத்தெரு வழியாக அரண்மனை வளாகத்திற்குச் செல்கிறது. இன்னொரு கிளை வெங்கடேசப் பெருமாள் கோயில் குளத்திற்குப் போகிறது. பல ஆண்டுகளுக்கு முன் அந்தக் குளத்தை மண்கொட்டி மூடிவிட்டனர். அது பொறுக்காமல் வெங்கடேசப் பெருமாள் கோயில் பிரகாரத்திலிருந்த ஒரு விஷ்ணு சிலை கண்ணீர் விடுவதாக ஒரு வதந்தி பரவியது. அதைப் பார்க்கக் கூட்டம் அலை மோதியது. சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த ஆடை சொதசொதவென்று நனைந்திருந்ததாகப் பார்த்தவர்கள் சத்தியம் செய்தார்கள்!


சிவகங்கைக் குளத்திலிருந்து இன்னொரு கால்வாய் கீழ ராஜ வீதியிலுள்ள சாமந்தான் குளத்திற்குப் போகிறது. அந்தக் குளத்தில் குப்பை கொட்டி மெல்ல மெல்ல மூடுவதற்கு மக்கள் தங்களால் இயன்ற பங்கைச் செய்து வருகிறார்கள். அதைப் புனருத்தாரணம் செய்ய மாநகராட்சி நடவடிக்கை எடுத்தால் நல்லது.


சாமந்தான் குளத்திற்குச் செல்லும் கால்வாய் நாணயக்காரச் செட்டித் தெரு மற்றும் தெற்கு ராஜ வீதி வழியாகச் சென்று கீழ ராஜ வீதியில் நுழைகிறது. அதிலிருந்து ஒரு கிளை பிரிந்து சுல்தான் ஜியப்பா தெரு, கீழ ராஜ வீதி ஆகியவற்றின் வழியாக அரண்மனை வளாகத்தில் புகுந்து, மன்னரின் குடும்பத்தினர் மட்டுமே பயன்படுத்துவதற்காக அமைந்த கிருஷ்ண விலாச தடாகம், மன்னரின் தனிப் பயன்பாட்டுக்கான ஹுசூர் மகால் தோட்டக் குளம், அரசியின் தனிப் பயன்பாட்டுக்கான தாஸ்தான் மகால் தோட்டக் குளம், அரச குடும்பத்தாரின் இறுதிச் சடங்குகளைச் செய்யும் கரஞ்சிக் குளம் போன்ற நீர்நிலைகளையும் கிணறுகளையும் நீரால் நிரப்பி வந்தது.


இக் கால்வாய்களை ஒட்டியிருந்த வீடுகளின் கிணறுகளும் நீர் வரப் பெற்றன. அரண்மனையைச் சுற்றியிருந்த சார்ஜா மகால் குளம், அனுமார் கோயில் குளம், மாங்காக் குளம் போன்ற சிறிய குளங்களும் பயனடைந்தன.


இந்தக் குளங்களைச் சுற்றி வரும் வகையில் ஐந்து அல்லது ஆறு அடி அகலத்துக்குச் சந்துகள் இருந்தன. நமது பாரம்பரிய வழக்கப்படி மக்கள் தமது வீடுகளைக் குளங்களின் சுற்றுச் சுவர்கள் வரை விரிவாக்கி அந்தச் சந்துகளைக் காணாமல் செய்து விட்டார்கள். கால்வாய்களின் மேலாகவும் கட்டடங்களைக் கட்டி மறைத்திருக்கிறார்கள். இனி அந்தக் கால்வாய்களைக் கண்டுபிடிப்பதோ மீட்டுச் செப்பனிடுவதோ இயலாது.

காட்டாற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் புதிய பஸ் நிலையம், மருத்துவக் கல்லூரி, உணவுக் கார்ப்பரேஷனின் கிடங்குகள், குடியிருப்புகள் போன்றவை பல்கிப் பெருகி நீர் வரும் பாதைகளை முற்றாக அடைத்து விட்டன. சேவப்ப நாயக்கன் ஏரியில் சாலைகள் மற்றும் மின்சார வசதிகளுடன் ஏராளமான பேர் வீடு கட்டிக் குடியேறி விட்டார்கள்.
தப்பித் தவறிக் காட்டாற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெருமழை பெய்து எப்போதாவது வெள்ளம் வந்து ஏரியில் புகுவதைத் தடுக்கும் நோக்கத்துடன் காட்டாற்றுப் பாலத்தில் ஓட்டைகள் போட்டு வெள்ள நீர் கல்லணைக் கால்வாய்க்குள் விழுமாறும் செய்து விட்டார்கள்.


1825-27ஆம் ஆண்டுகளில் சரபோஜி மன்னர் தஞ்சைக் கோட்டைக்குள் பயனுறுதிறன் மிக்கதொரு வடிகால் அமைப்பையும் நிறுவினார். சின்னச்சின்ன சந்துகளில் கூட இருபுறமும் கால்வாய்கள் அமைக்கப்பட்டன. அவை ராஜ வீதிகளிலுள்ள பெரிய கால்வாய்களில் சங்கமிக்கும். 1845ஆம் ஆண்டில் சிவாஜி மன்னர் அந்த அமைப்பை மராமத்து செய்து செப்பனிட்டதாக மோடி ஆவணங்கள் கூறுகின்றன.
தஞ்சாவூர் கோட்டைக்குள் எவ்வளவு அதிக மழை எவ்வளவு நாள்களுக்குப் பெய்தாலும் தண்ணீர் தேங்காமல் வடபுறமுள்ள அகழிகளில் போய்ச் சேர்ந்து விடும். பிற்காலத்தில் அந்த வடிகால் அமைப்பைக் கழிவுநீர்ப்போக்கியாக மக்கள் மாற்றி "தஞ்சாவூர் சாக்கடை' எனப் பிற ஊர்க்காரர்கள் ஏளனம் செய்ய வழிகோலி விட்டார்கள். 


பல நூறு கோடி ரூபாய் செலவிட்டு காவேரியிலிருந்தும் கொள்ளிடத்திலிருந்தும் நீரெடுத்துப் பல ஊர்களுக்கு வழங்குவதை விட சில கோடி ரூபாய் செலவில் ஆங்காங்கேயுள்ள ஏரிகளையும் குளங்களையும் ஆழப்படுத்திச் செப்பனிட்டு மழை நீரைச் சேமித்து வைப்பதே புத்திசாலித்தனம் என்று தோன்றுகிறது.

38 கருத்துகள்:

  1. நம்ம மக்கள் வெறும்ன அரசாங்கத்தைக் குறை சொல்லியே பழக்கப்பட்டுவிட்டார்கள். அதுவும் எலெக்ஷன் வரும் நேரமாயிற்றே... அது சரி.. மாம்பலத்தில் லேக் வியூ என்ற ரோடும், அடையாறில், கால்வாய்க்கரைச் சாலையும் உண்டே... அங்கே இருந்த ஏரியும் கால்வாயும் எங்கே? மயிலையில், பேயாழ்வார் பிறந்தது, மலர்ச்சோலையில், ஒரு கிணறுக்கு அருகில். இப்போது, கிணறு மட்டும்தான் உண்டு. சோலை... ஹோகயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாம் குடியிருப்பாச்சு! ஆறுகளுக்கும், ஏரிகளுக்கும் கடுப்பாச்சு!!

      நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  2. செப்பனிடப்படவேண்டியது மனித மனங்களைத்தானோ??!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயமாக இராஜராஜேஸ்வரி மேடம். நம்மவர்கள் இதிலிருந்து பாடம் கற்பார்களா என்பது சந்தேகம்தான். 2005 வெள்ளத்துக்குப் பின்னர் ஏற்படுத்தப்பட்ட நீர்வழி மேலாண்மை பின்னர் ஒன்றையும் முன்னெடுக்கவில்லை. இரண்டு திராவிடக் கட்சிகளும் மாறி மாறி ஆட்சியில் இருக்கின்றன. என்ன பயன்?

      நீக்கு
  3. பட்டி மன்றம்...
    மன்னராட்சி சிறந்ததா,மக்களாட்சி சிறந்ததா?!

    பதிலளிநீக்கு
  4. அடேங்கப்பா எவ்வளவு பிரமாண்டமான திட்டங்கள் பண்டைத் தமிழனின் செயல்கள் பிரமிக்க வைத்த விடயங்களே அருமையான தகவலைத் தந்தமைக்கு நன்றி நண்பரே....

    பதிலளிநீக்கு
  5. போனது போகட்டும் இருக்கும் நீர்நிலைகளை பாதுகாத்தால் போதும். இருக்கும ஏரி, குளங்களை பத்திரப்படுத்த வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குடியேறி விட்டவர்களை விரட்ட முடியாது. இனியாகிலும் அனுமதி தரும்போது எல்லா விஷயங்களும் கண்காணிக்கப்பட வேண்டும். பின்பற்றப்ளூ பட வேண்டும். ஏற்கெனவே குடியேற்றம் நிகழ்ந்து விட்ட இடங்களில் ராட்சத பைப்லைன்கள் கொண்டோ, எப்படியோ மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

      நன்றி கோமதி அரசு மேடம்.

      நீக்கு
  6. அருமையான பகிர்வு...
    தஞ்சை நகர குளங்களை இணைத்த சரபோஜி பற்றியும் குளங்களின் இணைப்பு பற்றியும் அறியத் தந்த கட்டுரை அண்ணா...

    பதிலளிநீக்கு
  7. ஒரு தேசத்தில் ஜனத்தொகை கூடும்போது பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. அவைகளில் நீர் நீலைகளை ஆக்கிரமிப்பு செய்வதும் ஒன்று. மக்களின் மனதை மாற்ற முடியமா? எனக்கு விடை தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மக்கள் மாறினாலும் அதிகாரிகள், ஆட்சி செய்பவர்கள் மாற விட மாட்டார்கள் பழனி. கந்தசாமி ஸார்.

      நீக்கு
  8. திரும்பத் திரும்ப இவற்றை எல்லாம் சுட்டிக்காட்டினாலும் யாரும் திருந்தப் போவதில்லை. மழை நின்றதும் மறுபடி எல்லாம் ஆரம்பிக்கும்! :(

    பதிலளிநீக்கு
  9. சில கோடி ரூபாய் செலவில் ஆங்காங்கேயுள்ள ஏரிகளையும் குளங்களையும் ஆழப்படுத்திச் செப்பனிட்டு மழை நீரைச் சேமித்து வைப்பதே புத்திசாலித்தனம்
    உண்மை
    நன்றி நண்பரே
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆக்ரமிக்கப் பட்டுள்ள ஆறு,ஏரிகளை என்ன செய்வது நண்பர் கரந்தை ஜெயக்குமார்? மாற்று ஏற்பாடு என்ன? செய்வார்களா?

      நீக்கு
  10. பதிவினைக் கண்டேன். சரபோஜி மட்டுமல்ல. பல மன்னர்களின் காலத்தில் இவ்வாறு நடந்துள்ளது. நவீன யுகம் என்று கூறிக்கொண்டு இவற்றையெல்லாம் அன்னியப்படுத்திய நிலையில் நாம் இப்போது விளைவுகளை அனுபவிக்கிறோம் என்பதே உண்மை.

    பதிலளிநீக்கு
  11. வணக்கம்
    ஐயா

    அற்புதமாக விளக்கியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் த.ம 6
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  12. நம் ஊரில் மழை நாளில் மட்டும் தான் மக்கள் குறை சொல்வார்கள். பிறகு அவர்களே பிளாஸ்டிக் பைகளைப் போட்டு எல்லா நீர் செல்லும் வழித் தடங்களையும் அடைத்து விட்டு அரசின் மேல் கரை சொல்ல்வதே வழக்கம். நாம் கற்றுக் கொள்ள வேண்டியது மிக நிறைய .

    பதிலளிநீக்கு
  13. மிக் மிக அருமையான பகிர்வு. சுயநலம் பெருகிவிட்ட நாளில் இப்படிப்பட்டக் கட்டுரைகள் எல்லாம் வீணாகிப் போகின்றன. தலைமையாட்சியாளர் படிக்காதவரா என்ன?! ஹும் என்னத்தைச் சொல்ல..அன்றைய மன்னர்கள் நாட்டு நலன் எனும் அடிப்படையில் வாழ்ந்தார்கள். இன்றைய மன்னர்கள், அரசிகள்?????? தங்கள் வீட்டுநலன் நோக்கி.....

    கீதா: இந்தக் கட்டுரையை நானும் வாசித்தேன் ஸ்ரீராம். சமீபத்தில் கூட. ஆதங்கம் மனதில் மிஞ்சியது. நம்மூரில் சாதி அரசியல் பேசி, ஏன் சமூக வலைத்தளங்கள், நம் வலைத்தளங்களில் கூட சாதி அரசியல் பேசி, எழுதிக் காலத்தை ஓட்டுகின்றனர். இந்தக் கட்டுரையைப் பற்றி யாரும் அவ்வளவாகப் பேசவில்லை. ஏன் தெரியுமா? சொன்னால் இங்கு அது பிரச்சனையாகிவிடும். நீர் மேலாண்மை எவ்வளவு சிறப்பாக இருந்தது என்பது போய், அதைப் பற்றிப் பேசாமல் சாதிச் சாயம் பூசிவிடப்படும்.
    சென்னை கூட ஒரு காலத்தில் நீர் வளம் சுற்றி, காடுகளும் சுற்றித்தான் இருந்திருக்கின்றது. எக்மோர் ம்யூசியத்தில் அந்த வரைபடத்தைப் பார்த்ததும் மனது வலித்தது உண்மையாகவே.

    எங்கள் கிராமம் கூட பொலிவிழந்துவிட்டது. ம்ம்ம் இன்னும் நிறைய சொல்லலாம்...இங்கு பெரிதாகிவிடும்...(ஹ்ஹா என்னவோ ரொம்பச் சின்னதா சொல்லுறதா நினைப்புனு நினைக்கிறீங்களோ....ஹஹ்)

    மக்களும் திருந்த வேண்டும், அரசும் திருந்த வேண்டும்...நடக்கிற காரியம் இல்லை..

    பதிலளிநீக்கு
  14. திருச்சியிலிருந்து தஞ்சை போகும் இடங்களில் பெரும்பாலானவை ஏரி குளம் என்றே இருக்கும் . நான் அவை எங்கே என்று வியப்பதுண்டு. சுயநலம் மிகுந்து விட்டது. எந்த நீர் மேலாண்மைத் திட்டமானாலும் சரி அதிலிருந்து பணம் பண்ணவே யோசிக்கிறார்கள் பழம் பெருமை பேசிப் பயனில்லை. இன்றைய நிலையில் டாக்டர் கந்தசாமியின் கருத்தே முன் நிற்கிறது

    பதிலளிநீக்கு
  15. மன்னர் சரபோஜி மக்களுக்காக தொலைநோக்கோடு செயலாற்றியுள்ளார் ,இன்றைய மன்னர்கள் ??????

    பதிலளிநீக்கு
  16. மன்னர் சரபோஜி மக்களுக்காக தொலைநோக்கோடு செயலாற்றியுள்ளார் ,இன்றைய மன்னர்கள் ??????

    பதிலளிநீக்கு
  17. இப்போதைய கால சூழலை பதிவர் கந்தசாமியும் வழிமொழிந்த பாலசுப்ரமணியம் அவர்களும் சொல்வதுவே பிரச்சினையின் அடிப்படை. சுமார் 25 வருடங்களுக்கும் மேலாக பாலாறு,நொய்யல் முக்கியமாக அழுகிய ஆறு கூவம் வீணாகப் போகும் போதே விழிப்புணர்வு வந்திருக்க வேண்டும். மெல்ல ஊடுருவிய ஊழல் வகை தொகையில்லாமல் அரசு இயந்திரங்களில் ஊடுருவி இருக்கிறது. இதில் கொடுமை என்னன்னா இறை நம்பிக்கை கொண்டவர்கள் மனசாட்சியை விற்று விட்டவர்கள் அதிகம்.

    பதிலளிநீக்கு
  18. //வழங்குவதை விட சில கோடி ரூபாய் செலவில் ஆங்காங்கேயுள்ள ஏரிகளையும் குளங்களையும் ஆழப்படுத்திச் செப்பனிட்டு மழை நீரைச் சேமித்து வைப்பதே புத்திசாலித்தனம் என்று தோன்றுகிறது.//

    கரெக்ட்.

    பதிலளிநீக்கு
  19. மன்னர் ஆட்சியிலேயே இப்படி செய்ய முடிந்த பொது மக்கள் ஆட்சியில் தொலை நோக்கு திட்டங்கள் செயல்படுத்த முயற்சி செய்யாதது வேதனைதான். நல்ல பாடம்

    பதிலளிநீக்கு
  20. அருமையான பகிர்வு. எத்தனை திட்டமிட்டு இவற்றை ஏற்படுத்தி உள்ளார்கள். இக்காலத்து அரசியல்வாதிகள், தேவையில்லாத திட்டங்களைத் தீட்டி, அதன் மூலம் தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் சொத்து சேர்ப்பதையே திட்டமிட்டுச் செய்கிறார்கள்......

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  21. எத்துணை சீரான திட்டமிடல்! மக்கள் நலனில் அக்கறை கொண்ட மன்னர்கள் வாழ்ந்த நாடு! இப்போதோ...
    :( ??

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!