5.8.26

வயிற்றுப் பசிக்கு ஏதோ ஒரு உணவு போதும் என்றிருக்க நாம் ஏன் விதவித உணவை நாடுகிறோம்?+ சரோஜாதேவி பகுதி

 

கேள்வி பதில்கள் :

நெல்லைத்தமிழன் : 

1. உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்பது சரிதான். இருந்தாலும் உழவர்களுக்கும் அது தொழில்தானே ஹோட்டல் பிசினெஸ் போல. ஏன் நாம் அதீதமாக நடிக்க ஆசைப்படுகிறோம்?

# உழவின் பயன் இன்றியமையாத உணவாதலால் உழவுக்கு சிறப்பான இடம் குறளில் கூட தரப்பட்டுள்ளது. 

& உழவன் உழைப்பது தனக்காக கொஞ்சம்; மற்றவர்களுக்காக நிறைய. மற்றவர்கள் உழைப்பது தங்களுக்காக மட்டுமே! 

2 உறவினர் ஒருவர் எதற்கு கோயில் கோயிலாகப் போகணும்? உள்ளூர் கோயிலுக்குச் சென்றால் போதாதா? ஒரு தடவை பயணம் செய்து சென்ற கோயிலுக்கு ஏன் பலமுறை போகணும் என்கிறார். உங்கள் அபிப்பிராயம் என்ன?

# அவர் சொல்வதில் ஓர் உண்மை இருக்கிறது. என்றாலும், வசதியும், நேரமும் இருந்தால் -  அங்கு செல்வதன் மூலம் மன மகிழ்ச்சியும் அமைதியும் கிடைத்தால், திரும்பத் திரும்ப ஒரே கோயிலுக்குப் போவது கூட சரிதான். தினசரி அரிசி சாப்பிடுவது போல.

& நம்முடைய மனத் திருப்திதான் முக்கியம். 

3  வயிற்றுப் பசிக்கு ஏதோ ஒரு உணவு போதும் என்றிருக்க நாம் ஏன் விதவித உணவை நாடுகிறோம்? இந்த மனநிலை உள்ள நாம் ஏன் வீடு என்று வரும்போது சொந்த வீடு என ஆசைப்படுகிறோம்?

# விருப்பங்கள் பலவாக இருத்தல் இயற்கை நியதி.  மனிதன் அனுபவிப்பதற்காக இந்த உலகையும் உலகில் உள்ள பொருள்களையும் இறைவன் படைத்தான் என்ற நம்பிக்கையில் ஓர் உண்மை ஒரு நியாயம் இருக்கிறது.

அதேபோல் வீடு என்று வந்தாலும் சொந்தக்காரர் விரட்டி விட்டால் ஓட வேண்டும் என்றிருக்கும் வாடகை வீடு வேண்டாம் எனக்கென்று ஒரு வீடு வேண்டும் என்று மனிதன் விரும்புவதில்  தவறென்ன ?

4  காதல் உணர்வு, பகை உணர்வு, பொறாமை உணர்வு போன்றவை எப்போது ஒரு மனிதனை விட்டு நீங்குகின்றன?

# இயலாமை அல்லது உடல் சோர்வு வரும்போது. வெகு சிலருக்கு மெய்யறிவு வந்தபோது.

5 எந்த ஒரு ஆசைக்கும் எக்ஸ்பயரி தேதி உண்டு என நம்புகிறேன். பத்திரிகை வாசிப்பு, திரைப்படம் பார்த்தல், நல்ல உணவு, ஏன் கோயில் உலாவிற்கும். காலாவதி ஆகாத ஆசைகள் மனிதனுக்கு உண்டா? உண்டு எனில் எவை எவை?

# உண்டு.  தான் புகழப்பட வேண்டும், மதிக்கப்பட வேண்டும், நோயின்றி சிரமமின்றி இருக்க வேண்டும் என்ற ஆசைகள் நிலையானவை. ஒரு கட்டத்தில் சிரமமின்றி, அடுத்தவருக்கும் கஷ்டம்  இன்றி நம் உயிர் போக வேண்டும் என்ற ஆசையும் எல்லோருக்கும் இருக்கக்கூடும்.

6 கொரானா வைரஸால் நாம் பல நன்மைகள் அடைந்திருக்கிறோம் இல்லையா? அதற்கு யார் யாருக்கு நன்றி சொல்ல வேண்டும்?

# அந்தக் கிருமிக்கு மட்டும்தான்! 

7 அண்மையில் குளிகை காலத்தில் (இது ராகு காலம் எம கண்டம் குளிகை. குளிக்கும் நேரமல்ல) நல்ல செயல்கள் தொடங்கினால் விருத்தியடையும் அசுப காரியங்கள் செய்யக்கூடாது தொடரும் என்பதால் எனப் படித்தேன். ராகு காலம் எம கண்டம் குளிகை பார்க்கிறீர்களா? அவற்றை விளக்க முடியுமா?

# இதெல்லாம் நம்பிக்கையின் பாற்பட்ட விஷயம். ராகு காலத்தில் தொடங்குவது கஷ்டங்களை உண்டாக்கும் என்றும், குளிகை காலத்தில் செய்வது மீண்டும் மீண்டும் வரும் என்றும் நம்பப்படுகிறது. இது உன் வரை உண்மையா என்பதை உண்மையா என்றெல்லாம் கேள்வி கேட்க இடம் இருந்தாலும் கேட்க முடியாது. ஏனென்றால் கிடைக்கும் பதில் எந்த அளவு சரியாக இருக்கும் என்று யாராலும் சொல்ல இயலாது.

பானுமதி வெங்கடேஸ்வரன் : 

ராமர் 15000 வருடங்கள் வாழ்ந்தார் என்று வால்மீகி ராமாயணத்தில் கூறியிருப்பதை அப்படியே எடுத்துக் கொள்வீர்களா? அல்லது 78 வருடங்கள்தான் வாழ்ந்தார் என்று லாஜிக்கலாக துஷ்யந்த் ஸ்ரீதர் சொல்வதை ஏற்பீர்களா?

# அது வேறு யுகம். அப்போது வருஷம் நாள் கணக்கு எப்படி இருந்ததோ நமக்குத் தெரியாது.  இதற்கு விளக்கம் நமக்குத் தேவைதானா என்பது என் கேள்வி.  அது எப்படியும் இருந்து விட்டுப் போகட்டும்.

தயிர் சாதத்தில் மாதுளம் பழ முத்துக்கள், விதையில்லாத திராட்சை பழங்களை சேர்த்தால் பிடிக்குமா?

# பிடிக்கும்.  பிடிக்காதவர்களும் இருப்பார்கள்.  தவறில்லை.  உங்கள் கேள்வியிலிருந்து,  உங்களுக்கே பிடிக்குமா என்கிற ஐயம் தான் எழுகிறது.

& பிடிக்கும். 

= = = = = = = = =

படமும், பதமும் :  

நெல்லைத்தமிழன் : 

பஹ்ரைனில் உள்ள மிகப் பெரிய பள்ளிவாசல் இது. இதற்கும் அம்மாவை அழைத்துச்சென்றிருக்கிறேன். இதன் உள்ளே வேலைப்பாடுகள் உண்டு. ஆனால் உள்ளே அழைத்துச்செல்லவில்லை. காரணம் தலையை கவர் செய்துகொள்ளவேண்டும் என்றெல்லாம் கண்டிஷன்கள் உண்டு. அப்படி அம்மாவை அந்த இடத்திற்கு எதற்கு அழைத்துச் செல்லவேண்டும் என்று விட்டுவிட்டேன். இந்தப் படத்தைப் பார்க்கும்போது 1995 நினைவுகள் வருகின்றன. அவற்றைப்பற்றி ஒரு தொடராக எழுதவேண்டும்.

அரபு தேசங்களைப் பற்றி நினைக்கும்போது, நாம் தொந்தரவு தராத வரை, நமக்கு யாருமே தொந்தரவு தராமல், பாதுகாப்பாக நாம் உணரும்படியாக, எல்லோரும் நட்பாக, நம்மைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கும் நிலைதான் எனக்கு நினைவுக்கு வருகிறது.  ஆனால் ஒன்றைப் பற்றி மிகவும் கவனமாக இருக்கவேண்டும். அரபிப் பெண்களை தவறான நோக்கத்துடன் அல்லது அவங்க சந்தேகப்படும்படியாக புகைப்படம் எடுத்துவிடக் கூடாது. அதுல அவங்க ரொம்ப சென்சிடிவ். நமக்கு மிகப் பெரிய பிரச்சனை உருவாகிவிடும். பொதுவாகவே அரபிக்கள், பெண்களிடம் மரியாதை மிக்கவர்கள், ஆண்கள் பெண்களுக்கு எதிராக எந்தக் குற்றச் செயலிலும் ஈடுபட அனுமதிப்பதில்லை.

= = = = = = = = = = =

KGG பக்கம் : 

சரோஜாதேவி தொடர் கதை 

சென்ற வார பகுதி 09 சுட்டி : பகுதி 09 : மாயா மச்சீந்திரா .. ! 

இனி 

இந்த வாரப் பகுதி. 

பகுதி 10: ராபின்ஹூட் நாநா ! 

ஐந்தாறு நிமிடங்களில் திரும்பி வந்த நாநாவிடம், " திடீரென எங்கே போனே?" என்று கேட்டான் பாபா. 

"டாக்டர் கபாலி வீட்டுக்கு."

" எதுக்கு?"

" அவர் வருகிற நோயாளிகளிடம் எப்போதும் பணமாகத்தான் வாங்குவார். ஜி பே, ஃபோன் பே,நெட் பேமெண்ட் எல்லாம் வாங்க மாட்டார். " 

" ஆமாம் - எனக்குத் தெரிந்து இந்த மாதிரி பல டாக்டர்கள் அப்படித்தான் செய்கிறார்கள். கேட்டால் இன்கம்டாக்ஸ் பிரச்சினை வரும் என்பதால் அப்படி பணமாக வாங்குவதாக சொல்வார்கள்" என்றான் பாபா. 

" அதேதான். அதனால நான் போய், அவர் திரைக்கு அந்தப் பக்கம் ஒரு பேஷண்டுக்கு ஊசி போட போனபோது அவருடைய கலெக்ஷன் பணத்திலிருந்து நான்கைந்து ஐநூறு ரூபாய் நோட்டுகளை எடுத்து என் பாண்ட் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு வந்துவிட்டேன்" 

" அடப்பாவி! திருடினியா" 

" திருட்டா? சேச்சே இது ஒரு ஷார்ட் ஷர்க்யூட்டிங் யுக்தி" 

" எப்படி?"

" அதைச் சொல்வதற்கு முன் இந்த டீக்கடைக்கு இந்தப் பக்கத்தில் இருக்கும் ஃபார்மஸிக்கு வா" 

இருவரும் பக்கத்தில் இருந்த கணபதி ஃபார்மஸிக்கு சென்றார்கள். 

ஃபார்மஸியில் இருந்த ஆள், நாநாவைப் பார்த்ததும் " வாங்க நாநா. மருந்து ஏதாவது வேண்டுமா? " என்று கேட்டார். 

" இல்லை. என் அக்கவுண்ட்ல இன்னும் எவ்வளவு பாக்கி இருக்கு?" என்று கேட்டான் நாநா. 

ஒரு நோட்டை எடுத்துப் பார்த்த அந்த ஆள் "410 ரூபாய் இருக்கு" என்றார். 

" சரி. இந்தா இந்தப் பணத்தை என் கணக்கில் வரவு வெச்சுக்குங்க " என்று சொல்லி தான் டாக்டர் வீட்டிலிருந்து கொண்டு வந்த பணம் எல்லாவற்றையும் கொடுத்தான் நாநா. 

" அப்பப்போ பெரிய அமௌண்ட் மருந்து எதுவும் கொடுத்தால் பில் ஃபோட்டோவை பனானா எண்டர்பிரைசஸ் எண்ணுக்கு அனுப்பிடணும். சிறிய அமௌண்ட் ஆக இருந்தால் என் அக்கவுண்டில் இருந்து கழித்துக் கொள்ள வேண்டும் " 

" சரி சார். இவர் யாரு? " என்று அவர் கேட்டார் பாபாவைக் காட்டி.‌

" இவர் பனானா எண்டர்பிரைசஸ் பார்ட்னர். பாபா என்று பெயர்" 

" நல்லது சார். ஏதாவது மருந்து வாங்க வேண்டும் என்றால் ஃபோன் பண்ணுங்க நாநா சார்" 

இருவரும் கடையிலிருந்து கிளம்பினார்கள். 


" ஒன்றுமே புரியவில்லை என்ன அக்கவுண்ட்? எதற்கு பில் அனுப்பவேண்டும்? " என்று கேட்டான் பாபா. 

" மருந்து வாங்க வருபவர்கள் பணமில்லாத அல்லது வருமானம் குறைந்த ஆட்களாக இருந்தால் அவர்களிடம் பணம் வாங்காமல், மருந்து கொடுத்துவிட்டு சிறிய அமௌண்ட் என்றால் என் அக்கவுண்டில் கழித்துக் கொள்வார். பெரிய தொகை என்றால் பில் நகலை பாவனாவின் எண்ணுக்கு அனுப்பி அங்கிருந்து பணம் பெற்றுக் கொள்வார். " 

" உன் அக்கவுண்டுக்கு இப்போ நீ கொடுத்தது திருடிய பணம்தானே! " 

" ஆனால் அது முழுவதும் ஏழைகளின் மருந்து செலவுக்குதான் போகும். எனக்கு மருந்து எதுவும் வேண்டும் என்றால் நானே முழுப் பணத்தையும் கொடுத்து விடுவேன்" 

" ஆனாலும் டாக்டரிடமிருந்து பணம் கையாடல் செய்தது எனக்கு சரியாகப் படவில்லை " என்றான் பாபா. 

" விளக்கமாக சொல்கிறேன் கேள். 
இந்த டாக்டர் வருமான வரி கட்டாமல் பணமாக வாங்கி வருகிறார். ஒவ்வொரு பேஷண்டிடமும் சராசரி 500 ரூபாய் வாங்குகிறார் என்றால் ஒரு நாளில் 40 பேஷண்ட்  - காலை 2 மணி நேரம்  20 பேர்,   மாலை இரண்டு மணி நேரம் 20 பேர் என்று வைத்துக் கொண்டால் 40x500= 20000. ஒரு மாதத்தில் ஆறு லட்சம். ஒரு வருடத்தில் 72 லட்சம். இது போக இவர் ஒரு பெரிய மல்ட்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியில் வேலை செய்து சம்பளம் வாங்குகிறார். அதற்கு மட்டும் வருமான வரி அவர்கள் பிடித்துக் கொள்வார்கள். வருமான வரி ரிட்டர்ன் ஃபைல் செய்யும்போது தன்னுடைய ப்ரைவேட் பிராக்டிஸ் மூலம் கிடைக்கும் வருமானத்தை காட்டமாட்டார் அல்லது குறைத்துக் காட்டுவார். இவர் ஒழுங்காக வரி கட்டி, அது அரசாங்கத்துக்குப் போய், அரசாங்க நலத் திட்டங்கள் - ஜன் ஔஷாதி - போன்றவை மூலமாக ஏழை மக்களுக்கு பயன்பட வேண்டும் என்றால் எவ்வளவு நாட்கள் ஆகும்? நான் அதை ஷார்ட் சர்க்யூட் செய்து உடனடியாக ஏழை மக்களுக்கு உதவுகிறேன்! சரிதானே?" என்றான் நாநா. 

" சரிதான் போ! நானும் இப்படி அருவமாகி ராபின்ஹூட் வேலை செய்ய வேண்டுமா பார்ட்னர்?" 

" இல்லை. இது எனக்கு பொழுதுபோக்கு. எப்பவாவது போர் அடித்தால் ஒரு கிக்குக்காக செய்வேன்" 

இருவரும் பேசியபடி வீட்டுக்கு வந்து சேர்ந்தனர். 

" பாஸ் நம்ம எக்ஸ்பர்ட் ஏகாம்பரம் 15 லட்ச ரூபாய்க்கு ஒரு எஸ்டிமேட் அனுப்பியுள்ளார். முரளீஸ் கஃபே மாடர்னைஸ் செய்ய அவ்வளவு வேண்டியிருக்குமாம். " என்றது பாவனா.‌

" லோன் வாங்க ஏற்பாடு செய்வோம்.‌நம்ம ஏரியாவுல பெரிய பாங்க் எது பாவனா?" 

" அரோகரா பாங்க் பாஸ்" 

" சரி பாவனா அந்த பாங்கின் கடந்த சில வருடங்களின் ஆனுவல் ரிப்போர்ட் எங்கே இருந்தாலும் தேடிப் பிடித்து பாபாவுக்கு அனுப்பு" 

" பாபா உனக்கு முதல் வேலை இதுதான் - பாவனா அனுப்புகிற ஆனுவல் ரிப்போர்ட்களை துல்லியமாக ஆராய்ந்து எங்கேயாவது திப்பிச வேலை நடந்திருக்கா என்று சொல்" 

" உத்தரவு மகாராஜா" என்றான் பாபா! 

(தொடரும்) 

74 கருத்துகள்:

  1. தயிர் சாதத்தில் தயிர் சாதமாகத்தான் இருக்க வேண்டும்

    மாதுளை முத்துக்கள், விதையில்லாத திராட்சை பழங்களைச் சேர்ப்பது ஒருவகை மன வியாதி...

    இது ஒரு தொழில் நுட்பம்... அவ்வளவே...

    /// வயிற்றுப் பசிக்கு ஏதோ ஒரு உணவு போதும் என்றிருக்க நாம் ஏன் விதவித உணவை நாடுகிறோம்?..//.

    இதற்கான விடையும் இதற்குள்ளேயே இருக்கின்றது..

    பதிலளிநீக்கு
  2. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. மற்றவர்கள் உழைப்பது தங்களுக்காக மட்டுமே என்று எப்படிச் சொல்லுகிறீர்கள்? உழவர் நாட்டுக்காக நாட்டு மக்களுக்கு உணவு வேண்டுமே என்று உழைக்கிறாரா இல்லை அதன் மூலம் தனக்காக உழைத்துக்கொள்கிறாரா? உங்கள் பணமும் உழைப்பும் காய்கறி மளிகை கோயில் ஏழைகள் என பலருக்குச் செல்வதில்லையா? கொஞ்சம் விட்டால் ஹோட்டல் வைத்திருப்பவர் பிறருக்காக உழைக்கிறார்னு சொல்லிடுவீங்க போலிருக்கே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. :))))) அதுவும் சரிதான்!

      நீக்கு
    2. எல்லோர் உழைப்பிலும் மற்றவர்களுக்காக பலனும் இருக்கிறது.  உழவர் உழைப்பில் அவருக்கு பயன் கருதி செய்தாலும் அது மற்றவர்களுக்கு பயனைக் கொடுக்கிறது.

      நீக்கு
  4. தயிர் சாதத்தில் இஞ்சி மிக மெலிசாக சீவிய கேரட் ஓகே. மாதுளை திராட்சை அதீதம். மேட்டூரில் வேலை பார்த்தபோது ஒரு நாள் சுற்றுலாவுக்கு நான் ஒருவரிடம் விளையாட்டா தயிர் சாதத்தில் கேரட் வெள்ளரி போன்ற காய் கலந்தால் நல்லாருக்கும் எனக்கு வெண்டைக் கறியுடன் தயிர் சாதம் பிடிக்கும் எனச் சொல்லப்போக அவர் தயிர் சாதத்தில் வெண்டைக்காயையும் சேர்த்துவிட்டுக் கொண்டு வந்தார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தயிர் சாதத்துக்குச் சிறந்த துணை துண்டம் மாங்காய் ஊறுகாயும், மிளகாய் வத்தல், தேங்காய், கடுகு, உபருப்பு, பெருங்காயம் வறுத்துக் கொண்டு கொஞ்சமாய்ப் புளி வைத்து உப்புச் சேர்த்து அரைக்கும் தேங்காய்த் துவையல். மத்தது எல்லாம் அப்புறமாய்த் தான்.

      நீக்கு
    2. கீசா மேடம்.. அதைவிட அம்மா கையால வெறும் மோர் சாதம் கதை சொல்லிக்கிட்டே போடுவாங்களே அதைவிடவா ருசி?

      நீக்கு
    3. உண்மையைச் சொல்லப் போனால் எங்க வீட்டில் அதாவது என் பிறந்த வீட்டில் அம்மா சாதம் பிசைந்து எல்லாம் போட முடியாது.

      ஆனால் தாத்தா வீட்டில் (அம்மாவின் பிறந்த வீடு) தினம் தினம் எங்க பாட்டி (அம்மாவின் அம்மா) நாங்க ஒரு ஐந்து பேர் பேரன், பேத்திகள் (அந்தக்கால கட்டத்தில்) ஒரு பெண், என் அம்மாவின் கடைசித் தங்கை ஆகியோருக்குக் கல்சட்டி நிறையப் பழைய சாதத்தை உப்புப் போட்டுக் கடைந்த மோரும், கொஞ்சம் தயிரும் சேர்த்துப் பிசைந்து போடுவார். தினமும் அலுக்காமல், கடிந்து கொள்ளாமல் செய்வார். மத்தியானச் சாப்பாடு சுமார் பனிரண்டு மணி அளவில் போடுவாங்க. சாயங்காலமெல்லாம் இட்லி, தோசை எனில் கணக்குத் தான். இல்லைனா தட்டை, முறுக்கு, சீடை போன்றவை. இரவில் மறுபடி சாதம், வத்தக்குழம்பு, சுட்ட அப்பளம், ரசம், மோர் ஊறுகாய். ஊறுகாய் போடுவதில் இந்தப் பாட்டியை அடிச்சுக்க ஆள் கிடையாது.

      நீக்கு
    4. ஆனால் என் குழந்தைகளுக்கு நான் மத்தியானங்களில் ஒரு மணி சுமாருக்குத் தயிர் சாதம் பிசைந்து கதைகள் சொல்லிக் கொண்டே போட்டிருக்கேன். அதில் சாதத்தைக் குழித்துக் கொண்டு அதன் மேல் வத்தக்குழம்பு விடுவது இருவருக்குமே பிடிக்கும். துணைக்குத் துப்பறியும் சாம்பு, இல்லைனா ஸ்ரீமான் சுதர்சனம், ஜானகி, கல்யாணி, கோமதியின் காதலன் போன்றோர்.

      நீக்கு
    5. நல்ல ரசனை. கல்சட்டி பழைய சாதம் - அம்மா கையால் கொடுத்ததை என் கையில் வாங்கி வலது கை கட்டை விரலால் நடுவே குழி செய்து வைத்துக் குழம்பு ஒரு ஸ்பூன் ஊற்றி இரசித்துத் தின்ற அனுபவம் எனக்கு நிறைய உண்டு.

      நீக்கு
    6. உண்மை கௌதமன் சார், நாங்களும் பழையது தான் அப்படிச் சாப்பிட்டிருக்கோம். மத்தியானம் எல்லாம் தட்டு அல்லது இலை போட்டு. ஆனால் எங்க குழந்தைகளுக்குக் காலம்பரவே ஒன்பதரை மணிக்குள்ளாகச் சமைச்சுப் போட்டு விடுவேன் என்பதால் மத்தியானச் சாப்பாட்டை நான் பிசைந்து கையில் போடுவேன்.

      நீக்கு
    7. தயிர் சாதத்தில் குழித்துக்கொண்டு அதில் வத்தக்குழம்பு விட்டு சாப்பிட்ட கதை இங்கும் உண்டு. வெறும் மோர் சாதம், வத்தக்குழம்பு அல்லது மிளகாய்த் துகையலில் எத்தனை ஆனந்தம் இருந்தது, அப்போதெல்லாம்.
      இப்போதெல்லாம் பெங்களூரில், விதம் விதமான வெஜ் ரெஸ்ட்டாரண்ட்களில் ஏறுகிறேன், இறங்குகிறேன்.. ஆனால் மனம் அந்தக் காலத்தின் பக்கம் போய்விடுகிறது அவ்வப்போது! ஃபில்டர் காப்பியை பெங்களூரில் எஞ்ஜாய் செய்கிறேன் என்பதில் இருக்கிறது, இப்போதைய நிஜம்!

      நீக்கு
    8. உண்மை, உண்மை!

      நீக்கு
    9. இவை எல்லாமும் உண்மை, சரிதான் என்றாலும் தயிர் சாதத்துக்கு காய்ந்த நார்த்தங்காய் தொட்டுக் கொண்டால் ஆகாதா?  இளசான பச்சை மிளகாயை உப்பில் தொட்டு நறுக்கென  கடித்துக் கொள்ளலாம்.

      நீக்கு
  5. கொஞ்சம் நீர்க்க உள்ள தயிர் சாதத்தில் வறுத்த மோர்மிகாயைச் சிறிது பொடித்துக் கலந்தால் நல்லா இருக்கும்

    உலகத்தில் ஒவ்வொருவருக்கும் ஒரு ருசி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா ! எனக்கும் பிடிக்கும்!

      நீக்கு
    2. சின்ன வெங்காயம் பொடியாக நறுக்கிக் கொண்டு சூடான சாதத்தில் அதைத்தூவி, சாதம்  ஆறியதும் பால் ஊற்றி பிசைந்து கொஞ்சம் ஒரு ஸ்பூன் தயிர் ஊற்றி பிசைந்து மூடி வைத்தால்... நேரம் சென்று சாப்பிட.... ஆஹா...

      நீக்கு
  6. து ஸ்ரீ கூறுவதில் தவறில்லை. ஆனால் அதுதான் சரி எனச் சொல்ல முடியாது

    இராமருக்கு திருமணம் ஆகும்போது பதினோரு வயது சீதைக்கு ஐந்து. இராமர் மிக மிகக் கரிய நிறம் இலக்குமணன் வெளுப்பு.. ஆனால் நம் மனது அப்படி நினைப்பதில்லை

    நம் மனது சொல்வதுதான் முக்கியம்

    பதிலளிநீக்கு
  7. இப்போது திருவரங்கத்தில். மீதி நேரம் கிடைக்கும்போது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல தரிசனங்கள் கிடைக்கவும், திப்பிசம் இல்லாத உணவு கிடைக்கவும் வாழ்த்துகள்!

      நீக்கு
    2. நீங்கள் திப்பிசம் னு எழுதிறதுனாலத்தான் யாரையும் சந்திக்க நேரம் கிடைக்கலை. இதோ திருரங்கத்தைவிட்டுக் கிளம்பறோம்

      நீக்கு
    3. grrrrrrrrrrrrrrrrrrrrrrrrr!அநியாயமா இருக்கே. வருவீங்களோ அல்லது தொலைபேசியில் பேசுவீங்களோனு எதிர்பார்த்துட்டு இருந்தேன். :(

      நீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    இன்றைய புதன் கேள்வி பதில்கள் அனைத்தும் எப்போதும் போல் அருமை.

    நல்ல கேள்விகள். அதற்கேற்ற நல்ல பதில்கள். குளிகை காலம் கிருஷ்ணர் சொன்ன பாப புண்ணிய கணக்கைப் போன்றது போலும்..!

    சகோதரர் நெல்லைத் தமிழர் அவர்களின் படமும் பதமும் பார்த்துப் படித்து ரசித்தேன்.

    இன்றைய கதை பகிர்வும் அருமை. "கொன்றால் பாவம் தின்றால் போச்சு." கதையாக திருடிய பாவம் நல்ல வழியில் பயன படுகிறது.
    பாவனா சொன்ன பங்கின் பெயர்( "அரோகரா பாங்க்") படித்து சிரித்து விட்டேன்.

    /பாபா உனக்கு முதல் வேலை இதுதான் - பாவனா அனுப்புகிற ஆனுவல் ரிப்போர்ட்களை துல்லியமாக ஆராய்ந்து எங்கேயாவது திப்பிச வேலை நடந்திருக்கா என்று சொல்" /

    இங்கேயும் திப்பிசங்கள் வந்து விட்டனவா.?:)) அனைத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  9. முதல் கேள்வியும் அதற்கான பதிலும் மிக அருமை.

    இது அவரவர் சௌகரியம், மனப்போக்கு. என்றாலும் உள்ளூர்க் கோயிலைப் புறக்கணிக்கக் கூடாது.

    சாப்பிடும் உணவு நம் நலனுக்காக. நல்ல ஆரோக்கியத்துக்காக. அது நமக்குப் பிடிச்சாற்போல் இருக்கலாம். என்ன தப்பு?

    அதே போல் தான் வீடும். எலிவளை ஆனாலும் தனி வளை தானே வேண்டும்?

    பொதுவாக இவை பலருக்கும் இருந்தாலும் பெரும்பான்மை மக்கள் அடக்கியே வாசிக்கின்றனர். இல்லைனா உலகம் முழுவதும் வெட்டும் குத்துமாக இருக்குமே. எல்லாம் அளவோடு இருந்துவிட்டால் பிரச்னை இல்லை.

    பதிலளிநீக்கு
  10. ஆசைகள் இருந்தாலும் புகழை எதிர்பார்த்ததே இல்லை. திட்டாமல் இருந்தாலே போதும்னு நினைப்பேன். மத்தபடி எளிதாகத் தூங்கும்போதே உயிர் போய்விட்டால் நல்லது என்னும் நினைப்பே எனக்கும் எல்லோரையும் போல இருக்கு. நோயின்றி இருக்கணும்னு இப்போப் போய் நினைக்க முடியாது. நோயின் பாதிப்புக் குறைந்தாலே போதும்.

    இஃகி,இஃகி,இஃகி,இஃகி. எனக்குத் தெரிஞ்சு எச்சில், பத்து பார்க்காதவங்க பலரும் கொரோனாவால் மாறினாங்க.

    பொதுவாகக் குளிகை எல்லாம் பார்ப்பதில்லை. நினைவிலேயே இருக்காது. அதே போல் எமகண்டமும். ராகுகாலத்தில் எல்லாம் வேலைகளை ஆரம்பிச்சிருக்கேன். ஒண்ணும் பிரச்னை இருந்ததில்லை. ஆனால் எங்க பெண் எல்லாமும் பார்ப்பாள். நான் அஷ்டமி, நவமி மட்டும் பார்ப்பேன். ஏனெனில் நாங்க ராஜஸ்தானில் இருந்து தமிழகம் வரச்சே 2,3 முறை அஷ்டமி, நவமி பார்க்காமல் வந்ததில் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தகவல்களுக்கு நன்றி.

      நீக்கு
    2. அந்தப் பிரச்சனைகளால் பதிவுகள் தேறினதா இல்லையா?

      நீக்கு
    3. அதானே கண்ட பலன். :))))

      நீக்கு
  11. ராமர் இருந்தார் என்பதே போதுமே.

    அவ்வளவாப் பிடிக்காது. ஆனால் இப்போல்லாம் ஓட்டலில் இருந்து வாங்கும் தயிர்சாதங்களில் கூட இவை கட்டாயமாய்ச் சேர்க்கப்படுகின்றன. ஆகவே அப்படி வாங்கும்போது அவற்றைச் சாப்பிட்டே ஆகணும்.

    மசூதிகள் மட்டுமல்ல, குருத்வாராவின் உள்ளே போகும்போது கூடத் தலையை மூடிக் கொள்ளணும். அமிர்தசரஸ் பொற்கோயில் போனப்போவும் இப்படித்தான் மூடிக் கொண்டு போனோம். நாங்க அஜ்மேர் மசூதி போயிருக்கோம் 2,3 முறைகள். ஜாம்நகரில் இருந்தப்போ இந்திய, பாகிஸ்தான் எல்லை அருகே ஹஜ்பீர் என்னுமிடத்தில் உள்ள ஒரு தர்காவும் போனோம். நம்மவருக்கு அந்த தர்காவில் வேண்டுதல் இருந்தது. Chaddhar சார்த்தினோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட! அப்படியா!

      நீக்கு
    2. ,,நாங்க அஜ்மேர் மசூதி போயிருக்கோம் 2,3 முறைகள். ஜாம்நகரில் இருந்தப்போ இந்திய, பாகிஸ்தான் எல்லை அருகே ஹஜ்பீர் என்னுமிடத்தில் உள்ள ஒரு தர்காவும் போனோம். நம்மவருக்கு அந்த தர்காவில் வேண்டுதல் இருந்தது. Chaddhar சார்த்தினோம்.//

      இந்த மாதிரி சங்கதிகளை ப்லாக்கில் எழுதினீர்களா! எழுதவில்லை என்றால்.. எழுத..லா..மே..!

      நீக்கு
    3. ஏகாந்தன், அதெல்லாம் எப்போவோ எழுதிட்டேனே. என்னோட ரயில் பயணங்கள் பற்றி மட்டும் சுமார் ஒரு பத்துப் பதிவாவது போட்டிருப்பேன். ராஜஸ்தான், குஜராத் அனுபவம், குஜராத் போனதுமே சில நாட்கள் அத்வானியின் ரத யாத்திரை, எங்க க்வார்டர்ஸ் அருகே இருந்த அந்த முக்கியக் குற்றம் செய்தவராகக் கருதப்பட்ட நபரின் வீடு, நான் விபரம் தெரியாமல் பால் வாங்க அந்தத் தெருவுக்குப் போனது, அவங்க வீட்டிலேயே பால் வாங்கினதுனு எல்லாமும் சொல்லி இருக்கேன்/இருப்பேன். ரத யாத்திரை அன்னிக்குப் பால் வரவில்லை. முதல் நாளே பால்காரர், ஏதோ "சேச்சே" என்று சொல்லிவிட்டுப் போனார். எனக்கு ஹிந்தியில் பேசுங்கனு சொன்னால் பேசலையேனு கோபம். மறுநாள் தான் விஷயம் தெரிந்தது. பொண்ணு சென்னையில் குயீன் மேரீஸில், பையர் ஜாம்நகர் ஐ.என்.எஸ்.வால்சுறாவில் இருக்கும் கேவி ஸ்கூலுக்குப் போய்விட்டார். நம்மவருக்குக் காடாறு மாசம், நாடாறு மாசம். அப்போ காடாறு மாச நாட்கள் என்பதால் புஜ் போயிட்டார். அவரைப் பிடிக்கிறதே கஷ்டம். நானும், பையரும் தான் வீட்டில். எங்க பகுதியிலிருந்து நகருக்குள் நுழையத் தனி வாசல் இருந்தாலும் தனியே போகத் தயக்கம். பின்னர் எப்படியோ கேட்டுக் கொண்டு போய்ப் பால் வாங்கி வந்தேன். வீரத்தமிழச்சி அல்லவா? பயப்படவெல்லாம் இல்லை. :))))

      நீக்கு
  12. உண்மைதான் நெல்லை.

    கதையில் நடுப்பறத் திருட்டு வேலை வேறேயா? என்னதான் ஏழைகளுக்கு என்றாலும் திருட்டுப் பணத்தில் உதவுவது எல்லாம் சரியாப் படலை. சொந்தப் பணத்தில் செய்வதே நல்லது. பொறுக்கி எடுத்த படம் நன்றாக இருக்கு.

    மேலே நெல்லை பகிர்ந்திருக்கும் படமும் ஓகே.

    துஷ்யந்த் ஸ்ரீதர் நான் அதிகம் கேட்டதில்லை. இப்படிச் சொல்லி இருக்கார் என்பதே இன்னிக்குத் தான் தெரியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // என்னதான் ஏழைகளுக்கு என்றாலும் திருட்டுப் பணத்தில் உதவுவது எல்லாம் சரியாப் படலை.// விதுர நீதி போல இது நாநா நீதி!

      நீக்கு
    2. // பொறுக்கி எடுத்த படம் நன்றாக இருக்கு// 'பொறுக்கி ' ஐயோ நாநா (நானா) !!

      நீக்கு
  13. /// கருத்துரைக்கு நன்றி..///

    எப்போதும் இது மட்டும்தான்...
    தொன்னையில் தயிர் சாதம் கொடுப்பதில்லை...

    சரி... இருக்கட்டும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன ஆச்சு? புரியவில்லை.

      நீக்கு
    2. தொன்னையில் தயிர் சாதம் வியாழன் வெள்ளிகளில் கிடைக்கும் என்று நம்புகிறேன்.  சரியா?  சில சமயம் செவ்வாயிலும்!

      நீக்கு
  14. எப்போதாவது விரிவாக கருத்து எழுதினால் கூட
    மூலவர் கண்டு கொள்வதில்லை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தயிர்சாதம் பற்றிய உங்கள் கருத்தை சொல்கிறீர்களா? தயிர் சாதத்தில் தயிர் சாதம் மட்டும்தான் இருக்கவேண்டும் என்ற உங்கள் கருத்தை சொல்லியிருக்கிறீர்கள். அதற்கு நான் வேறு என்ன பதில் சொல்வது?

      நீக்கு
    2. கடையில் வாங்கினால் செல்வாண்ணாவுக்கு பிடிக்காது என்றாலும் ஒன்று சொல்ல விரும்புகிறேன்.  சங்கீதா தேசி மனேயில் தயிர் சாதம் வாங்கினால் வெண்ணெய் வழிவது போல மென்மையாக க்ரீமியாக இருக்கும்.  வேறெதுவும் சேர்த்திருக்க மாட்டார்கள்.

      நீக்கு

  15. // என்ன ஆச்சு? புரியவில்லை.. //

    முன்பு கதைகள் எழுதிக் கொண்டிருந்த போது கதாபாத்திரங்களுட உரையாடிக்
    கொண்டிருப்பேன்...

    இப்போது அந்த வாய்ப்பு இல்லை... அதுதான் கருத்தின் வழி யாரும் வரமாட்டார்களா... என்று ஆதங்கம்..

    பதிலளிநீக்கு
  16. /// உங்கள் கருத்தை சொல்லியிருக்கிறீர்கள். அதற்கு நான் வேறு என்ன பதில் சொல்வது?.. ///

    நாகை வெளிப்பாளையத்து குறும்பை இப்போதெல்லாம் காண முடிவதில்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. :)))) வெளிப்பாளையம் பக்கம் போனதில்லை! காடம்பாடி,பார்ப்பனச் (பால்பண்ணைச்) சேரி வரைதான் என் குறும்பு!!

      நீக்கு
    2. வெளிப்பாளையத்தில் வீராசாமி ஐயர் என்பவர் லக்ஷ்மி விலாஸ்/நிவாஸ் என்னும் பெயரில் ஒரு ஓட்டல் வைத்திருந்தார். கிட்டத்தட்ட 86/87 வரை அந்த ஓட்டல் இருந்தது. அவர் திடீரென இறந்ததால் பிள்ளை கொஞ்ச நாட்கள் நடத்திப் பார்த்துப் பின்னர் மூடிவிட்டார்கள்.

      நீக்கு
    3. ஆம். வீராசாமி ஐயர் ஹோட்டலில் நான் சில சமயம் டிஃபன் சாப்பிட்டது உண்டு. அவருடைய ஹோட்டலில் பணிபுரிந்த பரசுராமன் என்பவர் என் பக்கத்து வீட்டில் குடியிருந்தார்.‌ (1970)

      நீக்கு
    4. சம்பந்தி முறை. வலிவலத்தில் விவசாயத் துறை அலுவலராக இருந்த என் மாமாவும் அவர் ஓட்டலில் தான் மூணு வேளையும் சாப்பிடுவேன் என்பார். நல்ல மனிதர். ரொம்ப நெருங்கிய பழக்கம். கர்வமே இல்லாத ஒரு மனிதர். எங்க மருத்துவர் P. சுகுமார் (Cardiologist)கூட அவரைத் தெரியும். அங்கே அடிக்கடி போய்ச் சாப்பிடுவேன் என்பார். பலருக்கும்/பலரையும் தெரிந்து வைத்திருந்த ஓர் நல்ல மனிதர்.

      நீக்கு
  17. வீராசாமி ஐயர் ஹோட்டல், நாகைபற்றி இங்கே சொல்லியிருப்பதைப் படித்தபோது, நான் டிஃபன், சில சமயங்களில் மதியச் சாப்பாடு சாப்பிட்ட புதுக்கோட்டையின் அந்தக்கால ஹோட்டல்கள் மனதின் மங்கலான திரையில் ஓடிக்காண்பிக்கின்றன!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனுபவங்களை எழுதி அனுப்பினால் எ பி யில் வெளியிடலாம்.

      நீக்கு
  18. பால் பண்ணைச் சேரியில் உறவினர் வசிக்கின்றனர்...

    பதிலளிநீக்கு
  19. பால்பண்ணைச் சேரியில் வெள்ளரிக்கா (வெள்ளெருக்கை?) மண்டபத்துக்குப் பின்னால் உள்ள தெருவில், நடேச பிள்ளை என்பவரின் வீட்டிற்கு அடுத்து இருந்த ஒரு ஏக்கர் தோட்டம் அந்தக் காலத்தில் (1963-72) என் அப்பா வாங்கியிருந்தார். காய்கறிகள் பயிர் செய்து, விளைந்த காய்கறிகளை அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு மலிவான விலைக்கு விற்று வந்தோம். லாப நோக்கு கிடையாது.

    பதிலளிநீக்கு
  20. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  21. கேள்விகளும், பதில்களும் அருமை.

    //ஒரு கட்டத்தில் சிரமமின்றி, அடுத்தவருக்கும் கஷ்டம் இன்றி நம் உயிர் போக வேண்டும் என்ற ஆசையும் எல்லோருக்கும் இருக்கக்கூடும்.//

    வயதானவர்கள் எல்லோருக்கும் இந்த நினைப்பு வரும் தான். நான் தினம் நினைத்து கொள்வது இதுதான். இறைவன் கணக்குப்படித்தான் எல்லாம் நடக்கும் இருந்தாலும் நினைப்பு வராமல் தடுக்க முடியவில்லை.

    பதிலளிநீக்கு
  22. பஹ்ரைனில் உள்ள மிகப் பெரிய பள்ளிவாசல் பார்க்க நன்றாக இருக்கிறது. அம்மாவின் நினைவுகளை தந்த பள்ளிவாசல்.

    பதிலளிநீக்கு
  23. கதை நன்றாக இருக்கிறது.

    டாக்டரிடமிருந்து பணம் கையாடல் செய்தது குற்றமல்ல என்று காரணங்கள் கூறியது

    இருக்கிறவர்களிடம் எடுத்து இல்லாதவர்களுக்கு கொடுக்கும் நல்ல உள்ளம் என்று நினைத்தால்

    "// இல்லை. இது எனக்கு பொழுதுபோக்கு. எப்பவாவது போர் அடித்தால் ஒரு கிக்குக்காக செய்வேன்" //

    இப்படி கிக்குக்காக செய்வேன் என்று சொல்லி விட்டாரே!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!