2.9.26

பெண்கள் வீட்டிலிருந்து அலுவலக வேலைகள் செய்வது வரமா இல்லை சாபமா? + சரோஜாதேவி பகுதி 14.

 

கேள்வி பதில்கள் :

கீதா சாம்பசிவம்: 

"கோடி(Godi) மீடியா என்றால் என்ன?

# அரசின் செல்லப் பிள்ளையாக மடியில் அமர்ந்து அரசின் புகழ் பாடி லாபம் பார்ப்பது. விமர்சிக்கிறவர்களை நியாய அநியாயம் பாராமல் தரம் தாழ்ந்து தாக்குவது.

அடிக்கடி "பூமர்" "பூமர்" என்கிறார்களே? பூமர் என்றால் என்ன? 

  • பழைய தலைமுறையைச் சேர்ந்தவர்
  • பழைய கால சிந்தனை கொண்டவர்
  • புதிய தொழில்நுட்பங்கள் அல்லது சமூக மாற்றங்களைப் புரிந்துகொள்ளாதவர் என்று கேலி செய்ய
  • “இன்றைய காலத்துக்கு ஏற்றவாறு சிந்திக்கவில்லை” என்று சொல்ல

உதாரணமாக, ஒருவர் புதிய தொழில்நுட்பத்தைப் பற்றி புரியாமல் பேசினால், இளைஞர்கள் “OK, Boomer!” என்று கிண்டலாகச் சொல்லலாம்.

என்ன வயதாக இருந்தாலும், boomer என்றால் பழைய பஞ்சாங்கம்! 

இந்தக் கரப்பான் பூச்சிகள் எல்லாமும் பிஜேபி ஆளும் மாநிலங்களில் மட்டும் போய்த் தகராறு செய்வதும் அமைச்சர்களை ராஜினாமா பண்ணச் சொல்லுவதும் சரியா?  மற்றப் பிரச்னை உள்ள மாநிலங்களுக்குப் போக மாட்டேன்னு அடம்.

கரப்புக்கள் எல்லாம் வெளிநாட்டுப் படிப்பு, வெளிநாட்டு வாசம். ஆனால் இங்கே உள்ள பெரிய பெரிய பணக்காரக் குழந்தைகள்/ அமைச்சர்கள் அரசியல்வாதிகளின் குழந்தைகள் படிப்பதை எல்லாம் பொருட்படுத்தாமல் பிஜேபிக்காரங்க குழந்தைங்க வெளிநாட்டில் படிச்சால் மட்டும் ஏன் கண்டிக்கின்றனர்? பொதுவாக எல்லோரையும் இந்தியாவிலேயே படிங்கனு சொன்னால் அது நியாயம். ஆனால் இங்கே மத்தவங்க படிப்பைப் பத்திக் கவலைப்படாமல் குறிப்பிட்ட கட்சிக்காரங்க குழந்தைங்க மட்டும் படிக்கக் கூடாது என்பது விநோதமாக இருக்கே?

இவங்களுக்குத் தனிப்பட்ட முறையில் ஆளும் கட்சியோ, அரசோ, அல்லது அரசு அதிகாரிகளோ எந்தவிதத் தொல்லைகளும் கொடுத்ததாகத் தெரியலை. முன்பகையும் இருப்பதாகத் தெரியலை. ஆனாலும் ஏன் இவங்க எல்லோரும் ஆளும் கட்சியையே எதிர்க்கிறாங்க?

# கோடி மீடியா பல்கிப் பெருகினால் கரப்பான்பூச்சி கட்சி இயல்பான பின்விளைவு. நியாயமாக எதிர்க்க முடியாதபோது எப்படியாவது  எதிர்த்தாக வேண்டும்.

& ஆளும் கட்சியை எதிர்த்தால்தான் விளம்பரம் பெரிய அளவில் கிடைக்கும். 

நெல்லைத்தமிழன் : 

1. வீட்டிலிருந்தே அலுவலக வேலை செய்வதால் ஆண்கள் இழப்பது என்ன? அவர்களது மனைவி இழப்பது என்ன? 

# கணவர் அல்லது மனைவி தரும் சின்னச் சின்ன எரிச்சல்களிலிருந்து நிவாரணம்.

2. பெண்கள் வீட்டிலிருந்து அலுவலக வேலைகள் செய்வது வரமா இல்லை சாபமா?

# வீட்டிலிருந்தே வேலை என்பது பெண்களுக்கு நிச்சயம் வரம்தான். உங்களுக்கு ஏன் அப்படித் தோன்றவில்லை ?

3. வீட்டில் மனைவியும் வேலை செய்வதால்தான் வேலையில்லாத் திண்டாட்டம் பெருகியிருங்கிறதா? அதற்காக செக்யூரிட்டி வேலை பார்ப்பவர் மனைவியும் ஏதோ வேலை செய்து பொருளீட்டுவதைத் தவறாச் சொல்லலை. 

# அவரவர் தகுதிக் கேற்ப வேலை தேடிக் கொள்ளாமல் இந்தக் காலத்தில் சமாளிக்க இயலாது. எனவே இருபாலரும் வேலை பார்ப்பது சரிதான்.

4. இரண்டு ப்ரொஃபஷனல்கள் திருமணம் செய்துகொள்வதால் நன்மைகள் அதிகமா இல்லை தீமைகளா? உதாரணமாக இரண்டு ஐடி வேலை செய்பவர், மருத்துவர் பட்டயக் கணக்காளர், பாடகர்கள், நடிக நடிகையர் (கௌதமன் சாருக்கு படம் பகிர வாய்ப்பு) போன்று. 

# ஓய்வே இருக்காது என்ற ஒரு பிரச்சினைதான்.

& நடிக / நடிகர் ஜோடிகளில், எனக்குத் தெரிந்து பிரகாசித்த ஜோடி என்றால், ஜெமினி கணேசன் + சாவித்திரி மட்டும்தான் ஞாபகத்திற்கு வருகிறார்கள் எஸ் எஸ் ஆர், விஜயகுமாரி, ஏ வி எம் ராஜன் புஷ்பலதா அடுத்துச் சொல்லலாம். மீதி ஜோடிகள் கல்யாணத்திற்குப் பிறகு - பெரும்பாலும் நடிகைகள் - நடிப்புக்கு முழுக்குப் போட்டுவிட்டார்கள் - ஸ்னேகா / பிரசன்னா போன்று. படம் போடுவதற்கு ஒன்றும் வாய்ப்பு இல்லை!! 

5. Brother in law wife என்ன பெயரில் உறவு வரும்?  ஷட்டகர் என்பது என்ன மொழி? தமிழில் அந்த உறவின் பெயர் என்ன?

# மச்சினன் மனைவி என்று சொல்லிவிடலாம்.

எல்லா உறவுக்கும் தெளிவான பெயர் கிடையாது.

& சென்னை வந்த புதிதில் என் மன்னியின் அண்ணன் ஊரிலிருந்து வந்திருந்தார். என்னை அழைத்துக்கொண்டு அவர் உமா டாக்கீஸ் போகலாம் என்று கிளம்பினார். நாங்கள் இருவரும் உமா டாக்கீஸ் நோக்கி சென்றபோது, எதிரில் வந்த என் நண்பர், ' இவர் யார்? ' என்று கேட்டார். எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. மன்னியின் அண்ணன் நகைச்சுவை மன்னன்! அவர் சொன்னார் - டேய் நான் யாரு என்று யாராவது கேட்டால் " ஆச்சானுக்குப் பீச்சான்; மதனிக்கு நேர உடன் பிறந்தான்"   என்று சொல்லு என்றார்! 

அது போல  Brother in law wifeக்கு ஏதாவது கண்டுபிடிக்கலாம்! ஷட்டகர் என்ற சொல், தெலுங்கு அல்லது கன்னட மூலம் கொண்டதாக இருக்கலாம். 

Telugu: ṣaddhakudu

Kannada: ṣaddaka

தமிழில் : சகலர் அல்லது சகலை! 

= = = = = = = =

படமும் பதமும் : 

நெல்லைத்தமிழன் : 


திற்பரப்பில், (நாகர்கோயில் அருகே) நீர்வீழ்ச்சிக்குப் பின்புறத்தில் இந்த மாதிரி பெரிய நீர்நிலை உண்டு. கரை அருகே நிறைய தாழம்பூச் செடிகள் உண்டு. அங்கு நாமே கால்களால் இயக்கக்கூடிய இருவர் அமர்ந்து செல்லும் போட்டுகள் boats உண்டு. நானும் என் மகளும் அப்படி, அவளின் ஆசைக்காக சிறிது தூரம் சென்றிருக்கிறோம். ஆனால் எனக்கு ரொம்ப பயம். ஏதேனும் ஆகி படகு கவிழ்ந்தால் எப்படி மகளைக் காப்பாற்றுவது? அதனால் திரும்பி கரைக்கு வெகு விரைவாக வந்துவிட்டோம்.  சும்மா ஒரு அனுபவத்திற்காகத்தான் சென்றோம் என்று சொல்லிவிட்டேன்.  ஒரு வருடத்திற்கு முன்னால் அவள் சொன்னாள், சின்னக் குழந்தைகளின் மனதில் பயத்தை உண்டாக்கக்கூடாது. தைரியமா எதுலயும் ஈடுபட வைக்கணும். பயம் உண்டாச்சு என்றால் பிற்காலத்திலும் அந்த பயம் போகாது என்றாள். அப்படித்தான் அறிவியல் சோதனைகள் சொல்கின்றனவாம்.   அது சரி... நம் குழந்தை மேல் நமக்கு இருக்கும் அக்கறை வேறு யாருக்கு இருக்கும்? ஒருவேளை அந்த அறிவியல் முடிவுகள் தவறாக இருந்தால் யாருக்கு நஷ்டம்?


இப்போ இந்தப் படத்தைப் பார்த்தாலும், ஐயோ..அவ்வளவு தூரம் எந்தத் தைரியத்தில் போனோம் என்று தோன்றும். ஒருவேளை முதலை வந்தால்? ஒரு வேளை போட் கவிழ்ந்தால்? ஒருவேளை இடையில் பாறையில் மோதினால்?   இப்படீல்லாமா பயப்படுவது என்று கேட்கிறீர்களா? அதுவும் சரிதான். 

= = = = = = = = =

KGG பக்கம் : 

சரோஜாதேவி தொடர் கதை 

சென்ற வாரம் - சுட்டி : 

இனி 

இந்த வாரப் பகுதி. 

பகுதி 14: பெண் பார்க்கும் படலம்! 

தன் வீட்டிற்கு வந்து சேர்ந்த பாபா, எதிர் வீட்டிற்கு அன்று மாலை அவர்கள் எல்லோரும் அலுவலகத்திலிருந்து வீடு வந்து சேர்ந்ததும் சென்றான். 

ஜெயராமன் பாபாவை வரவேற்று, பேசிக்கொண்டிருந்தார். 

பாபா, தன்னுடைய பிசினஸ் பார்ட்னர் நாநாவின் நண்பன் ஆனந்த் பற்றியும் பற்றியும், ஆனந்தின் பெற்றோர் கோவையிலிருந்து மறுநாள் மாலை வருவார்கள் என்று சொன்னான். ஆனந்துக்கு வீணாவை மிகவும் பிடித்துப் போனதால், ஆனந்தின் பெற்றோர்கள் தாங்களும் வீணாவைப் பார்க்கவேண்டும் என்று வருகிறார்கள். 

அவர்கள் இங்கே வந்தபின், ஆனந்த் வீடியோகால் வழியாக அழைப்பான் என்றும், அதன் பின் வீடியோ கால் வழியாக வீணாவும் ஆனந்தும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளலாம் என்றும், வீணாவுக்கு ஆனந்தைப் பிடித்திருந்தால், மேற்கொண்டு இரண்டு குடும்பங்களும் சம்பந்தம் பற்றி பேசி முடிவெடுக்கலாம் என்றும் கூறினான். 


****    ******  ***** 

மறுநாள் மதியம், ஆனந்தின் பெற்றோர், நாநா எல்லோரும் பாபாவின் வீட்டிற்கு வந்தார்கள். 

பாபாவின் காரில் நால்வரும் புறப்பட்டு, திருவல்லிக்கேணி கோவில் அருகே உள்ள கடைகளில், வெற்றிலை, பாக்கு, பழங்கள், பூ எல்லாம் வாங்கிக்கொண்டு, கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்து பிறகு வீட்டிற்குத் திரும்பினர். 

மாலையில் நால்வரும் ஜயராமனின் வீட்டிற்குச் சென்றனர். 

ஜெயராமன் எல்லோரையும் வரவேற்றார். பரஸ்பர அறிமுகங்கள் முடிந்தன. 

ஆனந்தின் அப்பா, " இது சம்பிரதாயமான பெண் பார்க்கும் படலம் இல்லை. ஒரு ஆரம்ப அறிமுக சந்திப்பு மட்டுமே. வீணாவையும் கூப்பிடுங்க எல்லோரும் கொஞ்ச நேரம் உட்கார்ந்து பேசுவோம். பிறகு, ஆனந்தை வீடியோ காலில் அழைக்கிறேன். கொஞ்ச நேரம் நாம் ஒவ்வொருவரும் ஆனந்துடன் பேசுவோம்.  அதற்குப் பின், ஆனந்துடன் மொபைல் போனில் வீணா பேசட்டும்" என்றார். 

ஜெயராமன், " சம்பிரதாயமான விஷயம் இல்லை என்றாலும், வீணாவும் விமலாவும் பஜ்ஜி, சொஜ்ஜி காபி எல்லாம் தயார் செய்துள்ளார்கள். அதை முதலில் சாப்பிடுவோம்" என்றார். 

ஆனந்தின் அப்பா, " முதலில் உங்க பெண்களைக் கூப்பிடுங்க. கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருப்போம். பிறகு டிஃபன் காபி சாப்பிடுவோம்" என்றார். 

ஜெயராமன், வீணா விமலா இருவரையும் ஹாலுக்கு அழைத்தார். 

இருவரும் வந்தனர். 

அவர்கள் இருவரையும் பார்த்த ஆனந்தின் அப்பா அம்மா இருவரும் " ஆஹா உங்க பெண்கள் இருவரும் திவ்யமா இருக்காங்க" என்றனர்.  "பச்சைப் புடவை கட்டியிருப்பதுதான் வீணா என்று நினைக்கிறேன். சரிதானே? " என்றார் ஆனந்தின் அம்மா. 

ஆனந்தின் அப்பா," என்னுடைய தம்பியின் பையன் ஒருவன் இருக்கிறான். அவனுக்கு விமலா சரியான ஜோடியாக இருப்பாள் என்று நினைக்கிறேன்." என்றார். 

பாபா நெளிய ஆரம்பித்தான். நாநாவிடம் இரகசியமாக " டேய் - இவரு திடீரென்று ரூட்டை மாற்றுகிறார். ப்ரேக் போடு " என்றான். 

நாநா, ஆனந்தின் அப்பாவிடம், " சார், இப்போ நாம வந்திருப்பது ஆனந்த் - வீணா கல்யாணம் பற்றி பேச. மீதி எல்லாவற்றையும் பிறகு பாரத்துக்குவோம்" என்றான். 

" அதுவும் சரிதான்" என்றார் ஆனந்தின் அப்பா. 

டிஃபன் வந்தது. 

எல்லோரும் ரசித்துச் சாப்பிட்டார்கள். 

" பஜ்ஜி கொஞ்சம் காரம் அதிகம், ஆனால் சொஜ்ஜி சாப்பிட்டவுடன் அந்த காரம், அந்தகாரம் ஆகியது. காபி சாப்பிட்டவுடன் அதன் சுவையில் மீதி எல்லாமே காணாமல் போய்விட்டன " என்றார் ஆனந்தின் அப்பா. 

(இன்றைய கதை சப் சப் என்று இருந்தது என்று கீ சா மேடம் கருத்துரை எழுதமுடியாது! பாருங்க இப்போ உப்பு, காரம், இனிப்பு எல்லாம் இருக்கு!)

ஆனந்தின் அப்பா ஆனந்தை வீடியோ காலில் அழைத்தார். 

அங்கு இருந்த ஒவ்வொருவருடனும் ஆனந்த் கொஞ்ச நேரம் பேசினான். பிறகு வீணா தனி அறைக்குச் சென்று ஆனந்துடன் அரைமணி நேரம் பேசினாள். 

வீணா திரும்பி வரும்வரை அறையில் இருந்த எல்லோரும் சந்தோஷமாக உரையாடிக்கொண்டு இருந்தனர். 

(தொடரும்) 


13 கருத்துகள்:

  1. கேள்விகள் கேட்கும் விதத்திலேயே அந்தக் கேள்விக்கான பதில் என்னவாக ஒ
    இருக்கும் என்று வாசிப்பவருக்கு ஆர்வமூட்டும் விதத்தில் இருந்தால் சுவாரஸ்யமாக இருக்கும்.
    உதாரணத்திற்கு ஒரு கேள்வி.
    இந்தியாவில் சூரியன் உதிக்கும் திசை கிழக்கு என்று நம் எல்லோருக்கும் தெரியும். எல்லா நாடுகளிலும் சூரியன் கிழக்கில் தான் உதிக்கிறதா? இல்லை, இதில் வேறுபாடு ஏதேனும் உண்டா?

    பதில் நம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான் என்றாலும் அந்த கேள்வியை அமைத்த முறையில் ஒரு.மாறுபாடு இருக்கிறது. அது தான் கேள்விகள் எழுப்புவதில் இருக்கும் சாமர்த்தியம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேட்பவர்கள் என்ன நினைக்கிறார்களோ. அவர்கள் என்ன கேட்கவேண்டும் என்பதையோ எப்படி கேட்கவேண்டும் என்பதையோ நாம் கூறினால் கேள்வி கேட்கும் சுதந்திரத்தை நாம் பறிப்பதாக ஆகிவிடும். எனவே, யார் என்ன வேண்டும் என்றாலும் எப்படி வேண்டுமானாலும் கேட்கட்டும்.

      நீக்கு
  2. என்னுடைய முதல் கேள்வி புரியவில்லையா அல்லது அது பற்றிய அனுபவம் உடையவர்களைத் தெரியவில்லையா? சின்னச் சின்ன எரிச்சல்களிலிருந்து எப்படி நிவாரணம் கிடைக்கும்?

    காலையில் எழுந்து அரக்கப் பறக்க கணவனுக்கும் குழந்தைக்கும் எல்லாம் செய்து, ஒன்பது மணிக்குள் அவர்கள் குளம்பியதும் கொஞ்சம் ஓய்வு எடுத்து, சீரியல்கள் பார்த்து, மெதுவாக வீட்டு வேலைகள் முடித்து (துணிகள் தோய்ப்பது, மாவு அரைப்பது, காய்ந்தவற்றை மடிப்பது போன்று) பிறகு மாலை நான்கு மணி அளவில் அவர்களுக்கான உணவைத் தயார் செய்து... என்று நாள் கழியும். கணவன் வீட்டில் அறையில் ஆபீஸ் வேலை பார்த்தால் அவளுக்கென்ற நேரம் கிடைக்குமா?

    கணவன் வீட்டிலேயே வேலை பார்த்தால், பலரிடம் பழகுவது, நேருக்கு நேர் எல்லாவற்றையும் பகிர்வது, என்று பலவற்றையும் இழப்பான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இவ்வளவு நேரம் தெளிவாக இருந்தேன். இப்போ குழப்பிட்டீங்க.

      நீக்கு
  3. பெண்கள் வீட்டிலிருந்து வேலை செய்வது வரமல்ல. வீடே சிறையாகி விடும். வீட்டு வேலை, அலுவலக வேலை, மற்றவர்களைப் பார்த்துப் பழக முடியாமை, வெளிடம் போகும் வாய்ப்பு இல்லாமை என அவளுக்குக் கஷ்டங்கள் அதிகமாகிவிடும் என்பது என் எண்ணம்.

    என்ன ஒண்ணு, இடையில் டபாய்த்துவிட்டு உணவு தயார் செய்துகொண்டிருக்கலாம், கணவன் வரும்போது இருவரும் உடனே சேர்ந்து உண்ண

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்குத் தெரிந்து வொர்க் ஃப்ரம் ஹோம் என்பது எல்லா நாளிலும் நிகழ்வது அல்ல. ஒரு மாதத்தில் சில நாட்கள் மட்டுமே நிகழ்வது.

      நீக்கு
  4. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  5. வீட்டிலிருந்து வேலை செய்வதில் இருக்கும் ஒரே ஒரு நன்மை அரக்க பரக்க கிளம்ப வேண்டாம் என்பது மட்டுமே. என் மகன் வீட்டிலிருந்தபடி வேலை பார்த்த ஒரு நாள் நான் வழுக்கி விழுந்து விட்டேன். அவன் வந்து எழுப்பி விடுவான் என்று எதிர்பார்த்தேன், காலில் இருந்த அவன் பத்து நிமிடம் கழித்துதான் வந்தான்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!