7.10.26

கண் காணாத இயற்கை இடத்திற்குச் செல்லவேண்டும் என்ற ஆசை இருக்கிறதா? + சரோஜாதேவி தொடர்கதை பகுதி 19.

 

கேள்வி பதில்கள் : 

நெல்லைத்தமிழன் : 

1 பெரிய புகழ் வெளிச்சத்தில் இருந்துவிட்டு, அந்த புகழ் வெளிச்சம் மறைந்ததும், பிறரால் ஒதுக்க அல்லது உதாசீனப்படுத்தப் படும்போது அவர்கள் உள்ளம் எப்படி இருக்கும்? ஒரு தடவை பி.பி.ஸ்ரீநிவாஸ் பேச்சை ஆரம்பித்தவுடன் உடனே முடிக்கச் சொன்னதைக் கேட்டு அவர் வருத்தப்பட்டதை காணொளியிலோ இல்லை தொலைக்காட்சியிலோ பார்த்ததனால் இந்தக் கேள்வி  

#  புகழ் என்பது ஒரு போதை மாத்திரை.  கிக் இறங்கினால் அடுத்த டோஸ் ஏற்றிக் கொள்ளத் தோன்றும்.  அடுத்த டோஸ் கிடைக்கும் வரை பிரச்சனை இல்லை. 

ஆனால் பாதாம் அல்வாவே ஆனாலும் (இந்த பாதாம் அல்வா என்ன உயர்த்தியோ அந்த கடவுளுக்குத்தான் வெளிச்சம்.  என்றாலும் வேற நல்ல உதாரணம் கிடைக்கவில்லையே என்ன செய்ய ? ) தினமும் மூன்று வேளை 30 நாள் சாப்பிட்டால் அதற்குப்பின் அதன் மூஞ்சியில் முழிக்கத் தோன்றுமா என்ன ? 

" All good things must come to an end and even the best of friends will have to depart" என்று ஒரு அருமையான பழமொழி ஆங்கிலத்திலே இருக்கிறது. 

புகழ் வெளிச்சத்திலிருந்து நாம் வெளியேற்றப்படும்  தருணம் வந்துவிட்டது என்று தெரியும்போது மனம் உடைந்து போவது இயற்கைதானே.  

ரொம்ப முயற்சி எடுத்து அந்த புகழையும் பெயரையும் தக்க வைத்துக் கொள்ளப் போராடி வெற்றி பெற்றவர்களில் அமிதாப் பச்சனையும் நம்ம ரஜினிகாந்த்தையும் உதாரணமாகச் சொல்லலாம். 

ஆனால் எல்லாருக்கும் அந்த நல் வாய்ப்புக் கிடைப்பதில்லை.  முயற்சிகள் தோல்வியுறும்போது சலிப்பு மேலிட்டு தம் வாழ்வை நாசமாக்கிக் கொண்டவர்களும் உண்டு. இதற்கு உதாரணம் சொல்ல எனக்கு மனம் இல்லை. 

பொது வெளியில் புகழ்பெற்ற ஒருவர் தாம் அடையாளம் காணப்படாத போது மிகவும் நொந்து நூலாகிப் போகிறார். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம் என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் வேண்டுமா என்ன ?

2.இமயமலை அல்லது வேறு கண் காணாத இயற்கை இடத்திற்குச் செல்லவேண்டும் என்ற ஆசை இருக்கிறதா? பத்து நாட்களாவது இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கையை அனுபவிப்போம் என்று தோன்றியிருக்கிறதா?  

# நிச்சயம் பலமுறை தோன்றியிருக்கிறது. காஷ்மீர், மானசரோவரம், இப்படிப் பல இடங்கள்.

& முன்பு தோன்றியது உண்டு. இப்போ எல்லாம் தோன்றுவது இல்லை. அங்கே எல்லாம் மெடிக்கல் ஷாப் இருக்குமா, எனக்கு வேண்டிய மருந்துகள் கிடைக்குமா என்ற சந்தேகம்தான் காரணம்! 

3.தம்முடைய குழந்தைகளுக்குத் திருமணம் ஆகிவிட்டால், ஒருவர், என்ன என்னவற்றை விலக்க வேண்டும்? எதில் எதில் தலையிடக் கூடாது? 

# அவர்களைப் பொறுப்புள்ளவர்களாக நாம் வளர்த்திருந்தால் அவர்களுக்கு Sovereign Democratic Republic அந்தஸ்தைக் கொடுத்து, ஒதுங்கி விட வேண்டும்.

4.நாம் நம் பெற்றோரிடம் கொஞ்சம் அடங்கி இருந்தது போல, பொறுமை காத்தது போல, இப்போதைய தலைமுறை இருக்கிறார்களா? இல்லை நாமே அப்படி இருந்ததில்லையா? 

# நாம் அப்படி நினைப்பது உண்மைதான். ஆனால் உண்மையில் நாம் அப்படி இருந்தோமா என்பது கேள்விக்குரியதாகத்தான் நான் நினைக்கிறேன்.  நம் பெற்றோர் இதை ஆமோதிப்பார்களானால் அதை நம்பலாம்.

5.நம்முடனேயே நம் பையன் இருக்கவேண்டும் (திருமணம் ஆன பின்பும்) என்று எண்ணுவது சரியா இல்லை அவன் வாழ்க்கையை அவனே வாழ வேண்டும், நாம் அவனுடன் சேர்ந்து இருந்து தொந்தரவாக இருக்கக் கூடாது என்று எண்ணுவது நல்லதா?

# இரண்டுமே ஒவ்வொரு சூழ்நிலையில் சரியாக இருக்கும்.  பையன் பெண் இவர்களின் மனப்பக்குவம், பொருளாதார நிலை, பெற்றோர்களின் வயது- உடல் வலு- பணவசதி என்று பல காரணிகள் இருக்கின்றன.

= = = = = = = = =

படமும் பதமும் : 

நெல்லைத்தமிழன் : (கேள்விகள்!) 



வநதே பாரத்தில் திருச்சியிலிருந்து பெங்களூர் செல்லும்போது பச்சூர் இரயில் நிலைய மேடையில் கண்டது. இதைப் பார்த்ததும் மனதில் கவிதை தோன்றுகிறதா? எழுதுங்களேன். 


இந்தச் செய்தியை தினமலரில் பார்த்தேன். என்ன இப்படிப் பண்ணறாங்க தவறல்லவா என்று என் மனதுக்குப் பட்டது. மனிதர்கள் தங்கள் உடலில் அலகு குத்திக்கொள்வது, கத்தியால் வெட்டிக்கொண்டு இரத்தம் சிந்துவது (கோவை சௌடேஸ்வரி அம்மன்) போன்றவைகளே கலவரப்படுத்தும். விலங்குகளுக்குமா? உங்கள் கருத்து என்ன?

பானுமதி வெங்கடேஸ்வரன் : 



பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தின் வருகை(arrival) பகுதியின் வெளிப்பகுதியில் இருக்கும் சிற்பம்.       

இதன் வயிற்றுப் பகுதிக்குள் சென்று புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள். 

இந்தியாவின் பல்வேறு பிராந்திய மொழி எழுத்துக்களும், எண்களும் இந்த சிற்பத்தில் இருக்கின்றன. 

பெங்களூரின் தொழில்நுட்ப வளர்ச்சியால் இங்கு எல்லா மாநில மக்களும் வசிப்பதைத்தான் இந்த சிற்பம் குறிக்கிறது என்று தோன்றியது. என் யூகம் சரிதான் என்று அருகிலிருந்த அறிவுப்பு பலகை சொன்னது.

=================================================================================

ஸ்ரீராம் :

ஆமாம் பிரதர்... ஒரு காது இல்லை... என்ன செய்யச் சொல்றீங்க...?



========================================================================



மனசாட்சியம் - 7
KGY Raman

சில நாட்களுக்கு முன் இந்தப் பகுதியில் வெளியான பதிவில் பல எழுத்துப் பிழைகள் இருப்பதைப் பார்த்து, அவற்றைத் திருத்தப் புகுந்து,  அப்போதும் ஒரு சில மட்டுமே திருத்தம் பெற்று கவனத்திற்குத் தப்பிய வேறு சில  இருந்ததையும்  கண்டு வியப்புற்றேன்.

தானியங்கித் தட்டச்சு செய்யும் தவறுகள் சில சமயம் சொல்ல வந்த  பொருளையே முற்றிலும் வேறாக ஆக்கிவிடும்.  

என் கவனக்குறைவு எவ்வளவு அதிகம் இருக்கிறது என்பது இப்போதுதான் எனக்கு உறைத்தது. இனி வரும் நாட்களில் எந்த அளவுக்குத் தவறுகள் இல்லாமல் பதிவிடுகிறேன் என்பதைப் பார்ப்போம். 

அச்சுப்பிழை என்பது காலம் காலமாக இருந்து வருகிறது. டைம்ஸ் பத்திரிகையில் காணப்பட்டஅச்சுப் பிழைகளைத் தொடர்ந்து வாசகர்கள் ஆசிரியருக்குக் கடிதங்களாக எழுதிக் கொண்டிருந்ததைப் பார்த்து அந்தப் பத்திரிகை  இப்படி ஓர் அறிவிப்பை வெளியிட்டதாம்:

" இன்றைய இதழில் சில அச்சுப் பிழைகள் வேண்டுமென்றே உங்களுக்காகச் செய்யப்பட்டுள்ளன. அச்சுப்பிழைகளைக் கண்டு, அவற்றை எமக்குச் சுட்டிக்காட்டி ஆனந்தமடையும் நமது அன்பான வாசகர்கள் ஏமாற்றம் அடையக் கூடாதே என்கிற நல்லெண்ணத்தில் இந்தப் பிழைகள் செய்யப்பட்டுள்ளன. "

இது ஒரு சமாளிப்பு யுக்தி தான். என்னதான் எச்சரிக்கையாக இருந்தாலும் பிழைகளை அறவே நீக்க முடியவில்லை என்பதே நிதர்சனம்.

***

"எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு" 

இப்படி ஒரு குறள்  இருப்பதாக எனக்கு நினைவு. சொற்களில் ஏதோ சிறு பிழைகள் இருக்கலாம் எனினும் பொதுவான பொருள் சரியாகவே சொல்லி இருக்கிறேன். 

யார் சொன்னால் என்ன, அதில் இருக்கும் உண்மையைப் புரிந்து கொள் என்பது சொல்வதற்கு எளிது.  நடைமுறையில் நம் மனப்பான்மை வேறு விதமாக இருக்கிறது. 

நான் தினசரி ஒரு அரை மணி முக்கால் மணி நேரம்  வேதாந்த வகுப்பிலே ஆன்லைனில் பங்கு கொண்டு வருகிறேன். கடவுள், ஆச்சாரம், அனுஷ்டானம், நமது சாஸ்திரங்கள் என்று பரவலாகப் பல விஷயங்களைப் பற்றி இங்கே சொல்லப்படும். இங்கு குரு நாதராக இருப்பது நான் இல்லை. 

அமெரிக்காவில் இருக்கிற ராமகிருஷ்ண மடத்தில் சர்வப்பிரியானந்தா என்று ஒரு சாது இருக்கிறார். வேதாந்த பரமான பல விஷயங்களைப் பற்றி அவர் மிக விளக்கமாக, மிகத் தெளிவாக ஆங்கிலத்தில் பேசி அவை யாவும் யூடியூபில் காணக் கிடைக்கின்றன. பகவத் கீதை, உபநிஷதங்கள் பற்றி அற்புதமாகப் பேசியிருக்கிறார். 

சர்வ பிரியானந்தரின் இந்தப் பேச்சுக்களை நாம் அனைவரும் பார்த்துப் பயனடையலாம் என்று எங்கள் வகுப்பில் நான் சொன்ன போது, குருநாதருக்கு அது உவப்பாக இல்லை. " ராமகிருஷ்ண மடத்தின் வழி வேற,  நாம் இங்கு செய்வது வேற " என்கிற ரீதியில் எனக்குப் பதில் சொல்லி, அதை முற்றுமாக ஒதுக்கி வைத்து விட்டார். 

வேதாந்தத்துக்கே இந்த கதி என்றால், இலக்கியம், அரசியல், சினிமா இந்தக் களங்களிலெல்லாம்  பிடித்தது பிடிக்காதது என்பது எந்த அளவுக்கு நல்ல விஷயங்களைப் புறம் தள்ளும்  என்பதை நாம் சிறிது யோசனை செய்து பார்க்க வேண்டும்.

" ரிஷிமூலம்,  நதிமூலம் பார்க்கக் கூடாது "  என்று சனாதனம் உபதேசிக்கிறது. (சனாதனம் என்ற சொல்லைக் கேட்ட உடனேயே நம்மில் பலர் நிமிர்ந்து உட்கார்ந்து ஒரு பெருமூச்சு விட்டுக் கொள்வோம் .  பாவம் இந்த சனாதனம். அதற்கு இப்படி ஒரு அவஸ்தை வந்திருக்க வேண்டியது இல்லை.)

விஷயம் என்ன என்று கவனிக்க வேண்டுமே தவிர, அதைக் கொண்டு வந்தது யார், அவர் என்ன உடுத்தி இருந்தார் என்பது போன்ற அனாவசிய ஆராய்ச்சிகள் செய்யக்கூடாது. அதனால் பயனேதும் இல்லை."  இதுதான் நமது பாரம்பரியம் நமக்கு சொல்லிக் கொடுத்திருக்கிற விஷயம். சொல்லிக் கொடுத்ததை எல்லாம் மனதில் வாங்கி அதை நடைமுறைப்படுத்தும் நல்ல குணம் நமக்கு இருந்திருந்தால் நம் சமூகம் எவ்வளவோ சிறப்புகளை அடைந்திருக்கும்.

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =  = = = = =

KGG பக்கம் : 

சரோஜாதேவி தொடர் கதை 

சென்ற வாரம் - சுட்டி : பகுதி 18: ஆனந்த் அனுப்பிய வீடியோ 

இனி 

இந்த வாரப் பகுதி. 

பகுதி 19: " விமலாவை அழைப்போம்" 

பாவனா : " பாஸ் - இது எதிர்பாராத திருப்பமாக இருக்கே? ஆனந்த் - வீணா கல்யாணம் நின்றுபோய் விடுமோ? விமலா - பாபா லவ் ஸ்டோரி என்ன ஆகும்? என்ன செய்யலாம்? 

நாநா : " நாம் அவசரப்பட வேண்டாம். ஆனந்துக்கு, நான் இது பற்றி முழுவதும் விசாரித்து சொல்லும் வரை இந்த வீடியோ பற்றி எதுவும் முடிவு எடுக்காதே என்று செய்தி அனுப்பியுள்ளேன். " 

பாபா : " இது ஒரு இக்கட்டான சூழ்நிலை. இது பற்றி வீணா வீட்டில் யாரிடம் கேட்டாலும் அது பெரிய பிரச்சனை ஆகிவிடும். இப்படி ஒரு நிச்சயதார்த்தம் நடந்திருந்தாலும் ஒரு வகை பிரச்சனை.  இந்த நிச்சயதார்த்தம் fake வீடியோ என்றாலும் இதை வைத்து ஆனந்த் வீட்டார் சந்தேகப்படுகிறார்கள் என்று வீணா வீட்டில் நினைத்தாலும் அதனால் பிரச்சனை. " 

நாநா : " அப்போ நாம் என்னதான் செய்வது?" 

பாபா : " நான் இதற்கு ஒரு வழி யோசிக்கிறேன். எப்படியாவது விமலாவிடமிருந்து இந்த நிச்சயதார்த்த வீடியோ பற்றி தகவல் பெறுவோம். " 

பாவனா : " பாபா - அடிக்கடி விமலாவிடம் பேச என்னிடம் சில ஜெர்மன் மொழி வார்த்தைகள் கேட்டு நானும் சொல்லியிருக்கின்றேனே ஞாபகம் இருக்கா ? "

பாபா : " ஆமாம் - ஞாபகம் இருக்கு. அதுக்குத்தான் நான் உன்னிடம் ஜெர்மன் பாஷை கற்றுக்கொண்டேன். விமலா படிக்கும் காலத்திலேயே ஜெர்மன் பாஷை கற்றுக்கொண்டாள் என்று தெரியும். அதனால் அவளுடைய ஜெர்மனி ஹெட் ஆபீஸ் மீட்டிங் கால் வரும்போதெல்லாம் ஹெட் ஆபீஸில் இருப்பவர்களுடன் உரையாட விமலாவின் presence அவளுடைய மேலதிகாரிக்கு உதவியாக இருக்குமாம். நான் அவங்க வீட்டுக்குப் போகும்போதெல்லாம் - “Hast du gefrühstückt?”, "Wie laufen die Hochzeitsvorbereitungen?" என்றெல்லாம் கேட்டு அவளை இம்ப்ரஸ் செய்வேன். " 

நாநா : " ஓ ! இவ்வளவு சமாச்சாரம் நடந்துகிட்டு இருக்கா! பாவனா இந்த இரண்டு கேள்விகளையும் சென்னைத் தமிழில் மொழி பெயர்த்து சொல் " 

பாவனா : " நாஸ்தா துன்னியா ?" "கண்ணால ஏற்பாடெல்லாம் எப்பூடி போய்கினு கீது? " 

 நாநா : " ஓ ! இதுதானா! தொடர்ந்து அரைமணி நேரம் ஜெர்மன் பாஷை நான் பேசினா பல்லு எல்லாம் உடைஞ்சு கொட்டிடும் போலிருக்கு! " 

பாபா " சரி நாநா - நாளைக்கு நான் ஏதாவது ஐடியா செய்து விமலாவை நம்ம ஆபீசுக்கு கூப்பிட்டு வருகிறேன். நாம அவ கிட்டே பக்குவமா இந்த வீடியோ பற்றி விசாரிப்போம். " 

நாநா : " ஓ கே பாபா - விஷ் யு ஆல் தி பெஸ்ட் " 

(தொடரும்) 

89 கருத்துகள்:

  1. அனைவரும் என்றும் நலமுடன் இருக்கப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  2. சுவாரஸ்யமான பகுதிகளுக்கு மிக நன்றி.

    பதிலளிநீக்கு
  3. காதறுந்தாலும் கருத்துள்ள வார்த்தை சொல்லும் நண்பருக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. திரு ராமனின் எழுத்து இதமாக இருக்கிறது. டைம்ஸ் பத்திரிக்கையின் முன் யோசனை சிறிய முறுவலைக் கொண்டு வருகிறது.பிழையில்லாத எழுத்து கொஞ்சம் அபூர்வம். இருபது வருடங்களுக்கு முன் என் எழுத்துக்களில் வரிக்கு ஒரு பிழை கண்டுபிடித்தேன். அப்பொழுதும் ப்ளாக் உலக மக்கள் என்னை ஆதரித்திருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  5. ''வேதாந்தத்துக்கே இந்த கதி என்றால், இலக்கியம், அரசியல், சினிமா இந்தக் களங்களிலெல்லாம் பிடித்தது பிடிக்காதது என்பது எந்த அளவுக்கு நல்ல விஷயங்களைப் புறம் தள்ளும் என்பதை நாம் சிறிது யோசனை செய்து பார்க்க வேண்டும்.'' இதுவே உலகம்.

    பதிலளிநீக்கு
  6. யானைக்கு வெள்ளை மேக் அப். வேதனை. :( மனிதர்களுக்கு மூளையே வேலை செய்வதில்லையோ என்னவோ.

    பதிலளிநீக்கு
  7. ''5.நம்முடனேயே நம் பையன் இருக்கவேண்டும் (திருமணம் ஆன பின்பும்) என்று எண்ணுவது சரியா இல்லை அவன் வாழ்க்கையை அவனே வாழ வேண்டும், நாம் அவனுடன் சேர்ந்து இருந்து தொந்தரவாக இருக்கக் கூடாது என்று எண்ணுவது நல்லதா?'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''' இதற்கெல்லாம் இடம் கொடுக்காமல் 20 வயதிலேயே வெளியில் சென்று விடுகிறார்கள். மணமானதும் மருமகள் தன் வீட்டுக்குச் சென்று விடுகிறாள். நீ சுகமா நான் சுகம் கதைதான் இப்போது.

    பதிலளிநீக்கு
  8. படங்களுக்குத் தலைப்பு முதுமையில் வறுமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக அருமையான தலைப்பு. மரங்கள் இறந்துவிட்டனவா என்பது தெரியலை

      நீக்கு
  9. வேதாந்தத்துக்கே இந்த கதி..... இதனைப் படித்ததும், பொதுவா நம் மருத்துவர் நாம் இயற்கை மருத்துவம் என்றெண்ணிச் செய்கிற எதையும் ஒத்துக்கொள்வதில்லை என்பது நினைவுக்கு வந்தது. அலோபதி, சித்தா, ஆயுர்வேதம், யுனானி என ஒவ்வொருவரும் என் வழி தனி வழி ரகம்தான்.

    வேத்த்தை ஆதாரமாக்க் கொண்ட மதங்கள ஒன்றுக்கொன்று முரண்பட்டு, என் வழி தனி வழி என்கிறபோது என்ன சொல்ல?

    பதிலளிநீக்கு
  10. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  11. கேள்விகளும், பதில்களும் அருமை.
    எத்தனை புகழ் பெற்றவர்களாக இருந்தாலும் , நம் பேச்சை கேட்க விரும்பவில்லை என்றால் மரியாதையாக ஒதுங்கி கொள்ள வேண்டும்.
    வருத்தப்படக்கூடாது. சிலநேரங்களில் மெளனமாக நடப்பவைகளை பார்த்து கொண்டு இருக்க வேண்டும்.



    சொந்த தொழில் செய்யும் பெற்றோர்கள் மகன் என்றால் ஒரே ஊரில் இருப்பார் மகன். பிழைப்பு தேடி வேறு ஊர்களில் இருப்பவர்கள் எப்படி கூடவே இருக்க முடியும்? சேர்ந்து இருக்கும் நிலைமை வந்தால் மகன் வாழ்வதை பார்த்து மகிழ்ச்சி அடைய வேண்டும், அவர்கள் நம்மிடம் அட்வைஸ் கேட்டால் ஒழிய நாம் புத்தி சொல்லக் கூடாது. அவர்கள் குழந்தை வளர்ப்பில் தலையீட கூடாது. அவர்கள் வாழ்க்கையை அவர்களை வாழவிடுவதே நல்லது.

    //இரண்டுமே ஒவ்வொரு சூழ்நிலையில் சரியாக இருக்கும். பையன் பெண் இவர்களின் மனப்பக்குவம், பொருளாதார நிலை, பெற்றோர்களின் வயது- உடல் வலு- பணவசதி என்று பல காரணிகள் இருக்கின்றன.//

    நீங்கள் சொல்வதும் சரிதான் சில பெற்றோர்கள் குழந்தைகளை எதிர்ப்பார்த்து வாழ்கிறார்கள். பெற்றோர்கள் குழந்தைகளை தொந்திரவு செய்ய விரும்ப மாட்டார்கள் ஆனால் உடல் வலு இழந்து போனால் என்ன செய்ய முடியும்?

    ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் "தமிழா தமிழா" தொலைக்காட்சி நிகழச்சியில் பெற்றோர்களின் இயலாமையால் சிறுவயது முதல் வேலைப்பார்த்து குடும்பத்தை தாங்கும் பெண்களை காட்டினார்கள். , கணவன் உடம்பு சரியில்லாமல் குடும்பத்தை பாதுகாக்கும் பெண்களை காட்டினார்கள் அவர்கள் ஒவ்வொருவரும் பேசுவதை கேட்கும் போது மனம் கலங்கி போனது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குடும்பத்தைத் தாங்கும் பெண்கள்.. அந்த ஒவ்வொருவரையும் வணங்க வேண்டும். வாழ்க்கையின் அர்த்தத்தைச் சிறு வயதிலேயே செயல்படுத்தியருக்கிறார்கள். பலர் தாங்கள் நல்ல நிலைக்கு வந்தவுடன், வளர்ந்த இடத்தில் கஷ்டப்பட்டதை எண்ணி, அதனை ஒதுக்கித் தன் வழியைப் பார்த்துக்கொண்டு விடுவார்கள்.

      நீக்கு
    2. நல்ல கருத்துரை கோமதி மேடம். நன்றி.

      நீக்கு
  12. பெங்களூர் செல்லும்போது பச்சூர் இரயில் நிலைய மேடையில் கண்டது என்று நெல்லைத் தமிழன் போட்டு இருக்கும் படங்கள் நிறைய நினைக்க வைக்கிறது. ஒருகாலத்தில் இந்த மரங்கள் இலைகளுடன் , பூக்களுடன் வனப்பாக இருந்த போது எத்தனை பறவைகளுக்கு அடைக்கலம் தந்து இருக்கும்! பறவைகள் கூடு கட்டி மகிழ்ச்சியாக வாழ்ந்து இருக்கும், காலையும், மாலையும் பறவைகளின் ஆரவார ஒலிகளை அந்த ரயில் நிலையம் வருபவர்கள் கேட்டு இருப்பார்கள். இப்போது மொட்டை மரமாக இருக்கிறது. இருந்தாலும் பறவைகள் வந்து அமர்ந்து செல்லும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு வயதானவர்களில் ஏதிலிகளைப் பார்க்கும்போதெல்லாம், இவர்கள் பிறப்பு எப்படிக் கொண்டாடப்பட்டிருக்கும், தாய் எப்படிச் சீராட்டியிருப்பார், விதி இந்த இடத்தில் அவர்களை நிறுத்தியிருக்கிறது, அவர்கள் நல்லா இருக்கணும் என்ற எண்ணமே தோன்றும்.

      நீக்கு
  13. வெள்ளை யானையாக காட்ட அதற்கு அரிசிமாவு, பூசினால்அதற்கு கஷ்டமாக இருக்காதா? அதற்கு வெள்ளை துணியை போத்தி அந்த நேரம் மட்டும் காட்டி இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  14. //பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தின் வருகை(arrival) பகுதியின் வெளிப்பகுதியில் இருக்கும் சிற்பம். //

    சிற்பத்தின் நோக்கம் என்ன என்பதை தெரிந்து கொண்டேன், பானு உங்கள் யூகம் சரிதான் என்று அருகிலிருந்த அறிவுப்பு பலகை சொல்லி விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தப் பதிவாளர்கள் யாரும் ஒரே இடத்திற்குச் செல்லக் கூடாது. இரு வாரங்களுக்கு முன் என் மகனை அழைத்துவர பெங்களூர் ஏர்போர்ட்டுக்குச் சென்றபோது புதன் பதிவுக்காக படங்கள் எடுத்தேன். அங்கு சேர்ந்து புகைப்படங்களும் எடுத்துக்கொண்டோம்.

      நீக்கு
    2. இரு வாரங்களுக்கு முன்பு எடுத்த படத்தை பகிராமல் வைத்திருக்கலாமா? நான் முந்திக் கொண்டு விட்டேன் போலிருக்கிறது. :))

      நீக்கு
    3. அறிவிப்பு பலகை அவுட் ஆஃப் ஃபோகஸ் ஆகி விட்டது. என் மகன் முன்னால் நடந்து சென்று விட, நான் அவசரமாக கிளிக்கியதை சரியாக வந்திருக்கிறதா என்று பார்க்காமலேயே பகிர்ந்து விட்டேன்.

      நீக்கு
  15. மனசாட்சியம் நன்றாக இருக்கிறது.
    நல்லதை யார் சொன்னாலும் கேட்கலாம் தான்.

    பதிலளிநீக்கு
  16. முதல் கேள்விக்கு அருமையான பதில். நன்றி.

    ரஜினி அமிதாப்புக்குமே அவர்கள் வாரிசுகள் நிம்மதியைத் தந்திருக்கிறார்களா? விஜயகாந்த், ரஜினியைவிட அலாக்காக ஆட்சியைப் பிடித்த விஜய், அவர்கள் மனதில் கசப்பை ஏற்றியிருப்பார்கள் இல்லையா? ஆக மொத்தம் ஒருவனுக்கு ஒஆழ்க்கையில் எல்லாமே கிடைத்துவிடுவதில்லை.

    பதிலளிநீக்கு
  17. கதை நன்றாக போகிறது விமலாவுடன் ஜெர்மன் மொழி பேசிய காலங்கள் பேசிய காலங்களை பாபா பாவனவிடம் பேசியதும் , பாவனா நாநாவிற்கு இரண்டு கேள்விகளையும் சென்னைத் தமிழில் மொழி பெயர்த்து சொன்னதையும் " ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  18. தொடர்கதையில்அழகான படங்களை அளித்துக்எஒண்டிருந்த கேஜிஜி சார், புரட்டாசி விரம் இருக்க ஆரம்பித்துவிட்டாரா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 'யாருமே இல்லாத கடையில யாருக்காகடா டீ ஆத்துறே?' என்று AI என்னிடம் கேட்டது. அதுவும் சரிதான் என்று படம் சேர்க்க நேரம் செலவழிக்கவில்லை!

      நீக்கு
    2. தவறான கருத்து. இப்படி எனக்கு சில சமயங்களில் ஞாயிறு, சனிபதிவுகளுக்குத் தோன்றுகிறது. ஆனால் அதற்காக விடலாமா?

      நீக்கு
  19. வாழ்க்கைப் பாதை என்பதே சீராக இருப்பதில்லை. தினமும் பல கருத்துகள், புதிய பதிவுகள் எழுதிய கீதா ரங்கன் அக்கா, தினமும் குறைந்தபட்சம் பிரார்த்தித்துக்கொண்டிருந்த கமலா ஹரஹரன் மேடம், எல்லாப் பதிவுகளுக்கும் தவறாமல் வந்துகொண்டிருந்த திண்டுக்கல் தனபாலன் என பலரும் இடைவெளி எடுத்துக்கொள்ளும்படியாக காலச் சூழல் அமைந்துவிடுகிறது.

    இட்லி பதிவுக்கு அப்புறமே கஹ மேடம் வருகை குறைந்துவிட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், ஒவ்வொருவருக்கும் உடல் நிலை , மற்றும் பணிச்சுமைகள், சில கடமைகள் என்று போகிறது. கமலா ஹரிஹரன், கீதா ரெங்கன் எல்லாம் வந்து விரிவான கருத்துக்கள் போடுவார்கள் .

      நீக்கு
    2. வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே

      /இட்லி பதிவுக்கு அப்புறமே கஹ மேடம் வருகை குறைந்துவிட்டது/

      ஹா ஹா ஹா. ஒரு வேளை இட்லியும் அஜீரணத்தை உண்டாக்குமோ .?

      தாங்கள் சொல்வது உண்மைதான். புதிய பதிவுகளை எழுதவே நேரம் ஒத்து வர மாட்டேன் என்கிறது. ஆனால், மனதுக்குள் எழுத நினைக்கும் பதிவுகள் நிறைய வரிசையாய் அமர்ந்துள்ளது. வரிசை எப்போது முந்தும்(கலையும்) என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்.

      நான் பதிவுகளை எழுதாவிடினும், குறைந்தபட்சம் தினமும் எபிக்கும், மற்ற பதிவுகளுக்கும் வந்து கொண்டிருக்கிறேனே ..! (மற்றபடி சில நாட்கள் தவறி விடுகிறது என்பதும் உண்மைதான்..!) தங்கள் ஆதங்கம் புரிகிறது. எல்லாம் இறைவன் செயல். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    3. திண்டுக்கல் தனபாலன் அவர்கள் உடல் நிலை எப்படி இருக்கிறது என்று தெரியவில்லை. அனைவர் பதிவுகளுக்கும் சென்று கருத்து போட்டு விடுவார். தேவகோட்டை ஜியும் அப்படித்தான்.

      நீக்கு
    4. வணக்கம் கோமதிஅரசு சகோதரி

      தாங்கள் சொல்வதும் உண்மைதான். எனக்கு சென்ற வாரம் முழுவதும் உடல்நிலை பாதிப்பு இருந்தது. அதனால் முறையாக தொடர்ந்து வர இயலவில்லை. சகோதரி கீதா ரெங்கன் அவர்களும் வியாழன் பதிவொன்றில் அவர் கருத்தாக விளக்கத்துடன் சொல்லியிருந்தார். உங்கள் புதுப்பதிவுக்கு நான் இன்னமும் வரவில்லை மன்னிக்கவும். இன்று வர முயற்சிக்கிறேன்.அனைவரும் நலமாக இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன். உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    5. நானும் சனி ஞாயிறு பதிவுகள் எழுதி சில மாதங்களாகிவிட்டது. ஏற்கனவே சோம்பேறித்தனம். இதற்கிடையில் பையன் எனக்கு பெரிய மானிட்டர் வாங்கி ஃபிக்ஸ் பண்ணி, அதில் பல சினிமா, மேனாட்டு தொடர்கள் பலவற்றையும் பார்ப்பது எப்படி என்று காண்பித்துக்கொடுத்துவிட்டான். அதனால் டிவி பார்ப்பதே அனேகமாக இல்லை. பேசாமல் நெட்ஃபிளிக்ஸை நிறுத்திடலாமா என்று தோன்றிவிட்டது.

      நீக்கு
  20. //ஆமாம் பிரதர்... ஒரு காது இல்லை... என்ன செய்யச் சொல்றீங்க...?//

    ஒற்றை காது என்னாச்சு என்ற எண்ணம் வந்தது படத்தைப்பார்த்து. அது சாதுவாக அமர்ந்து இருக்கு .

    பதிலளிநீக்கு
  21. கண்காணாத இடங்களில் கொடைக்கானல் வால்பாறை போன்ற பல இடங்கள் நினைவுக்கு வரவில்லையா? நிம்மதியாக பாத்ரூம் போக்க்கூட முடியாத மானசரோவர் நினைவுக்கு வருதா?

    மெடிகல் ஷாப்... கலவரத்தை உண்டாக்கும் பதில். எனக்கும் அலர்ஜி வருமோ, என் ரொட்டீன் பாதிக்கப்படுமே... வேறு என்ன என்ன புது பிரச்சனைகள் வருமோ என எதிர்வரும் பயணத்தை எண்ணி கவலைப்படுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவலை வேண்டாம். கடவுள் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு.

      நீக்கு
  22. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  23. கோவில் யானைகள் படும்பாடு இருக்கிறதே. கனவில் சிவபெருமான் வெள்ளை யானையாக வந்தாரா ? அதுக்காக, யானைக்கு அரிசி மாவுப் பூச்சா.. அடடா, என்னே மனிதனின் அதிபக்தி!

    பதிலளிநீக்கு
  24. வணக்கம் சகோதரரே

    இந்த வார கேள்விகளும் பதில்களும் நன்றாக உள்ளது. மகன், மகளுக்கு திருமணமானவுடன் அவர்கள் வாழ்க்கை என பெரியவர்கள் ஒதுங்கிக் கொள்வது நல்லதுதான். ஆனால், மனது கேட்காமல், நம் குழந்தைகளின் நலன்தானே என அறிவுரை கூறும் பழக்கம் பெற்றோர்களுக்கு சிலசமயம் தற்செயலாக வந்து விடுகிறது. இப்போதிருப்பவர்கள் அதை முற்றிலும் விரும்புவதில்லை. அதனால் பிரச்சனைகள் உருவாகி விடுகிறது. அதை புரிந்து கொண்டு இருபாலார்களும் விட்டுத் தந்தால் நல்லதுதான். அனைத்திற்கும் அந்த இறைவனும், அவர்களுடன் ஒத்துழைக்க வேண்டும். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  25. வணக்கம் சகோதரரே

    கோவில் யானைக்கு வெள்ளைப்பூச்சு.. நினைக்கவே மனதுக்கு வேதனையாக உள்ளது. நடக்கும் போது மாவு பூச்சு உலர்ந்ததும் அதற்கு வலிக்காதா.? எப்படி யோசிக்காமல் விட்டார்கள்.? ஒரு தடவை மைசூர் சென்றிருக்கும் போது சாலையில் ஒரு மனிதர் தன் உடம்புக்கு வெள்ளை, தங்க நிறங்களில், பெயிண்ட் அடித்துக்கொண்டு சிலை மாதிரி காட்சியளித்தார். மக்களும் ஆர்வமாக அவர் அருகில் சென்று அவருடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர். எனக்குத்தான் அவரைக்காண வேதனையாக இருந்தது. அந்த நினைவு இப்போது வெள்ளை யானையைப் பார்த்ததும் வந்தது. மனதுக்கு கஸ்டமாக உள்ளது.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வரும் புதனில் நினைவு வைத்துக்கொண்டு ஒரு புகைப்படம் புதன் பதிவுக்கு அனுப்பிவிட வேண்டியதுதான்.

      நீக்கு
  26. //முன்பு தோன்றியது உண்டு. இப்போ எல்லாம் தோன்றுவது இல்லை. அங்கே எல்லாம் மெடிக்கல் ஷாப் இருக்குமா, எனக்கு வேண்டிய மருந்துகள் கிடைக்குமா என்ற சந்தேகம்தான் காரணம்!// யதார்த்தம்!

    பதிலளிநீக்கு
  27. நம் குழந்தைகள் நம்மோடு இருக்க வேண்டும் என்று நினைப்பது தவறு கிடையாது, attached detachment, detached attachment என்பதை கடைபிடிக்க வேண்டும், குறைந்த பட்சம் முயற்சி செய்ய வேண்டும்.

    பதிலளிநீக்கு
  28. வேதாந்தத்தின் இலக்கு ஒன்றாக இருக்கலாம், வழி முறைகள் வெவ்வேறு இல்லையா அதனால்தான் ஒவ்வொரு ஸ்கூலும், மற்ற ஸ்கூலின் வழிமுறையை ஏற்பதில்லை.

    பதிலளிநீக்கு
  29. அரிசி மாவு பூசப் பட்டதால் வெள்ளையாக்கப்பட்ட யானை..பாவம்! அதைச் செய்தவர்களுக்கு மகா பாவம்!

    பதிலளிநீக்கு
  30. அஹோபிலத்தில் தன் உடம்பில் மெட்டாலிக் பெயிண்ட் பூசிக்கொண்டு மகாத்மா காந்தி வேடத்தில் பிச்சை எடுத்த ஒருவரைப் பார்த்தபொழுது பரிதாபமாக இருந்தது. மகாத்மா காந்தியை பிச்சை எடுக்க வைத்து விட்டாரே என்று தோன்றியது.

    பதிலளிநீக்கு
  31. இந்த உதாசீனம் என்பது அநேகமாக அனைவர் வாழ்க்கையிலும் ஏற்பட்டிருக்கும். புகழோ அது இல்லாமலோ கூட வாழ்க்கையில் உதாசீனப்படாதவர்கள் யார்? எனக்கெலலாம் ஒரு காலத்தில் அன்றாடம் ஏற்பட்ட ஒரு விஷயம். சில சமயம் நாம் இருப்பதையே மத்தவங்க உணரலையோனு தோணும். :))))
    இதற்கான பதில் அருமை. இதில் ரஜினியை விட அமிதாப் இன்னும் முதிர்ச்சி பெற்றவர். சமயத்தில் வீட்டில் உள்ளவர்களே நம்மைக் கண்டு கொள்ள மாட்டார்கள். இதில் யாரும் விதிவிலக்கு இல்லை என்பதே உண்மைனு நினைக்கிறேன்.

    இதுக்கு நான் எப்போதுமே போக விரும்புவது ஊட்டி தான். அங்கே இயற்கை கன்னாபின்னாவெனக் கொட்டிக் கிடந்தது. இப்போப் பார்த்தே பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அதிலும் எங்களோட பங்களா வாசலில் நின்று கொண்டு காலை வேளையில் எதிரே வெலிங்டன் மலையில் சூரிய உதயத்தையும் நடுப்பகலில் காணப்படும் சூரியனையும் மாலையில் அஸ்தமனத்தையும் பார்த்தால். ஓர் அழகான வட்டப்பாதையில் சூரியன் பிரயாணிப்பதை நமக்கு நேரே பார்க்கலாம். இங்கே எல்லாம் சமவெளிகளில் பார்ப்பது போல் எதிரே கிழக்குன்னா அங்கே சூரியன், பின்னர் மாலைனா நாம் திரும்பினால் நமக்கு நேரே சூரியன் எனப் பார்க்க முடியாது. சொல்லப் போனால் பௌர்ணமி தினங்களில் சாயங்காலம் மொட்டை மாடிக்குப் போனால் ஒரே சமயம் மேற்கே வர்ணக் குழம்பாய்ச் சிதறிய ஆரஞ்சு நிற அஸ்தமன சூரியனையும், கிழக்கே உதிக்கும் சந்திரனையும் செக்கச்செவேர்னு நிறத்தில் பார்க்கலாம். இதை விட அழகு உலகில் வேறே என்ன?

    பதிலளிநீக்கு
  32. ரெயில் மேடை மரங்கள் வயதாகி உடைந்து விழுந்த மனிதர்களின் நிலைதான்.

    வெள்ளை யானை ... .மனிதர்கள் படுத்தும்பாடு.

    பெங்களூர் விமான நிலைய சிற்பம் நல்ல முயற்சி. அழகாகவும் உள்ளது.

    பதிலளிநீக்கு
  33. இன்னொரு விஷயம். மானசரோவரில் மருந்துகள் எல்லாமும் கிடைக்கும். மருத்துவ வசதிகளும் இருக்கும். சீனத்தரப்பிலும் மருத்துவர்கள் இருப்பார்கள். அதோடு இல்லாமல் திருக்கயிலை, மானசரோவர் அழைத்துச் செல்லும் குழுவினர் கட்டாயமாய் இரு மருத்துவர்களைத் தேர்ந்தெடுத்து அழைத்துப் போகின்றனர். என்றாலும் நாம் நமக்கு வேண்டிய மருந்துகளைக் குறைந்த பக்ஷமாக ஓரிரு மாதங்களுக்குத் தேவையான அளவு வாங்கிக் கொள்ளணும். இப்போல்லாம் பெரும்பாலும் ஹெலிகாப்டரில் போவதால் அதிகம் பிரச்னை வர வாய்ப்பில்லை. ஆனால் நாங்க போனப்போக் கிட்டத்தட்ட எட்டு நாள் கார்ப் பயணம் போகும்போது, வரும்போதும் அதே போல் எட்டு நாள்ப் பயணம். கரடு, முடரான சாலைகள். பெயருக்குத் தான் சாலைகள். வண்டிகள் போய்ப் போய்த் தானாக உருவானவை. திடீர்னு மேட்டில் ஏறும், அங்கிருந்து அப்படியே பள்ளத்தில் வேகமாக இறங்கும். எல்லாமே டொயோட்டா ஜீப் வகைக் கார்கள். பின்னால் 3 பேர், முன்னால் 3 பேர் டிரைவரைச் சேர்த்து உட்காரலாம். நாங்க எங்க குழுவினர் சுமார் 20 கார்களில் அந்த மாதிரிப் போனோம். அதைத் தவிர சாப்பாடுக்குத் தேவையான மளிகைப் பொருட்கள், காய்கறிகள், பழங்கள், தயிர், மோர், பால், மற்றும் போர்ன்விடா, ஹார்லிக்ஸ், காஃபி பவுடர் தேநீர், எல்பிஜி சிலின்டர்கள், அடுப்புக்கள்னு ஒரு லாரி, மற்ற மருத்துவப் பொருட்கள், சுகாதாரத்துக்கான டயப்பர்கள், நாப்கின்கள், இன்னும் போர்வைகள், படுக்கைகள்னு அடங்கியவை. தங்குமிடங்களில் இவை எல்லாம் இருந்தாலும் கூடுதலாகக் கொண்டு வருவார்கள். மொத்தம் 3 லாரிகள் நம்முடன் கூடவே வரும். ஆங்காங்கே எங்கே மருத்துவமனை இருக்கு என்பதற்குத் தகுந்தாற்போன்ற இடங்களிலேயே வண்டியை நிறுத்தித் தங்க ஏற்பாடுகள் செய்திருப்பார்கள். ஆக்சிஜன் சிலிண்டர்கள் கட்டாயமாய் இருக்கும். இப்போல்லாம் 65 வயதுக்கு மேற்பட்டவர்களை அனுமதிப்பதில்லை. ஆனால் நாங்க போனப்போ எங்களோடு 80 வயசுக்காரங்க எல்லாம் வந்தாங்க. பைபாஸ் சர்ஜரி செய்து கொண்டவங்க எல்லாம் வந்தாங்க.

    பதிலளிநீக்கு
  34. இந்திய அரசாங்கத்தின் வழிகாட்டுதலில் போனால் பிரச்னையே இல்லை. கூடவே ஒரு சின்ன மருத்துவமனையும் மருத்துவர்களும், செவிலியர்களும் கூட வருவார்கள். சாப்பாடெல்லாம் ரொம்பவே நல்லா இருக்கும்னு சொன்னாங்க. ஆனால் நாம் செல்வதற்கு அனுமதி கிடைப்பது இந்திய வழியில் போகிறவர்களுக்கு ரொம்பவே கஷ்டம். முழு உடல் பரிசோதனை. சர்க்கரை, ரத்த அழுத்தம், ஆஸ்த்மா உள்ளவர்களுக்கு அனுமதி இருக்காது. இப்போத் தளர்த்தி இருக்காங்களானு எல்லாம் தெரியாது. அதே போல் ருமாடிசம், ஆர்த்ரிடிஸ் உள்ளவங்களும் போக முடியாது. ஆனால் இந்த வழி சென்றால் ஆதி கைலாஷிலிருந்து பார்க்க முடியும். ஆதி சங்கரர் இந்த வழியாகத் தான் சென்றதாக ஓர் ஐதீகம். இதைப் பற்றி எழுதுவது எனில் நிறைய எழுதலாம்.

    பதிலளிநீக்கு
  35. கௌதமன் சார் ஒரு பதினைந்து வருஷங்கள் முன்னால் முயற்சி செய்திருந்தால் கயிலை, மானசரோவர் பார்த்திருக்கலாம். இப்போது நினைச்சால் கூடப் போக முடியாது. முக்திநாத்திற்கே அனுமதிப்பதில்லைனு சிலர் சொல்றாங்க. :(

    பதிலளிநீக்கு
  36. இப்போதும் சில பெற்றோர்கள் பிள்ளை, மருமகள், பெண், மாப்பிள்ளையிடம் தங்கள் கன்ட்ரோலை வைத்திருக்காங்க என்பது தெரிய வந்தது. அடங்கிப் போகும் அந்தப் பெண், பிள்ளைகள் உண்மையில் போற்றத் தக்கவர்கள். மற்றபடி பொதுவாகவே கல்யாணம் ஆனதும் தனிக்குடித்தனமாகப் பெண், மாப்பிள்ளையையோ, பிள்ளை, மருமகளையோ வைப்பது தான் சிறப்பு. ஒரு சமயம் எனில் போய் வந்துக்கலாம். பண்டிகைகளில் பொதுவாக ஒருத்தர் வீட்டில் கூடிப் பண்டிகை கொண்டாடலாம். உதவி தேவை எனில் போய் உதவலாம்.

    இந்த ரயில் நிலைய நடைமேடையைப் பார்த்தாலே மனம் வெதும்புகிறது. ரயில் நிலையம் என்றாலே அடர்ந்த பெரிய மரங்கள், அதில் உட்கார்ந்து கொண்டு எந்நேரமும் கூடிக் கூடிப் பேசிக்களிக்கும் பக்ஷிகள், ஆங்காங்கே உரத்த குரலில் சண்டை போடும் மைனாக்கள் என்றே நினைவில் வரும்.

    அடுத்து வந்திருக்கும் யானை இதைவிடக் கொடுமை. ஏந்தான் கோயில் யானை என்றால் இப்படி எல்லாம் துன்புறுத்தறாங்களோ தெரியலை. :(

    பதிலளிநீக்கு
  37. "பெண்"களூர் விமான நிலையம் உண்மையிலேயே மிகச் சிறப்பாக அமைத்திருக்கிறார்கள். தோட்ட நகரம் என்னும் பெயருக்கேற்ப ஓர் பச்சைப்பசும் சோலையையே விமான நிலையத்துக்குள்ளே உருவாக்கி இருக்காங்க. ஒவ்வொரு டெர்மினலும் எவ்வளவு பெரிசு! விமான நிலையத்துக்கு உள்ளே இருக்கும் ராமேஸ்வரம் கஃபே பெண்களூரில் நல்லா இருக்கு. இதைப் பார்த்த கண்ணால் சென்னை விமான நிலையத்தைப் பார்த்தால் ஆளரவமற்ற நீண்ட நெடிய பாதை. சர்வதேசப் பயணிகள் வருகைப்பகுதியிலிருந்து உள்நாட்டு விமானப் போக்குவரத்துப் பகுதிக்கு வந்து அங்கே உள்ள டெர்மினலை அடைந்து கேட்டுக்குப் போவதற்குள்ளாகச் சக்கர நாற்காலியிலேயே நாக்குத் தள்ளுகிறது. :( ஆனால் இது நிர்வாகம் மாநில அரசுக்கு உட்பட்டதல்ல என்பதும் புரிகிறது. இங்கே ஏன் ஏர்போர்ட் அதாரிடி உரிய தேவைகளைச் செய்து முடிக்கலை என்பது புரியலை. மும்பை எப்போதுமே சொல்லிக்கொள்ளும்படியாக வசதிகளோடு இருக்கும். இப்போ உணவுக்காக அமைத்திருப்பதெல்லாம் வெகு சிறப்பு. ஹைதராபாதும் நல்லா இருக்கும்னு எங்க பெண் சொன்னாள். நாங்க பார்த்ததில்லை.

    பதிலளிநீக்கு
  38. இன்று திரு ராமன் எழுதி இருக்கும் விஷயங்கள் அநேகமாக இப்போது எல்லோருக்கும் நடக்கும் ஒன்று. ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆன்மிக வகுப்பு, ஸ்லோக வகுப்புனு ஆரம்பிச்சுப் போயிட்டு இருக்காங்க.

    இந்த ஆன்மிக வகுப்பெல்லாம் போனதே இல்லை. சின்ன வயசில் மதுரையில் அடிக்கடி, அநேகமாக வாரம் நான்கு நாட்களுக்குக் குறையாமல் கதாகாலக்ஷேபங்கள் இருக்கும். பின்னர் சென்னை, ராஜஸ்தான், ஆந்திரா, எனப் பல ஊர்கள் போனதில் அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை. ஆர்ட் ஆஃப் லிவிங் குழுவில் சில மாதங்கள் இருந்தோம். எங்க வீட்டுச் சுற்றுச் சுவரில் விளம்பரமெல்லாம் எழுதி பானரெல்லாம் கூடக் கட்டி இருந்தாங்க. ஆனால் ஏனோ தெரியலை அது விட்டுப் போச்சு. பின்னர் தொடரலை. மற்றபடி சநாதனமெல்லாம் ஓர் வாழ்க்கை முறை. இப்போதெல்லாம் ராமகிருஷ்ணா மடம் இந்துத் தத்துவங்களை ஒதுக்கிவிடுகிறது என்பதைப் போல் ஒரு பேச்சு. ஆனால் இன்னிவரைக்கும் ராமகிருஷ்ண விஜயம் ஆன்மிக, தெய்வீகக் கதைகள், கருத்துகளைத் தான் பிரசுரித்து வருது. அவரவர் விருப்பம். அவரவர் போக்கு.

    பதிலளிநீக்கு
  39. கௌதமன் சார், விறுவிறுப்பாகக் கதை போகும்னு நினைச்சால் விமலாவைக் கேட்கணும்னு சொல்லிட்டீங்களே! அடுத்து என்ன திருப்பம்னு எதிர்பார்த்துக் கொண்டு வந்தேன். ஆனால் ஏமாற்றம் தான். விமலா என்ன சொல்லப் போகிறாள் என்று பார்ப்போம். இப்போதைக்கு சம்ஸ்கிருதம் படிக்கவே நேரம் போதலை. அதுவும் இப்போ ரொம்பவே பாடங்கள், இலக்கணம்னு நிறையப் படிக்க வேண்டி இருக்கு. ஆகவே நோ ஜெர்மன். :)))))))

    பதிலளிநீக்கு

பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!