ஸ்வீட் வகையறாக்களில் எது உங்களுக்கு ரொம்பப் பிடிக்கும்?
நிச்சயமாய் என் சாய்ஸ் அல்வா இல்லை!
அப்புறம் எதற்கு இந்த ரெஸிப்பி என்று கேட்பவர்களுக்கு...
இது உங்களுக்காக!!!!!!!!
இது உங்களுக்காக!!!!!!!!
பிடித்த
தித்திப்பு வகைகளில் பால்கோவா, திரட்டுப்பால், பாஸந்தி, பாதுஷா போன்ற
உடம்புக்கு ஆகாத பொருட்கள் எல்லாம் முதல் வரிசையில் வந்து விடுகிறது.
சமீப
காலங்களில் பல் பிரச்னையால் மைசூர்பா (கவனிக்கவும், மைசூர்ப்பாகு இல்லை!
மைசூர்பா, மைசூர்ப்பாகு இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்று தெரியுமோ?)
போன்ற இனிப்பு வகைகளைச் சாப்பிடத் தயக்கமாய் இருக்கிறது!
அல்வா
பிடிக்கவே பிடிக்காது என்றில்லை. சிலசமயம் அல்வாக்கள் பிடித்துப்
போகின்றன. ஒரே கெட்டியாய் இருக்கும் அல்வாக்களை விட, சற்றே தளர்வாய்
இருக்கும் அல்வாக்கள் பிடிக்கும்.
மதுரையில் ரயில்வே
ஸ்டேஷன் அருகே, டவுன் ஹால் ரோட் நுழையும் இடத்தில் பிரேமவிலாஸ் அல்வாக்
கடை இருக்கும். மாலை வேளைகளில் இங்கு சுடச்சுட இலைகளில் அல்வா தருவார்கள்.
வாயில் போட்டால் வழுக்கிக் கொண்டு உள்ளே போகும். பற்கள் கூசாதவர்கள்
அதன்மேல் இலேசாய் காராபூந்தித் தூவி, தாராளமாய் விரும்பிச் சாப்பிடலாம்!
அதே
மதுரையில் புகழ் பெற்ற இன்னொரு வகை அல்வா, மேலமாசி வீதியிலிருந்து சக்தி
சிவம் தியேட்டர் செல்லும் வழியில் இருக்கும் ஹேப்பிமேன் முந்திரி அல்வா.
சமீபத்தில்
என் பக்கத்து வீட்டுக்காரர் திருநெல்வேலி சென்று வந்தார். அங்கிருந்து
இருட்டுக்கடை அல்வா வாங்கி வந்திருந்தார்.
எனக்கென்னவோ அது 'ஓஹோ'
என்றில்லை. ராமலக்ஷ்மி உள்ளிட்ட திருநெல்வேலிக்காரர்கள் மன்னிக்கவும்!
இதற்குக் காரணம் அல்வா எனக்கு விருப்பமான ஸ்வீட் ஆக இல்லாததும் காரணமாக
இருக்கலாம்! அல்லது சுடச்சுட சாப்பிடாமல், இரண்டுநாட்கள் கழித்துச் சாப்பிடுவதும் காரணமாக இருக்கலாம்!
சரி, இப்போது தேங்காய் அல்வா. தேங்காய் போட்டு செய்யும் அல்வா. பழைய ரெசிப்பிதான்! ஆனால் எனக்குப் புதுசு!
==============================
தேங்காய் அல்வா
செய்முறை :
பச்சரிசியை
ஒரு மணி நேரம் நீரில் ஊற வைக்கவும். பிறகு, தேங்காய்த் துருவலையும்,
அரிசியையும் நன்றாக வெண்ணெய் போல அரைத்து எடுத்துக் கொள்ளவும். ('கல்லுரலில்'
என்று புத்தகத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது! அப்படியானால் புத்தகம்
எவ்வளவு பழைய புத்தகம் என்று தெரிந்து கொள்ளவும்!!!!)
ஒரு வெண்கல உருளியில்
( இப்போது இதுவும் வைத்திருப்பவர்கள் மிகக் குறைவே - கீதா மேடம் தவிர!)
அரைத்த விழுதைப் போட்டு அடுப்பில் வைத்து, வெல்லத் தூளையும், ஏலக்காயையும்
போட்டு, நன்றாகக் கிளறவும். பக்கங்களில் ஒட்டாமல், சுருள வந்தவுடன் நெய்யை
விட்டு, முந்திரியையும் வறுத்துப் போட்டு இறக்கி வைக்கவும்.
==============================
இறக்கி வைக்கவும் என்று நிறுத்தி விட்டார்களே, ஏன் எடுத்துச் சாப்பிடலாம் என்று சொல்லவில்லை? :))))
படங்கள் நன்றியுடன் இணையத்திலிருந்து.