திங்கள், 1 டிசம்பர், 2014

'திங்க'க்கிழமை :தேங்காய் அல்வா


                                                             
 
 
ஸ்வீட் வகையறாக்களில் எது உங்களுக்கு ரொம்பப் பிடிக்கும்?
 
நிச்சயமாய் என் சாய்ஸ் அல்வா இல்லை!
 
அப்புறம் எதற்கு இந்த ரெஸிப்பி என்று கேட்பவர்களுக்கு...

இது உங்களுக்காக!!!!!!!!
 
 
                              
 
பிடித்த தித்திப்பு வகைகளில் பால்கோவா, திரட்டுப்பால், பாஸந்தி, பாதுஷா  போன்ற உடம்புக்கு ஆகாத பொருட்கள் எல்லாம் முதல் வரிசையில் வந்து விடுகிறது. 
 

                         
 
சமீப காலங்களில் பல் பிரச்னையால் மைசூர்பா (கவனிக்கவும், மைசூர்ப்பாகு இல்லை! மைசூர்பா, மைசூர்ப்பாகு இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்று தெரியுமோ?) போன்ற இனிப்பு வகைகளைச் சாப்பிடத் தயக்கமாய் இருக்கிறது!
 
அல்வா பிடிக்கவே பிடிக்காது என்றில்லை. சிலசமயம் அல்வாக்கள் பிடித்துப் போகின்றன. ஒரே கெட்டியாய் இருக்கும் அல்வாக்களை விட, சற்றே தளர்வாய் இருக்கும் அல்வாக்கள் பிடிக்கும்.
 
  
                         
 
மதுரையில் ரயில்வே ஸ்டேஷன் அருகே,  டவுன் ஹால் ரோட் நுழையும் இடத்தில் பிரேமவிலாஸ் அல்வாக் கடை இருக்கும். மாலை வேளைகளில் இங்கு சுடச்சுட இலைகளில் அல்வா தருவார்கள். வாயில் போட்டால் வழுக்கிக் கொண்டு உள்ளே போகும்.  பற்கள் கூசாதவர்கள் அதன்மேல் இலேசாய் காராபூந்தித் தூவி, தாராளமாய் விரும்பிச் சாப்பிடலாம்!
 
அதே மதுரையில் புகழ் பெற்ற இன்னொரு வகை அல்வா, மேலமாசி வீதியிலிருந்து சக்தி சிவம் தியேட்டர் செல்லும் வழியில் இருக்கும் ஹேப்பிமேன் முந்திரி அல்வா.

                                                                       
                                                        

சாதாரணமாக அல்வாவில் முந்திரிப் பருப்புப் போட்டு நீங்கள் பார்த்திருப்பீர்கள். இங்கு கிடைக்கும் இந்த அல்வாவில் முந்திரிப் பருப்பில் கொஞ்சம் அல்வாவும் இருக்கும்!   கொஞ்சம் காஸ்ட்லி! இது சாப்பிட அலுப்பதில்லை! 
 
        
                                              
 
சமீபத்தில் என் பக்கத்து வீட்டுக்காரர் திருநெல்வேலி சென்று வந்தார். அங்கிருந்து இருட்டுக்கடை அல்வா வாங்கி வந்திருந்தார்.  
 
எனக்கென்னவோ அது 'ஓஹோ' என்றில்லை.  ராமலக்ஷ்மி உள்ளிட்ட திருநெல்வேலிக்காரர்கள் மன்னிக்கவும்!  இதற்குக் காரணம் அல்வா எனக்கு விருப்பமான ஸ்வீட் ஆக இல்லாததும் காரணமாக இருக்கலாம்! அல்லது சுடச்சுட சாப்பிடாமல்,  இரண்டுநாட்கள் கழித்துச் சாப்பிடுவதும் காரணமாக இருக்கலாம்!
 
சரி, இப்போது தேங்காய் அல்வா.  தேங்காய் போட்டு செய்யும் அல்வா.   பழைய ரெசிப்பிதான்!  ஆனால்  எனக்குப் புதுசு!

==============================
===========================
 
                                                              
                                                           
 
தேங்காய் அல்வா 
 
தே. பொ :

தேங்காய்  - 1 (பெரியது)
பச்சரிசி  -  கால் ஆழாக்கு
முந்திரிப் பருப்பு  -  6
நெய்  -  அரைக்கரண்டி
வெல்லத்தூள்  -  1 ஆழாக்கு
(ஒரு ஆழாக்கு என்பது சுமார் 200 கிராம்)
 
செய்முறை :
பச்சரிசியை ஒரு மணி நேரம் நீரில் ஊற வைக்கவும். பிறகு, தேங்காய்த் துருவலையும், அரிசியையும் நன்றாக வெண்ணெய் போல அரைத்து எடுத்துக் கொள்ளவும்.  ('கல்லுரலில்'  என்று புத்தகத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது! அப்படியானால் புத்தகம் எவ்வளவு பழைய புத்தகம் என்று தெரிந்து கொள்ளவும்!!!!) 
 
 
ஒரு வெண்கல உருளியில் ( இப்போது இதுவும் வைத்திருப்பவர்கள் மிகக் குறைவே - கீதா மேடம் தவிர!) அரைத்த விழுதைப் போட்டு அடுப்பில் வைத்து, வெல்லத் தூளையும், ஏலக்காயையும் போட்டு,  நன்றாகக் கிளறவும்.  பக்கங்களில் ஒட்டாமல்,  சுருள வந்தவுடன் நெய்யை விட்டு, முந்திரியையும் வறுத்துப் போட்டு இறக்கி வைக்கவும்.


==============================
=================================
 
இறக்கி வைக்கவும் என்று நிறுத்தி விட்டார்களே, ஏன் எடுத்துச் சாப்பிடலாம் என்று சொல்லவில்லை? :))))


படங்கள் நன்றியுடன் இணையத்திலிருந்து.

16 கருத்துகள்:

 1. //எனக்கென்னவோ அது 'ஓஹோ' என்றில்லை./

  எனக்கும் இருட்டுக் கடை மற்றும் சாந்தி ஸ்வீட்ஸ் அல்வா பிடிக்காது. :-) எங்க ஊரில், “மைதீன் ஸ்டோர்” என்று ஒரு கடிஅ இருக்கிறது. அந்த அல்வாதான் சூப்பரா இருக்கும். வழுவழுவென்று இல்லாமல், கொழகொழவென ஓடாமல் திண்ணமாக இருக்கும் சுவையும் நல்லா இருக்கும் - எனக்கு.

  பதிலளிநீக்கு
 2. மைசூர்பா, மைசூர்ப்பாகு, மைசூர்பாக்கு மூன்றுக்கும் என்ன வித்தியாசம்?

  //இந்த அல்வாவில் முந்திரிப் பருப்பில் கொஞ்சம் அல்வாவும்//

  திருச்சியிலும் ஒரு கடையில் இந்த அல்வா கிடைக்கும். சூப்பரா இருக்கும். ரொம்ப நாளாச்சு சாப்பிட்டு. எல்லாம் இந்த டயட்டால... :-(

  பதிலளிநீக்கு
 3. படங்களைப் பார்க்கும் போதே வாயில் எச்சில் ஊறுகிறது....
  தேங்காய் அல்வா...... செய்து பார்க்க வேண்டும்.....டும்....ம்.....

  பதிலளிநீக்கு
 4. படங்களைப் பார்க்கும் போதே
  நாவில்சுவையை உணரமுடிகிறது

  பதிலளிநீக்கு
 5. தேங்காய்த் திரட்டுப் பாலைத் தான் தேங்காய் அல்வா என்கிறார்கள் போல. ஆனால் நாங்க பச்சரிசி போடறதில்லை. தென் மாவட்டத்துக் கல்யாணங்களில் பாலில் செய்யும் திரட்டுப் பாலைத் தவிரத் தேங்காய்த் திரட்டுப்பாலும் தனியாக வைப்பார்கள். வேணும்னா ரா.ல. வைக் கேளுங்க. :))))

  பதிலளிநீக்கு
 6. மைசூர்ப் பாகு என்றால் பழைய முறைப்படி மைசூர்ப்பாகு பொர பொரவென கூடு விட்டுக் கொண்டு வரும்படி கிளறி எடுப்பது. நம்ம ரிஷபன் சார் போன வருஷத்துக்கு முந்தின வருஷம்(?) தீபாவளி சமயத்தில் நம்ம வீட்டுக்கு வந்தப்போ நான் செய்திருந்த மைசூர்பாகை ரசிச்சுச் சாப்பிட்டார்.

  பதிலளிநீக்கு
 7. கிருஷ்ணா ஸ்வீட்ஸில் செய்வது எல்லாம் கொஞ்சம் போல் பால் சேர்த்துக் கொண்டுரொம்பவே சாஃப்டாக வரும்படிக் கிளறி எடுப்பது. இதைத் தான் அவங்க ஒரு புதுமைக்காக மைசூர்பா என்று பெயர் வைத்து விற்க ஆரம்பித்தார்கள். இதைக் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் முரளியே ஒரு பேட்டியில் சொல்லிக் கேட்டேன்.இப்போ மைசூர்பா என்றால் அப்படித் தான் இருக்கணும் என்று ஆகி விட்டது. :))))

  பதிலளிநீக்கு
 8. http://sivamgss.blogspot.in/2012/11/blog-post_13.html

  என்னோட மைசூர்ப்பாகு படம் போட்டிருக்கும் பதிவோட சுட்டி. :)))) எல்லாம் ஒரு விளம்பரந்தேன்!

  "திங்க"கிழமை பதிவுக்கு செவ்"வாய்" வந்திருக்கேன். :))))

  பதிலளிநீக்கு
 9. என்னடா எங்கள் ப்ளாக் திங்கள் கிழமை ரெசிப்பி வரவில்லையே என்று பார்த்தால் எங்க்ள் வலைத்தளம் அதை அப்டேட் செய்யவே இல்லை. ப்ளாகர் ரொம்ப மோசம். அதைத் திட்டிவிட்டு உங்கள் தளத்திற்கு வந்தால்...ஆஹா! என்ன ருசி என்று கோபம் எல்லாம் போயே போச்! பின்ன அல்வா பத்தி...சொன்னா....திருனெல்வேலி இருட்டுக் கடை அல்வா அங்கு மாலை வேளையில் சுடச் சுடக் கொடுப்பார்கள் அதைச் சாப்பிட்டுப் பாருங்கள் ந்ன்றாக இருக்கும். மட்டுமல்ல, அந்த இருட்டுக் க்டை அல்வா வீட்டில் செய்தால் மிக நன்றாக வழுக்கிக் கொண்டு போகும் அளவு செய்யலாம்.
  தேங்காய் அல்வா கேரளாவில் இந்த வகை அல்வா பிரசித்தம். தேங்காய் பால் எடுத்துச் செய்வார்கள். வீட்டில் தேங்காயுடன் அரைத்தும் செய்வதுண்டு. வெல்லம் தான். நாகர்கோவிலில், திருனெல்வேலி, அதற்கும் தெற்கே உள்ள இடங்களில் இந்த்த் தேங்காய் அல்வா, கோதுமைப் பாலில் தேங்காய் பால் வெல்லம் கலந்து மிகவும் நன்றாக இருக்கும். அது மஸ்கோத்து அல்வா என்று பிரசித்தம்.

  பதிலளிநீக்கு
 10. என்னிடமும் வெண்கல உருளி இருக்கு ஸ்ரீராம்.

  கீதா சொல்வது போல் திருநெல்வேலியில் கல்யாண வீட்டிலும் இந்த இனிப்பு இடம்பெறும். வீட்டுக்கு யாராவது விருந்தினர் வந்தால் விஷேசமாக செய்வது திரட்டுப்பால் அதில் சிறிது பாசிப்பருப்பு வறுத்து தேங்காயுடன் அரைத்து செய்வார்கள்.

  நீங்கள் சொல்லி இருக்கும் முறையிலும் செய்து பார்க்கலாம்.


  பதிலளிநீக்கு
 11. எனக்கும் ரொம்ப பிரேமம் ,நம்ம ஊர் அல்வாதான் :)

  பதிலளிநீக்கு
 12. ஏகப்பட்ட இனிப்பு. ருசிக்க ருசிக்க அருமை. நல்லவேளை படிப்பதோடு நிறுத்திக் கொண்டாயிற்று.கல்யாணங்களில் திரட்டுப்பால் என்று திரட்டிப்பாலின் பாதிப் பதத்தில் திக் காகப் பால் வைப்பார்கள் எங்கப் பக்கம்.கல்யாணப் பெண்ணுக்குக் கிடைக்காது. மாமியார் வீட்டுக்குப் போகும்.,

  பதிலளிநீக்கு
 13. வலைச்சரத்தில் தங்களது பதிவுஅறிமுகம் கண்டேன். வாழ்த்துக்கள்.
  http://drbjambulingam.blogspot.com/
  http://ponnibuddha.blogspot.com/

  பதிலளிநீக்கு
 14. பாழாப் போன சுகர் வந்து தொலைச்சிருச்சு.
  இந்த ரெசிபியை செய்து தரச் சொல்ல பயமாக இருக்கிறது. (பிரேமா விலாஸ் அல்வாவை திருட்டுத் தனமாக ருசித்திருககிறேன் )

  பதிலளிநீக்கு
 15. திருநெல்வேலி அல்வா என்றாலே லக்ஷ்மி விலாஸ் அல்வாதான். பெங்களூர் நண்பர்கள் பலர் அதற்குத் தீவிர இரசிகர்கள்:)! ஒவ்வொரு முறையும் வாங்கி வந்து கொடுப்பேன். இருட்டுக் கடை அன்றைக்கே வாங்கிச் சாப்பிட சரி. ல.வி அல்வா வாங்கி ஓரிரு நாளில் சற்று இறுக்கமானாலும் 2tb sp, ஆறேழு நொடிகளுக்கு என்ற கணக்கில் மைக்ரோ அவனில் சூடு செய்தால் சரியாய் இருக்கும்.

  @ஹுஸைனம்மா, மைதீன் ஸ்டோர் இதுவரை முயன்றதில்லை. அடுத்த முறை பார்க்கிறேன்.

  திரட்டுப்பால் பற்றி கோமதிம்மா சொல்லி விட்டார்கள்.

  வெண்கல உருளி என்னிடமும் உள்ளது. தினசரி உபயோகிக்கவும் செய்கிறேன், வீட்டு முகப்பில் ஸ்டான்ட் மேல் வைத்து நீர் நிரப்பி மலர்களை மிதக்க விட :)!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!