81 ல் குமுதத்தில் "நான் பாரதியாரைச் சந்தித்தால்?" என்ற தலைப்பில் குமரி
அனந்தன், கி ஆ பெ விஸ்வநாதன், கி வீரமணி, கமலஹாசன், அப்துல் சமத் என்று
பலரும் பாரதியார் செய்திகளுடன் தத்தம் கற்பனைகளைக் கலந்து எழுதி
இருந்தார்கள். அதில் குமரி அனந்தன் 'வாஞ்சி பற்றி குறிப்பிட்டதும்
பாரதியின் முகம் மலர்ந்தது'என்று எழுதி இருப்பதை மறுத்து, பாரதியார்
வன்முறைக்கு எதிரானவர் என்று எட்டயாபுரம் பா.நா கணபதி, பாரதியார் அது
குறித்து எழுதியிருந்த கட்டுரையை எடுத்துப் போட்டிருக்கிறார். இதை மறுத்து
ரகமி பாரதியார் ஆஷ் கொலை வழக்கில் மறைமுகமாக சம்பந்தப் பட்டவர் என்பது போல
அப்போது நடந்த வாதங்களை எடுத்து அடுக்கியிருக்கிறார். 'எழுத்தாளன்'
பத்திரிக்கை ஆசிரியர் அ.வெ.ர. கிருஷ்ணசாமி ரெட்டியார் கி. ஆ. பெ
எழுதியுள்ள பாரதி பற்றிய கட்டுரையில் பல முரண்பாடுகள் இருப்பதைப்
பட்டியலிடுகிறார். கி ஆ பெ சொல்லியுள்ள சில வரிகள் குறித்தும் மற்றும்
பொதுவாகவும் அப்புறம் ஒரு இதழில் பாரதியாரின் பேத்தி லலிதா பாரதி "என்
பாட்டனாரை இப்படியெல்லாமா இளக்காரப் படுத்துவது?" என்ற தலைப்பில் கடிதம்
ஒன்றும் எழுதி இருக்கிறார். அதைக் கீழே பகிர்கிறோம்...
"மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு விழா பெருமைப்படும் விதத்தில் அரசினரால்
தொடங்கப் பட்டது என்பது நாடறிந்த விஷயம். ஏராளமான பெரியவர்களும்
அறிஞர்களும் தத்தம் அன்பு உரைகளை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். மிக்க
மகிழ்ச்சி. எனினும், பாரதியாரின் பேத்தி-தங்கம்மாளின் புதல்வி என்ற
உரிமையிலே அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்.
பாரதியார் வறுமையில் வாடியது உண்மைதான் என்ற போதிலும் வறுமையை துச்சமென
உதறியவர் அவர். "சாப்பிட்டால் பொரித்த அப்பளத்துடன் நல்ல சாப்பாடு,
இல்லையெனில் பழமும் பாலுந்தான்" என்று என் பாட்டியார் செல்லம்மா பாரதி
சொல்லக் கேட்டிருக்கிறேன்.
ஆனால் அவரது சொந்த வாழ்க்கையைப் பற்றி இன்று பேசுவோர் சற்று நாகரிகமாக
இருக்க வேண்டுமென வேண்டுகிறேன். கிழிசல் கோட்டு, எலி கடித்த மாதிரி பொத்தல்கள், அதை மறைக்க மனைவியினுடைய கருப்புசீலை, சாயப்பூச்சு என்றெல்லாம்
வர்ணிக்கும் அளவுக்கு அவர் ஒருநாளும் இருந்ததில்லை என்று என் பாட்டியார்
கூறக் கேட்டிருக்கிறேன்.
என் தாயார் தங்கம்மாள் பாரதி உயிருடன் இருந்த காலத்தில் அவர் கீரைத்தண்டைத்
தெருவிலே விற்றார் என்று பத்திரிகையில் எழுதி இருந்ததையும் பார்த்திருக்கிறேன்.
தன் பெண்ணுக்குத் தன் கைப்பட தாரை வார்த்துக் கல்யாணம் செய்து கொடுத்தவர்
பாரதியார். அப்படியிருக்க, 'பாரதியார் தன் மகள் கல்யாணத்துக்கு வர மறுத்து
விட்டார். நான்தான் கல்யாணத்துக்கு வேண்டிய வேஷ்டி புடைவைகளை கடனாகக்
கொடுத்துதவிக் கல்யாணத்தை நடத்தி வைத்தேன்' என்று என் காதுபடவே அன்பர்
ஒருவர் கூறினார்.
புதுவை அரசு நடத்திய பாரதி விழாவிலும் ஒரு செய்தி கேள்விப் பட்டேன்.
'பாரதியார் என் மடிமீது படுத்து உயிரை விட்டார்' என்று ஒரு அன்பர்
கூறியிருக்கிறார். இப்படிப் பட்ட உண்மைக்குப் புறம்பான செய்திகளைக்
கேட்கும்போது மனதிற்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. எல்லாம் அன்பின்
மிகுதியால் சொல்லப்பட்ட வார்த்தைகள்தான் என்ற போதிலும் எங்கள்
குடும்பத்தினரால் அதைச் சகித்துக் கொள்ள முடியவில்லை. பாரதியார் இறந்த
பிறகுதான் நான் பிறந்தேன் என்றாலும், என் பாட்டியாரால் முழுக்க முழுக்க
வளர்க்கப் பட்டவள் நான். 'பாரதியார் ஒரு அலங்காரப் பிரியர். இறப்பதற்குச்
சில நிமிடங்கள் முன்பு கூடத் தான் அணிந்திருந்த அல்பாகக் கோட்டையும்,
தலைப்பாகையையும் சரி செய்து கொண்டார். நல்ல ஆடைகள் அணிவதில் அவருக்கு
விருப்பம் மட்டுமல்ல, அதை அனைத்திலும் மிகுந்த கவனமும் செலுத்துவார்'
என்றெல்லாம் என் பாட்டியார் கூறக் கேட்டிருக்கிறேன். எனவே பாரதி அன்பர்கள் எது சொன்னாலும் சரி, எழுதினாலும் சரி அவரது சொந்த வாழ்க்கையைப்பற்றிக்
குறிப்பிடும்போது அவரது குடும்பத்தினரும் உயிருடன் இருக்கிறார்கள் என்பதை
நினைவில் வைத்துக் கொண்டு எழுதும்படி கேட்டுக் கொள்கிறேன். பசியின் கொடுமை
காரணமாகப் பாரதியார் 'ரோட்டில் கிடந்த எச்சிலையைப் பொறுக்கிக்
கொண்டிருந்தார்' என்ற அளவிற்குக் கூட நாளை யாரும் சொல்லி விடுவார்களோ என்று
பயமாயிருக்கிறது"
நெஞ்சில் 'புற'மும்..!