செவ்வாய், 11 செப்டம்பர், 2012

பாரதியார் சில நினைவுகள் - படித்ததன் பகிர்வு



81 ல் குமுதத்தில் "நான் பாரதியாரைச் சந்தித்தால்?" என்ற தலைப்பில் குமரி அனந்தன், கி ஆ பெ விஸ்வநாதன், கி வீரமணி, கமலஹாசன், அப்துல் சமத் என்று பலரும்  பாரதியார் செய்திகளுடன் தத்தம் கற்பனைகளைக் கலந்து எழுதி இருந்தார்கள். அதில் குமரி அனந்தன் 'வாஞ்சி பற்றி குறிப்பிட்டதும் பாரதியின் முகம் மலர்ந்தது'என்று எழுதி இருப்பதை மறுத்து, பாரதியார் வன்முறைக்கு எதிரானவர் என்று எட்டயாபுரம் பா.நா கணபதி,  பாரதியார் அது குறித்து எழுதியிருந்த கட்டுரையை எடுத்துப் போட்டிருக்கிறார். இதை மறுத்து ரகமி பாரதியார் ஆஷ் கொலை வழக்கில் மறைமுகமாக சம்பந்தப் பட்டவர் என்பது போல அப்போது நடந்த வாதங்களை எடுத்து அடுக்கியிருக்கிறார். 'எழுத்தாளன்' பத்திரிக்கை ஆசிரியர் அ.வெ.ர. கிருஷ்ணசாமி ரெட்டியார்  கி. ஆ. பெ எழுதியுள்ள பாரதி பற்றிய கட்டுரையில் பல முரண்பாடுகள் இருப்பதைப் பட்டியலிடுகிறார். கி ஆ பெ சொல்லியுள்ள சில வரிகள் குறித்தும் மற்றும் பொதுவாகவும்  அப்புறம் ஒரு இதழில் பாரதியாரின் பேத்தி லலிதா பாரதி "என் பாட்டனாரை இப்படியெல்லாமா இளக்காரப் படுத்துவது?" என்ற தலைப்பில் கடிதம் ஒன்றும் எழுதி இருக்கிறார். அதைக் கீழே பகிர்கிறோம்...

"மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு விழா பெருமைப்படும் விதத்தில் அரசினரால் தொடங்கப் பட்டது என்பது நாடறிந்த விஷயம். ஏராளமான பெரியவர்களும் அறிஞர்களும் தத்தம் அன்பு உரைகளை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். மிக்க மகிழ்ச்சி. எனினும், பாரதியாரின் பேத்தி-தங்கம்மாளின் புதல்வி என்ற உரிமையிலே அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்.

பாரதியார் வறுமையில் வாடியது உண்மைதான் என்ற போதிலும் வறுமையை துச்சமென உதறியவர் அவர். "சாப்பிட்டால் பொரித்த அப்பளத்துடன் நல்ல சாப்பாடு, இல்லையெனில் பழமும் பாலுந்தான்" என்று என் பாட்டியார் செல்லம்மா பாரதி சொல்லக் கேட்டிருக்கிறேன்.

ஆனால் அவரது சொந்த வாழ்க்கையைப் பற்றி இன்று பேசுவோர் சற்று நாகரிகமாக இருக்க வேண்டுமென வேண்டுகிறேன். கிழிசல் கோட்டு, எலி கடித்த மாதிரி பொத்தல்கள், அதை மறைக்க மனைவியினுடைய கருப்புசீலை, சாயப்பூச்சு என்றெல்லாம் வர்ணிக்கும் அளவுக்கு அவர் ஒருநாளும் இருந்ததில்லை என்று என் பாட்டியார் கூறக் கேட்டிருக்கிறேன்.

என் தாயார் தங்கம்மாள் பாரதி உயிருடன் இருந்த காலத்தில் அவர் கீரைத்தண்டைத் தெருவிலே  விற்றார் என்று பத்திரிகையில் எழுதி இருந்ததையும் பார்த்திருக்கிறேன்.

தன் பெண்ணுக்குத் தன் கைப்பட தாரை வார்த்துக் கல்யாணம் செய்து கொடுத்தவர் பாரதியார். அப்படியிருக்க, 'பாரதியார் தன் மகள் கல்யாணத்துக்கு வர மறுத்து விட்டார். நான்தான் கல்யாணத்துக்கு வேண்டிய வேஷ்டி புடைவைகளை கடனாகக் கொடுத்துதவிக் கல்யாணத்தை நடத்தி வைத்தேன்' என்று என் காதுபடவே அன்பர் ஒருவர் கூறினார்.

புதுவை அரசு நடத்திய பாரதி விழாவிலும் ஒரு செய்தி கேள்விப் பட்டேன். 'பாரதியார் என் மடிமீது படுத்து உயிரை விட்டார்' என்று ஒரு அன்பர் கூறியிருக்கிறார். இப்படிப் பட்ட உண்மைக்குப் புறம்பான செய்திகளைக் கேட்கும்போது மனதிற்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. எல்லாம் அன்பின் மிகுதியால் சொல்லப்பட்ட வார்த்தைகள்தான் என்ற போதிலும் எங்கள் குடும்பத்தினரால் அதைச் சகித்துக் கொள்ள முடியவில்லை. பாரதியார் இறந்த பிறகுதான் நான் பிறந்தேன் என்றாலும், என் பாட்டியாரால் முழுக்க முழுக்க வளர்க்கப் பட்டவள் நான். 'பாரதியார் ஒரு அலங்காரப் பிரியர். இறப்பதற்குச் சில நிமிடங்கள் முன்பு கூடத் தான் அணிந்திருந்த அல்பாகக் கோட்டையும், தலைப்பாகையையும் சரி செய்து கொண்டார். நல்ல ஆடைகள் அணிவதில் அவருக்கு விருப்பம் மட்டுமல்ல, அதை அனைத்திலும் மிகுந்த கவனமும் செலுத்துவார்' என்றெல்லாம் என் பாட்டியார் கூறக் கேட்டிருக்கிறேன். எனவே பாரதி அன்பர்கள் து சொன்னாலும் சரி, எழுதினாலும் சரி அவரது சொந்த வாழ்க்கையைப்பற்றிக் குறிப்பிடும்போது அவரது குடும்பத்தினரும் உயிருடன் இருக்கிறார்கள் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு எழுதும்படி கேட்டுக் கொள்கிறேன். பசியின் கொடுமை காரணமாகப் பாரதியார் 'ரோட்டில் கிடந்த எச்சிலையைப் பொறுக்கிக் கொண்டிருந்தார்' என்ற அளவிற்குக் கூட நாளை யாரும் சொல்லி விடுவார்களோ என்று பயமாயிருக்கிறது"

நெஞ்சில் 'புற'மும்..!
 



17 கருத்துகள்:

  1. அந்த மஹாகவிஞன் இன்று இருந்தால் தன்னைத் தானே நொந்துக் கொண்டிருப்பான்

    பதிலளிநீக்கு
  2. அருமையான அஞ்சலி. நான் என்ன எழுதுவதுனு முழிச்சுட்டு இருக்கேன். ஏன்னா அந்த அளவுக்கு பாரதியைப்பத்தின விமரிசனங்கள். :(((

    பதிலளிநீக்கு
  3. /அவரது குடும்பத்தினரும் உயிருடன் இருக்கிறார்கள் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு/ நியாயமான ஆதங்கம்.

    மகாக்கவிக்கு நம் அஞ்சலிகள்.

    பதிலளிநீக்கு
  4. இறந்தவர் எழுந்துவந்து பேசமாட்டார் என்று நினைத்து உரைத்துவிட்டார்களோ.பாரதியின் பெருமையை அவரின் பாட்டுகள் உணத்தும்.// நெஞ்சில் உரமும் இன்றி நேர்மைத் திறமும் இன்றி
    வஞ்சனை சொல்வாரடி
    அவர் வாய்ச்சொல்லில் வீரரடி//
    பகிர்ந்த ஸ்ரீராமுக்கு மிகவும் நன்றி.

    பதிலளிநீக்கு
  5. மிகவும் உருக்கமான கடிதம். கடைசி வரிகள் கண் கலங்க செய்து விட்டது. உண்மைக்கு புறம்பாக பேசிய ஜென்மங்கள் இதை படித்த பிறகாவது நிறுத்தியிருக்க வேண்டும்.

    அருமையான பாடல்கள். பகிர்ந்து கொண்டதற்கு மிகவும் நன்றி. 'தூண்டிற்புழுவை' இந்த பாடலில் DKB. அவர்களின் குரல் என்னை கிறங்கடிக்கும். மேலும் சில பாரதியார் பாடல்கள் இருக்கின்றன. எனக்கு மிகவும் பிடித்த மகராஜபுரம் அவர்களின் 'மோகத்தை கொன்றுவிடு' பாடலை மீண்டும் ஒரு முறை ரசித்து கேட்டேன். என்ன ஒரு அழகான மெட்டு! எவ்வளவு அற்புதமாக பாடி இருக்கிறார். பிரமாதம்!


    பதிலளிநீக்கு
  6. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  7. மிக மிக அற்புதமான பதிவு... பாரதியின் நினைவு நாளில் அவரைப் பற்றி அவர் பேத்தி எழுதிய மடல் வாசிக்கக் கிடைத்தது எவ்வளவு புண்ணியம்.... எவ்வளவு உயர்ந்த கருத்துக்கள் அந்த மடலில் உள்ளன.... நன்றி சார்...நிறைய புதிய விஷயங்கள் தெரிந்து கொண்டேன்

    பதிலளிநீக்கு
  8. மிகச் சிறப்பான பகிர்வு... அவரது வாழ்க்கையும் சரி... பாடல்களும் சரி... இன்னும் பல பேருக்கு டானிக்... + ஆய்தம்... + ... + ...

    பதிலளிநீக்கு
  9. மிக மிக அற்புதமான பதிவு.பாடல்களும் கூட !

    பதிலளிநீக்கு
  10. இறந்தவரைப் பற்றி எதுவேண்டுமானாலும் கூறக்கூடாது! அவரது பேத்தி சரியாக கூறியிருக்கிறார் தேசியகவியை உயர்த்தும் சாக்கில் இழிவு படுத்துவது மடமை! நல்லதொரு பகிர்வு! நன்றி!

    இன்று என் தளத்தில்!
    பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 8
    http://thalirssb.blogspot.in/2012/09/8.html


    பதிலளிநீக்கு
  11. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  12. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  13. பாரதியின் பேத்திக்கு ஒரு கடிதம்:

    பாரதியார் தேசியக் கவிஞர். அந்த மட்டில் அவரைப் பற்றிப் பேச எழுத அனைவருக்கும் உரிமை உண்டு.

    உங்கள் intent நன்றானாலும் தேவையில்லாமல் புலம்பியிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். உங்களை விட பாரதியாரை நன்கறிந்தவர்களின் கருத்துக்களை "மனம் புண்படுகிறது" என்று சொல்லித் தவிர்க்கச் சொல்வது வம்சாவளி உரிமையில்லை sadly - பாரதியார் என்ற தனிமனிதன் தன் குடும்பத்தை எப்படி நடத்தினான் என்ற் கருத்துக்களைத் தவிர.

    பாரதியார் ஏழ்மையில் வாடினாரென்றோ, போதை மருந்துப் பழக்கம் கொண்டவர் என்றோ, வரட்டுக் கௌரவம் பார்த்தவர் என்றோ சொல்வதில் என்ன தவறு? நாம் பாரதியை நினைப்பது இந்தக் காரணங்களுக்கல்ல - இத்தனையும் மீறி அவனுடைய குரல் இன்றைக்கும் நம் நெஞ்சை இழுத்துப் போட்டு இம்சை செய்கிறதே, அதற்காக. இந்தக் காரணங்கள் பாரதியும் நம்மைப் போல் மனிதன் என்ற கீழ்மட்ட நிறைவைத் தருவதற்காக நாம் சொல்கிறோம் அவ்வளவுதான் (நம்மால் பாரதி அளவுக்கு உயர முடியாது என்பதால் அவனை நம் அளவுக்குக் கீழே கொண்டு வருகிறோம். basic psychology.

    எனக்கென்னவோ இந்தக் கடிதம் விளம்பரம் தேடிக்கொள்ள எழுதப்பட்டதாகவே தோன்றுகிறது.

    கவலையே வேண்டாம் பேத்தி அவர்களே, உங்கள் தாத்தாவின் மதிப்பை நூற்றாண்டுகளுக்கு வளர்க்க எத்தனையோ ஆயிரம் பேர் இருக்கிறார்கள். பாரதியின் வம்சவழி என்ற அளவில் உங்கள் மீது மதிப்பு வைக்கிறோம், பொறாமையும் படுகிறோம். இல்லாத உரிமையை இருப்பதாக எண்ணி இருக்கும் பெருமையைக் குறைத்துக் கொள்ளாதீர்களேன்?

    பதிலளிநீக்கு
  14. மிக கண்ணியமான பாரதியின் பேத்தி கடிதம் கூடவே அவரின் நெஞ்சின் வலியையும் காண்பிக்கிறது. வேறு எது சொன்னாலும் பொருத்தமற்றுப்போய் விடும் அளவு நீங்களே இந்த நிலைக்குப் பொருத்தமான, அவரது கவிதையையே [' நெஞ்சில் உரமும் இன்றி' ] பதிவு செய்து விட்டீர்கள்! அருமையான நினைவஞ்சலி!

    பதிலளிநீக்கு
  15. தேசிய கவியை இழிவு படுத்துவது காலம்காலமாக தொடர்கிறது. அதில் இவர்கள் விதிவிலக்கல்ல.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!