5 periods லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
5 periods லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

5.12.12

அலேக் அனுபவங்கள் 15:: அஞ்சு பீரியட்!

                 
பள்ளிக்கூட நாட்களில், சில உள்ளூர் விசேஷங்களுக்கும், கார்த்திகை தீபம் போன்ற மாலை நேர விழாக்களுக்கும், அஞ்சு பீரியட் பள்ளிக்கூட வகுப்புகள் நடக்கும். பிறகு எல்லோரும் 'வீட்டுக்கு பெல்' அடித்தவுடன், வில்லிலிருந்து புறப்பட்ட அம்புகளாக வீட்டை நோக்கி சந்தோஷமாக ஓடுவோம்.
                    
அசோக் லேலண்டில் வருடம் இரண்டு நாட்கள், நாங்க அஞ்சு பீரியட் என்று அழைக்கின்ற நாட்கள் வரும்.
              
ஒன்று கார்த்திகை தீபம். இரண்டாவது, கிறிஸ்துமசுக்கு முதல் நாள். இவைகள் வாராந்திர விடுமுறை நாட்களில் இல்லாமல் இருந்தால், அஞ்சு பீரியட் வேலை, அப்புறம் வீட்டுக்கு! இது தவிர, சட்டசபை தேர்தல்  நடக்கின்ற நாட்களில் கூட இந்த வகையில் அஞ்சு பீரியட் கணக்கு உண்டு. ஆனால் என்ன,  பெரும்பாலும் நாம் ஓட்டுப் போட சென்று பார்க்கையில், நம்முடைய வோட்டை யாராவது போட்டிருப்பார்கள் (என்று எண்ணி, வோட்டுப் போட  செல்லாமலும் இருந்துவிடுவோம்!)
                    
காலை ஏழரை மணி முதல், மதியம் ஒன்றரை மணி வரை வேலை. கம்பெனி பேருந்துகள், மதியம் ஒன்று ஐம்பதுக்கு கிளம்பி, பேருந்து பயண வசதி பெற்றவர்களை, ஏற்றிச் செல்லும்.
                
இந்த அஞ்சு பீரியட் நாட்களில், காண்டீனில் மதிய உணவாக சர்க்கரைப் பொங்கல் செய்வார்கள். தனியாக மதிய உணவு நேரம் என்று அந்த நாட்களில் கிடையாது. தாமரை இலையில் கட்டப்பட்ட சர்க்கரைப் பொங்கல், சுடச்சுட பதினொன்றரை மணிக்கு, தொழிற்சாலையின் எல்லா பகுதிகளுக்கும் வந்துவிடும். ஆரம்பத்தில், சில நாட்கள் ஒரு பாக்கெட் பதினாறு பைசா கூப்பன் கொடுத்து வாங்கினோம். போகப் போக, அது இலவசமாகவே கொடுக்கப்பட்டது. ஒருவருக்கு ஒரு பாக்கெட். என்ற வகையில் கியூவில் நின்று வாங்கிக் கொள்வோம். முந்திரியும், திராட்சையும் போட்ட, சர்க்கரைப் பொங்கல். எல்லோருமே விரும்பி சாப்பிடுவோம். 

                    
எண்பதுகளில் ஒரு கார்த்திகை தீப தினத்தன்று, வீட்டுக்கு மாலை வந்துவிடுவேன், பிறகு அகல் விளக்குகள் ஏற்றலாம் என்று கூறி, அலுவலகம் சென்றேன். நான் பணியாற்றிய பகுதியில், என் குழுவிற்கு அப்பொழுது தலைவராக இருந்த ஒருவர், அந்த நாளை, என்னுடைய பொறுமையை சோதித்துப் பார்க்கின்ற நாளாக தேர்ந்தெடுத்துவிட்டார். 
                
தனியார் நிறுவனங்களில், சாதாரணமாக நிகழ்கின்ற ஒரு விஷயம்தான், இது. ஆண்டு முழுவதும் நாம் செய்யும் பணிகளை அதிகம் கவனியாமல், நம்முடைய ஆண்டு சம்பள உயர்விற்காக படிவங்கள் பெர்சனல் டிப்பார்ட்மெண்ட் அனுப்பும் பொழுது மட்டும் விழித்துக் கொள்வார்கள். இவர், என்னுடைய பேப்பர்கள் வந்த ஆறு மாதங்கள், அதை அனுப்பாமல் வைத்திருந்து, பிறகு, என் பொறுமை குணம் எவ்வளவு என்று தெரிந்து கொள்ள ஒரு சந்தர்ப்பமாக இந்த நாளை தேர்ந்தெடுத்தது, என்னுடைய துரதிருஷ்டம் என்றுதான் நினைக்கின்றேன். 
                 
லாரியின் முன் பகுதியில் இருக்கின்ற காபின் பகுதியில், புதிய கியர் பாக்ஸ் பொருத்தினால், அதை இயக்குகின்ற லீவர் பானட்டு கவர் மீது அமைக்க ஒரு பெட்டி. அதை பானட்டு கவர் மீது அமைப்பதற்கு, என்னென்ன மாற்றங்கள் செய்ய வேண்டும், என்கிற விவரங்களை ஒரு படமாக வரைய சொன்னார். அப்பொழுது மணி மதியம் ஒன்று பதினைந்து. பதினைந்து நிமிடங்களில் வரைந்து கொண்டு போய் கொடுத்தேன். அவர் ஃபோனில் பேசிக் கொண்டிருந்தார். நான் அவருடைய அறையில் நின்று கொண்டிருந்தேன். நின்று கொண்டே இருந்தேன். கம்பெனி பேருந்துகள் எல்லாம் கம்பெனியிலிருந்து அலுவலர்களை ஏற்றிச் சென்றன - அவருடைய அறையிலிருந்து எல்லாவற்றையும் பார்க்க முடிந்தது. அவரும் அதை உணர்ந்தவராக, கடைசி பேருந்தும் சென்ற பிறகு, போன் பேச்சை முடித்து, நான் வரைந்த படத்தை பார்த்தார். இரண்டு மூன்று மாற்றங்கள் சொன்னார். செய்தேன். மணி இரண்டரை. 
                
மீண்டும் பார்த்து, சில மாற்றங்கள் சொன்னார். செய்தேன். மணி நான்கு. இவ்வாறு மாற்றங்கள் சொல்லி, செய்து, சொல்லி செய்து, ஆறு மணி வரையிலும் இழுத்தடித்தார். 
                        
அதற்குப் பின் நான் வரைந்த படத்திற்கு நகல்கள் தயார் செய்யச் சொன்னார். பிறகு அவருடைய உதவியாளரை அழைத்து, ஒரு கடிதம் டிக்டேட் செய்து, அதிலும் மாற்றங்கள் பல சொல்லி, செய்து, கடிதத்தையும், படத்தையும் கொண்டுபோய் பர்ச்சேஸ் டிப்பார்ட்மெண்டில் கொடுத்துவிட்டு வரச் சொன்னார். 
                 
எல்லா வேலைகளையும் முடித்து விட்டு கிளம்பும் சமயத்தில், அந்த அதிகாரி, 'என்னுடன் வருகிறாயா? பீச் ஸ்டேஷனில் டிராப் செய்கிறேன்?' என்று கேட்டார். எனக்கு இருந்த வெறுப்பில், நான் சிறிய புன்னகை ஒன்றை உதிர்த்து விட்டு, 'இல்லை சார். நான் டிரெயினில் போய்க் கொள்கிறேன்' என்று கூறி விட்டுக் கிளம்பினேன். கத்திவாக்கம் ஸ்டேஷனில் ரயில் ஏறி, சென்டிரல் வரை பிரச்னை இல்லாமல் போய் சேர்ந்தேன். 
               
ஆனால், அன்றைக்கு சோதனையாக, பார்க் ஸ்டேஷனிலிருந்து கிளம்பிய மின் தொடர், வழியில் ஏதோ பிரச்னையில் நின்று போய், குரோம்பேட்டை சென்றடைய இரவு பதினொரு மணி ஆகிவிட்டது. வீட்டில், மனைவியும், அப்பாவும் மிகவும் கவலையுடன் காத்திருந்தனர். அப்பொழுது வீட்டில் தொலை பேசி, அலை பேசி என்று எந்த தகவல் சாதனமும் கிடையாது. அன்றைக்குப் பார்த்து சென்னை தொலைக்காட்சியில் ஏதோ சோக படம் வேறு போட்டிருந்தார்கள் போலிருக்கு. (தூரத்து இடி முழக்கம்?). மனைவி மிகவும் சோகமாக இருந்தார். என்னைப் பார்த்த பின்தான் அவர்களுக்கு மகிழ்ச்சி திரும்பியது.
     
அவ்வளவு கஷ்டப்பட்டு, நான் வரைந்த படத்தை, ஒரு வாரம் கழித்துதான், சப்ளையரிடம் பர்ச்சேஸ் டிபார்ட்மெண்டிலிருந்து கொடுத்தார்கள் என்று பிறகு ஒரு நண்பரிடமிருந்து தெரிந்து கொண்டேன்.