6.9.25

மரிக்காத மனிதம்  மற்றும் நான் படிச்ச கதை

 

Thank you JKC Sir

=======================================================================================


கடலூர் மாவட்டம் பண்ரூட்டி மருங்கூர் கிராமத்தை சேர்ந்த முந்திரி விவசாயி ராமநாதன். இவரின் மனைவி பெயர் இளவரசி. இவர்களுக்கு சுஷ்மிதா மற்றும் ஜஸ்வர்யா என இரண்டு மகள்கள். சுஷ்மிதா மூத்த மகள், ஐஸ்வர்யா இளைய மகள் ஆவார். எளிமையான விவசாய குடும்பம். இருப்பினும், இரண்டு மகள்களையும் நன்கு படிக்க வைக்க வேண்டும் என விரும்பினார். சிறிய வருமானத்தில் குடும்பத்தை நடத்தி வந்தவர்களுக்கு 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி வாழ்க்கையே புரட்டி போட்டது. சுனாமியில் வீட்டை இழந்தனர். இதுவரை உழைத்தது முழுவதும் ஒரே இரவில் பறிபோனது. இந்த சம்பவம் சகோதரிகள் மனதில் ஆழமாக பதிந்தது. ஆனால் இது சோர்வடைய செய்யவில்லை. வெற்றி நோக்கி ஓட இன்னும் முயற்சியை வேகபடுத்தவே செய்தது. (Image - Instagram)

சுஷ்மிதா, ஐஸ்வர்யா, இருவரும் ஒரே பள்ளியில் படித்தனர். சுஷ்மிதாவிற்கு மருத்துவம் படிக்க வேண்டும் என ஆசை. 12-ம் வகுப்பில் கட்-ஆஃப் குறைந்ததால் பொறியியல் தேர்வு செய்தார். ஜஸ்வர்யாவிற்கு கல்லூரி தொடக்கமே ஐஏஎஸ் ஆகதான் ஆசை. அவரும் பொறியியலையே தேர்வு செய்து, அண்ணா பல்கலைக்கழத்தில் சேர்ந்தார். மூத்தவர் சுஷ்மிதா ஒரு வருடம் முன்பே பட்டப்படிப்பை முடித்தார். சென்னையில் உள்ள பயிற்சி மையத்தில் சேர்ந்து யுபிஎஸ்சி தேர்விற்கு படிக்க தயரானார். இளையவர் ஐஸ்வர்யாவும், அதே பாதையில் யுபிஎஸ்சிக்கு தயராக தொடங்கினார். (Image - Instagram)
இவர்களின் தயார் இளவரசி, இளம் வயதிலேயே திருமணம் செய்துகொண்டார். அவருக்கு படிக்க வேண்டும் என ஆசை. திருமணத்திற்கு பின்பு கணவரின் உதவியுடன் படித்தார். பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ முடித்தார். அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என ஆசைப்பட்டார். 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார். இந்த நிகழ்வு மிகவும் சுவாரஸ்யமானது. அவரின் இளைய மகளுடன் சேர்ந்து பொதுத்தேர்வை எழுதினார். தொடர்ந்து, தொலைத்தூரக் கல்வியில் பட்டப்படிப்பு முடித்தார். டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வை எழுதி கல்வித்துறையில் அரசு வேலையை பெற்றார். மகள்கள் கல்லுரியில் படிக்கும்போது தன்னுடைய அரசு கனவை நினைவாக்கிய இவர், தொடர்ந்து மகள்களுக்க்கும் ஊக்கமளித்தார்.
முதல் முயற்யிலேயே வெற்றி பெற்ற ஐஸ்வர்யா
முதல் முயற்யிலேயே வெற்றி பெற்ற ஐஸ்வர்யா
யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வை அக்கா சுஷ்மிதா முதலாவதாக எழுதினார். ஆனால் வெற்றி பெறவில்லை. அடுத்த ஆண்டு, அதாவது 2018-ம் ஆண்டு ஐஸ்வர்யா இத்தேர்வை எழுதினார். முதல் முயற்சியிலேயே அகில இந்திய அளவில் 628-வது இடம் பிடித்தார். இவருக்கு இந்தியன் ரயில்வே கணக்கு சேவையில் பணி வழங்கப்பட்டது. ஆனால், ஐஏஎஸ் ஆவதே தன்னுடைய கனவு என உறுதியாக இருந்த ஐஸ்வர்யா, தீவிரமாக தயராகி மீண்டும் 2019-ம் ஆண்டு யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வை எழுதினார். இந்த முறை அவரின் விடாமுயற்சி வெற்றியை தந்தது. அகில இந்திய அளவில் 44வது இடத்தையும். தமிழ்நாட்டில் 2வது இடத்தையும் பெற்றார். இவருக்கு ஐஏஎஸ் பதவி ஒதுக்கப்பட்டது. (Image - Instagram)
தங்கை ஐஏஎஸ் ஆக தேர்வாகியும், அவரின் குடும்பத்தினால் முழுமையான சந்தோஷம் அடைய முடியவில்லை. அக்கா சுஷ்மிதா, யுபிஎஸ்சி தேர்வில் தொடர்ந்து 5 முறை தோல்வி அடைந்தார். மீண்டும் மீண்டும் தோல்வி என்பது அவருக்கு சோர்வை தரும் என்று நினைத்தால், அதற்கு கொஞ்சமும் இடம் கொடுக்கவில்லை சுஷ்மிதா. 6வது முறையாக 2022-ம் ஆண்டு மீண்டும் தேர்வை எழுதினார். இந்த முறை அவருக்கும் வெற்றி கிடைத்தது. அகில இந்திய அளவில் 528வது இடத்தை பெற்றார். இவருக்கு ஐபிஎஸ் ஒதுக்கப்பட்டது. இருவரும் சமூகவியல் பாடத்தில் ஆர்வத்துடன் தேர்வு செய்து படித்தனர். (Image - Instagram)
அரசு அதிகாரிகளுடன் நிறைந்த குடும்பம்
அரசு அதிகாரிகளுடன் நிறைந்த குடும்பம்
ஐஸ்வர்யா 22 வயதில் ஐஏஎஸ்- ஆக தேர்வானார். தற்போது தூக்குக்குடி மாவட்டத்தில் கூடுதல் ஆட்சியராக பணியாற்றி வருகிறார். இவரின் அக்கா சுஷ்மிதா ஆந்திர பிரதேசத்தில் காக்கிநாடாவில் உதவி காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். அம்மா, தமிழ்நாடு அரசு அதிகாரி, சகோதரிகள் இருவரும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் என குடும்பமே அரசு அதிகாரிகளுடன் நிறைந்து உள்ளது. எளிமையான குடும்ப பின்னணி பெண்கள், நாட்டு பணியில் கலக்கி வருகின்றனர். இவர்களின் வெற்றி என்பது, பெண்களுக்கு மட்டுமின்றி, அரசு அதிகாரியாக வேண்டும் என கனவுடன் இருக்கும் அனைவருக்கும் ஊக்கமளிக்கும் விதமாக அமைந்துள்ளது.
நன்றி: சமயம்
Thank you JKC Sir
=============================================================================================


====================================================================================


மயிலாடுதுறை : கல்வி கற்க வயது தடை இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில், 72 வயதான ஓய்வு பெற்ற என்.எல்.சி., ஊழியர், சீர்காழி அருகே அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் டிப்ளமோ படித்து வருகிறார்.  கடலுார் மாவட்டம், வடலுாரைச் சேர்ந்தவர் செல்வமணி, 72; நெய்வேலி என்.எல்.சி.,யில் 37 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவர். எம்.காம்., -- எம்.பி.ஏ., -- ஐ.டி.ஐ., படித்தவர். இவருக்கு இரு மகள்கள் உள்ளனர்.  செல்வமணி பணி ஓய்வு பெற்று, 10 ஆண்டுகள் ஆகின்றன. ஆனாலும், படிப்பின் மீதான ஆர்வம் காரணமாக, மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே புத்துார் சீனிவாசா சுப்பராயா அரசினர் தொழில்நுட்ப கல்லுாரியில் டிப்ளமோ எலக்ட்ரிக்கல் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.  இவர், வயதான தன் மனைவிக்கு தேவையான வீட்டு வேலைகளை செய்து விட்டு, மற்ற மாணவர்களை போல சுறுசுறுப்பாக தோளில் புத்தக பையை சுமந்து குறித்த நேரத்திற்கு கல்லுாரிக்கு வந்து விடுகிறார்.  இவருடன் பழகும் மற்ற மாணவர்கள், தாத்தா என வாஞ்சையுடன் அவரை அழைக்கின்றனர். சக மாணவர்களுடன் வயது வித்தியாசம் பாராமல் சகஜமாக பழகும் செல்வமணி, தனக்கு தெரிந்தவற்றை மாணவர்களுக்கு சொல்லிக் கொடுப்பதுடன், தெரியாதவற்றை மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களிடம் கேட்டு தெரிந்து கொள்கிறார்.கல்விக்கு வயது தடையில்லை என்பதை நிரூபிக்கும் வகையில், 72 வயதிலும் இளைஞரை போல் கல்லுாரியில் வலம் வரும் இவரை, சக மாணவர்கள் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர். மற்ற மாணவர்களுக்கு ரோல் மாடலாக திகழும் செல்வமணியை, பேராசிரியர்கள் பாராட்டுகின்றனர்.

===================================================================================================

 நான் படிச்ச கதை (JKC)

ஐயாயிரம் + ஐநூறு = ஏழரை

கதையாசிரியர்: பாமா கோபாலன்

தின/வார இதழ்: குங்குமம்

பாமா கோபாலன் ( 1943-2022 ) (எஸ். கோபாலன்) எழுத்தாளர், இதழாளர். குமுதம் இதழில் பணியாற்றியவர்.

கோபாலன் சென்னை ஏ.எம். ஜெயின் கல்லூரியில் ரசாயனப்பிரவில் பரிசோதனைச் சாலையில் மூன்றாண்டுகள் உதவியாளராகப் பணி புரிந்தார். குரோம்பேட்டை எம்..டி-யில் ஒரு வருடம் கணக்கீட்டுப்(Accounts) பிரிவில் வேலை பார்த்தார். அதன் பிறகு ஒரு கட்டுமானக் கம்பெனியில் 20 வருடங்கள் பணியாற்றினார். பின்னர் இதழாளராகவும் பணியாற்றினார்.

குமுதத்தில் 13 வருடங்கள் பணி செய்து சுமார் 4000 பேட்டிக் கட்டுரைகள், 700 சிறுகதைகள், 11 நாவல்கள் மற்றும் பொதுக்கட்டுரைகள், துணுக்குகள், மற்றும் ஜோக்குகள் எழுதினார்.

நகைச்சுவையும் கிரைம் எழுத்தும் இவரின் சிறப்பம்சங்கள்.

எழுத்தாளர் வேதா கோபாலன் இவர் மனைவி. வேதா கோபாலன் குமுதம் இதழில் 13 ஆண்டுகள் துணை ஆசிரியராகப் பணியாற்றினார்.

ஒரே மகன் அமெரிக்காவில் வசிக்கிறார்.

பாமா கோபாலன் டிசம்பர் 2, 2022-ல் அமெரிக்காவில் இறைவனடி சேர்ந்தார்.

ஐயாயிரம் + ஐநூறு = ஏழரை

கதையாசிரியர்: பாமா கோபாலன்

நாளைக்கு மீட்டிங்கில் பேச வேண்டும். எதைப் பற்றிப் பேசுவது என்று தெரியவில்லை. நகம், பல் மற்றும் பக்கோடாவைக் கடித்தவாறு யோசித்துக் கொண்டிருந்தேன். யோசிக்க விடாமல் பக்கத்து வீட்டுக்குப் புதுசாய்க் குடி வரப்போகிற குடும்பத்தின் உடைமைகள் லாரியில் வந்திறங்கிய சத்தம்.

சாமான்கள் இறங்க ஆரம்பித்தவுடனேயே ஜன்னல் பக்கத்திலிருந்து பார்த்தவாறு பக்கவாத்தியம் போல் கமென்ட்ரி கொடுத்துக் கொண்டிருந்தாள் என் பெண்டாட்டி.

மூன்று கட்டில்கள், இரண்டு ஃப்ரிஜ்கள் என்று ஏகப்பட்ட பொருட்களாம். மூன்று பேர் காரில் இறங்கியதற்கு இத்தனை சாமான்கள் அதிகமாம். குட்டி யானை போதுமாம். வாசலில் பெல் அடித்ததோ, நான் ரன்னிங் காமென்ட்ரியிலிருந்து தப்பித்தேனோ. 

“என்னங்க… உங்களைத் தேடி யாரோ வந்திருக்காங்க…” வியப்பாயிருந்தது. பின்னே? இப்படி “யாரோ” வெல்லாம் தேடி வர விட்ருவாளா? வந்தவுடனே மூன்று பிறவிச் சரித்திரத்தைத் தெரிந்து கொண்டல்லவா என் வரைக்கும் விஷயம் வரும்?

“ஆரம்பி… வந்தவர் எந்த ஊரில் பிறந்தார்? மனைவியின் சொந்த ஊர் எது? உடன் பிறப்புகள்? என்ன படிச்சிருக்கார்? பிடித்தம் போக எவ்ளோ சம்பளம்?” 

“போங்க உங்களுக்கு எப்பவும் கேலிதான்…” என்று மற்ற கதைகளில் வரும் மனைவிகள் நாணப்படுவார்கள்.

நான் தாலி கட்டிய அபயா உங்க ஊகத்துக்கு அப்….பாற்பட்டவள். சதி வியூகம் சைஸுக்குக் குரலைத் தாழ்த்திக்கொண்டாள். 

“இதபாருங்க… நான் சொல்றதை கவனமாய்க் கேளுங்க…” 

“நான் என்றைக்கு கவனமில்…”

“ஷ்ஷு.. தபாருங்க… நீங்கதான் ஜோசியர் ஜபர்தஸ்த்லிங்கம்…”

“அபயா நான் எழுத்தாளர் பைரவன்…”

“க்கும். நாளைக்கு எவன் வீட்டு ஹாலிலோ நடக்கும் மீட்டிங்ல பேசறதுக்காக ஒட்டடையைப் பார்த்துக்கிட்டு இன்ஸ்பிரேஷன் தேடறீங்க… ‘தட்னாம்பாரு கையை’ன்னு நாளைக்கு வந்து ரோஜாமாலையை உதுத்துக்கிட்டு சொல்லப்போறீங்க…”

“அபயா…” 

“இதபாருங்க… இதுவரைக்கும் எழுதியதில் என்ன சம்பாரிச்சிருப்பீங்க?”

நான் பதில் சொல்லவில்லை. ரிஸ்க்காகிவிடும். இதுவரை நான் என்னென்ன தொகைகள் சொன்னேன் என்று எனக்கே நினைவில்லை. அவள் நடமாடும் கம்ப்யூட்டர். ஏகப்பட்ட மெமரி. ஒவ்வொரு முறை ஒவ்வொரு பதில் சொன்னால் நாளைக்குப் புத்தூர்க் கட்டுதான்.

“ஆக, நீங்க இனிமேல் ஜோசியர்…”

“என்னடீ சொல்ற நீ?” எனக்கு வயிற்றில் புளிக்காய்ச்சல் கிண்டியது.

“ஆமாங்க. உங்களைத் தேடிக்கிட்டு ஒருத்தர் வந்திருக்காரு…”

“நிஜத்தைச் சொல்லுடீ… என்னைத் தேடிக்கிட்டா ஜோசியர் வீட்டைத் தேடிக்கிட்டா?”

“இதபாருங்க. நீங்களும் பிரபலம் இல்லை. அந்த ஜோசியரும் பிரபலமில்லை. அதனால…’’

“வந்த அறிவாளி வாசல்ல போர்ட் பார்க்கலையா?”

“பார்த்துட்டார். எழுத்தாளர் பைரவன் என்பவர் உங்கண்ணா…”

“அடிப்…”

“வாங்க… உங்களுக்கு ஜோசியம் கொஞ்சம் தெரியும்னு எனக்குத் தெரியும். நீங்க அந்த புக்ஸ் படிக்கறதை கவனிச்சிருக்கிறேன்…”

இறைவா. எப்படிப் புரிய வைப்பேன்? ஏதாவது ஒரு நட்சத்திரத்தின் பெயரை அடுத்த கதையில் நாயகிக்கு வைக்கலாம் என்று தாத்தாவின் புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்தேன். அவ்ளோதான். அதற்கு இவ்ளோ பெரிய தண்டனையா?

என் பதிலுக்கெல்லாம் காத்திருக்கும் சொத்தையான ரகம் இல்லை அவள். “ஒரு ஜாதகத்துக்கு ஐநூறு ரூபாய்னு சொல்லிட்டேங்க. ரொம்ப சீப்புன்னு சந்தோஷப்படறாரு…’’ 

ஹாலுக்குள் போனாள். மஞ்சள் தண்ணீர் தெளித்து மாலை போடாத குறையாய்த் தொடர்ந்தேன்.

“இதோ வராருங்க ஜோசியரு…” என்று புலிகேசிக்குக் கட்டியம் கூறுவது போல் சொல்லியவள் புலிக்கண்களாலேயே ஒரு பாராகிராஃப் பேசிவிட்டு நகர்ந்தாள்.

பலி ஆடு மாதிரி, போய் உட்கார்ந்தேன். “என் பிள்ளைக்குக் கல்யாணமாகி ஆறு வருஷமாச்சுங்க. இதுவரை ஒரு புழு பூச்சிகூட இல்லை…’’

“கவலைப்படாதீங்க. இவர் இருக்காரு. உங்க பிரச்னை தீர்ந்துடும்…”  இரட்டை அர்த்த வசனம் மாதிரிச் சொன்னவள் என்னைப் பார்த்தாள்.

இந்த டயலாக் நான் பேசவேண்டியதாம்.

புழு, பூச்சி வருவதற்கு நான் என்ன கால் கிலோ கத்திரிக்காயா வாங்கிக் கொடுக்க முடியும்?!

“ஜாதகத்தை எடுத்துப் பாருங்க…” என் மனைவி அவசரப்படுத்தினாள். எடுத்துப் பார்த்தேன். கைகள் நடுங்கின. கட்டங்களெல்லாம் வட்டங்களாகத் தெரிந்தன. ஒரு கட்டத்தில் குறுக்காக அடித்திருந்தார்கள். ஏதோ கான்ஸல் செய்திருக்கிறார்கள் போலும் என்று நினைத்தேன். அதில் ‘ல’ என்று போட்டிருந்தது. லதா என்று கிரகம் ஏதும் உள்ளதா என்ன?

அவள் ஏதோ கண் காமிக்கிறாள். நான் என்ன என்பது போல் கண்களாலேயே கேட்டேன். நான் பரதநாட்டியமெல்லாம் கற்காதவன். அமெச்சூராகக், கண்களை பதிலுக்கு உயர்த்தி ராஜேந்திரகுமார்த் தனமாக ஙே என்று விழித்தேன். நான் தேறாத கேஸ் என்று அவள் தெரிந்துகொண்டு பதினேழு வருஷங்களாகின்றன. இது அவளே அடிக்கடி சொல்லும் பெருமித வாக்கியம்.

டிபன்ஸ் தரப்பில் விளையாடத் தீர்மானித்தவள்போல் “அவர் ஜாதகத்தைத் தலைகீழாக வைச்சுப் பார்க்கறாரேன்னு சந்தேகப்படாதீங்க. பல்வேறு கோணத்தில் அலசறாரு…’’ என்றாள். இதைத்தான் கண்களால் சொல்லிக்கொண்டிருந்தாளா?

“ஜாதகம் என்னங்க சொல்லுது?”

“இருங்க இருங்க. அது என்ன சொல்லுதுங்கறதெல்லாம் இவரை மாதிரி ஜோசியருங்களுக்குத் தான் காதில் விழும்…” எனக்கு இப்போது இருண்டதெல்லாம் பேய். ஒருவேளை நான் ஹியரிங் எயிட் போட்டிருப்பதை சூசகமாகச் சொல்கிறாளோ?

நான் பேசமாட்டேன் என்று புரிந்ததால் அவளே தொடர்ந்தாள்: “அந்த பாஷையை உங்களுக்கு மொழி பெயர்த்துச் சொல்றதுக்குத்தான் இவரை மாதிரி ஜோசியருங்கல்லாம் இருக்காங்க…” என்றவாறு முழியைப் பெயர்ப்பதுபோல் எனக்கு மட்டும் புரியும்படி பல் கடித்து முழித்தாள்.

அது எந்த பாஷையில் என்ன சொல்லியதோ ஏதோ… நான் சட்டென்று ஜாதகத்தை வைத்துவிட்டு எழுந்து உள்ளே போனேன்.

“என்னங்க?” கல்லூரி மாணவியின் பின்னால் ஓடும் இளைஞன் போல் ஓடி வந்து கேட்டாள். மேனகையைப் பார்த்த விஸ்வாமித்திரர் போஸில் திரும்பிக்கொண்டேன். “நான் மாட்டேன்டீ… உன்னால் ஆனதைப் பார்த்துக்கோ. நேற்றுதான் போலி டாக்டர்களைக் கைது செய்தாங்க…”

“அவங்களுக்கு சர்ட்டிபிகேட்டெல்லாம் வேணும். இதுக்கு எதுவும் வேணாங்க…” ஒரு பத்து நிமிஷம் கோர்ட் சீன் மாதிரி வாதம்… பிரதிவாதம்… பித்தம் எல்லாம் நடந்தது. அவள் சட்டென்று ஹாலுக்குள் சென்றாள்.

“கண்டிப்பா குழந்தை குட்டி பிறக்குமாம்…’’ என்றாளாக்கும். கங்காருவா என்ன குட்டி பிறப்பதற்கு? மனசுக்குள் உறுமினேன். மனசுக்குள் மட்டும்தான் முடியும் என்னால். உரக்க உறுமினால் இரை தேடத் தெருத்தெருவாய் அலைய வேண்டியது தான். ‘‘உங்களை ‘ஹ’ என்ற எழுத்தில் ஆரம்பிக்கற டாக்டர் கிட்ட போகச்சொன்னார்…’’ அடி கேடி. சாத்தியம் இல்லாத எழுத்தைச் சொல்லியிருக்கிறாளே. ஓ… நான் சொன்னபடி நீ செய்யாததால்தான் குழந்தை பிறக்கவில்லை என்று வாதிட வசதியாய் இருக்கும் என்றா? ஆனால், வந்தவர் துள்ளினார்.

“டாக்டர் ஹசீனா கிட்ட தாங்க போயிக்கிட்டிருக்கா…” கதை என் கையை மீறிப் போய்க்கொண்டிருந்தது. இன்னும் என் சார்பில் ஏதாவது பேசுவதற்குள் நான் பாய்ந்து உண்மையைச் சொல்லிவிட்டால் என்ன? அதிகபட்சம் இரண்டு நாள் சாப்பாடு கிடைக்காது. அவ்ளோதானே?

ம்ஹூம். மீறியேவிட்டது. 

“உங்ககிட்ட எப்டி நேராச் சொல்றதுன்னு தயங்கறாருங்க. சில பரிகாரங்க செய்யணுமாம். ஹோமம் செய்யணும். அதை உங்க வீட்ல வெச்சு செஞ்சா வீரியம் அதிகம். அவரே வேறு இடத்தில் செய்துடறாராம். அதுக்குத் தனியா ஐயாயிம் ரூபாய் குடுக்கச் சொன்னாரு…”

”அவ்ளோதானா…’’ என்று ஆச்சர்யப்பட்டார் அந்த முட்டாள் மனிதர். இவள் அந்தக் காசுக்கு ஓமம்கூட வாங்க மாட்டாள்.

இப்படி ஆச்சர்யமெல்லாம் படுவார் என்று தெரிந்திருந்தால் அவள் பத்தாயிரமாய்க் கேட்டிருப்பாள் என்று என் பெண்டாட்டி முகத்தைப் பார்த்தபோது தோன்றியது

“எதுக்கும் இருக்கட்டும்னு ஐயாயிரம் கொண்டு வந்திருக்கேங்க. கொடுத்துடறேன். அரும்பாடு பட்டு உங்க அட்ரசைக் கண்டுபிடிச்சு வந்திருக்கேன்…” அவர் பர்சைத் திறக்கையில்…

மூன்று பேர் அடங்கிய அந்தக் குடும்பம் என்ட்ரி கொடுத்தது

“வணக்கங்க… நான் ஜோசியர் ஜபர்தஸ்த்லிங்கம். நாங்க பக்கத்து வீட்டுக்குப் புதுசாய்க் குடி வந்திருக்கோம். கிளாட் டு மீட் யூ… யாராச்சும் எங்க வீட்டைத் தேடிக்கிட்டு வந்தால் அவங்களுக்குச் சொல்ல வசதியா இருக்குமேன்னு அறிமுகப்படுத்திக்க வந்தேன்…” என்றார். முதலில் ஜோசியர் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்பதா, அல்லது அவரைத் தேடி வந்தவர் காலில் விழுவதா என்று புரியாமல் நான் மறுபடியும் ‘ஙே’!

என்னுரை

தலைப்பிற்கும் (ஐயாயிரம் + ஐநூறு = ஏழரை) ஜோதிஷத்திற்கும் ஒரு பொருத்தமும் இல்லாமல் தோன்றியது. ஆனால் ‘ஏழரை’ சனியின் ஆட்சியை குறிப்பால் உணர்த்துகிறார் என்று ஊகிக்க வேண்டியுள்ளது. ஊகம் சரியா?

இவரது மனைவி வேதா கோபாலனின் தந்தை சோதிடர். வேதா கோபாலன் 2000-ல் மின்னம்பலம் இதழில் சோதிட வினாவிடை எழுதியவர்.

வேதா கோபாலன் கடந்த நாற்பது வருடங்களாக முழு நேர ஜோதிடராகவும் உள்ளார். மாலைமதி, கல்கி, மங்கையர் மலர், தினகரன், பத்திரிகை டாட் காம் ஆகிய பத்திரிகைகளுக்குப் பல ஆண்டுகளாக வாரபலன்கள் எழுதி வருகிறார்.

சிஃபி டாட்காமில் ஜோதிடக் கட்டுரைகள் எழுதியதுடன் அவர்களின் ஜோதிடக்குழுவில் (panel) பங்கேற்றிருக்கிறார்.

அப்படிப்பட்ட ஜோதிட மனைவியை பக்கத்தில் வைத்துக்கொண்டே ஜோதிடர்களை கிண்டல் செய்ய ஒரு ‘தில்’ வேண்டும்!

பாமா கோபாலன் பேட்டி தினமலரில் இருந்து (அவசியம் படித்து பாருங்கள்.)

நானும்-குமுதமும்

வேதா கோபாலனின் பேட்டி குவிகம் இதழிலிருந்து

குவிகம்-பேட்டி  

12 கருத்துகள்:

  1. 6 ஸ்டோர்க் எஞ்சின் நல்ல விஷயம்.

    அது முழுவதும் பரிசீலிக்கப்பட்டதா? பேட்டன்ட் என்றெல்லாம் உண்டே நடைமுறைகள்? அரசுத் தரப்பிலிருந்து சான்றிதழ் வேண்டுமல்லவா?

    முதலில் ஏதேனும் புதுக்கவிதை வடிவில் பாசிட்டிவ் செய்தியா என்று நினைத்துவிட்டேன் அவர் எழுதிய விதத்திலிருந்து.

    ஷைலேந்திர கவுர் கூடக் கொஞ்சம் ஜெ கே அண்ணாவின் சகோதரரோ என்று தோன்றும் அளவில் இருக்கிறார்!!!!!!!!!!!!!!!!! ஹாஹாஹா...

    கீதா

    பதிலளிநீக்கு
  2. மருங்கூர் - எங்க ஊர் பக்கத்திலும் எங்க ஊரிலிருந்து 1/2 மணி நேரம் தான். இந்த ஊர் உண்டே! முருகன் கோவிலுக்குப் புகழ்பெற்றது. அழகோ அழகு அந்த ஊர். எங்க ஊரைச் சொன்னேன். எனக்கு இது நினைவூட்டியது ஒரு விஷயத்தை.

    பண்ருட்டி சுற்றிய பகுதிகலில் முந்திரி நிறைய உண்டு. அட ஜெ கே அண்ணாவின் ஊர்ப்பக்கம். (கடலூர்)

    அக்குடும்பத்தின் உழைப்பும் அயராத முயற்சியும் நல்ல உதாரணங்கள். அருமையான செய்தி. அம்மாவும் வியக்க வைக்கிறார்!
    நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்பது போன்று.

    கீதா

    பதிலளிநீக்கு
  3. உயிருள்ள கண்கண் - நிஜமாகவே மனதை நெகிழ்ச்சி அடையச் செய்து கண்களைப் பனிக்க வைத்துவிட்டது. எப்பவுமே நெகட்டிவ் செய்திகளைப் பார்த்துப் பார்த்து மனம் நெகட்டிவாக உலகமே மோசம்...எல்லாரும் மோசம் என்ற பார்வையே நிறைந்துவிட இப்படியான செய்திகள், இல்லை நீங்கள் பார்க்கும் பார்வைதான் தவறு என்பதைச் சொல்லி நமக்குக் குட்டு வைத்துக் கொண்டேதான் இருக்கின்றன

    கீதா

    பதிலளிநீக்கு
  4. ஆர்வம் இருந்தால் உழைக்கும் சக்தி இருந்தால் 72 வயதிலும் இப்படிப் படிக்கலாம் என்ற உதாரணம் வடலூர் செல்வமணி அவர்கள்!

    நம் ஊரிலும் எந்த வயதிலும் கல்வி தடையில்லை என்று தெரிகிறது. மிக நல்ல விஷயம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  5. தலைப்பிற்கும் (ஐயாயிரம் + ஐநூறு = ஏழரை) ஜோதிஷத்திற்கும் ஒரு பொருத்தமும் இல்லாமல் தோன்றியது. ஆனால் ‘ஏழரை’ சனியின் ஆட்சியை குறிப்பால் உணர்த்துகிறார் என்று ஊகிக்க வேண்டியுள்ளது. ஊகம் சரியா?//

    இந்தக் கடைசியை வாசிக்கும் முன்னரே தலைப்பு புரிந்துவிட்டது, ஜெ கே அண்ணா.

    அதேதான் அண்ணா. ஏழரை சனி என்பதைத்தான் சொல்கிறார்.

    500 ஃபீஸ், 5000 பரிகாரத்துக்குக் கேட்டதால்...ஏழரை சனி ஆட்சியோ இல்லையோ, பொதுவாகவே ஏதேனும் கஷ்டம் வந்தால் நகைச்சுவைக்குக் கூட நாம் ஏழரையைப் பயன்படுத்துவதுண்டே! அப்படித்தான்.

    பாமா கோபாலன், வேதா கோபாலன் ரெண்டு பேரைப் பற்றியும் தெரியும் ஆனால் கடைசியில் நீங்க சொல்லியிருக்கும் அந்த ஜோசிய விஷயம்தான் புதுசு. வேதா ஜோசியமும் பார்க்கறாங்கன்றது புதிய தகவல்.

    கதை நல்லாருக்கு. நிறைய இடங்கள் சிரித்துவிட்டேன்.

    நல்ல எழுத்தாளர்/எழுத்தாளர்கள். பெயர்கள் ரொம்பவே பரிச்சயம். இவங்களுடையது வாசிச்சிருக்கிறேன் ஆனால் சட்டென்று நினைவுக்கு வரவில்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ​வருக வருக. காலை வரவு நல் வரவாகுக.
      6 ஸ்ட்ரோக் என்பவை எவை என்பது பற்றி கூடுதல் அறியவேண்டும். நம்புவதற்கு கொஞ்சம் கடினமாகத்தான் உள்ளது,
      சாதாரணமாக பஞ்சாபி பெண்களுக்குத் தான் கவுர் என்ற சேர்க்கை இருக்கும்.

      Jayakumar

      நீக்கு
  6. நான் இவர் படைப்பில் முதல் கதையை வாசிக்கிறேன்.  நன்றாக இருந்தது.  

    பதிலளிநீக்கு
  7. குடும்பமேஅரசுப் பணி... வியக்க வைத்தது. விடா முயற்சி பாராட்டிற்குரியது.

    உயிருள்ள கண்கள்... மனிதம் பாராட்டப்படவேண்டியது.

    ஜோசியம் கதை நம்பும்படியாக இல்லை. ஜோசியம் பார்ப்பவர்கள் படுமுட்டாள்கள் என நினைத்துவிட்டார் போலும்.

    பதிலளிநீக்கு
  8. பாஸிடிவ் செய்திகள் அனைத்தும் அருமை!

    பதிலளிநீக்கு
  9. நகைச்சுவை என்ற போர்வையில் என்ன வேண்டுமானாலும் எழுதலாம். தோசைக்கல்லை மனைவி கணவர் தலையில் போட்டு காயம் என்கிற மாதிரி. பத்திரிகைகளில் பணி செய்பவர்களுக்கு அவசரமாக எண்ணெயைப் பக்கம் "மேட்டர்" வேண்டும் என்று வரும்போது இந்த மாதிரி "இட்டு ரொப்புவார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒண்ணரை என்று எழுதினால் எண்ணையை என்று வந்திருக்கிறது !!

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!