4.9.25

அப்போதும் மழை பெய்து கொண்டிருந்தது..

 

பள்ளிகொண்டா திரும்பி குடியாத்தம் தாண்டினோம்.  அதற்கப்புறம் 20 முதல் 25 நிமிட மலைப் பயணம்.  ஒரு சிறிய மலையில் ஏறி இறங்கினோம்.  உடனே வந்த ஊர் V. கொட்டாரா என்று நினைவு.  அதிகாலை செல்லும்போது அந்த மலைப்பயணம் மிக ரம்யமாக இருந்தது.  22 கொண்டை ஊசி  வளைவுகள்.

அதைத் தாண்டி இடதுபுறம் திரும்பியதும் அகலமான தேசீய நெடுஞசாலை.  அந்தப் பள்ளி, இந்த ஹள்ளி என சிறு சிறு ஊர்ப்பெயர்களாக வர, நான் ஏற்கனவே டிரைவரிடம் எட்டு மணி சுமாருக்கு எங்காவது நிறுத்தி டிஃபன் சாப்;பிட்டு விடலாம் என்று சொல்லி இருந்தேன். பாஸ் இயற்கை அழைப்பு இடம் பார்த்து நிறுத்தத் சொன்னார்.  சோதனை என்ன என்றால் அந்த பாதையில் ஒரு ஹோட்டலும் வரவில்லை.  டோல் கேட்டும் இல்லை.  சுமார் முப்பத்தைந்து நிமிடங்கள் பயணம்.  ஒரு சில இடங்களில் ஹோட்டல் பெயர் போல வந்தாலும், அது முன்னரே இடதுபுறம் சர்விஸ் சாலையில் திரும்பி இருக்க வேண்டும் என்ற நிலை.

மொராட்டப்பள்ளி என்கிற ஊரில் திருப்பதி ஒரு விரலைக் காட்டிவிட்டு எதிரில் இருந்த பெட்ரோல் பங்கிற்குள் மறைந்து விட்டு சுத்தமாக 15 நிமிடங்கள் அகழித்து வந்த இடைவேளையில் எனக்கு கிடைத்த சில புகைப்படங்கள்..



சோகம் கொண்டாடும் நாய். என்ன சோகமோ.. யாரைத் தேடுகிறதோ... எதை அறிந்ததோ..
அவஸ்தையான ஐம்பது நிமிடங்களுக்குப் பிறகு இடதுபுறம் சர்விஸ் ரோடில் நுழைந்து  பெங்களூருவிற்குள்ளேயே நுழைந்து லேசாக இடதுபுறம் திரும்பியதும் A2B கண்ணில்பட அங்கே இறங்கி சிற்றுண்டி முடித்தோம்.  இயற்கை உபாதையையும் தீர்த்துக் கொண்டோம்.

மலையில் ஏறத்தொடங்கியதும் வந்த முதல் கொண்டாய் ஊசி வளைவு.

தொடர்ந்து வரும் சாலையோர தனித்தனி மலைகள்.

ஜிலேபி எழுத்துகளின் தொடக்கம்!

புகையும் எரிமலை பார்த்திருப்பேர்கள்.  இது வழியும் மேகமலை.

மழை என்ன தூறினாலும் இவருக்கு கவலை இல்லை!

வழியில் கண்ட பாபா மலை.  கொஞ்ச தூரத்திலிருந்தே நிறைய புகைப்படங்கள் எடுத்து வந்தோம்.  இவர் பெயர் 
Toll Baba.. !
உள்ளே நுழைந்த போட்டோ எடுத்ததும் இரண்டு சிறுவர்கள் ஓடி வந்து "கணேஷ் பைசா... கணேஷ் பைசா" என்றார்கள்.
பாபாவை போட்டோ எடுத்தால் கணேஷ் பைசா என்கிறார்களே என்று இதன் பெயர் என்ன என்று கேட்டேன். டோல்பாபா என்றார்கள்.
ஒருவேளை கணேஷ் என்பது அந்த காசு கேட்ட பையனின் பெயரோ என்னவோ!


வழியில் எதிர் திசையில் கண்ட ஏதோ ஒரு கோவிலின் மேற்புறம்.
இந்தப் பயணத்தில் என்ன அருமை என்றால் ரம்யமான காலநிலை.  வெய்யிலே கிடையாது.  பதிலாக மூடிய மேகங்கள், மெலிதான தூறல்..  இளையராஜா பாடல்கள்.மிகவும் ரசித்த பயணமாக அமைந்தது.  போகும்போதும் வரும்போதும் அதேபோல பயணம் அமைந்ததால் மிகவும் ரசித்த பயணமாக இருந்தது.  களைப்பு தெரியவில்லை.

மதிய உணவு எங்காவது சாப்பிடுவதா, இல்லை திருமணம் நடக்குமிடத்துக்கே சென்று விடுவதா என்று குழம்பி, அங்கேயே சென்றடைந்து விடுவது என்று முடிவெடுத்தோம்.

பெங்களூரு தாண்டியதும் தேசீய நெடுஞ்சாலையில் நிறைய ஹோட்டல்கள் தென்பட்டன.  சுற்றிலும் சிறிதும் பெரிதுமாக மலைகள், குன்றுகள்.  அதன்மேல் காற்று வீணாகாமல் மின்சாரம் தயாரிக்க நிறைய பெரிய பெரிய ராட்சத காற்றாடிகள். இரண்டு பக்கமும் தேக்கு மரங்கள் கண்ணில் பட்டன.ஜிலேபி ஜிலேபியாய் எழுதப்பட்ட போர்டுகள்.

சாலையின் இருபுறமும் தென்னைமரங்கள், பாக்குமரங்கள்...

இன்னும் அரை மணியில் திருமண ரிஸார்ட்டை அடைந்து விடுவோம் என்கிற நிலையில் திடீரென வண்டிகள் நின்று விட்டன.  10 நிமிடங்கள் நகரவே இல்லை என்றதும் இறங்கிச் சென்று பார்த்தால் நடுவே ரிப்பேர் நடந்துகொண்டிருந்த ஒரு பாலத்தில், வாகனங்கள் ஒரு ஓரமாக செல்லவேண்டிய நிலையில், மண் சரிவு ஏற்பட்டும், சகதிக்குள் பெரிய வண்டி சிக்கிக் கொண்டும் தாமதம்.  அநேகமாக சரஸ்வதி சபதம் யானை போல வந்த வழியே திரும்பிச் செல்ல நேரிடுமோ என்கிற பயம் அடுத்த பத்து நிமிடத்தில் சரியானதால் விலகியது.  ஜாக்கிரதையாகக் கடந்தோம்.



சில இடங்களில் இப்படி துணி போட்டு மூடி ஏதோ பயிரிட்டிருந்தார்கள்.
நெடுஞ்சாலையிலிருந்து விலகி சிறிய பாதை ஒன்றில் திரும்பியதும் மேலும் கண்கொள்ளாக் காட்சி.  குறுகிய பாதை.  இருபுறமும் பாக்கு மரங்கள்.  செவ்வந்தித் தோட்டங்கள். ரசித்தபடியே சென்றோம்.

அந்த இடத்துக்கு நாங்கள்தான் மாப்பிள்ளை வீட்டு சார்பில் முதலில்க் செல்வோம் என்று தெரிந்தது.  சென்னையிலிருந்து என் ஒன்றுவிட்ட மாமா அத்தை மட்டும் ஒன்றரை மணிக்கே வந்திருந்தனர்.  
சமதா ரிசார்ட் என்னும் அந்த இடத்துக்கு சமர்த்தாக நாங்கள் சென்று சேர்ந்தபோது மணி மூன்றரை என்று ஞாபகம்.  சாப்பாட்டு வேளை தாண்டி இருந்தது.

எங்கள் வண்டியைப் பார்த்து தயாராக வெளியில் வந்த ஒரு குழு, வாசலுக்கு வந்து வரவேற்கத் தயாராக நின்றது.  

நாதஸ்வரக்காரர் சட்டென எழுந்து தோளில் இருந்த துண்டை எடுத்து உதறி, முகம், வாயைத் துடைத்து சீவாளியை எடுத்து வாயில் வைத்து "பீப் ப்பீ" என்று சோதித்துத் தயாரானார்.  மேளக்காரர் 'டும் டும்' என்று ஸ்ருதி பார்த்துக் கொண்டார்.  ஆங்காங்கே எங்கோ கவனமாய் இருந்த சிலரும், பேசிக்கொண்டிருந்த சிலரும் எங்கள் பக்கம் பார்த்து அருகே வரத் தொடங்கினர். வாசலில் நின்ற பெண்மணி நாங்கள் மூவர் மட்டும் இறங்குவதைப் பார்த்து பீப்பீ டும்டும்மை கையமர்த்தியவர், என்னிடம் வந்தார் 

"பன்றி..  பன்றி..." என்றார்.

என் முகமாறுதலை கவனித்து, 'கன்னடம் கொத்தா?" என்றார்.  நான் "தமிழும் இங்கிலீஷும் கொத்து..  தெலுங்கு கொஞ்சம் கொஞ்சம் கொத்து... கன்னடம் கொத்தில்லா" என்றேன்.

'மாப்பிள்ளை வண்டி எப்போது வரும்?' என்றார்.  'அரைமணியில் வந்துவிடும்' என்றேன்.  'சாப்பிடப் போகலாம்' என்று அழைத்துப் போனார். 
 
டிரைவரிடம் லக்கேஜை காரிலேயே வைத்து காரையும் ஓரமாக விட்டுவிட்டு எங்களுடன் வரும்படி அழைத்து விட்டு உள்ளே நடந்தோம்.  கர்நாடகா சாப்பாடு பற்றி ஒரு சிறு லெக்சர் தந்திருந்தார் திருப்பதி.  எங்களுக்கும் தெரியும்தானே!

அப்போதும் மழை பெய்து கொண்டிருந்தது.

எனக்கு பசி இல்லை என்றாலும் பாஸ் நல்ல பசியில் இருந்தார்.  

"சிலுசிலுவென குளிர் அடிக்குது அடிக்குது" என்று மனதுக்குள் பாடியபடி அந்தப் பெண்மணிகளின் பின்னே சாப்பிடும் இடம் நோக்கி நடந்தோம்.


=========================================================================================

சுஜாதா சுஜாதா..... 



அவள் விகடன் பேட்டி.  இப்போது இந்த வீடீயோவை நீக்கி விட்டார்கள்.  பல எழுத்தாளர்கள் உட்பட மிஸ்டர் பொதுஜனம் இதை கடுமையாக விமர்சனம் செய்திருந்ததுதான் காரணம்.  அவர்கள் கருத்திலிருந்து நான் மாறுபட்டிருந்தேன்!  நம் கருத்தை யார் மதிக்கிறார்கள்!

பேசும்போது திருமதி சுஜாதா நெர்வஸாகத்தான் இருந்தார்.  விரல்கள் வளையலை வருட, நாற்காலியின் குமிழை அழுத்தித் தடவ என்று சிறு பதட்டத்துடனேயே காணப்பட்டார்.  அவர் சொல்லியதிலிருந்து சில பகுதிகள்.

"அதே மாதிரி அவர் ஜாதி வித்யாசம்லாம் பார்க்க மாட்டார்.  பொதுவா எஞ்சினியரிங் காலேஜ்லேருந்து டீப் ஸௌத்லேருந்து இன்ஜினியரிங் காலேஜ் பையன் ஒருத்தன் இன்டர்வியூவுக்கு வந்துருக்கான்.  அந்தப் பையனுக்கு இங்கிலிஷ் ஜாஸ்தி பேசத்தெரியாது.  அந்தப் பையன் நல்லா படிச்சு நல்ல மார்க் வாங்கியிருக்கான்.  பர்ஸ்ட் க்ளாஸ்ல வாங்கியிருக்கான்.  பட் ஃப்ளுயன்ட்டா அவனுக்கு சப்ஜெக்ட்ல பேச வரலை.  பட் சப்ஜெக்ட்ல ரொம்ப கெட்டிக்காரன்.  ரொம்ப வறுமையான சூழல்ல படிச்சு வந்த பையன் அவன்.  அப்ப வந்து உன் பேர் என்னன்னு கேட்கவும் பையன் சொல்லி இருக்கான்.  "Go on" அப்படீன்னு இவர் சொல்லவும் பையன் எழுந்துட்டான்.  Go onனா போயிட்டு வான்னு சொல்லிட்டார்னு நினச்சு எழுந்து போக ஆரம்பிச்சுட்டான்.  இவர் கூப்பிட்டார்..."ஏம்ப்பா எங்க எழுந்து போறே?"  " நீங்கதான் Go onனு சொல்லிட்டீங்களே" ன்னு...  "அப்படி இல்ல..  Go onனு சொன்னா மேற்கொண்டு சொல்லுன்னு அர்த்தம்" னு இவர் சொல்லி இருக்கார்.   பாவம் அவனுக்கு தெரியல..  உடனே அவர் கேள்வியெல்லாம் கேட்டா பதில் எல்லாம் கரெக்ட்டா சொன்னான்.  அப்ப பக்கத்துல இருந்தவர் சொன்னாரு, "இவருக்கு இங்கிலீஷே தெரியலியே..  இவரை எப்படி வேலைக்கு எடுக்கறது?"  இவர் சொல்லிட்டார் "சப்ஜெக்ட் தெரிஞ்சா போறும்..  இங்கிலிஷ் அவசியமில்லே.. நாலு நாள் பேசினா அவனுக்கு எல்லாம் வந்துடும்"  அந்த வோட்டிங் மெஷின் \777 விஷயத்துல அந்தப் பையன் ஒரு இம்பார்ட்டண்ட் ஹெல்ப் பண்ணியிருக்கார்.இதுமாதிரி இவங்களை எல்லாம் என்கரேஜ் பண்ணனும்னு விருப்பப்படுவார்"

திருமதி சுஜாதா பேட்டி காண்பவர் பேசும்போதும் பதில் அளிக்கும்போதும் அவர் கை விரல்கள் அவர் கையில் உள்ள வளையலைத் திருகியபடியும், நாற்காலியின் குமிழ் போன்ற அமைப்பை வட்டமிட்டபடியும் இருந்தன.  ஆறு ஆண்டுகளுக்குமுன் பிஹைண்ட்வுட் செயலிலும் பேட்டி கொடுத்திருக்கிறார்.

பெங்களுருவில் இருந்தபோது ஒரு நாள் இரவு ஏழு மணி சுமாருக்கு யாரோ கதவைத் தட்டுகிறார்கள் என்று கதவைத் திறந்தால் ஒரு காலேஜ் படிக்கும் இளைஞன் வந்தானாம்.  சுஜாதாவுடைய Fan என்று சொல்லிப் பேசிக்கொண்டிருந்தாநாம்.  இரவு நேரமாகி விட்டதாம்.  ஏற்கனவே வீடு அத்துவானக்காட்டில் இருப்பது போல தனியாக தள்ளி இருக்குமாம்.  அந் நேரத்துக்கு மேல் திரும்பிப் போக பஸ்ஸும் இல்லை என்றதும் இரவு தங்கி விட்டு காலை கிளம்பிப் போகச் சொன்னார்களாம்.  அவனுக்கு சாப்பாடு போட்டு, மகன்கள் இருந்த அறையில் படுக்க வைத்தார்களாம்.  காலை எழுந்ததும் காபி கொடுத்து 'என்ன பண்ணப்போறே' என்றதும்,  "ஸார்..  நான் என் ப்ரெண்ட்ஸ் கிட்ட ஒரு சேலஞ்ஜ் பண்ணிட்டு வந்தேன்.  இது மாதிரி சுஜாதா ஸார் வீட்டுல தங்கிட்டு அவர் கையெழுத்து போட்டு ஒரு புத்தகம் வாங்கி வருகிறேன் என்று சொல்லி விட்டு வந்திருக்கிறேன்.  ஸோ எனக்கு ஒரு புத்தகம் கையெழுத்து போட்டு கொடுங்க" ன்னு கேட்டானாம்.  சுஜாதா மறுத்து விட்டாராம்.அவன் உண்மையில் இவர் கதைகளை படித்ததுமில்லையாம்.  "நீ விருந்தாளியா வந்துட்டே..   உனக்கு சாப்பாடு போட்டு மரியாதை பண்ணினோம்...  போயிட்டு வா" என்றாராம்.  அவன் போன பிறகு 'ஏன் அவனுக்கு ஒரு புத்தகம் கையெழுத்து போட்டு கொடுத்து அனுப்பி இருக்கலாமே என்று மனைவி கேட்டதற்கு, "இல்ல..  அவன் Faனா இல்லன்னா கூட பரவாயில்ல..  உண்மையைச் சொல்லி இருந்தா தந்திருப்பேன்.  அவன் பொய் சொன்னான், எனக்கு அது பிடிக்கல" என்றாராம்.  ராத்திரி யாரோ ஒரு தெரியாத பையன் நம் மகன்களோட தூங்கறானேன்னு பயமும் வரல்லையாம் திருமதி சுஜாதாவுக்கு.  "வீட்டில எடுத்துண்டு போக ஒண்ணுமே கிடையாதே" என்று சிரிக்கிறார்.

சுஜாதா நேர்மையை எதிர்பார்ப்பதற்கு ஒரு உதாரணமும் சொல்கிறார்.  துப்பாக்கி வைத்த Gகார்டுடன் வரும் ஒரு மிகப்;பெரிய வி ஐ பி க்கு இவர் கன்சல்டன்ட்டாக இருந்தாராம்.  அவர் ஒரு முறை இவர் பிளாட்டுக்கிட்டு அருகில் இருந்த வீட்டைக் காட்டி "ரங்கராஜன்..  அந்த மூணு பெட்ரூம் பிளாட்யும் நான் வாங்கித் தந்து விடுகிறேன்.  வச்சுக்குங்க..  ஆறு பெட்ரூமாக இருக்கும்"  என்றாராம்.  சுஜாதா ஒன்றும் சொல்லவில்லையாம்.  அவர் கிளம்பிப் போனதும் 'அவர்தான் வாங்கித் தர்றேங்கறாரே..  வாங்கலாமே'  என்று கேட்டதற்கு, ' நம் உழைப்புக்கு காசு வாங்கினால் அது நேர்மை.  நாம் உழைக்காததற்கு காசு வாங்கினால் நாம அவருக்கு அடிமை ஆகிவிடுவோம்.  உனக்கு எது வேண்டும்?' என்று கேட்டாராம்.

இந்தியன் பட ஷூட்டிங் பார்த்துக் கொண்டிருக்கும்போது ஒரு காட்சியில் மனிஷா கொய்ராலா நாய் ஒன்றை கையில் தூக்கிக் கொண்டு போகும் காட்சி வந்ததாம்.  அதில் எங்க நாயை யூஸ் பண்ணிக்கோங்க என்று திருமதி சுஜாதா இயக்குனர் சங்கரிடம் சொன்னாராம்.  அதுக்கென்ன என்று சொல்லி விட்டு இவர்கள் வீட்டு டாஷ்ஷெண்ட் நாயைதான் மனிஷா உள்ளே தூக்கிப் போனாராம்.

ஐஸ்வர்யா ராய் திரையில் அழகாய் தெரிகிறாரே தவிர, நேரில் அவ்வளவு அழகாயில்லை என்பது இவர் அபிப்ராயம்.  சொல்கிறார்.

சுஜாதா வாழ்க்கையை படமாக்கினால் யாரை சுஜாதாவாக போடலாம் என்கிற கேள்விக்கு, அது போர் அடிக்கும்.  நல்லாயிருக்காது என்கிறார்.  ஒண்ணுமே சுவாரஸ்யமே இருக்காது.  காதல் அது இது எல்லாம் கிடையாது என்கிறார்.

எனக்கெல்லாம் போர் அடிச்சா ஏதாவது ஒரு சுஜாதா புத்தகம் எடுத்து படிச்சா அடுத்த ரெண்டு மணிநேரம் ப்ரெஷாயிடுவேன் என்கிறார் பேட்டியாளர்.

 அவர் முடிக்கும் முன்னேயே "அது கற்பனை உலகம்:  என்று இடை வெட்டுகிறார் திருமதி சுஜாதா.    "அது கற்பனை உலகம் என்று மறுபடியும் வலியுறுத்துகிறார்.  உலகத்திலே வந்து ஒண்ணே ஒண்ணு...  எழுத்து வேற, எழுத்தாளன் வேற...  நடிப்பு வேற, நடிகன் வேற..  நடிப்புங்கறது அவனுக்கு தொழில்.  நடிகன்ங்கறவன் சாதாரண மனுஷன்.  வீட்டுக்கு போயிட்டா அவன் சாதாரண மனுஷன்.  அதே மாதிரிதான் அவரும்.  அவர் எழுத்துன்றது ஒரு மாதிரி எழுதிட்டு இருந்தாரு.  அது அவருக்கு கைவந்த கலை.  மனிதன்ங்கறது எல்லோர் வீட்டுலயும் அப்பா அம்மா இல்லையா...  அந்த மாதிரிதான் அது..  அதனால சுவாரஸ்யம்னு சொல்றதுக்கு ஒண்ணுமே இல்ல..  

சினிமா பற்றி பேசும்போது 'ஒரு படத்துக்கு 60 ஸீன் வரும்.  அவரோட இருந்ததால எனக்கு கூடத்தான்  தெரியும்.  பாட்டு, டான்ஸ்னு எடுப்பாங்க.  எந்திரன் படத்துக்கு 30 ஸீன்தான் இவர் எழுதினார்.  அப்புறம் ஆஸ்பத்திரி போயிட்டார். பாக்கி முப்பது ஸீன் அவங்கதான் எழுதிகிட்டாங்க."

கடைசியா ஆஸ்பத்திரிக்கு அவரை அனுப்பும்போதே எனக்கு ஏதோ பட்டது.  அவரும் ஆஸ்பத்திரி போகமாட்டேன்னு சொன்னார்.  ஒருநாள் ஆஸ்பத்திரிலியிலிருந்து போன் பண்ணினாங்க..  'சாப்பிடவே மாட்டேங்கறார்' னாங்க.  நான் வர்றேன்னு சொல்லிட்டு அங்க போனேன்.  ஏன் சாப்பிடக் கூடாதான்னு கேட்டேன்.  எதுவுமே பிடிக்கலைன்னார்.  I lost interest in life ன்னார்.

=================================================================================================

தொலைந்த
உறவுகளை,
நட்புகளை,
மீட்டெடுக்குமா
தொலையாத,
தொலைக்க முடியாத
நினைவுகள்?
கலைக்க மனமில்லாத
கனவுகள்! 2012

===========================================================================================

ராணிமுத்து நினைவிருக்கிறதா?

கதையாக வந்து..  
அப்புறம் ராணிமுத்துவில் வெளிவந்தது.  அப்போது இந்தக் கதை படித்திருக்கிறேன்.

=====================================================================================================

பொக்கிஷம்  :  பொக்கிஷம்  :  பொக்கிஷம்  :  பொக்கிஷம்  :


சுலப வழி!


தயாரானதா, தெரியவில்லை.


அத்தையோ, பெரியம்மாவோ எங்கே போயிருப்பாங்க...




சுஜாதாவின் வித்தியாச எழுத்தும், 

                                                                  அதற்கு ஜெ படமும்.



8 கருத்துகள்:

  1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.....

    பயணமும் படங்களும் நன்று. தொடரட்டும் பயணம்.

    திருமதி சுஜாதா அவர்களின் காணொளி சில நிமிடங்கள் பார்த்தேன். முழுதும் பார்க்கத் தோன்றவில்லை.

    துணுக்குகள் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வெங்கட்..   

      நான் திரு சுஜாதா மறைந்ததுமே அவர் திருமதி கொடுத்த பேட்டியும் பார்த்தேன்.  ஆறு வருடங்களுக்கு முன் கொடுத்த பெட்டியும் பார்த்தேன்.  இதுவும்!

      நன்றி. தொடர்ந்து வாருங்கள்.

      நீக்கு
  2. ஜிலேபி எழுத்து..சரஸ்வதி சபதம் யானை..பாயாசத்தில் முந்திரி..படங்களுடன் பகிர்ந்த விதம் அருமை..கான்ஸ்டபிள் கந்தசாமி அவர் எழுதியது தான் ஆபாச ஃபேமஸ் .. வாழ்த்துக்களுடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ரமணி ஸார்...   ராசித்ததற்கு நன்றி.
        
      கான்ஸ்டபிள் கந்தசாமி "தலைவரி"ன் இலக்கியத்தொண்டு அல்ல.  அது வேறு தலைப்பு.  இது வேறு கதை.

      நீக்கு
    2. // ராசித்ததற்கு நன்றி. //

      * ரசித்ததற்கு நன்றி.

      நீக்கு
  3. பயணக்கட்டுரையும் படங்களும் நன்று. too much close-up settings. போனைக் காட்டிலும் p & s கமெரா படங்கள் எடுக்க சிறந்தது என்பது எனது அனுபவம்.

    கலைந்த கனவுகள் தானே
    தொலைந்த நினைவுகளை தூண்டி
    தொலைந்தாலும் மறக்க முடியாத
    நட்புக்களை உறவுகளை
    மீட்டெடுக்க ஏங்க வைக்கிறது

    ​பொக்கிஷம் துணுக்குகள் பரவாயில்லை. மீட்டர் போட்டால் தான் மீட்டருக்கு மேல் கேட்க முடியும் என்பது இங்கு திருவனந்தபுரத்தில் தற்போது உள்ளது தான். Demand rounded to next higher multiple of tens. suppose meter shows 44 rs payment will be 50 rs.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க JKC ஸார்..

      2006 ல் ஒரு கேமிரா வாங்கினேன். Cool Pix 13 MP. அப்புறம் மகனுக்காக 2016 என்று ஞாபகம். அப்போது ஒரு நிக்கான் கேமிரா வாங்கினேன். ஆனால் அதை எல்லாம் தூக்கிக் கொண்டு எங்கும் செல்வதில்லை. அவை சரியான வொர்கிங் கண்டிஷனிலும் இல்லை. தன் ஃபோனே கைக்குதவி என்று எடுத்துக் கொண்டிருக்கிறேன்.

      சில மலர்களை க்ளோசப்பில் எடுத்தால் அதன் விசேஷம் புரியும் என்று அவற்றை க்ளோசப்பில் எடுத்தேன்.

      கவிதையில் ஆறுதல்?

      44 ரூபாயை 50 ரூபாயாக்குவது ரொம்ப ரொம்ப பரவாயில்லை. இங்கே ஐம்பதிலிருந்து நூறு ரூபாய் வரை அதிகம் கேட்கிறார்களே...

      நீக்கு
  4. பயண அனுபவங்கள் அருமை! சமதா என்பதை சமந்தா என்று படித்ஹு விட்டேன்.. :))
    ராணிமுத்துவில் "வழவழப்பாக இருக்கும் முட்டை/மொட்டை" என்று பொது அறிவு போட்டி வரும் இல்லையா?
    ஜோக்குகள் 'ஸோ ஸோ..'

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!