நிலைய வித்வான் அட்டகாசம் தொடர்கிறது... ஏற்கனவே சொன்னேன், சிறு மாற்றங்கள் சமையலில், சுவையில் நல்ல வித்தியாசம் காட்டும் என்று. சரவணபவன் சாம்பார் - கீதா அக்கா பற்றி சொல்லி இருந்தேன்.
சென்ற வாரத்துக்கு முந்தைய வாரம் பகிர்ந்திருந்த 'இட்லி தோசை சாம்பாரை' நெல்லை, பானு அக்கா செய்து பார்த்து பாராட்டி மெசேஜ் அனுப்பி இருந்தார்கள். ஏற்கனவே கீதா ரெங்கன் செய்து பார்த்து, அவர் தந்த புகைப்படங்களைதான் பதிவிலேயே நான் பகிர்ந்திருந்தேன். இதெல்லாம் ஒரு சிறு சந்தோஷம் தருகிறது தான்.
இன்றைய சமையலில் வத்தக்குழம்பு போல வத்தரசம்! அதென்ன வத்தரசம்?
சொல்கிறேன்.
சாம்பாரில் பூண்டா என்று கேட்ட நெல்லை, கீதா அக்கா உட்பட நீங்கள் 'ரசத்தில் வத்தலா?' என்று கேட்கக்கூடும்.
எனக்கும் முதலில் வியப்புதான்.
ஒரே மாதிரி சமைப்பதைவிட சம்பிரதாயங்களை மீறி வித்தியாசமாக செய்வதில் சிலசமயம் நல்ல சுவைகள் கிடைத்து விடும்!
செய்முறைக்கு வருகிறேன். சாதாரணமாக ரசத்துக்கு கடைசியில்தான் தாளிப்போம். இங்கு முதலிலேயே தாளித்து விடலாம்.
ஒரு கரண்டி அல்லது ஒன்றரை கரண்டி - உங்கள் வழக்கப்படி அளவில் - ரசத்துக்கு போட வேண்டிய துவரம்பருப்பை குக்கரில் நன்றாக வேகவைத்து எடுத்து மைய்ய மசித்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.
வாணலியில் மூன்று டேபிள் ஸ்பூன் நெய் விட்டுக் கொள்ளவும். (வாணலியில் செய்ய வேண்டும் என்பதில்லை. ரசம் என்பது என்னைப் பொறுத்தவரை எவர்சில்வர் பாத்திரத்தில் செய்வதுதான். அன்று என்னவோ பாஸ் வாணலியில் செய்து விட்டார். திருமதி லதா சேகர் வாணலி என்றுதான் சொன்னார். அதனால் இருக்கலாம்!)
அதில் கடுகு, சீரகம் போட்டு தாளிக்கவும். ஒரு பெரிய தக்காளியை சிறிய துண்டுகளாக நறுக்கி அதில் போட்டு வதக்கவும். கறிவேப்பிலை சேர்த்துக் கொள்ளவும். இரண்டு வரமிளகாய் கிள்ளிப் போடவும். அரை டீஸ்பூன் மஞ்சள்பொடி சேர்க்கவும். பெருங்காயம் சேர்க்கவும். வேகவைத்து மசித்து வைத்திருக்கும் துவரம் பருப்பை அதில் சேர்க்கவும். ஓரிரு பச்சை மிளகாயை கீறி போடவும். (பச்சை மிளகாய் நான் சேர்த்துக்கொண்டேன்! எனக்கு ரசத்தில் பச்சை மிளகாய் வாசனை இருக்கவேண்டும்!) அனைத்தையும் நன்றாகக் கலந்து விட்டு புரட்டவும். எல்லாம் கலந்து மசிந்து சேர்ந்து வரும். இப்போது அதில் பெரிய டம்ளரால் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்க்கவும். உப்பு சேர்க்கவும்.
ஒரு டேபிள்ஸ்பூன் சுண்ட வத்தல் எடுத்து அதில் மூன்று பெரிய பல் பூண்டு சேர்த்து சிறு உரலில் இடிக்கவும்.
கொதித்துக் கொண்டிருக்கும் ரசத்தில் நெல்லிக்காய் அளவு புளி எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கரைத்துச் சேர்க்கவும்.
இப்போது இடித்து வைத்திருக்கும் பூண்டு, மிளகை ஒரு ஸ்பூன் நெய்யில் இட்டு மிக லேசாக ஒரு திருப்பு திருப்பி ரசத்தில் சேர்க்கவும். அரை டம்ளர் தண்ணீர் விடவும். அதன்மேல் நிறைய கொத்துமல்லி தூவி முத்துக்கொதி வந்ததும் இறக்கி வைத்து விடவும். ரொம்ப ரசம் கொதிக்கக் கூடாது இல்லையா?
ரசத்தை இறக்கி வைக்கும்போது பாத்திரத்தில் மேலே பாதி நுரை, பாதி ரசம், கொத்துமல்லித் தழைகள் என்று பார்ப்பதற்கே ரம்யமாக கண்ணில் பட்டாலே நல்ல ரசம்தான் என்று தெரிந்து விடும்.
So, வத்தரசம் தயார். மிக மிக லேஸான கசப்போடு சுவையான ரசம் ரெடி. குடிக்கலாம், சாதத்தில் கலந்து சாப்பிடலாம். நன்றாக இருந்தது.
பின்குறிப்பு : ட்ரையல் அண்ட் எரர்ஸ், கரெக்ஷன்ஸ் அண்ட் சஜஷன்ஸ் :
இதை நான் ஒரு இன்ஸ்டாக்ராம் பதிவில் கேட்டேன். லதா சேகர் என்பவர் சொன்ன செய்முறை. ஆனால் அவர் பெப்பர் என்று சொன்னது என் காதில் 'வெத்தல்' என்று விழுந்தது. வெறுமனே வத்தல் என்கிறாரே, மணத்தக்காளி வத்தல் போடலாமா, சுண்டை வத்தல் போடலாமா என்று எண்ணமிட்டபடியே அவர் வீடியோ பார்த்தால் பார்பபதற்கு சுண்டை வத்தல் மாதிரி இருக்க அதையே சேர்த்தேன். என் குறிப்புகளின்படி ரசம் செய்தபிறகு பாஸ் வீடியோ பார்த்து / கேட்டு விட்டு 'அது வெத்தல் இல்லை, பெப்பர்' என்றார்
பெப்பர்தான். வெத்தல் - வத்தல் என்று நான் மனதில் போட்டுக்கொண்டதால் க்ளோசப் ஷாட்டில் மிளகு, சுண்ட வத்தல் போல தெரிந்திருக்கிறது.. அவர் பேச்சுவழக்கில் வத்தலை வெத்தல் என்று சொல்கிறார் என்று நினைத்துக் கொண்டேன்!
அதனால் ஒன்றும் கெட்டுவிடவில்லை. புதிய சுவையில் ரசம் கிடைத்தது. மறுநாள் வத்தலோடு மிளகும் சேர்த்து இடித்து இதே முறையில் செய்தோம். சூப்பர். திருமதி லதா சேகர் பதிவில்போய் நான் பெப்பரை வெத்தல் என்று காதில் வாங்கி அதன்படி கலந்து செய்ததையும், ருசியாகவே இருந்தது என்பதையும் குறிப்பிட்டேன். மிக்க மகிழ்ச்சி என்று மட்டும் பதில் வந்தது!
1) மிளகும் பூண்டும் இடித்துச் சேர்த்து செய்யலாம். 2) மிளகு, வத்தல், பூண்டு இடித்துச் சேர்த்து செய்யலாம். 3) வத்தலும் பூண்டும் இடித்துச் சேர்த்துச் செய்யலாம்.
ஒருமுறை மணத்தக்காளி வத்தல் போட்டு செய்து பார்க்க வேண்டும்!
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா... வணக்கம். இணைந்து பிரார்த்திப்போம்.
நீக்குவத்தலை வெத்தல் என நினைத்து நீங்கள் செய்த வத்தரசமும் நல்லாத்தான் இருக்கு.
பதிலளிநீக்குஇன்னமும் வீட்டில் பூண்டு ரசமே ஓகேயாகலை. அதனால் வத்தரசமும் செய்வது சந்தேகம்தான்
வாங்க நெல்லை...
நீக்கு// வத்தலை வெத்தல் என நினைத்து //
தவறு! பெப்பரை வெத்தல் என்று காதில் வாங்கி...!
// இன்னமும் வீட்டில் பூண்டு ரசமே ஓகேயாகலை.
ஹும்.. நீங்கள் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்! இத்தனைக்கும் பூண்டு அதிகமில்லை, மூன்றே பல்!
பூண்டுலாம் வாங்கிட்டேன். ஊருக்கு வந்த பிறகு பண்ணச்சொல்லணும். பிரச்சனை என்னன்னா சாதம் சாப்பிடுவதையே ரொம்ப ரொம்பக் குறைத்துவிட்டேன்
நீக்குரசசாதம் மட்டுமாவது சாப்பிடலாமே. .! உணவிலேயே சிறந்தது ரசம். தினமும் அந்த மிளகு, சீரகம், இஞ்சி என உடலுக்குள் சேர்வது உடலுக்கு நாம் அன்றாடம் தரும் ஒரு மருந்து மாதிரிதானே..!
நீக்கு// பூண்டுலாம் வாங்கிட்டேன். ஊருக்கு வந்த பிறகு பண்ணச்சொல்லணும். //
நீக்குஎன்னது... மதுராவிலேயே பூண்டு வாங்கிட்டீங்களா?
அடப்பாவமே.. அடுத்த பிரச்னை சாதமா?!!
சரியாகச் சொன்னீர்கள் கமலா அக்கா.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய திங்கள் பதிவில் தங்களது செய்முறையான வத்தரசம் நன்றாக உள்ளது. செய்முறைகள், படங்கள் அனைத்தையும் ரசித்தேன். பெப்பருக்கும், வத்தலுக்கும் உச்சரிப்பு வேறு மாதிரி இருக்குமே..! நீங்கள் எப்படி வத்தல் என கேட்டீர்கள்.? எனக்கானால் அது வேறு மாதிரியெல்லாம் கேட்டிருக்கும். பெப்பரை அவர் சொல்லிய விதத்தில் பேரீட்சை எனக் கேட்டு அதை வைத்து ரசம் செய்திருப்பேன். :))) (என் காது இப்போது அவ்வளவு சுத்தம்.:))) ) முதலில் வத்தரசம் எனப்படித்ததும், நான் கூட ரசத்தை கொஞ்சம் நேரம் கூடுதலாக கொதிக்க விட்டு "வத்தவைக்க" வேண்டுமென நினைத்துக் கொண்டேன். ஹா ஹா ஹா.
நீங்கள் செய்த சுண்டைக்காய் ரசம் குறிப்புக்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. மணம் இங்கு வரை மனதுக்குள் வீசுகிறது. இப்படி ஒரு முறை நானும் செய்து பார்க்கிறேன். நானும் ரசங்களில் காய்கறிகளை வைத்து புதிது புதிதாக முயற்சிப்பேன்.இதற்கு தொட்டுகையாக சுட்ட அப்பளமே போதுமா? இல்லை காய்கறிகள் வேணுமா? அன்று என்ன செய்தீர்கள்.? பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
இதைச் செய்தபிறகு உங்களுக்கு வீட்டில் பாராட்டு கிடைத்ததா இல்லை, எப்போவும் பண்ணற ரசம் பண்ணாம இதை ஏன் பண்ணுனீங்கன்னு சொல்றாங்களா என்று எழுதுங்க
நீக்குசில சமயம் கிடைக்கும். சில சமயம் அவரவர்கள் சாப்பிடும் உணவுகளில் (அதாவது காலை டிபனின் கவனத்தைப் பொறுத்து) வித்தியாசத்தைக் பொறுத்து மதிய உணவில் நாட்டமில்லாமல் போகும். நானும் பாராட்டை வேண்டி பண்ணுவதில்லை. தக்காளி வீட்டில் இல்லாதிருந்தால், குடைமிளகாய், முள்ளங்கி, முருங்கைகாய் என சேர்ப்பேன். அவ்வளவுதான். மற்றபடி ரசத்திற்கான பார்முலா எப்போதும் போல்தான்.நன்றி.
நீக்குசில பாடல்களைக் கேட்கும்போதும் எனக்கு இதே பிரச்னை வரும் கமலா அக்கா.
நீக்குஅவர்கள் செய்முறையை செய்துகொண்டே வேகமாக பேசும்போது நம் காதில் அப்படிக் கேட்பதுண்டு. உதாரணத்துக்கு ஒரு பாடல் சொல்கிறேன். 'அருவிமகள் வளையோசை' பாடலில் சூலமங்கலம் ராஜலக்ஷ்மி குரலில் சில வரிகள் புரியவே புரியாது!
பேரீச்சை வைத்து ரசம் செய்து பார்க்கிறேன்! அல்லது நீங்கள் செய்து படங்களுடன் எனக்கு அனுப்புங்கள். அடுத்த திங்களே போட்டு விடுகிறேன்.
முருகா சரணம்
பதிலளிநீக்கு