Question and answer லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Question and answer லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

12.9.12

இதையும் படியுங்க அப்புறமா..

                          
எல்லா பத்திரிகைகளிலும் பிரசித்தமான பகுதிகள் உண்டு.
ஒன்று, சினிமா.
இரண்டு கேள்வி பதில்.
மூன்று ஆசிரியருக்குக் கடிதங்கள்.

    
இதில் சினிமா பகுதி தெலுங்கு பத்திரிகைகளில் ரொம்ப விசேஷம். இந்தப் படத்துக்கு இருபத்தேழு ஷாட்டுகள் முடிந்து விட்டன. இரண்டாம் நிலை எடிட்டிங் நடக்கிறது என்பது போன்ற அரிய செய்திகள் தொடர்ந்து இடம்பெறும்.  நட்சத்திரங்களின் கட்டவுட்டுகளுக்கு பியர் அபிஷேகம் செய்யும் நம் புண்ணிய பூமியில் இது ஒன்றும் வியப்பதற்கான செய்தி இல்லை.  குஷ்புவுக்கு கோயில் கட்டின வம்சம் அல்லவா நம்முடையது. கலி முற்றியதன் அறிகுறியாக நடிகர்களும் கலைஞர்களும் (சிலேடை இல்லை) அதீத செல்வாக்கு பெறுவார்கள் என்று சொல்லப் பட்டிருப்பதாகச் சொல்லப் பட்டிருக்கிறது.  
              
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக இதைச் சொன்ன அந்தப் புண்ணியவானின் வாய்க்கு சர்க்கரை போட வாய்ப்பில்லை (வயதும் இல்லை) ஆதலால் அவருக்கு கோயில் கட்டிக் கும்பிடலாம் என்றால் அவர் பெயரே தெரியவில்லை.  உபயம்  சுப்பு ரத்தினம் & சன்ஸ் என்று கோயில் டியூப் லைட்டுகளில் பொறிக்கப்பட்டு இருப்பது  போல் இந்த மாதிரி சமர்த்து சொலவடைகளை முதலில் சொன்னவர்களும் தகுந்த காபி ரைட் தகவலை நிலை நிறுத்திக் கொண்டிருக்க வேண்டும். நமது துரதிருஷ்டம் அவர்களுக்கு காப்பியும் தெரியாது ரைட்டும் தெரியாது. பெயர் தெரியாத அந்த மேதைகளுக்கு மவுன அஞ்சலி செலுத்துவோமாக.
                    
அடுத்து ஆசிரியருக்குக் கடிதம்.  ஒவ்வொரு பத்திரிகைக்கும் ஒவ்வொரு மாதிரியான கடிதம் எடுபடும். குமுதத்துக்கு " உம்மை ஐஸ் கட்டியில் நிற்கவைத்து ஆறிப்போன காப்பியை குடிக்க வைக்க வேண்டும் என்பது போன்ற ஆசைகளை உள்ளடக்கி எழுதினால் பெரும்பாலும் பிரசுரம் ஆகும்.  அல்லது இந்தப் பகுதியையும் அவர்கள் வெவ்வேறு பெயர்களில் ஆசிரியர் குழுவை விட்டு எழுதிக் கொள்வார்களா என்பது தெரியவில்லை.  ஒரு தொடர் ஆரம்பிக்கும் போது " முதல் அத்தியாயமே கண்ணில் நீரை அல்லது குபீர் சிரிப்பை வரவழைத்து விட்டது என்று எழுதினால் நிச்சயம் பிரசுரம் ஆகலாம்.  பல எழுத்தாளர்கள் காசு கொடுத்து, கார்டு வாங்கிக் கொடுத்து இப்படி எழுத வைக்கிறார்கள் அல்லது தாங்களே எழுதி அனுப்புகிறார்கள் என்றும் நம்பப் படுகிறது. எந்தப் புற்றில் எந்தக் கரையான் இருக்குமோ யார் கண்டது? காங்கிரசை திட்டி எழுதினால் பிரசுரம்., கழகத்தைத் தாக்கி எழுதினால் பிரசுரம் என்ற எழுதா விதிகளும் உண்டு.
                
(தொடரும்.. நீங்கள் விரும்பினால்..)