புதன், 12 செப்டம்பர், 2012

இதையும் படியுங்க அப்புறமா..

                          
எல்லா பத்திரிகைகளிலும் பிரசித்தமான பகுதிகள் உண்டு.
ஒன்று, சினிமா.
இரண்டு கேள்வி பதில்.
மூன்று ஆசிரியருக்குக் கடிதங்கள்.

    
இதில் சினிமா பகுதி தெலுங்கு பத்திரிகைகளில் ரொம்ப விசேஷம். இந்தப் படத்துக்கு இருபத்தேழு ஷாட்டுகள் முடிந்து விட்டன. இரண்டாம் நிலை எடிட்டிங் நடக்கிறது என்பது போன்ற அரிய செய்திகள் தொடர்ந்து இடம்பெறும்.  நட்சத்திரங்களின் கட்டவுட்டுகளுக்கு பியர் அபிஷேகம் செய்யும் நம் புண்ணிய பூமியில் இது ஒன்றும் வியப்பதற்கான செய்தி இல்லை.  குஷ்புவுக்கு கோயில் கட்டின வம்சம் அல்லவா நம்முடையது. கலி முற்றியதன் அறிகுறியாக நடிகர்களும் கலைஞர்களும் (சிலேடை இல்லை) அதீத செல்வாக்கு பெறுவார்கள் என்று சொல்லப் பட்டிருப்பதாகச் சொல்லப் பட்டிருக்கிறது.  
              
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக இதைச் சொன்ன அந்தப் புண்ணியவானின் வாய்க்கு சர்க்கரை போட வாய்ப்பில்லை (வயதும் இல்லை) ஆதலால் அவருக்கு கோயில் கட்டிக் கும்பிடலாம் என்றால் அவர் பெயரே தெரியவில்லை.  உபயம்  சுப்பு ரத்தினம் & சன்ஸ் என்று கோயில் டியூப் லைட்டுகளில் பொறிக்கப்பட்டு இருப்பது  போல் இந்த மாதிரி சமர்த்து சொலவடைகளை முதலில் சொன்னவர்களும் தகுந்த காபி ரைட் தகவலை நிலை நிறுத்திக் கொண்டிருக்க வேண்டும். நமது துரதிருஷ்டம் அவர்களுக்கு காப்பியும் தெரியாது ரைட்டும் தெரியாது. பெயர் தெரியாத அந்த மேதைகளுக்கு மவுன அஞ்சலி செலுத்துவோமாக.
                    
அடுத்து ஆசிரியருக்குக் கடிதம்.  ஒவ்வொரு பத்திரிகைக்கும் ஒவ்வொரு மாதிரியான கடிதம் எடுபடும். குமுதத்துக்கு " உம்மை ஐஸ் கட்டியில் நிற்கவைத்து ஆறிப்போன காப்பியை குடிக்க வைக்க வேண்டும் என்பது போன்ற ஆசைகளை உள்ளடக்கி எழுதினால் பெரும்பாலும் பிரசுரம் ஆகும்.  அல்லது இந்தப் பகுதியையும் அவர்கள் வெவ்வேறு பெயர்களில் ஆசிரியர் குழுவை விட்டு எழுதிக் கொள்வார்களா என்பது தெரியவில்லை.  ஒரு தொடர் ஆரம்பிக்கும் போது " முதல் அத்தியாயமே கண்ணில் நீரை அல்லது குபீர் சிரிப்பை வரவழைத்து விட்டது என்று எழுதினால் நிச்சயம் பிரசுரம் ஆகலாம்.  பல எழுத்தாளர்கள் காசு கொடுத்து, கார்டு வாங்கிக் கொடுத்து இப்படி எழுத வைக்கிறார்கள் அல்லது தாங்களே எழுதி அனுப்புகிறார்கள் என்றும் நம்பப் படுகிறது. எந்தப் புற்றில் எந்தக் கரையான் இருக்குமோ யார் கண்டது? காங்கிரசை திட்டி எழுதினால் பிரசுரம்., கழகத்தைத் தாக்கி எழுதினால் பிரசுரம் என்ற எழுதா விதிகளும் உண்டு.
                
(தொடரும்.. நீங்கள் விரும்பினால்..)          
                     

12 கருத்துகள்:

 1. //ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக இதைச் சொன்ன அந்தப் புண்ணியவானின்//

  எதைச் சொன்ன புண்ணியவான்? எதோ கண்டினியுட்டி மிஸ் ஆகுற மதிரி ஃபீலிங்.. இடையில் ஒரு பத்தி அல்லது வாக்கியங்கள் வந்திருக்கணுமோ?

  “கேள்வி-பதில்” பகுதி பத்தி ஒண்ணும் சொல்லலியே?

  //எல்லா பத்திரிகைகளிலும் பிரசித்தமான பகுதிகள்//
  இப்ப “ஆன் லைன் பத்திரிகைகள்” காலம். இவற்றின் சிறப்புப் பகுதிகள் பத்த்தியும் சொல்லுங்க - முக்கியமா அந்தந்த பக்கங்களிலேயே பின்னூட்டம் கொடுப்பதும், அது மாடரேட்டரால் வெளியிடப்படணும்னா எப்படி இருக்கனும்...

  பதிலளிநீக்கு
 2. எந்தப் புற்றில் எந்தக் கரையான் இருக்குமோ யார் கண்டது?

  பதிலளிநீக்கு
 3. எந்தப் புற்றில் எந்தக் கரையான் இருக்குமோ யார் கண்டது?

  பதிலளிநீக்கு
 4. கலி முத்தினால் என்ன ஆகும்னு நம்ம சாஸ்திர, புராண, இதிஹாசங்களிலேயே சொல்லி இருக்காங்களே! அது சரி, இது என்ன சம்பந்தம் இல்லாப் பதிவு? ஒண்ணுமே பிரியலை. :(

  பதிலளிநீக்கு
 5. ஒரே ஒரு தரம் குமுதத்தில் அரசு கேள்வி-பதிலில் என்னோட கேள்வி இடம் பெற்றது. அதுக்கு அப்புறம் பல கேள்விகள் அனுப்பியும் எதுவும் வரலை. :))))) மற்றப் பத்திரிகைகள் எல்லாம் அந்த ஒருதரம் கூடச் சீண்டவில்லை. :))))))எல்லாவற்றுக்கும் பின்புலம் வேண்டும்னு சொல்வாங்க.

  பதிலளிநீக்கு
 6. சுவையான தகவல்கள்! நன்றி!

  இன்று என் தளத்தில்
  ரேசன் கார்டில் பெயர் சேர்த்தகதை!
  http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_12.html

  பதிலளிநீக்கு
 7. தமிழ் சினிமா பட உலகை விட, தெலுங்கு சினிமா பட உலகில் நடிக நடிகயர்களுக்கு எப்பவுமே மவுசு ஜாஸ்திதான். NTR. அவர்களை தெய்வமாகவே வழிபட்ட கும்பல் இல்லையா. உங்களோட மவுன அஞ்சலில நானும் கலந்துண்டேன். :)
  நான் தவறாம வார பத்திரிகைகள் படித்த காலத்துல எதுக்குமே கடிதம் எழுதினது இல்லை. எழுதினாலும் வராதுன்னு நிச்சயமா தெரியும். கார்டுக்கு குடுக்கற
  பைசா மிச்சமாகும். பத்திரிக்கைகளில வர கேள்வி பதில் பக்கம் ரொம்ப பிடிக்கும். விடாம படிப்பேன். விகடனை கைல எடுத்த உடனேயே மதன் கேள்வி பதில் படிச்ச பிறகுதான் மறு வேலை.

  தொடருங்க! பதிவு நல்லா இருக்கு.

  பதிலளிநீக்கு
 8. திருமதி கீதா சாம்பசிவம் கேட்ட மாதிரி சம்பந்தம் இல்லா பதிவு ???

  பதிலளிநீக்கு
 9. எங்கள் பிளாக்கில் என் கடிதம் பிரசுரமாக ஏதேனும் விதிமுறை உள்ளதா

  #டவுட்டு ஹி ஹி ஹி

  பதிலளிநீக்கு
 10. ஏதோ சம்பந்தம் இருக்கு.அதை நீங்கள்
  தொடர்ந்தால் தான் தெரியும். கேள்வி பதில் மாறி இருக்கே?நான் பத்திரிகைகளைப் படிப்பதுதான் வழக்கம்.கேள்வி கேட்டதே இல்லை.:)

  பதிலளிநீக்கு
 11. இதுக்குதான் ரீடரில் வாசிக்கக் கூடாதுங்கறது. முதலிலேயே இங்கு வந்திருந்தால் யாருக்கும் புரியலை என்பது புரிந்திருக்கும்:)!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!