ஆண்கள் சமையல் வாரத்தை, காபியுடன் இனிதே ஆரம்பிப்போம்.
காபி தயாரித்தல்தான் ஆண்கள் எல்லோரும் முதலில் கற்கும் அடுப்படி அனுபவம் என்று நான் நினைக்கிறேன்.
மக்கள் எல்லாவற்றையும் மூன்று மூன்றாகப் பிரித்து அடையாளம் காணுவது மரபு. சங்க காலம், கற்காலம், பொற்காலம் என்றெல்லாம் (என்னுடைய) தூக்கத்திற்கு நடுவே எங்கள் சமூக பாட ஆசிரியர் ராஜசுந்தரம் கூறியவை, கதம்பமாக நினைவுக்கு வருகிறது.
அதுபோல - சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியை எடுத்துக்கொண்டால், காபிக் காலத்தை - கீழ்க்கண்ட வகைகளில் பிரிக்கலாம்.
1) கரியடுப்புக் காலம்.
2) மண்ணெண்ணெய் ஸ்டவ் காலம்
3) இலவச காஸ் அடுப்புக் காலம்.
4) Microwave oven / Induction stove காலம்.
நான் இந்த நான்கு வகை அடுப்புகளிலும் நானே தயார் செய்த காபியைப் பருகி ஆனந்தித்தவன்.
இதில் நான்காவது கால அடுப்பில் காபி தயாரித்தல் மிக மிக எளிதானது. ஒரே நிமிடத்தில் காபி தயார் செய்து, அதை மூன்று நிமிடங்கள் ஆனந்தமாக, ருசித்துச் சாப்பிடலாம்.
'பாத்திரமறிந்து காபி போடு' என்னும் புதுமொழிக்கிணங்க, உங்களிடம் என்ன பாத்திரம் இருக்கு (எவர்சில்வர் / ஸ்டெயின்லஸ் ஸ்டீல் பாத்திரமா அல்லது பிளாஸ்டிக் / கண்ணாடிப் பாத்திரமா) என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள் இதை, சுலபமாக - கீழ்க் கண்ட சோதனை மூலமாகத் தெரிந்துகொள்ளலாம்:
உங்களிடம் உள்ள பாத்திரத்தை, சுமார் ஒரு மீட்டர் உயரத்திலிருந்து கீழே போடவும்.
ஒன்று: பாத்திரம் கீழே விழுந்ததும் எழும் ஓசை, கே வி மகாதேவன் இசை அமைத்த ஏ பி நாகராஜன் பட பாடல் (உதாரணம் 'மன்னவன் வந்தானடி ஈ ஈ தோழி) பி சுசீலா பாட ஆரம்பிக்கும் முன் எழும் தாம்பாள ஓசையை ஒத்திருந்தால், அந்தப் பாத்திரம் எ சி / ஸ்டெ. ஸ்டீல் என்று அறிந்துகொள்ளுங்கள்.
இரண்டு: போட்டமாத்திரத்தில், பாத்திரம் துள்ளல் இசைக்கு (குத்துப் பாட்டுக்கு) குத்துப் போடும் உங்கள் அபிமான நடிகை போன்று - குதித்தால் - அது பிளாஸ்டிக் பாத்திரம்.
மூன்று: போட்டவுடன் - சிலிங் என்ற சத்தத்துடன் பீஸ் பீஸாகி- உங்கள் காலைப் பதம் பார்த்தால், அது கண்ணாடிப் பாத்திரம் - உடனே ஓடிச் சென்று அதே போல ஒன்றை, கடையிலிருந்து வாங்கி வந்துவிடுங்கள். இல்லையேல் உங்களுக்கு உங்கள் அம்மா / மனைவி / பெண் / இவர்களில் யாராவது ஒருவரிடமிருந்தோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவர்களிடமிருந்தோ - உங்கள் தாய் மொழியில் அர்ச்சனை நடைபெறும்.
எவர்சில்வர் / எஸ் எஸ் பாத்திரங்கள், கரியடுப்பு முதல் (மைக்ரோ வேவ் அவன் தவிர மீதி) எல்லாவற்றுக்கும் ஒத்து வரும். பிளாஸ்டிக் / கண்ணாடிப் பாத்திரங்கள் மைக்ரோ வேவ் அவன் தவிர வேறு எதற்கும் லாயக்குப் படாது.
செய்முறை - மிகவும் எளிய விஷயம் தான்.
* முதலில் பாத்திரத்தில் பாலையோ / நீரையோ / அல்லது இவை இரண்டையும் ஏதேனும் ஒரு விகிதாச்சாரத்தில், வேண்டிய அளவுக்கு எடுத்துக் கொள்ளவும்.
* அந்தப் பாத்திரத்துடன் கூடிய பா / நீ / பா + நீ - யை, அதற்கேற்ற அடுப்பில் வைத்து, அடுப்பைப் பற்ற வைத்து / ஆன் செய்து - (மொத்தத்தில்) கொதிக்க வைக்கவும்.
* பால் பொங்கும் பொழுது அல்லது நீர் கொதிக்கும் சமயம், அந்த அடுப்பை அணைத்துவிடவும்.
* அடுத்தபடியாக, ஒரு டம்ப்ளரில், இரண்டு ஸ்பூன் சர்க்கரையும், ஒரு ஸ்பூன் இன்ஸ்டன்ட் காபி பவுடரும் போட்டு, இரண்டையும் கலக்கிக் கொள்ளவும்.
* அதற்குப் பிறகு சூடான அந்த பா/ நீ / பா நீ யை இந்த சர்க் + கா ப கலவை மேலே ஊற்றி, அந்தக் கலவையை, நன்றாக நுரை வரும் வரை ஆற்றி,
* அதற்குப் பிறகு அதை வாயிலே மெது மெதுவே ஊற்றி, வயிற்றுக்கு மிதமான சூட்டில் அனுப்பவும்.
நான் தினமும் செய்து அருந்துவது, வெந்நீர் + சர்க்கரை + நெஸ்கபே கிளாசிக் - எல்லாம் சேர்ந்து எழுபத்தைந்து மி லி.
இதோ சில படங்கள்.




