koththavaranggaaik koottu லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
koththavaranggaaik koottu லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

12.1.15

திங்கக் கிழமை 150112 :: கொத்தவரங்காய்க் கூட்டு.

      
தேவை: 
கொத்தவரங்காய் : கால் கிலோ. 
புளி : எலுமிச்சம்பழ அளவு.
வெல்லம் : ஆரஞ்சுப்பழ அளவு. (ஆட்சேபணை இல்லை என்றால்!) 
குழம்புப் பொடி : நான்கு டீஸ்பூன். 
தேங்காய் : ஒன்று. 
நல்லெண்ணெய் : ஐந்து டேபிள் ஸ்பூன். 
கடலைப் பருப்பு:  நான்கு டீஸ்பூன். 
அரிசி மாவு: நான்கு டீஸ்பூன். 
கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், (எல்லாம்) சிறிதளவு 
உப்பு: தேவையான அளவு. 
மஞ்சள் தூள் : ஒரு சிட்டிகை. 
கறிவேப்பிலை : ஒரு ஈர்க்கு. 

கொத்தவரங்காயை காம்பு நீக்கி, நார் (இருந்தால்) நீக்கி, ஒரு செ மீ நீளத்திற்கு நறுக்கிக்கொள்ளவும். 
     


தேங்காயை உடைத்து, துருவி எடுத்துக்கொள்ளவும். 

நறுக்கிய கொத்தவரங்காயை, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, நன்றாகக் கலக்கி, ஒரு பாத்திரத்தில் இட்டு, காய் அமிழ (மூழ்கும் அளவுக்கு) தண்ணீர் விட்டு, குழம்புப் பொடியைப் போட்டு, நன்றாக வேகவிடவும். காய் வெந்ததும், புளியைக் கெட்டியாகக் கரைத்துவிட்டு, வெல்லத்தைச் சேர்த்து, (வெல்லம் வேண்டாம் என்றால் சேர்க்கவேண்டாம்) பெருங்காயத்தைக் கரைத்து, சேர்த்து,  கறிவேப்பிலையைப் போட்டுக் கலந்து, அரிசி மாவைக் கரைத்துச் சேர்க்கவும். 

வாணலியை அடுப்பிலேற்றி, எண்ணெய் இட்டு, கடுகு போட்டு, அவைகள் வெடித்ததும், உளுத்தம்பருப்பு, தேங்காய்த்துருவல் இவைகளை இட்டு, பொன்னிறமாக வறுத்து, கூட்டில் கூட்டணி சேர்க்கவும். 

கொத்தவரங்காய்க் கூட்டு தயார்! 

எச்சரிக்கை : 
ஒரு மாதத்தில் ஒரு நாள் மட்டும்தான் கொத்தவரங்காய் சாப்பிடலாம். அமாவாசை சமயத்தில் சாப்பிடலாம். பௌர்ணமி சமயத்தில் வேண்டாம். அடிக்கடி கொத்தவரங்காய் உண்பவர்களுக்கு, பித்தம் அதிகமாகி, வயதான காலத்தில், பைத்தியம் பிடிக்க சாத்தியம் அதிகம். 

(நான் சின்ன வயதில் அதிகம் கொத்தவரங்காய் சாப்பிட்டு வளர்ந்தவன். எங்கள் தோட்டத்தில் கொத்துக் கொத்தாகக் கொத்தவரங்காய் காய்த்துக் கொண்டிருந்தது. தெருவில் வந்து கேட்போருக்கெல்லாம் கூட ஒரு சேர் (280 gram) ஐந்து பைசா என்று விற்றிருக்கின்றோம். ஏழை மக்களுக்கு இலவசமாகக் கொடுத்திருக்கின்றோம். ஆனால் இப்போ எனக்கு பைத்தியம் இல்லை. கனவில் மட்டும்தான் பாயைப் பிறாண்டுகின்றேன்!)