எலெக்ட்ரிக் ட்ரெயின் பயணம் எப்போதும் போல பல சுவாரஸ்யங்களைக் கொண்டது. கூட்டத்தைக் கண்டால்தான் கொஞ்சம் அலர்ஜி. வேறு வழியில்லாமல் ஒரு கூட்ட நாளில் பயணம் செய்த போது இரண்டு அனுபவங்கள்!
முதலில் ஏறும்போது கூட்டம் கம்மியாகத்தான் இருந்தது. அப்புறம் ஒவ்வொரு ஸ்டேஷனிலும் கூட்டம் நெரிக்கத் தொடங்கியது. வியர்வை நாற்றங்கள், தெரிந்த தெரியாத பௌடர் வாசனைகள், ஓவராக அடிக்கப் பட்ட, எரிக்கும் சென்ட் வாசனைகளுக்கு நடுவில் பயணம்.
"தளளி வந்துடு"
"உள்ள போய் நின்னுக்கோ.. அங்க கூட்டம் கம்மியா இருக்கு பாரு.."
"நம்ம பசங்கதான.. இங்கேயே நில்லுடி.. கொஞ்சம் பட்டா குறைஞ்சு போய்ட மாட்டே.."
"மச்சி... ஏழாம் அறிவு சொதப்பிட்டாண்டா..."
"ஹலோ... ஹலோ...கேட்குதா...சைதாப்பேட்டை தாண்டிட்டேன்மா... வந்துடுவேன்..."
இப்படி பல குரல்களுக்கு நடுவில் கணீரென ஒரு குரல் கேட்டது.
"தீபாவளிக்கு டப்பாஸ் வாங்கிட்டு வாப்பான்னு பசங்க சொன்னாங்க... நான் பாண்டிச்சேரில இருக்கேன்...எங்கே போறது.. லீவு கொடுக்கலை 'பாடு'ங்க... இப்பதான் போறேன்.. பாண்டிச்சேரி ஏன் போனேன்னு கேட்கணும் நீங்க... இங்க குவார்ட்டர் விலை 72 ரூபாய். பாண்டிச்சேரில 22 ரூபாயப்பா.."
யாரோ ஒருவர் சத்தமாக பேசிக் கொண்டிருந்தார். இவ்வளவு சத்தமாக, அதுவும் பொது இடத்தில் ஃபோன் பேசுபவர்களைக் கண்டாலே எனக்கு அலர்ஜி. எனக்குக் கூச்சமாக இருக்கும்! நின்று விட்ட குரல் இடைவெளிக்குப் பின் தொடர்ந்தது.
"நம்ம ஊர்ல சரக்காப்பா குடுக்கறாங்க...தண்ணி...தண்ணியை ஊத்தி குடுக்கறாங்க... பாண்டிச்சேரி போய்ப் பாருங்கப்பா... சரக்கு அவ்வளவு சுத்தம். அங்கன்னு இல்லை... தமிழ் நாட்டைத் தவிர ஆந்திரா, கர்நாடகான்னு எல்லா இடத்துலயும் நல்லாத்தான் இருக்கு..."
'பாருங்கப்பா' என்ற வார்த்தையால் ஏற்பட்ட சந்தேகத்தில் அவரைத் தேடிப் பார்த்தேன். சரிதான்! அவர் ஃபோனில் எல்லாம் பேசவில்லை! அவர் பாட்டுக்குப் பேசிக் கொண்டிருந்தார்! நல்ல விலை உயர்ந்த ஷர்ட் தெரிந்தது.
"ஆகவே மக்களே... நான் குவார்டருக்காகத்தான் பாண்டிச்சேரி மாத்திக்கிட்டுப் போனேன்... நீங்களும் இதை யோசிச்சுப் பாருங்க..."
நானும் இன்னும் ஓரிருவரும் திரும்பிப் பார்ப்பதை உணர்ந்தவர் (அவர் யாரையும் குறிப்பாகப் பார்க்காமல் பேசிக் கொண்டிருந்தார்) "கவலைப் படாதீங்க மக்களே... இதோ கிண்டியில் இறங்கி விடுவேன்... அப்புறம் நான் பாட்டுக்கு அங்க பேசிகிட்டு இருப்பேன்.." என்றபடி நகர்ந்து வந்தார். ஷர்ட்டுக்குப் பொருத்தமில்லாமல் ஒரு கசங்கிய லுங்கி!
சுவாரஸ்யம் இரண்டு :
பாடிக் கொண்டும் பேசிக் கொண்டும் செல்பவர்கள் ஒருவகை என்றால் கல்லூரி மாணவ, மாணவியரும் இன்னும் சில இளசுகளும் அடிக்கும் லூட்டி தனி வகை. (சமீபத்தில் கூட படியில் தொங்கிக் கொண்டே வந்த மாணவர்களை 'ஏறி உள்ளே வந்தால்தான் வண்டி எடுப்பேன்' என்று சொன்ன ஒரு பஸ் டிரைவரை உதைத்த சம்பவம் படித்தேன்) இவர்கள் அவ்வப்போது ஃபீல் செய்து ரெயில் பெட்டிகளின் உள் பக்க சுவரில் 'கல்வெட்டு' பொறித்து வைப்பார்கள்! அதில் ஒன்று கண்ணில் பட்டது.
"கடலில் விழுந்தவன் நீச்சலடிப்பான் . காதலில் விழுந்தவன் தத்தளிப்பான்"
அது ஆணியால் அடிப்பது போலக் கீறப் பட்டு, கீழே திருத்தப் பட்டிருந்தது.
"கடலில் விழுந்தவன் தத்தளிப்பான். காதலில் விழுந்தவன் பிச்சை எடுப்பான்"
பக்கத்திலேயே பதிலும் இருந்தது.
"புலி பின்னால் போன மானும், ஆணின் பின்னால் போன பெண்ணும் பிழைத்ததாய் சரித்திரமே இல்லை"
அனுபவசாலிகள் யாரோ அனுபவத்தை எழுதி வைத்து விட்டுப் போயிருக்கிறார்கள் போலும். மின்வண்டிப் பயணம் பல சுவாரஸ்யங்களைக் கொண்டதுதான். சந்தேகமில்லை. ஒருமுறை ரெயில் பேட்டியிலேயே தாளம் தட்டி 'சட் சட்' டென வரிகளைப் போட்டு 'கானா'ப் பாடல்களை இயற்றிப் பாடிக் கொண்டு வந்த கல்லூரி மாணவர்களை, பெட்டியிலேயே இருந்த பெண் போலீஸ் கூட ஒன்றும் சொல்ல முடியவில்லை. நடுவில் போலீஸ் அக்கா என்று அவரை சம்பந்தப் படுத்தியும் வரியமைத்துப் பாடினர்! என்னைப் போலவே பலராலும் எரிச்சலை வெளியே காட்டிக் கொள்ள முடியாமல் போனது நினைவுக்கு வருகிறது.


