வெள்ளி, 18 நவம்பர், 2011

ரயில் பயணங்களில்... (வெட்டி அரட்டை)

                               
எலெக்ட்ரிக் ட்ரெயின் பயணம் எப்போதும் போல பல சுவாரஸ்யங்களைக்  கொண்டது. கூட்டத்தைக் கண்டால்தான் கொஞ்சம் அலர்ஜி. வேறு வழியில்லாமல் ஒரு கூட்ட நாளில் பயணம் செய்த போது இரண்டு அனுபவங்கள்! 
   
முதலில் ஏறும்போது கூட்டம் கம்மியாகத்தான் இருந்தது. அப்புறம் ஒவ்வொரு ஸ்டேஷனிலும் கூட்டம் நெரிக்கத் தொடங்கியது. வியர்வை நாற்றங்கள், தெரிந்த தெரியாத பௌடர் வாசனைகள், ஓவராக அடிக்கப் பட்ட, எரிக்கும் சென்ட் வாசனைகளுக்கு நடுவில் பயணம். 
     
"தளளி வந்துடு"
   
"உள்ள போய் நின்னுக்கோ.. அங்க கூட்டம் கம்மியா இருக்கு பாரு.."  
    
"நம்ம பசங்கதான.. இங்கேயே நில்லுடி.. கொஞ்சம் பட்டா குறைஞ்சு போய்ட மாட்டே.."   
     
"மச்சி... ஏழாம் அறிவு சொதப்பிட்டாண்டா..."
"ஹலோ... ஹலோ...கேட்குதா...சைதாப்பேட்டை தாண்டிட்டேன்மா... வந்துடுவேன்..."

இப்படி பல குரல்களுக்கு நடுவில் கணீரென ஒரு குரல் கேட்டது.   
    
"தீபாவளிக்கு டப்பாஸ் வாங்கிட்டு வாப்பான்னு பசங்க சொன்னாங்க... நான் பாண்டிச்சேரில இருக்கேன்...எங்கே போறது.. லீவு கொடுக்கலை 'பாடு'ங்க... இப்பதான் போறேன்.. பாண்டிச்சேரி ஏன் போனேன்னு கேட்கணும் நீங்க... இங்க குவார்ட்டர் விலை 72 ரூபாய். பாண்டிச்சேரில 22 ரூபாயப்பா.."
     
யாரோ ஒருவர் சத்தமாக பேசிக் கொண்டிருந்தார். இவ்வளவு சத்தமாக, அதுவும் பொது இடத்தில் ஃபோன் பேசுபவர்களைக் கண்டாலே எனக்கு அலர்ஜி. எனக்குக் கூச்சமாக இருக்கும்! நின்று விட்ட குரல் இடைவெளிக்குப் பின் தொடர்ந்தது.
      
"நம்ம ஊர்ல சரக்காப்பா குடுக்கறாங்க...தண்ணி...தண்ணியை ஊத்தி குடுக்கறாங்க... பாண்டிச்சேரி போய்ப் பாருங்கப்பா... சரக்கு அவ்வளவு சுத்தம். அங்கன்னு இல்லை... தமிழ் நாட்டைத் தவிர ஆந்திரா, கர்நாடகான்னு எல்லா இடத்துலயும் நல்லாத்தான் இருக்கு..."
               
'பாருங்கப்பா' என்ற வார்த்தையால் ஏற்பட்ட சந்தேகத்தில் அவரைத் தேடிப் பார்த்தேன். சரிதான்! அவர் ஃபோனில் எல்லாம் பேசவில்லை! அவர் பாட்டுக்குப் பேசிக் கொண்டிருந்தார்! நல்ல விலை உயர்ந்த ஷர்ட் தெரிந்தது.
              
"ஆகவே மக்களே... நான் குவார்டருக்காகத்தான் பாண்டிச்சேரி மாத்திக்கிட்டுப் போனேன்... நீங்களும் இதை யோசிச்சுப் பாருங்க..."
             
நானும் இன்னும் ஓரிருவரும் திரும்பிப் பார்ப்பதை உணர்ந்தவர் (அவர் யாரையும் குறிப்பாகப் பார்க்காமல் பேசிக் கொண்டிருந்தார்) "கவலைப் படாதீங்க மக்களே... இதோ கிண்டியில் இறங்கி விடுவேன்... அப்புறம் நான் பாட்டுக்கு அங்க பேசிகிட்டு இருப்பேன்.." என்றபடி நகர்ந்து வந்தார். ஷர்ட்டுக்குப் பொருத்தமில்லாமல் ஒரு கசங்கிய லுங்கி!
   
சுவாரஸ்யம் இரண்டு :
                    
பாடிக் கொண்டும் பேசிக் கொண்டும் செல்பவர்கள் ஒருவகை என்றால் கல்லூரி மாணவ, மாணவியரும் இன்னும் சில இளசுகளும் அடிக்கும் லூட்டி தனி வகை. (சமீபத்தில் கூட படியில் தொங்கிக் கொண்டே வந்த மாணவர்களை 'ஏறி உள்ளே வந்தால்தான் வண்டி எடுப்பேன்' என்று சொன்ன ஒரு பஸ் டிரைவரை உதைத்த சம்பவம் படித்தேன்) இவர்கள் அவ்வப்போது ஃபீல் செய்து ரெயில் பெட்டிகளின் உள் பக்க சுவரில் 'கல்வெட்டு' பொறித்து வைப்பார்கள்! அதில் ஒன்று கண்ணில் பட்டது.
        
"கடலில் விழுந்தவன் நீச்சலடிப்பான் . காதலில் விழுந்தவன்  தத்தளிப்பான்"
             
அது ஆணியால் அடிப்பது போலக் கீறப் பட்டு, கீழே திருத்தப் பட்டிருந்தது.
         
"கடலில் விழுந்தவன் தத்தளிப்பான். காதலில் விழுந்தவன் பிச்சை எடுப்பான்"
               
பக்கத்திலேயே பதிலும் இருந்தது.
                 
"புலி பின்னால் போன மானும், ஆணின் பின்னால் போன பெண்ணும் பிழைத்ததாய் சரித்திரமே இல்லை"
                        
அனுபவசாலிகள் யாரோ அனுபவத்தை எழுதி வைத்து விட்டுப் போயிருக்கிறார்கள் போலும். மின்வண்டிப் பயணம் பல சுவாரஸ்யங்களைக் கொண்டதுதான். சந்தேகமில்லை. ஒருமுறை ரெயில் பேட்டியிலேயே தாளம் தட்டி 'சட் சட்' டென வரிகளைப் போட்டு 'கானா'ப் பாடல்களை இயற்றிப் பாடிக் கொண்டு வந்த கல்லூரி மாணவர்களை, பெட்டியிலேயே இருந்த பெண் போலீஸ் கூட ஒன்றும் சொல்ல முடியவில்லை. நடுவில் போலீஸ் அக்கா என்று அவரை சம்பந்தப் படுத்தியும் வரியமைத்துப் பாடினர்! என்னைப் போலவே பலராலும் எரிச்சலை வெளியே காட்டிக் கொள்ள முடியாமல் போனது நினைவுக்கு வருகிறது.  
                     

20 கருத்துகள்:

 1. பயணங்கள் பலவிதம்... கிடைக்கும் அனுபவம் சிலவிதம்...

  பதிலளிநீக்கு
 2. சிலநேரங்களில் இப்படியான அரட்டைகள் எரிச்சல் என்றாலும் சுவாரஸ்யமும்தான் !

  பதிலளிநீக்கு
 3. அந்தக் காலத்தில் ஒரு "புதுக் கவி" மின்சார ரயில் பெட்டிகளில் இழந்த காதல குறித்து ஒரே கவிதை மயமாகா ஸ்கெட்ச் பேனாவினால் கலர் கலராக எழுதி ஒட்டி இருப்பார். அதைப் படித்து ரசிதததுண்டு. அவருடைய தொ. பே எண் கொடுக்கப் பட்டிருக்கும். ஒரு முறை " என்ன ரசிகர்களே வெறும் பாராட்டு மட்டும்தானா? " என்று 'பரிதாபமாக ' எழுதியிருந்தது மறக்க முடியாதது. அவர் மணி ஆர்டர் எதிர் பார்த்தாரோ என்னவோ. அல்லது ஒரு இளம் ரசிகை அவர் மேல் அன்பு கொண்டு தேடி வருவதாக கற்பனை செய்து கொண்டாரோ என்னவோ!

  பதிலளிநீக்கு
 4. எனக்கு ஒரு திருப்தியான அனுபவம். ஒரு குடிகாரர் கண்ட மேனிக்கு உளறிக் கொண்டு வர அவரை நாலு அறை அறைந்து கிண்டியில் பலவந்தமாக கீழே தள்ளிவிட்டு வந்தார் ஒரு கணவன். வாழ்க அவர் வீரம்.

  பதிலளிநீக்கு
 5. ஒரு சுறுசுறுப்பான பதின வயதுப் பையன் பலமதிரியான வியாபாரங்கள் செய்து கொண்டு வருவான் எண்பதுகளில். அவன் வண்டியிலிருந்து எட்டிப்பார்த்து சிக்னல் கம்பம் அடித்து செத்ததை ஊரே துக்கம் கொண்டாடியது மறக்க இயலாதது.

  பதிலளிநீக்கு
 6. பாவாடை சட்டை, தாவணி, புடவை திடீரென்று பளபளக்கும் தாலி என்று ஒரு வாயாடிப் பெண் பழ வியாபாரம் செய்து முன்னுக்கு வந்தது ஒரு சந்தோஷமான அனுபவம்.

  பதிலளிநீக்கு
 7. புல்லாங்குழல் வித்வான், சினிமாப் பாடல் வித்தகர்கள், வரிசையாக கோல் பிடித்து வந்து வியாபாரம் அல்லது யாசகம் செய்யும் குருடர் என்று பல்சுவைக் கட்சிகள் மறக்க முடியாதவை.

  பதிலளிநீக்கு
 8. குரோம்பெட்டையிளிருந்து பார்க் வரை கூட்டத்தை ஒழுங்கு படுத்தி இறங்குவோர் ஏறுவோருக்கு உதவி யாக உரத்த குரலில் சமாளித்து வந்த அந்த நபர இன்னும் இருக்கிறாரா? தெரியவில்லை.

  பதிலளிநீக்கு
 9. காஞ்சிபுரம் வண்டியில் கூட்டமாக உட்கார்ந்து விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்லிவரும் கூட்டம், ரம்மி ஆடும் விடலைகள் மாலை வண்டியில் காய் திருத்தியவாறே வீடு செல்லும் அக்காக்கள் , என்ன ஒரு வெரைட்டி.

  பதிலளிநீக்கு
 10. டிக்கெட் இல்லாதவர்களைப் பிடிக்க அல்சேஷன் நாய்கள் சகிதம் செக்கிங் வரும் ரயில்வே ஊழியர் பட்டாளம் இறங்கி ஓடும போக்கிரிக் கும்பல், ரயிலில் அடிபட்டு அனதையாகக் கிடக்கும் சவம், கனமழை காலங்களில் சாலை, பாலங்களில் வெள்ளத்தை வேடிக்கை பார்த்த படி பயணிக்கும் திரில் எல்லாமே நினஈல் நிற்பவைதான்.

  பதிலளிநீக்கு
 11. ரயில் பெட்டியில் ஒட்டியுள்ள காதலர் காதலி விபரங்கள், பரீட்சை எண்கள். மூலம் பவுந்திர மருத்துவர்கள், வேளை வாய்ப்பு ஏய்ப்புகள், கர்த்தருக்கு விளம்பரம் அல்லது விண்ணப்பம் புரட்சி இலக்கிய வரிகள், பொதுவுடமைப் பிரசாரம் இதெல்லாம் ஒரு தனி டேஸ்ட்.

  பதிலளிநீக்கு
 12. பதிவைவிட அனானியின் பின்னூட்டங்கள் சுவாரஸ்யமாக இருந்தன. ஒரு திரைக் கதையே எழுதலாம் போலிருக்கே அனானி

  பதிலளிநீக்கு
 13. எலெக்ட்ரிக் ட்ரெயினில் போய் வருடங்கள் ஆகின்றன.
  உங்கள் பதிவும் அன்னானி பின்னூட்டம் வெகு சுவை.

  பதிலளிநீக்கு
 14. 'உள் பெட்டியிலிருந்து' போல இது 'ரயில் பெட்டியிலிருந்து', சரியா ?

  பதிலளிநீக்கு
 15. தமிழ் உதயம் சொன்னது போல் பயணங்கள் பலவிதம். அதில் நாம் எதிர்கொள்ளும் மனிதர்கள் பல ரகம்.

  நானும் நெடும்பயணம் தவிர்த்து ரயில்பெட்டி அனுபவம் அதிகமில்லை. 20வருடம் முன் மும்பையின் தானே டு வி.டி பயணித்ததுண்டு அங்கிருந்த 2 வருடங்களில்.

  பதிலளிநீக்கு
 16. இந்த மாதிரி பேச்சுக்களையெல்லாம் கேட்டுக்கொண்டு,யூனிட் டிரெயின்ல போய் ரொம்ப நாளாச்சு.உங்க பதிவ படிச்சதும் உடனே அதில பயண போகணும் போல இருக்கு.

  சுவரசியமான பயண அனுபவம்.

  பதிலளிநீக்கு
 17. அசத்தலான பயணானுபவம், சென்னைவாசிகள் தினம் தினம் ரசிக்கும்,சகிக்கும், வெறுக்கும் நிகழ்வுகளை அளித்த விதம் அருமை.

  பதிலளிநீக்கு
 18. மும்பையின் ரயில் பயணங்களும் இதை மாதிரியே சுவாரஸ்யமா இருக்கும் :-)

  பதிலளிநீக்கு
 19. கசங்கிய லுங்கி!! அற்புதம். லாஸ்ட் டச்! :-)))

  பதிலளிநீக்கு
 20. பார்த்து மனசில் பதிந்தவற்றை நன்றாக நேரேட் பண்ணியிருக்கிறீர்கள். அதிலும் தேர்ந்தெடுத்து மெருகூட்டியிருப்பதையும் சொல்ல வேண்டும்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!