=======================================================================================
மணிராஜ் என்கிற
தளத்தில் ஆயிரக்கணக்கான ஆன்மீகப் பதிவுகள் வழங்கி வந்த பதிவர்
இராஜராஜேஸ்வரி 9-2-2016 அன்று வைகுண்டப் பதவி அடைந்தார் என்று அவர் மகன்,
மகள் மூலம் அவர் தளத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
======================================================================================
எப்படிச் சாப்பிடுவது... எப்போது சாப்பிடுவது?
நேற்று இரண்டு விசேஷங்களுக்குச் சென்று வந்தேன். ஒன்று கிரகப்ரவேசம். அங்கு காலை டிஃபன் முடித்து விட்டு, அடுத்த விசேஷம் ஒரு கனகாபிஷேகம். அங்கு மதியச் சாப்பாடு. இந்த லஞ்ச்சில் ஒரு விசேஷம், யூனிஃபார்ம் அணிந்த இளம்பெண்கள் நிறையப் பேர்கள் பரிமாறியது! ஹிஹிஹி...
நேற்று கோங்குரா சட்னி (துவையலோ), வேப்பிலைக் கட்டி எனப்படும் நாரத்தை இலைப்பொடி, இஞ்சித் தொக்கு, அப்புறம் (சஹிக்க முடியாத) ஒரு எலுமிச்சை ஊறுகாய் போட்டார்கள்.
தயிர்ப் பச்சடி, ஸ்வீட் பச்சடி, தேங்காய்க் கறி, உசிலி இத்யாதி, இத்யாதிகளுடன் பரிமாறப்படும் சில உதிரி ஐட்டங்கள் பற்றித்தான் இந்தப் பதிவு.
ஓகே,
முதலில் இலையின் வலது ஓரத்தில் சாஸ்திரத்துக்கு இடப்படும் துளிப் பாயசத்தை
நக்கி விட்டு (!) பருப்பு சாதம் (நேற்றைய மெனுவில் ஒரு வித்தியாசம்
பருப்புக்கு பதிலாக பருப்புப்பொடி போட்டார்கள்) கலந்து, சாம்பார் ஊற்றிச்
சாப்பிட்டு, சில சமயங்களில் சாம்பார் சாதமும் தனியாகச் சாப்பிட்டு,
(இடையிடையே மானே தேனே சேர்ப்பது போல தயிர்ப்பச்சடி, தேங்காய்க்கறி, அவியல்
இன்ன பிற ஸைடு ஐட்டங்களைத் தொட்டுக் கொண்டே) அடுத்ததாக மோர்க்குழம்போ,
வத்தக்குழம்போ சாப்பிட்டு, அடுத்ததாக ரசம் சாதம், பின்னர் கப்பில்
கொடுக்கப்பட்டிருக்கும் பாயசம் (சிலர் இதை சாப்பிட்டு முடித்த பிறகும்
சாப்பிடுவார்கள். அப்படிச் சாப்பிட்டால் அடுத்த பிறவியில் ராஜா
குடும்பத்தில் - அதாவது மன்னர் குடும்பத்தில் - பிறப்பார்களாம்!!!! )
அப்புறம் கொடுக்கப் பட்டிருக்கும் ஊறுகாயை வைத்துக் கொண்டு (அல்லது
வத்தக்குழம்பைத் தொட்டுக்கொண்டு) தயிர் சாதத்தை முடித்து, ஐஸ்க்ரீமுக்கு
வருவோம். பின்னர் பீடா!
ஆனால், என்ன குழப்பம் வரும் என்றால்,
நடுவில்
ஒரு கரண்டி லெமன் சாதமோ, புளியோதரையோ வைப்பார்கள். அப்புறம் ஒரு மசால்
வடை, அல்லது மிக்ஸர். கொஞ்சம் வாழைக்காய் சிப்ஸ். ஒரு ஜாங்கிரி அல்லது
மைசூர்ப்பாகு அல்லது பெங்கால் ஸ்வீட். அப்புறம் பதர்ப்பேணி.
பதர்ப்பேணியில் இருவகை உண்டு. ஒன்று சேமியா பதர்ப்பேணி. இன்னொன்று பூரி போல இருக்கும் பதர்ப்பேணி.
மேலே சொல்லி உள்ள பாராவில் இருப்பவற்றை எல்லாம், அதற்கு முந்தைய பெரிய பாராவில் சொல்லியிருக்கிறேன் பாருங்கள்... அந்த வரிசையின் நடுவே எங்கே நுழைத்துச் சாப்பிடுவது என்று குழப்பம் வந்து விடும். புளியோதரையோ லெமன் சாதமோ, அவை சாஸ்திரத்துக்குப் போடுவார்கள் என்பதால் அவற்றைச் சிறப்பான ருசியில், பதத்தில் எதிர்பார்க்க முடியாது. கடமைக்கு அள்ளி வாயில் போட்டுக்கொண்டு விடலாம். சில சமயம் இந்த ஐட்டம் சிறப்பானதாகவும் அமைந்து விடும். சிப்ஸ்... அட, அதை விடுங்கள்! எப்போது வேண்டுமானாலும் நொறுக்கலாம். வடையும், ஜாங்கிரி போன்ற ஸ்வீட் வகையறாவும் கொஞ்சம் குழப்பம் என்றால், இந்த பதர்ப்பேணி இருக்கிறது பாருங்கள், அது மகாக் குழப்பம்!
சில
திருமணங்களில் இதை முதலில் பரிமாறி விடுகிறார்கள். சில திருமணங்களில் இதை
நாம் சாம்பார் சாதம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் வேளையில்
வைக்கிறார்கள். இதற்கென்று ஓர் சாப்பிடும் வரிசை இருக்கிறதா, எப்போது
என்று (வழக்கம்போலத்) தெரியாமல் இடையில் கிடைத்த அவகாசத்தில் அதைச்
சாப்பிட்டு முடித்தேன்! அடுத்து அதைச் சாப்பிடும் முறை.

ஒரு தட்டில் அந்த வஸ்துவை முதலில் கொண்டு வந்து வைப்பார்கள். அப்படியே எடுத்துச் சாப்பிட்டால் 'சப்'பென்று ஒரு ருசியும் இல்லாமல் இருக்கும். அப்புறம் ஒரு கப்பில் பால் வைப்பார்கள். பதர்ப்பேணியில் சர்க்கரைத் துகள் கொஞ்சம் தூவுவார்கள். சிலர் இந்த பதர்ப்பேணியின் நடுவே லாடுத் துகள்கள் போல ஸ்வீட் ஏதாவது தூவுவார்கள். இந்தப் பாலை எடுத்து அந்தப் பதர்ப்பேணியில் ஊற்றி வைத்து, ஊறியவுடன் சாப்பிட வேண்டியதுதான். அப்பவுமே கூட பெரிதாக அதில் எந்தச் சுவையும் இருப்பது போலத் தோன்றுவதில்லை!
நிறையப்
பேர்கள் அடுத்தடுத்த இலையில் சாப்பிடுபவர்கள் எப்போது, எப்படிச்
சாப்பிடுகிறார்கள் என்று பார்த்து, அதே போலப் பின்பற்றுகிறார்கள். நான்
கவலையே படுவதில்லை. எப்போது சாப்பிடுகிறேனோ, அப்போதுதான். என்
அருகிலைக்காரர் நான் பாலை ஊற்றும்போது அவரும் ஊற்றி, நான் நொறுக்கிக் கலந்தபோது அவரும் கலந்து, நான் சாப்பிட்டபோது அவரும் சாப்பிட்டார்!
நண்பர்கள், தங்கள் அனுபவங்களையும், யோசனைகளையும் சொல்லலாம்.
