இன்றைய சிந்தனைக்கு வித்திட்டது நடக்கும்போது ஒரு விளக்குக் கம்பத்திலிருந்து சற்றே தளளி, ஆனால் வெளிச்சத்தில் தெரியக்கூடிய இடத்தில் கிடந்த, ஒரு செல்போன். செல்போன்தானா அல்லது வெறும் கவரா என்று செக் செய்யக் கூட தோன்றாமல் நடந்ததற்குக் காரணம் உண்டு.
முன்னர் ஒரு முறை, கீழே கிடந்த 'செல்'லை எடுத்து உரியவரிடம் சேர்ப்பிக்க எடுத்த முயற்சிகளில் கிடைத்த சில அனுபவங்கள்....! இதை யார் வேண்டுமானாலும் எடுக்கட்டும். தொலைத்தவனுக்கு விதி... எடுப்பவன் விதி அதைத் திருப்பிக் கொடுப்பானோ, அவனே வைத்துக் கொள்வானோ...
கஷ்டப்படாமல் வந்த பணம் நிலைக்காதாம். சொல்வார்கள். கஷ்டப் பட்டு சேர்த்த பணம் நம் கையை விட்டும் போகாதாம்... அதாவது அனாவசியமாகத் தொலையாதாம்.
ஒரு முறை ஓர் ஐநூறு ரூபாய் நோட்டு மூன்று நூறு ரூபாய் நோட்டுகள் பையிலிருந்து கொத்தாகக் கீழே விழுந்திருப்பது வீடு சென்றபின்தான் தெரிந்தது. திரும்ப ஓடி, வழியில், கடைசியில் சென்ற கடை, சந்தித்த நபர்கள் என்றெல்லாம் அலசி, ஒன்றரை மணி நேரம் கழித்து சோர்வுடன் திரும்பிய போது, வழியில் பக்கத்து முட்புதரிலிருந்து லேசான காற்றில் முதலில் ஒரு நூறு ரூபாய் நோட்டு இடத்தைக் காட்ட, அப்புறம் தொடர்ந்து மற்ற நோட்டுகளும் கிடைத்தது ஒரு அனுபவம். ஆனால் பாருங்கள், எண்ணூறு ரூபாய்தான் கிடைத்தது! இத்தனைக்கும் பக்கத்தில் ஒரு கும்பலே கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தது.
ஊட்டி ரேஸ் கோர்ஸ் அருகே தொலைத்த தங்க காதுக் கம்மல் பற்றி மாமா சொன்னார். ரேஷன் கடை போய் வந்த போது பாடு பட்டு வாங்கிய கம்மல்களில் ஒன்று மிஸ்ஸிங். நாள் முழுக்க மூட் அவுட். மறுநாள் ஆபீசில் இதைப் பற்றிப் பகிர்ந்து கொண்ட போது அலுவலகக் காவலாளி பையிலிருந்து அதை எடுத்து 'இதா பாருங்க' என்று நீட்டியது அந்த சமயத்தில் எப்படி நெகிழ்ச்சியாக இருந்தது என்று சொன்னார். முதல் நாள் மாலை அதே ரோடில் நடந்து கொண்டிருந்த அந்தக் காவலாளி கையில் கிடைத்ததாம் அது!
கிடைக்காதது கிடைக்காது, கிடைப்பது கிடைக்கும் என்று ஒரு குழப்ப வசனம் ரஜினி சொல்வாரே, அது போல....
மாமா சொன்ன இன்னொரு சம்பவம். நண்பர்களுடன் ஆபீஸ் செல்லும் வழியில் கொத்தாக ஒரு பதினைந்து லாட்டரிச் சீட்டுகள் கிடந்தனவாம். வரிசையான நம்பர்கள் கொண்டது... விற்பனையாளரிடமிருந் தோ, அல்லது யாரோ 'லாட்டரி அடிமை' வாங்கிச் செல்லும்போதோ தவற விட்டிருக்க வேண்டும். ஆபீசில் இடைவேளையில் பேசிக் கொண்டே சிகரெட் பிடிக்க குளிர் அடுப்பிலிருந்து நெருப்பு பற்ற வைக்க இதில் ஒவ்வொன்றாக சுருட்டி சுருட்டி பற்றவைத்துப் பயன் படுத்தியிருக்கிறார்கள். கடைசி இரண்டு சீட்டுகள் பாக்கி இருக்கும்போது திடீரென கவனித்து நிறுத்தி, எதற்கும் பார்ப்போம் என்று ரிசல்ட் பார்த்தால் கடைசியாக எரிக்கப் பட்ட இரண்டு நம்பர்களுக்கு ஆறுதல் பரிசு விழுந்திருந்ததாம்! விதி...
என் பையன் ஹோட்டலில் வைத்து விட்டு வந்த அவனுடைய செல்போன் ஒன்றரை மணி நேரத்திற்குப்பிறகு போன போதும் கூட திரும்பக் கிடைத்தது. செல்லை தவற விட்ட இன்னொரு தவணையில் திரும்பப் போய் வழியிலிருந்து எடுத்து வந்தான்!
இதிலிருந்து கிடைக்கும் நீதி என்ன? ஒரு புண்ணாக்கும் இல்லை என்பதே என் தாழ்மையான அனுபவ அபிப்ராயம்!
ஏனென்றால், பிறிதொரு நாள் நண்பர்களுக்கிடையே இருக்கும்போது தவற விட்ட செல்போன், தெரிந்த கடையில் மறதியாய் வைத்து விட்டு வந்து விட்ட வாங்கிய மளிகைப் பொட்டலம், பஸ்ஸில் தவற விட்ட பர்ஸ், சரவணா ஸ்டோர்ஸில் மாடியில் மறந்த குடை இன்னும்.. இன்னும் என்று நிறைய பொருட்கள் திரும்பி வரவில்லை! கிடைத்ததை விட கிடைக்காதது அதிகம்தான். அந்த பாதிப்பினாலேயே யாராவது தவற விட்ட பொருள் கைக்குக் கிடைத்தால் அவர்களிடம் சேர்ப்பிக்க முயற்சி செய்வது வாடிக்கை.
என் நண்பர் எல்லாவற்றையும் கடைசி நிமிடத்தில் பரபரப்பாகச் செய்தே பழகியவர். ரிசர்வ் செய்த ரெயில் வண்டிகளுக்கு ஒரு முறை கூட அவர் முன்னதாகச் சென்றது கிடையாது. கிளம்பும் நேரம்தான் பரபரப்பாகப் படியிறங்கிக் கொண்டிருப்பார்! அபபடி சென்னையில் மின்வண்டியைப் பிடிக்கும் ஒரு சமயத்தில் ட்ரெயின் வேகம் பிடிக்கத் தொடங்கி விட, ஓடி வந்து எட்டி ஏறிய, அரைகுறைத் தொங்கலில் இருந்த நண்பர் தன் கடைசி கணங்கள் வந்து விட்டதாக உணர்ந்த சில கணங்களை நினைவு கூர்ந்தார். ஸ்டேஷனில் நின்ற பற்பல நபர்களின் கூச்சல், பதட்டத்தை அதிகப் படுத்த, கையை விட்டால் ட்ரெயின் சக்கரம்தான் என்ற நிலையில், ட்ரெயின் பெட்டியில் நின்ற இரண்டு மூன்று கல்லூரி மாணவிகள் அவரை நொடியில் உள்ளே இழுத்துக் காப்பாற்றியதைச் சொன்னார். தொங்கலில் அவர் செல்போன் பிளாட்பாரத்தில் விழுவதை அறிந்தும் அதைக் காப்பாற்ற முடியாத நிலை! கை கொடுத்துக் காப்பாற்றியவர்களுக்கு நன்றி சொன்ன அவர், (கூச்சத்துடந்தான்!) அடுத்த ஸ்டேஷன் வரும் வரை தலைகுனிந்து, வெளியே பார்த்து என்று இருந்து விட்டு அடுத்த் ஸ்டேஷனில் இறங்கி பெட்டி மாறினாராம்.
அப்புறம் அவர் கடைசி நேர பரபரப்புப் பயணங்கள் செய்வதில்லை. மறுநாள் முன்னாலேயே தன்னுடைய ஸ்டேஷன் சென்று விட்ட அவரிடம் அவர் செல்போன் பத்திரமாக ஒப்படைக்கப் பட்டது! முதல்நாள் வீரசாகசத்தைப் பார்த்த சீசன் டிக்கெட், வழக்கப் பயணியின் கருணை!
நடந்து செல்லும் வழியில் ஒரு ரூபாய் நாணயங்கள், இரண்டு ரூபாய் நாணயம், ஏன் ஐந்து ரூபாய் நாணயம் கூட கிடந்ததைப் பார்த்திருக்கிறேன். லட்சியம் செய்வதில்லை. இதே ஐம்பது, நூறு ரூபாய்களோ, ஐநூறு ரூபாய் நோட்டோ கிடந்தால் அலட்சியமாக நடப்போமா என்று எண்ணி....
இன்றைய நடையை நிறைவு செய்கிறேன்!







