இன்றைய சிந்தனைக்கு வித்திட்டது நடக்கும்போது ஒரு விளக்குக் கம்பத்திலிருந்து சற்றே தளளி, ஆனால் வெளிச்சத்தில் தெரியக்கூடிய இடத்தில் கிடந்த, ஒரு செல்போன். செல்போன்தானா அல்லது வெறும் கவரா என்று செக் செய்யக் கூட தோன்றாமல் நடந்ததற்குக் காரணம் உண்டு.
முன்னர் ஒரு முறை, கீழே கிடந்த 'செல்'லை எடுத்து உரியவரிடம் சேர்ப்பிக்க எடுத்த முயற்சிகளில் கிடைத்த சில அனுபவங்கள்....! இதை யார் வேண்டுமானாலும் எடுக்கட்டும். தொலைத்தவனுக்கு விதி... எடுப்பவன் விதி அதைத் திருப்பிக் கொடுப்பானோ, அவனே வைத்துக் கொள்வானோ...
கஷ்டப்படாமல் வந்த பணம் நிலைக்காதாம். சொல்வார்கள். கஷ்டப் பட்டு சேர்த்த பணம் நம் கையை விட்டும் போகாதாம்... அதாவது அனாவசியமாகத் தொலையாதாம்.
ஒரு முறை ஓர் ஐநூறு ரூபாய் நோட்டு மூன்று நூறு ரூபாய் நோட்டுகள் பையிலிருந்து கொத்தாகக் கீழே விழுந்திருப்பது வீடு சென்றபின்தான் தெரிந்தது. திரும்ப ஓடி, வழியில், கடைசியில் சென்ற கடை, சந்தித்த நபர்கள் என்றெல்லாம் அலசி, ஒன்றரை மணி நேரம் கழித்து சோர்வுடன் திரும்பிய போது, வழியில் பக்கத்து முட்புதரிலிருந்து லேசான காற்றில் முதலில் ஒரு நூறு ரூபாய் நோட்டு இடத்தைக் காட்ட, அப்புறம் தொடர்ந்து மற்ற நோட்டுகளும் கிடைத்தது ஒரு அனுபவம். ஆனால் பாருங்கள், எண்ணூறு ரூபாய்தான் கிடைத்தது! இத்தனைக்கும் பக்கத்தில் ஒரு கும்பலே கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தது.
ஊட்டி ரேஸ் கோர்ஸ் அருகே தொலைத்த தங்க காதுக் கம்மல் பற்றி மாமா சொன்னார். ரேஷன் கடை போய் வந்த போது பாடு பட்டு வாங்கிய கம்மல்களில் ஒன்று மிஸ்ஸிங். நாள் முழுக்க மூட் அவுட். மறுநாள் ஆபீசில் இதைப் பற்றிப் பகிர்ந்து கொண்ட போது அலுவலகக் காவலாளி பையிலிருந்து அதை எடுத்து 'இதா பாருங்க' என்று நீட்டியது அந்த சமயத்தில் எப்படி நெகிழ்ச்சியாக இருந்தது என்று சொன்னார். முதல் நாள் மாலை அதே ரோடில் நடந்து கொண்டிருந்த அந்தக் காவலாளி கையில் கிடைத்ததாம் அது!
கிடைக்காதது கிடைக்காது, கிடைப்பது கிடைக்கும் என்று ஒரு குழப்ப வசனம் ரஜினி சொல்வாரே, அது போல....
மாமா சொன்ன இன்னொரு சம்பவம். நண்பர்களுடன் ஆபீஸ் செல்லும் வழியில் கொத்தாக ஒரு பதினைந்து லாட்டரிச் சீட்டுகள் கிடந்தனவாம். வரிசையான நம்பர்கள் கொண்டது... விற்பனையாளரிடமிருந் தோ, அல்லது யாரோ 'லாட்டரி அடிமை' வாங்கிச் செல்லும்போதோ தவற விட்டிருக்க வேண்டும். ஆபீசில் இடைவேளையில் பேசிக் கொண்டே சிகரெட் பிடிக்க குளிர் அடுப்பிலிருந்து நெருப்பு பற்ற வைக்க இதில் ஒவ்வொன்றாக சுருட்டி சுருட்டி பற்றவைத்துப் பயன் படுத்தியிருக்கிறார்கள். கடைசி இரண்டு சீட்டுகள் பாக்கி இருக்கும்போது திடீரென கவனித்து நிறுத்தி, எதற்கும் பார்ப்போம் என்று ரிசல்ட் பார்த்தால் கடைசியாக எரிக்கப் பட்ட இரண்டு நம்பர்களுக்கு ஆறுதல் பரிசு விழுந்திருந்ததாம்! விதி...
என் பையன் ஹோட்டலில் வைத்து விட்டு வந்த அவனுடைய செல்போன் ஒன்றரை மணி நேரத்திற்குப்பிறகு போன போதும் கூட திரும்பக் கிடைத்தது. செல்லை தவற விட்ட இன்னொரு தவணையில் திரும்பப் போய் வழியிலிருந்து எடுத்து வந்தான்!
இதிலிருந்து கிடைக்கும் நீதி என்ன? ஒரு புண்ணாக்கும் இல்லை என்பதே என் தாழ்மையான அனுபவ அபிப்ராயம்!
ஏனென்றால், பிறிதொரு நாள் நண்பர்களுக்கிடையே இருக்கும்போது தவற விட்ட செல்போன், தெரிந்த கடையில் மறதியாய் வைத்து விட்டு வந்து விட்ட வாங்கிய மளிகைப் பொட்டலம், பஸ்ஸில் தவற விட்ட பர்ஸ், சரவணா ஸ்டோர்ஸில் மாடியில் மறந்த குடை இன்னும்.. இன்னும் என்று நிறைய பொருட்கள் திரும்பி வரவில்லை! கிடைத்ததை விட கிடைக்காதது அதிகம்தான். அந்த பாதிப்பினாலேயே யாராவது தவற விட்ட பொருள் கைக்குக் கிடைத்தால் அவர்களிடம் சேர்ப்பிக்க முயற்சி செய்வது வாடிக்கை.
என் நண்பர் எல்லாவற்றையும் கடைசி நிமிடத்தில் பரபரப்பாகச் செய்தே பழகியவர். ரிசர்வ் செய்த ரெயில் வண்டிகளுக்கு ஒரு முறை கூட அவர் முன்னதாகச் சென்றது கிடையாது. கிளம்பும் நேரம்தான் பரபரப்பாகப் படியிறங்கிக் கொண்டிருப்பார்! அபபடி சென்னையில் மின்வண்டியைப் பிடிக்கும் ஒரு சமயத்தில் ட்ரெயின் வேகம் பிடிக்கத் தொடங்கி விட, ஓடி வந்து எட்டி ஏறிய, அரைகுறைத் தொங்கலில் இருந்த நண்பர் தன் கடைசி கணங்கள் வந்து விட்டதாக உணர்ந்த சில கணங்களை நினைவு கூர்ந்தார். ஸ்டேஷனில் நின்ற பற்பல நபர்களின் கூச்சல், பதட்டத்தை அதிகப் படுத்த, கையை விட்டால் ட்ரெயின் சக்கரம்தான் என்ற நிலையில், ட்ரெயின் பெட்டியில் நின்ற இரண்டு மூன்று கல்லூரி மாணவிகள் அவரை நொடியில் உள்ளே இழுத்துக் காப்பாற்றியதைச் சொன்னார். தொங்கலில் அவர் செல்போன் பிளாட்பாரத்தில் விழுவதை அறிந்தும் அதைக் காப்பாற்ற முடியாத நிலை! கை கொடுத்துக் காப்பாற்றியவர்களுக்கு நன்றி சொன்ன அவர், (கூச்சத்துடந்தான்!) அடுத்த ஸ்டேஷன் வரும் வரை தலைகுனிந்து, வெளியே பார்த்து என்று இருந்து விட்டு அடுத்த் ஸ்டேஷனில் இறங்கி பெட்டி மாறினாராம்.
அப்புறம் அவர் கடைசி நேர பரபரப்புப் பயணங்கள் செய்வதில்லை. மறுநாள் முன்னாலேயே தன்னுடைய ஸ்டேஷன் சென்று விட்ட அவரிடம் அவர் செல்போன் பத்திரமாக ஒப்படைக்கப் பட்டது! முதல்நாள் வீரசாகசத்தைப் பார்த்த சீசன் டிக்கெட், வழக்கப் பயணியின் கருணை!
நடந்து செல்லும் வழியில் ஒரு ரூபாய் நாணயங்கள், இரண்டு ரூபாய் நாணயம், ஏன் ஐந்து ரூபாய் நாணயம் கூட கிடந்ததைப் பார்த்திருக்கிறேன். லட்சியம் செய்வதில்லை. இதே ஐம்பது, நூறு ரூபாய்களோ, ஐநூறு ரூபாய் நோட்டோ கிடந்தால் அலட்சியமாக நடப்போமா என்று எண்ணி....
இன்றைய நடையை நிறைவு செய்கிறேன்!
தொலைந்தது கிடைப்பதில் கிடைக்கும் சந்தோஷமே தனி...
பதிலளிநீக்குஅதே சமயத்தில் தொலைத்ததற்கு வீட்டீல் கிடைக்கும் பாட்டிற்காவே தொலைப்பு வைராக்கியங்கள் போடவேண்டியிருக்கிறது....
கீழே கிடப்பதை எடுக்கிறோமா இல்லையா என்று இயற்கை வைக்கிற சத்திய சோதனை பரிட்சையாக அவற்றை எடுத்து கொள்ளலாம்.
பதிலளிநீக்குநடை ஒரு சாக்கிடல் தான்; நிறைய நினைவுகளை அதோடு ஒத்தி எடுத்துப் பார்க்க முடிகிறது. வெறும் நினைவு கள் என்கிறதோடு முடிந்து விடுகிறதா?.. அதை ஒட்டிய நியாய-அநியாயங்கள், தர்க்கங்கள் இத்யாதி.. இத்யாதி..
பதிலளிநீக்குஆனால் ஒன்று நிச்சயம். அசை அசைபோட புதுசு புதுசாக நிறையக் கிடைக்கிறது. அது சிந்தனையை வளப்படுத்துகிறது.. பல நேரங்களில் மனசை லேசாக்குகிறது. மனம் அழுத்தம் குறைந்து இலகுவான அதன் இயல்பு நிலையில் இருப்பது ஆரோக்கியத்திற்கு அடிப்படையான விஷயம் என்று போனவாரம் ஒரு டாக்டர் லெக்சர் கொடுத்தார். கேட்க கொடுத்து வைத்திருந்தது. அரைமணி நேரம் போனதே தெரியவில்லை.
ஒரு ஆச்சரியம் என்ன தெரியுமா?.. அவரும் தனது அந்த உரையை அதிகாலை நடைப்பயிற்சியில் ஆரம்பித்தது தான்!..
நடைப்பயணம் நல்லது, எல்லாவற்றிற்கும் :-)
பதிலளிநீக்குதொலைந்த பொருட்கள் திரும்பக் கிடைப்பது அதீத சந்தோஷம் தரும் -அப்பொருளைப் புதிதாக வாங்கியபோது கிடைத்ததைவிட..
பதிலளிநீக்குஇப்போவெல்லாம் தொலைக்கும் (பெரிய) பொருட்கள் திரும்பக் கிடைத்துவிடுகிறது பெரும்பாலும் - ’பாம்’ பய புண்ணியத்தில்!! ;-))))
அதிகாலை நடைபயணத்தில் ஆரம்பித்து, பிச்சைக்காரர்களை ஆராய்ந்து, தொலைந்தவற்றைத் தேடி முடிந்திருக்கிறது இத்தொடர். (இதை எழுதத் துவங்கும்போது தொடராகும் என்று நினைத்தீர்களா?)
தியானம்/கான்ஸட்ரேஷன் கேம்ப்/யோகா இன்னபிறக்களில் மனதை ஒருநிலைப்படுத்துவதைப் பிரதானப்படுத்துவார்கள். ஆனால், பாருங்களேன், இப்படி மனம் பல நினைவுகளில் அலைபாயும் சுகமே தனிதான், இல்லையா?
நடக்கும் நினைவுகளுடன் நாங்களும் நடந்தோம்!
பதிலளிநீக்குநானும் தவறவிட்டவை தான் அதிகம்.
ஒவ்வொரு விஷயத்தையும் (பிச்சைக்காரர்கள் முதல் தொலைந்து போனவை வரை) நன்றாய் அலசியிருந்தீர்கள்.
போட்டது எண்ணூறு தானே , அவ்ளோதான் கிடைக்கும்
பதிலளிநீக்குநடை பயண நினைவுகள் சுவரசியம். தொலைந்தது திரும்ப கிடைக்கும் அனுபவமே தனி.
பதிலளிநீக்குதொலைந்தது ஒரே ஒரு தடவை கிடைத்திருக்கிறது. அதுவும் ஒரு நீண்ட
பதிலளிநீக்குபயணத்தின் போது...வந்த காரிலிருந்து இறங்கி
அந்த "ஐய்யர் கஃபே"யில் காப்பி குடித்து பெரிய கைப்பையையும்
மறந்து வைத்துவிட்டு நெடுந்தோறும் செங்கல்பட்டு வரை வந்துவிட்டோம்.
திடீரென்று மருந்து சாப்பிடும் வேளையில் பையைத்தேடினால் காணோம்.
வண்டி ஓட்டி ,தான் மீண்டும் அந்தக் கடைக்குப் போய்ப் பார்க்கலாம் அம்மா என்றார். அவரை
மீண்டும் அத்தனை தொலைவு ஓட்டச் சொல்ல தயக்கம்..
ஆனாலும் பையில் அத்தனை வீஷயங்களும் இருந்ததால் மறுக்கவில்லை.
70கிலொமீட்டர் ஓட்டிச்சென்று, ஹோட்டலிலிருந்து பையை மீட்டொம்.
மேஜைகளைத் துடைக்கும் பையன் எடுத்துக் கல்லாவில் கொடுத்திருந்தான்.:)
கிடைக்காமல் போன நூறு தடவைக்கு இந்த ஒரு தடவை ஈடு கட்டிவிட்டது.
நல்ல பதிவு.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_16.html
I enjoyed reading.
பதிலளிநீக்குVery different from normal, But a simple thought.
I appreciate.
I was very busy attending Hunt for Hint. So, the delay.
புண்ணாக்கு நீதியும் சுவாரசியமாகவே உள்ளது.
பதிலளிநீக்குதொலைந்து போனவை திரும்பக் கிடைத்த தருணங்கள் ஆஹா!! கிடைக்காமல் போனவையும் அதில் அடக்கம். ஆனால் கிடைக்க வேண்டும் என்றால் கிடைக்கும் உழைத்த பணம் என்று சொல்லுவது எல்லாம் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. என் மகன் தான் கஷ்டப்பட்டு இரவு பகலாக உழைத்து சேர்த்தபணத்தில்தான் எனக்கு மொபைல் வாங்கிக்கொடுத்தான். அதை ஒருவன் அடித்துச் சென்றான் என்றால் அந்தப் பணம் உழைக்காமல் வந்த மாமூல் காசு என்று சொல்லவா முடியும்??!!!!நான் உழைக்கும் காசை அரசியல்வாதிகள் பகற்கொள்ளை அடிக்கவில்லையா? உழைத்த காசு உழைக்காத காசு அதெல்லாம் சும்மா...
பதிலளிநீக்குபாருங்கள் நடைப் பயிற்சி எவ்வளவு விஷ்யம் தருகிறது பதிவு எழுத..அதனால் இதிலிருந்து பெறும் நீதி..ஹிஹி ஆதலாம் நடைப்பயிற்சி செய்வீர்!!! என்பதுதான்...
கீதா
அந்த கடைசீ நிமிட பிரயாணி மனதை திடுக்கிட வச்சிட்டார் ..காணாமல் போன பொருட்கள் பல எனக்கு கிடைச்சிருக்கு நிறைய கிடைச்சதில்லை ..கிடைக்காமல்போனவை 10 வின்டர் க்ளவுஸ் ..
பதிலளிநீக்குபணமெல்லாம் தொலைத்ததில்லை ....ஒருமுறை 800 euros பாங்கில் போடா இவர் கொண்டு போனார் ..நேரே பங் சென்று தேடினால் கிடைக்கலை எங்கோ தவரற விட்ருக்கார் திருப்பி நடந்து வரும்போது சைடில் புதரில் பாஸ்புக்கோடு பணமும் பத்திரமா இருந்தது ..
இங்கே ரோட்டில் நடக்கும்போது அதிகம் 5 ,10 ,1,2 பென்னிஸ் கிடைக்கும் வேணும்னே மக்கள் சுண்டி விட்டு போவாங்க பர்சில் வச்சா ஹெவி என்பதால் .நானா அவற்றை கூச்சப்படாம பொருக்கி எடுத்து சர்ச்சில் சாரிட்டி கலெக்க்ஷனுக்கு கொடுத்திடுவேன் .
அந்த கம்மல் மேட்டர் எனது பிளாக்கில் போட ஒரு பதிவு கிடைச்சாச்சு :)
நன்றி கீதா, ஏஞ்சல்...
பதிலளிநீக்குபதிவு போட இங்கிருந்து ஐடியா இரண்டு பேருக்குமே கிடைத்திருக்கிறது! எனக்கு என்ன கமிஷன்?
ஹா ஹா :) அதிரா க்ரில் வாங்கி அனுப்பறாங்களாம் எங்கள் சார்பா
பதிலளிநீக்கு