Tuesday, January 3, 2012

அலுவலக அனுபவங்கள் 03

                   
உதகை ........... துறை அலுவலகம். (ஊரைச் சொன்னாலும் பேரைச் சொல்லக் கூடாது அல்லவா!) 
                
அங்கெல்லாம் ஸ்வெட்டர்,குரங்குக் குல்லாய் எல்லாம் போட்டுதான் நடமாடுவார்களா... அதுவும் குளிர்காலம் என்றால் கேட்கவே வேண்டாம்.... சென்னையிலேயே மார்கழியில் மக்கள் பகலில் கூட மஃப்ளர், ஸ்வெட்டர் சகிதம் அலைகிறார்கள்... உதகையில் கேட்க வேண்டுமா....! 

அது மாதிரி ஒரு காலைப் பொழுது. டைரக்டரை இறக்கி விட்ட பிறகு காரை ஷெட்டில் விட டிரைவர் வரும் நேரம். அங்கு நிற்கும் வாட்ச்மேன், கதவைத் திறந்து விட்டு டிரைவர் காரைப் பார்க் செய்து விட்டு வந்ததும், இருவருமாகச் சேர்ந்து, புகை பிடிக்க ஒதுங்குவது வழக்கம்.

அன்று கார் லேட். 'இன்னும் வரவில்லையே' என்று நண்பனுக்காகக் காத்திருந்த வாட்ச்மேன் ஒருவழியாகக் காரைக் கண்டதும், நண்பனிடம் தன் செல்லக் கோபத்தைக் காட்ட வேண்டி ஷெட் கதவைத் திறந்து விடாமல் தாமதித்தார்.

பொறுமை இழந்த ஓட்டுனர், விடாமல் ஹார்ன் அடிக்க, உரிமையாக பக்கத்தில் சென்று கெட்ட வார்த்த்தையில் திட்டியபடியே, கதவைத் திறந்து விட்டதோடு கையிலிருந்த தடியால் காரைத் தட்டி விட்டு, டிரைவர் முதுகிலும் செல்லமாக ஒன்று வைத்தார்.
     
கார் கதவு திறந்தது. வாட்ச்மேனும் உரிமைச் சண்டைக்குத் தயாராக.... ஓட்டுனர் தன் குரங்குக் குல்லாய், மஃப்ளரை அகற்ற, வாட்ச்மேன் விதிர்விதிர்த்துப் போனார். 
            
எதிரில் நின்றவர் டைரக்டர்! 
              
ஏற்கெனவே டிரைவருக்காக்க் காத்திருந்து, சொல்லாமல் மட்டம் போட்டு விட்ட டிரைவர் மேல் இருந்த கடுப்பு, ஆபீசுக்கு லேட்டாகி விட்ட கடுப்பு, தானே வண்டியை ஒட்டி வந்த கடுப்பு.... எல்லாம் ஒன்று சேர்ந்தது!
             
இப்போது சொல்லும்போது சாதாரணமாகத் தெரிந்தாலும், வாட்ச்மேன் அந்த நொடி ஏற்பட்ட திகிலை வார்த்தைகளில் சொல்ல முடியாது என்றார். அப்புறம் அவர், "என் ரூமுக்கு வா" சொல்லி விட்டு கடும் கோபத்துடன் நகர்ந்த டைரக்டரை எப்படி பார்ப்பது, என்ன சொல்வது என்று அலுவலகத்தில் எல்லோரிடமும் அவசர அவசரமாக யோசனை கேட்டபடியே அவர் அறைக்கு ஓடின வாட்ச்மேனின் நிலையை என்ன சொல்ல...?
*******************************************************  
                 
அரசு அலுவலகங்களில் வருடத்துக்கு ஒருமுறை சரண்டர் லீவ் என்று பதினைந்து நாளை அரசுக்கு ஒப்படைத்து (!) அதற்கான சம்பளத்தைப் பணமாகப் பெறுவார்கள். 
     
நண்பர் பணிக்குச் சேர்ந்த புதிது. இவர் எழுதிக் கொடுத்து ஐந்து மாதங்களாகியும் பணப்பயன் வந்த பாடில்லை. சாதாரணமாக பதினைந்து நாளிலோ அல்லது அதிகபட்சம் ஒரு மாதத்திலோ வாங்கி விட முடியும்.
                 
அலுவலகப் பொறுப்பாளரிடம் சென்று கேட்ட போதெல்லாம் 'ஹெட் ஆபீசுக்கு அப்பவே அனுப்பியாச்சு சார்... பதில் வரலை' என்பதே பல்லவியாய் இருந்தது. இவரும் அப்படித்தான் ஆகும் போலும் என்று நினைத்திருந்தார் - நண்பர்கள் எடுத்துச் சொல்லும் வரை!
                 
நண்பர்கள் அறிவுரைப்படி ஹெட் ஆபீசுக்கு சென்று விசாரித்த போது 'ரெஃபெரன்ஸ் நம்பர்' கேட்க, இவர் மறுபடி தன் ஆபீஸ் வந்து பொறுப்பாளரிடம் கேட்க, 'யாரைக் கேட்டு ஹெட் ஆபீஸ் போனீர்கள்...? இங்குள்ள தலைமை ஆஃபீசரிடம் அனுமதி வாங்காமல் போகக் கூடாது தெரியுமா' என்றெல்லாம் அவர் எகிறியுள்ளார்.
                
அப்புறம் உடன் பணி புரிபவர்கள் சமாதானப்படுத்த அரை மனதாய் ஒரு நம்பர் தந்திருக்கிறார்.
                 
அதை எடுத்துக் கொண்டு ஹெட் ஆபீஸ் சென்று விசாரித்தால் அபபடி ஒரு ரெஃபரன்ஸ் நம்பரே வரவில்லை என்று அவர்கள் சொல்ல,   வேறு வழியின்றி வேறு ஏதும் தன் அலுவலக பொறுப்பாளரிடம் கேட்க துணிவின்றி, இவர் சும்மா இருந்து விட்டார்.
                  
இன்னொரு மாதம் சென்ற பின்னர் பியூன் ஹெட் ஆபீஸ் சென்று வந்து ஒரு தபாலை இவர் கையில் கொடுக்க, அதை வாங்கிப் பார்த்தால் இவர் சரண்டர் தபால்! பணம் பெற அனுமதித் தபால்! அதில் இருந்த ரெபரன்ஸ் நம்பருக்கும் இவரிடம் தரப்பட்ட நம்பருக்கும் சம்பந்தமே இல்லை. தேதியும் பின் தேதி!
                 
பொறுப்பாளரிடம் இவர் அதைக் கேட்கப் போக அவர் இவர்தான் ஏதோ தவறு செய்தாற்போல பெரிய சண்டைக்கு வந்து விட்டார். அதோடு உடனே பணம் பெற்றுத் தராமல் லேட் செய்தார்.
                 
நண்பரும் பொறுப்பாளரிடம் இனி பேசிப் பயனில்லை என்று விட்டு விட்டார். நண்பருக்கு ஒரு வழக்கம். காலையில் கேட்ட, தனக்குப் பிடித்த சினிமா பாட்டை முணுமுணுத்துக் கொண்டே இருப்பார். அன்று சென்னை இரண்டாவது சேனலில் தொலைக் காட்சியில் பார்த்த 'இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே' என்ற பாடலை அடிக்கடி முணுமுணுத்துக் கொண்டிருக்க, வந்தது வினை!
               
அடுத்த அறையில் இருந்த பொறுப்பாளர் இவர் தன்னைக் குறித்துப் பாடுவதாக எண்ணி, மறுபடி பெரிய சண்டையாகிப் போனது!
                 
அப்புறம் பணம் வந்து சேர்ந்தாலும் இவர்களுக்குள் இருந்த பகைப்புகை விலக நீண்ட நாள் ஆனது!   
                     

23 comments:

A.R.ராஜகோபாலன் said...

அருமையான யதார்த்த பகிர்வு, மனிதரில் பலவிதம் அவர்களில் இவர்கள் ஒரு விதம்

தமிழ் உதயம் said...

நல்ல அனுபவங்கள்.

geetha santhanam said...

இரண்டாம் சம்பவம் என்ன ஒரு அடாவடித்தனம் சார். படிக்கும்போதே கோவமாக வந்தது.

pudukai selva said...

சொல்லாதே யாரும் கேட்டால் .......

RAMVI said...

முதல்து வேடிக்கை.அப்பறமா அந்த வாட்ச் மேன் என்ன ஆனான்?

இரண்டாவது ரொம்ப கொடுமை.

shanmugavel said...

பல இடங்களில் நடப்பதுதான்.பணம் வாங்குவதற்குள் போதும்போதும் என்றாகிவிடும்.

ராமலக்ஷ்மி said...

வாட்ச் மேனை டைரக்டர் மன்னித்திருப்பார் என நம்புவோம்.

//பகைப்புகை விலக நீண்ட நாள் ஆனது!//

ஆனால் விலகி விட்டது:)! காலம் எதையும் ஆற்றும்.

நல்ல பகிர்வு.

middleclassmadhavi said...

ஆஃபிஸ் அனுபவங்களைக் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்கள்! சபாஷ்!

Madhavan Srinivasagopalan said...

அனுபவம் புதுமை
ஆபீசில் கண்டேன்...
-------------------------

சி.கருணாகரசு said...

மிக ரசனையான நிகழ்வுகள்.... பகிர்ந்தமைக்கு நன்றிங்க ஸ்ரீராம்.

இராஜராஜேஸ்வரி said...

எதிர்பாராத நிகழ்வுகளின் ரச்னையான பகிர்வு.. அருமை.. பாராட்டுக்கள்..

Rathnavel said...

நல்ல பதிவு.

ஹேமா said...

மாறுவேஷம் சூப்பர்.அந்த நேரம் எப்பிடியிருந்திருக்கும்...!

கணேஷ் said...

அந்த வாட்ச்மேனை டைரக்டர் மன்னித்தாரா, தண்டித்தாரா? இரண்டாவது சம்பவத்தில் வருவது போல பல உயரதிகாரிகள் இப்படித்தான் அடாவடியாக நடந்து கொள்கிறார்கள். (எனக்குக் கூட இந்த மாதிரி பாடற பழக்கம் உண்டு. இனி உஷாரைய்யா உஷாரு!)

Ramani said...

தியாசமன மனிதர்கள்
வித்தியாசமான அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 5

அமைதிச்சாரல் said...

ரொம்பவே வேடிக்கையா இருக்குது முதல் சம்பவம்.. வாட்ச்மேன் நிலை அந்த நிமிஷத்துல எப்படி இருந்துருக்கும்!!!

ரெண்டாவது---------- ஒன்னும் சொல்றதுக்கில்லை. இப்படியும் ஆட்கள் இருக்காங்களே :-(

HVL said...

அந்த வாட்ச்மேன் பாவம்!

மோகன் குமார் said...

You did not mention what happened after that in the first incident.

Second one also is very bad. It shows the attitude of people in Govt dept.

வல்லிசிம்ஹன் said...

முதல் அனுபவம் வேடிக்கை நமக்கு. அந்த வாட்ச்மன் கதை என்ன ஆச்சோ.

என்ன ஒரு வில்லத்தனம் இந்த இரண்டாவது கதை ஆப்பீசர். அநியாயமாக வயெற்றெரிச்சலக் கொட்டிக் கொண்டாரே.

ஹுஸைனம்மா said...

வாட்ச்மேன் என்ன ஆனார்னுதான் கவலையா இருந்துது. ஆனாலும், தப்பு ‘குரங்கு குல்லா’ மேலதான்கிறதால, சிலபல அசடு வழிசல்களோடு தப்பிச்சிருப்பார் இல்லியா?

(வாட்ச்மேனைப் பத்தி இத்தனை பேர் கேட்டிருக்கோம், பதில் சொன்னா என்னவாம்?) :-))))

கீதா சாம்பசிவம் said...

அரசாங்க அலுவலகங்களில் நடக்கும் ஒன்று.

கீதா சாம்பசிவம் said...

அது சரி, வாட்ச்மேன் விஷயத்தில் சஸ்பென்ஸ் ஏன்?

எங்கள் said...

AR ராஜகோபாலன், தமிழ் உதயம், கீதா சந்தானம், புதுகை செல்வா, ராமலக்ஷ்மி, middleclassmadhavi, மாதவன், கருணாகரசு, ராஜராஜேஸ்வரி, ரத்னவேல், ஹேமா, அமைதிச்சாரல், HVL, ஆகிய அனைவருக்கும் எங்கள் நன்றி.

ராம்வி, கணேஷ், மோகன் குமார், வல்லிசிம்ஹன், ஹுஸைனம்மா, கீதா சாம்பசிவம்,
அலுவலக அனுபவங்கள் முதல் பகுதியில் சொன்னதுதான்...(க க போ மாதிரி) அ.எ.ந.எ.சொ.வே....தான்! சாதாரணமாக அரசு அலுவலகங்களில் இது போல சமயங்களில் நல்ல 'பாட்டு' கிடைக்கும்!அல்லது மெமோ கிடைக்கும். சில சமயங்களில் இன்கிரிமென்ட் கட் ஆகும்! இங்கு பாட்டு வாங்கி விடுதலையானார் அவர். அந்தச் சூழ்நிலையை மட்டும் விளக்கவே பதிவு என்றாலும் உங்கள் கவலை நீங்கள் ஈடுபாட்டுடன் படித்ததைக் கட்டுவதால் மகிழ்ச்சி உண்டாகிறது. நன்றி...நன்றி...நன்றி!

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!