வியாழன், 4 ஏப்ரல், 2024

சஞ்சலத் தாயும், சலித்த மகனும் 

 மகாபாரதம் சம்பந்தப்பட்ட கதைகள் என்றாலே எனக்கு ஒரு தனி ஆர்வம் உண்டு.  உடனே படித்து விடுவேன், அல்லது வாங்கி விடுவேன். 

அ. மாதவன் எழுதிய 'இனி அவள் உறங்கட்டும்' (நான் உறங்கட்டும்?) என்னும் கதை, எஸ்ரா எழுதிய பாண்டவர் கதை (படிக்கவே முடியவில்லை), இன்னும் சில புத்தகங்கள்.  முதலிலேயே வாங்க வேண்டும் என்று நினைத்து இப்போதுதான் பைரப்பாவின் 'பருவம்' புத்தகம் வாங்கி வைத்திருக்கிறேன்.  படிக்க வேண்டிய புத்தக லிஸ்ட்டில் அதுவும் காத்திருக்கிறது.  எம் வி வி ஒரு மகாபாரதக்கதை எழுதி இருப்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன்.  இன்னும் கிடைக்கவில்லை.
அந்த வரிசையில் இந்த புத்தகம் வாங்கினேன்.  அதாவது திரு தீபன் எழுதிய 'கடைசி குரு'.

புத்தகம் கைக்கு வந்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் ஆகின்றன என்றாலும், வேலை நெருக்கடி காரணமாக இப்போதுதான் படித்தேன்.  இனி பாக்கி வைத்திருக்கும் புத்தகங்கள் ஒவ்வொன்றாய் படிக்க வேண்டும்.

சாதாரணமாக முன்னுரை, அணிந்துரை எல்லாம் புத்தகம் படித்து விட்டுதான் படிப்பேன்.  இந்தப் புத்தகத்தில் முன்னுரை மட்டும் முதலில் படித்தேன்.  சமீப காலங்களில் இல்லாத வழக்கமாய் - முடியாத வழக்கமாய் -புத்தகத்தை ஒரே மூச்சில் முடித்து விட்டு நான் உணர்ந்ததை எழுதிய பிறகு, லா ச ரா புதல்வர் கருத்தை  படித்தேன்.  அருமை.  அணிந்துரை அல்ல, பணிந்துரை என்கிறார்.  ராஜநடை போடும் எழுத்துகள் அப்படிதான் உணர வைக்கின்றன.

மகாபாரத பாத்திரங்களில் தேர்ந்தெடுத்த சில பாத்திரங்களை வைத்து கற்பனையாக சம்பவங்கள் வடித்திருக்கிறார் ஆசிரியர்.  எல்லாமே தரமான கற்பனைகள்.  பாத்திரங்களின் மரியாதையை குறைக்காத கற்பனைகள்.  கைகளில் கவிதை வழிகிறது.  தெறிக்கும் எதுகை மோனை வரிசையோடு, கவிதையாய் வந்து விழும் வசீகரிக்கும் எழுத்துகள்.

மகாபாரதத்தை ஆழ்ந்த படித்திருந்தால் தான் இவ்வளவு விவரமாக சிந்திக்க முடியும் வித்தியாசமாக எழுத முடியும் ஒவ்வொரு பாத்திரத்தையும் ஆழ்ந்து யோசித்து அதன் மறுபக்கத்தை அல்லது அந்த பாத்திரம் பக்கம் நின்று, அவர்கள் என்ன யோசித்திருப்பார்கள் என்பதை பற்றி பேச மகாபாரதத்தில் மூழ்கி களித்திருக்க வேண்டும் முன்னுரை படிக்கும்போதே இது ஒரு வித்தியாசமான சிந்தனையுடைய புத்தகம் என்று தெரிந்து விடுகிறது.

மகாபாரதம் படிக்கும் அனைவருக்கும் பல்வேறு வகையில் சிந்திக்க, எழுத வாய்ப்புகளைக் கொடுக்கிறது.  ஏதோ ஒரு புத்தகத்தில் திரௌபதிக்கு கர்ணன் மேல் ரகசிய காதல் இருந்தது என்று கூட படித்தேன்.  உலகத்தில் எழுதப்பட்ட, இனி எழுதப்படும் கதைக்கரு எல்லாம் பாரதத்தில் இருக்கிறது என்பார்கள்.
எதுகை மோனையுடன் ரைமிங்காய் வந்துவி​ழும் வரிகள் கதை முழுக்கவே ஒரு கவிதை நடையில் 

​"நந்தன் மாளிகை பேயும் உறங்கித் தோயும் இருள் அவரவர் இல்லங்களுக்கு பெயர்ந்திருந்தனர் அவரவர் வீட்டில் அயர்ந்திருந்தனர்​"  இதுபோல​.

கண்ணனைக் கொள்ள அனுப்பப்பட்ட போதனைக்கு அது ஒரு டாஸ்க். முன்விரோதம் ஏதுமின்றித்தானே அவள் கண்ணனை கொல்லப் போகிறாள்?  அவள் உணர்வுகளை படியுங்கள்...


​"எல்லோரும் நினைத்தார்கள் நான் அன்றே இறந்து விட்டேன் என்று.. கண்ணனைத் தவிர யாருக்கும் தெரியாது அன்று தான் நான் உயிர்த்தேன் என்று" -  பிரமாதம்

​"பிரிவு என்பது தொலைவு  செல்வது அல்ல, தொலைந்து போவது...  நாங்கள் உன்னை தொலைக்கவே மாட்டோம் கண்ணா​"

​"சுடராழியின் சுரப்பு என்றுமே வற்றாத போது பொழிவு ஏன் பொதுவேலை நிறுத்தம் அறிவிக்கப்போகிகிறது?   பேச்சுப் பேர​றிவில் ஒவ்வொரு கோபிகையிடும் நான் தோற்றுத்தான் போகிறேன்​", என்றால் கண்ணனுக்கு தோல்வியா​!!  அன்புக்கு இணங்கி விடுகிறான்.

​"அசுர வீணையின் அறியாத நரம்பு அடக்க வயல் முளைத்த ஆன்மீக கரும்பு​" -  பிரகலாதன்.

​"பக்தனின் பிதாவை கொல்வதுதான் பரமாத்மா லட்சணமா அடியவனின் அன்னையை அமங்கலி ஆக்குவது தான் அவதார அனுக்கிரகமா?   இந்த இழிசெயல்தான் இறைச்செயலா?"

​"தனலட்சுமிக்கு தாலி கட்டியவர்...." -   இறைவிக்கும் உண்டோ இப்படி ஒரு தளை?

தேவகியின் துக்கம் உணர்வுபூர்வமானது கண்ணன் என்ன பதில் சொல்லி சமாளித்தாலும் ஏற்க முடியாது என்று தான் தோன்றும் யசோதைக்கு ஏற்பட்ட இன்பம் தனித்துவமானது.   அதுதான் மகிழும் காலம்  ராமாயணத்தில் லக்ஷ்மணன்- ஊர்மிளா பற்றி பேசுவது போல தேவகியின் இழப்பு, யசோதையின் அதிருஷ்டம் ஆகியவை பேசக்கூடியயதுதான்.

​'கைப்பிடி அவலில் மெய்ப்பிடி ஞானம;'  ​'இணையவன் இறையவன்​' செல்வம் பெற்றதும் சுதான் பிறகு என்ன ஆனான் பொறுப்பில்லாமல் அவன் பெற்றுக் கொண்ட குழந்தைகளுக்கு கண்ணனா பொறுப்பு...!  இருந்தாலும் அவன் காட்டவில்லை வெறுப்பு​!​'சஞ்சலத் தாயும் சலித்த மைந்தனும்...'  கர்ணனின் ஓவியத்தில் சிவாஜி கணேசனை மறைக்க முடியவில்லை அல்லது மறக்க முடியவில்லை கர்ணனுக்கான வசனங்களிலும் சிவாஜிக்காகவே எழுதப்பட்டிருப்பது போல ஒரு பிரமை வரத்தை வாங்கிக் கொண்டு குந்தி  வாசலை நெருங்குகையில் கர்ணனின் 'சிம்மக்குரல்' அழைத்தது என்னும் இடத்தில் மறுபடியும் சிவாஜி வந்துவிடுகிறார்/  அங்கு பேசும் கர்ணனின் வசனங்கள் மிகவும் அருமை.

ஒவ்வொரு கதையாக எழுதும்போது அந்தந்த பாத்திரமாகவே மாறி விடுகிறார்   ஆசிரியர்.

மகாபாரதம் தான் எத்தனை விதமான பாத்திரங்களை நமக்கு அறிமுகப்படுத்துகிறது​.  குழந்தைகளைப் பெற்று பொறுப்பில்லாத சுதாமன்​, அரியணைக்கு ஆசைப்படும் துரியோதனன், அவனுக்கு உரிமை அதிகம் என்று தெரிந்தும் பாண்டவர்களுக்கு முடிசூட வைக்கும் நியாயங்கள்... கர்ணனுக்கு தன் தாய் யார் என்றே தெரியாத அந்த நிலைமை....  எல்லாவற்றையும் நேர்மையாக நம்மையே எடை போட்டுக்கொள்ள செய்கிறது பாரதம்
.
எதிலும் மறைபொருளாக இருக்கும் சில உணர்வுகளை, அல்லது அதையே எதிர்த் திசையில் யோசித்தால் எப்படி இருக்கும் என்று, காவியத்தில் சொல்லப்படாத விஷயத்தை கற்பனை செய்து எழுதுவது எளிதன்று.

​'இவர்கள் நான் நேசம் பூண்டு நிலத்தில் விழவில்லை ஒரு நிர்ப்பந்தத்தால் நிகழ்ந்தவர்கள்.   கர்ணன் மட்டுமே என் சுய ஆர்வத்தால் சுடர்ந்தவன் கதிரவ அமுதம்​'-  எழுதும்போதே வார்த்தைகள் வந்து விழுந்து கொண்டே இருக்கும் போல.

​'விவாம் என்பது நற்பந்தம் என்றாலும் நிகழ்ந்தே ஆக வேண்டிய நிர்ப்பந்தம் என்னை புரிந்து, என்னில் விரிந்து என்னுள் பிணைந்து, யானாய் இணைந்து என்னை உணர்ந்து என்னை உகந்து என்னால் உயர்ந்து, என்னை உயர்த்தும் ஆடவன்.   யாரும் அறியா எந்தன் உண்மையை என்னுள் இருந்து எடுத்துப் பிரித்து எனக்கே காட்டும் இனிய வல்லமை கொண்ட ஆதவன்..... பிரமாதம் சார்

மறை விழி. இன்னொரு கோணம். காந்தாரியை  கண்ணழகியாய், இந்த கோணத்தில் இருந்து யாரும் யோசித்து இருக்க மாட்டார்கள் என்று தோன்றியது

அக(ழ்)விழி ஒரு அற்புதம் காந்தாரி சொல்லிக் கொண்டு வருவதை படித்துக்கொண்டே வருகையில் அம்மா அம்மா பார்வதி தாயே இதை எப்படி அம்மா நான் ஏற்றுக் கொள்வேன் அம்மா அம்மா என்று குலுங்கி குமுறி அழுத காந்தாரி தாயே இந்த இடத்தில் கலங்கிவிட்டேன்.   அந்த இடத்தில ஆசிரியர் காந்தாரியை உருவகப்படுத்தும் இடம் மிக உயர்ந்த இடம். காலம் கடந்தும் ராமாயணத்தில் ராவணன் ஏன் இன்னமும் இந்த அளவு தூற்றப்படுகிறான் என்பதையும் கௌரவர்கள் செய்த அந்த மாபெரும் இழிசெயல் என்ன என்பதையும் இன்று புதிய கோணத்தில்  என்னை பார்க்க வைத்தீர்கள் T N R ஸார். 


ஒன்று விடாமல் வரிசைப்படி எல்லாவற்றையும் முழுமையாக ஒரு முறை படித்து விட்டேன் இனி எப்போது ஒவ்வொன்றாக எடுத்து எதை, எத்தனை முறை படிப்பேனோ தெரியாது.  மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் எழுத்துகள்.  வசீகரிக்கும் வரிகள்,  வளைந்து, குழைந்து வரும் வார்த்தைகளில் இழைந்து வரும் பொருள்.

"ஏன் மோட்சமே கூட உயிர்களுக்கான பயணத்தின் முடிவு தானே தவிர உயிர்களின் முடிவு அல்ல.... அவை இறையோடு இரண்டறக் கலந்து விடுகின்றன.   உயிர்களுக்கு முற்றுப்புள்ளி இல்லை"

'கடைசி குரு' ஒரு அற்புதம்.  என்ன சொல்ல வருகிறார் ஆசிரியர்,  பீஷ்மருக்கு கங்கமோ என்று ஒரு நிமிடம் யோசித்தேன் ஆனால் படித்துக் கொண்டே வரும்போது "உமக்கு மட்டும் பூவையர் சாஸ்திரம் போதிக்கப் பட்டிருந்தால், பாவையர் ஞானம் பகிரப்பட்டு இருந்தால், அம்பைகள் அனாதையாக அலைந்திருக்க மாட்டார்கள்பலைகள் அரச சபை மத்தியிலே ஆடை அவிழ்கப்பட்டிருக்க மாட்டார்கள் அவ்வளவு ஏன் பல லட்சம் உயிர் குடித்த இந்த குருச்ஷேத்திர யுத்தமே நடந்திருக்காது.."   அற்புதமாக சொல்லி இருக்கிறீர்கள் ஆசிரியரே


புத்தகத்திலே பின்னூட்டங்களை பிரசுரிப்பது நல்ல விஷயம் தான். ஆனால் அதை படிக்கத்தான் முடியவில்லை.  

மேலும் சில உதாரணங்கள்...


கடைசி குரு , புஸ்தகா வெளியீடு, 140 ரூபாய், தீபன் (T N ராதாகிருஷ்ணன்) எழுதியது.

=================================================================================================

நம் தளத்தில் இதுவரை அவரது இரண்டு கதைகளை தந்த எழுத்தாளர் திரு எஸ். குமார் முகநூலில் அவரது எழுத்தாள அனுபவங்களை பற்றி எழுதியிருப்பதன் பகிர்வு..  

41 கருத்துகள்:

 1. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 2. வணக்கம் சகோதரரே

  இன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை. முதல் பகுதியில் தாங்கள் படித்த புத்தகத்தின் விமர்சனத்தை அருமையாக சுவையுடன் விளக்கித் தந்துள்ளீர்கள். படிக்கப படிக்க நம் சுவாரஸ்யத்தை தூண்டும் புத்தகம் என்பதை தங்களின் விமர்சன எழுத்துக்கள் பறைசாற்றுகின்றன. திரு தீபன் அவர்களின் எழுத்து திறமைகளை விளக்கிய விதங்கள் அருமை.

  மற்றொரு முறை படிக்கத்தூண்டும் தங்களின் அற்புதமான எழுத்துக்களின் கவர்ச்சி கண்டும் வியக்கிறேன். புத்தகம் கிடைத்தால் நானும் வாங்கி படிக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி கமலா அக்கா. அழகாக எழுதி இருக்கிறார் திரு தீபன்.

   நீக்கு
 3. கற்பக கணபதி
  கனிவுடன் காக்க..
  முத்துக்குமரன்
  முன்னின்று காக்க..
  தையல் நாயகி
  தயவுடன் காக்க..
  வைத்திய நாதன்
  வந்தெதிர் காக்க..

  இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
  பிரார்த்திப்போம்..

  எல்லாருக்கும் இறைவன்
  நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

  நலம் வாழ்க..

  பதிலளிநீக்கு
 4. சஞ்சலத் தாயும், சலித்த மகனும்..

  இப்படி ஒரு சிலவற்றை முப்பதுகளில்
  யோசித்து அப்புறம் விட்டு விட்டேன்..

  இதைத்தான் நாத்திகம் அதனுடைய பாணியில் அன்றே பேசி இருக்கின்றது..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இங்கு அந்த வார்த்தைகளுக்கு வரும் பொருள் வேறல்லவா?  நாத்திகத்துக்கு இதில் என்ன வேலை?

   நீக்கு
 5. அவள் அவனை இதயத்துள் ஒளித்து வைத்திருந்தாள் என்று அன்று முதல் கதை ஒன்றும் உலவிக் கொண்டிருக்கின்றதே..

  விழுந்த மாவடிக்குச் சென்று கேட்டால் சொல்வார்கள்..

  அந்த வேளையில்
  பஞ்சவருக்கும்
  தான் இது தெரியுமே!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விழுந்த மாவடி? வியாச பாரதத்தில் அப்படி இல்லைதானே?

   நீக்கு
 6. திரு.. ஏகாந்தன் அவர்கள் தனது பகுதியை நிறைவு செய்திருக்கின்றார்..

  மனம் தான் வழக்கம் போல கனக்கின்றது..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை. அதற்குள் சுபம் போடுகிறார் என்பதும் ஏற்க முடியாததாக இருக்கிறது!

   நீக்கு
 7. திடீரென்று பாரதப் பட்டராக மஹாபாரதத்தை பற்றி மகா பாரதம் எழுதி விட்டீர்கள். படித்து முடித்தாலும் எதுகை மோனை, கவிதை, ரசனையைத் தவிர ஒன்றும் பதியவில்லை. கட்டுரை நீ.......................ளம் அதிகம். இந்த திடீர் மஹாபாரதம் துவங்க இருக்கும் மஹாபாரதப்போர் தேர்தல் காரணமோ?

  கவிதைக்கரு சரியில்லை என்று தோன்றுகிறது. பிறந்தால் இறப்பு நிச்சயம். இறப்பை நிறுத்த முடியாது. காத்தல் இல்லையென்றால் அழிவு நிச்சயம். ஆக மூன்றில் எதையும் நிறுத்த முடியாதபோது எவ்வாறு "ஒரு கல் இரன்டு மாங்காய்" கிடைக்கும்.

  நான் எந்த நேரத்தில் ஏகாந்தன் சாரை புதனுக்கு டிரான்ஸ்பர் செய்ய சொன்னேனோ. அவர் VRS வாங்குகிறார். VRS ஐ திரும்பப் பெறுவார் என்று நம்புகிறேன்.

  மருது சித்திரம் வந்தியத்தேவனாகவும் இருக்கலாம், சின்ன மருது பாண்டியனாகவும் இருக்கலாம், கதையை கண்டுபிடிக்க இதழ், ஆண்டு போன்று அதிக விவரங்கள் தேவை.

  அத்து என்பதற்கு எல்லை என்று விக்சனரி பொருள் கூறுகிறது.

  ஆடிய ஆட்டமென்ன, என்னை விட்டால் யாருமில்லை என்று இருந்த BSNL தற்போது அடுத்த மாதம் சம்பளம் கிடைக்குமா என்று ஊழியர்களை தவிக்க வைக்கும் நிலையில் உள்ளது.

  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் ஏற்கெனவே சொல்லி இருபிப்பது போல மஹாபாரதம் எனக்கு எப்போதும் பிடித்த சப்ஜெக்ட்.    மேலும் இங்கு நான் மஹாபாரதம் சொல்லவில்லை.  அதை வைத்து கற்பனைக்கு கதைகள் எழுதி இருக்கும் தீபன் அவர்கள் எழுத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறேன்.

   ரெசெஷன் என்பதை வேறு மாதிரி யோசித்தேன்!  சும்மா ஒரு முயற்சி!

   நான் கூட நினைத்தேன், போன வரம்தான் JKC சொன்னார், இந்த வாரம் அவர் ராஜினாமா செய்கிறாரே என்று!!!

   அந்த சித்திரம் விகடனில் வந்த மு மேத்தா வின் மகுட நிலாவுக்கு மருது ஓவியம்.

   நன்றி JKC சார்.

   நீக்கு
 8. நிறைய முக்கியமான வேலைகளில் சென்னையில் சுற்றிக்கொண்டிருக்கிறேன், அனேகமா பதிவை நாளைதான் படித்துக் கருத்திட முடியும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சென்னை வெய்யில் எப்படி இருக்கிறது?!!

   நீக்கு
  2. ஏசி கார்பயணம், ஏசி முழுவதும் இருக்கும் கடை என்று பயணம் அமைந்தது. இரவு வீடு சேர்ந்ததும் குளிக்கவேண்டியிருந்தது. ஏப்ரல் கடைசி, மே மாதம் சென்னை தகிக்கப்போகிறது.

   நீக்கு
 9. வணக்கம் சகோதரரே

  கதம்பத்தில் இன்றைய மற்ற பகுதிகளும் நன்றாக உள்ளது.

  கவிதை நன்றாக உள்ளது. தான் காக்கும் தொழிலை கைவிடும் போது அழிவு தானகவே நடந்து விடும் என நினைத்தாரோ.? நல்லது. எப்படியும் அழிவின் சுழற்சி விதி வசத்தில்தான் உள்ளது என்பது அவர் அறியாததா?

  சகோதரர் ஏகாந்தன் அவர்களது பக்கம் இன்று கொஞ்சம் சோகம். வெளிநாடுகளில், தம் உற்றார் சுற்றங்கள் இன்றி, மரணிப்பது மனதுக்கு வருத்தத்தை தருகிறது.

  மேலும் சுவாரஸ்யமாக சென்ற சகோதரரின் பதிவு இன்றுடன் முடிகிறது என்பதும் கஸ்டமாக உள்ளது. அவரிடம் தங்கள் வைத்த வேண்டுகோள் விரைவில் பலிதமாகும் என நம்புகிறேன்.

  சகோதரி பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்களின் செய்தி அறை பக்கமும் அனைத்தும் படித்து தெரிந்து கொண்டேன். தகவல்கள் தந்த அவருக்கும் பாராட்டுக்கள்.

  அரசமரம் பற்றிய தகவல்கள் சுவாரஸ்யமாக உள்ளது. இதையொட்டிய சில பழமொழிகள் நினைவுக்கு வந்தன.

  படித்ததும், அரிய புகைப்படங்களும் அருமை. எஸ்.பி.பியின் சின்னவயது போட்டோ இப்போதுதான் பார்க்கிறேன்.

  மருக்கொழுந்து வாசனை சிறப்பானது. தொட்ட கை கூட நீண்ட நேரம் வாசனையை தக்க வைத்துக் கொள்ளும். அதற்கு இயற்கை தந்த கொடை. "மதுரை மருக்கொழுந்து வாசம்" என்ப பாடல் நினைவுக்கு வருகிறது.

  "அத்து" என்றால் "உரிமை" என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். இன்று அதற்குரிய பல பொருளை தெரிந்து கொண்டேன்.

  பொக்கிஷ பகுதி நன்றாக உள்ளது.

  சரித்திர தொடராக வந்த பகுதியில், வந்திய தேவன் புகைப்படமா அது.? அப்படித்தான் நினைக்கிறேன்.

  நகைச்சுவைகளை ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கவிதையை ரசித்ததற்கு நன்றி.

   // மேலும் சுவாரஸ்யமாக சென்ற சகோதரரின் பதிவு இன்றுடன் முடிகிறது என்பதும் கஸ்டமாக உள்ளது. அவரிடம் தங்கள் வைத்த வேண்டுகோள் விரைவில் பலிதமாகும் என நம்புகிறேன். //
   உண்மைதான்.  நானும் அவரது பாசிட்டிவ் பதிலுக்கு காத்திருக்கிறேன்.

   பானு அக்கா இன்று இவ்வளவு செய்திகள் தொகுத்தது சாதனை.  செய்த்தாளை பிரித்தால் வெறும் தேர்தல் செய்திகள் வெறுப்பேற்றுகின்றன!  நடுவில் இவ்வளவு செய்திகள் தேற்றி இருக்கிறார்.

   அத்து என்பதற்கு அர்த்தம் தெரிந்து கொண்டிருப்பீர்கள்!!  மற்ற பகுதிகளையும் ரசித்ததற்கு நன்றி.  சித்திரம் வந்தியத்தேவன் அல்ல, மு மேத்தாவின் மகுட நிலா கதை நாயகன்.

   நீக்கு
 10. கதம்பம் அருமை. புத்தக விமர்சனம் நன்று புத்தகங்கள் படிக்கும் ஆவலை தூண்டியது.

  திரு .ஏகாந்தன் அவர்கள் பக்கம் எப்பொழுதும் ரசனை இம்முறை விபத்தும் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற திகிலுடன் படித்தோம்.. தொடர்ந்து பகிர்ந்தால் படித்து மகிழ்வோம். தொடரும்.

  அரிய புகைப்படங்கள்,
  ஜோக்ஸ்,நியூஸ் ரைம் நன்றாக இருந்தன.

  பதிலளிநீக்கு
 11. கருத்துகளைக் கவனிக்கிறேன். ஆர்வம் காட்டுவதற்கு நன்றிகள் பல. பயணத்தில் இருக்கிறேன் தற்போது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஏகாந்தன் ஸார்...   உங்கள் பதிலுக்காக ஆவலுடன்... சைலன்ட் ரீடர்ஸ் சார்பாக கீழே ஒரு பின்னூட்டம் வந்திருப்பதையும் பாருங்கள்.

   நீக்கு
 12. /அன்புள்ள ஏகாந்தன் ஸார்... இவ்வளவுதான் எழுதவேண்டும் என்று ஏதாவது அளவு இருக்கிறதா என்ன? இப்போதுதான் தொடங்கியது போலிருக்கிறது. இதுவரை வந்ததது ஒரு முன்னுரை போலவே நினைத்தேன். இனிதான் இன்னும் சுவாரஸ்யமான சம்பவங்கள் வரும் என்று நினைத்து எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். சட்டென முற்றும் போட்டால் குறையாக இருக்கிறது. நணபர்களும் அப்படித்தான் நினைப்பார்கள். தொடருங்களேன்......ஸ்ரீராம்/

  ததாஸ்து. வெகு சுவையான தொடர். தொடர்ந்தால் நன்றாக இருக்கும்.

  - ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி சூர்யா... நல்ல பதில் வரும் என்று நினைக்கிறேன்.

   நீக்கு
 13. சோமாலியா போன்ற நாடு அந்தக் காலத்தில் இருண்ட பிரதேசம்தான். சோமாலியா என்றதும் நோஞ்சலான வயிறு உள்ளொடுங்கிய ஏழைகள் மற்றும் கடற் கொள்ளையர்கள் மாத்திரமே நினைவுக்கு வருவார்கள். (நான் துபாயில் நான் தங்கியிருந்த ஹோட்டலின் ஜிம்மில் இன் சார்ஜாக இருந்த சோமாலியப் பெண்ணை அலட்சியமாக அணுகிப் பேசியபோது அவளின் நல்ல குணங்கள் தெரிவர எனக்கு ரொம்பவே ஆச்சர்யமாக இருந்தது. தேசம் வேறு மனிதர்கள் வேறு என்பதை உணர்த்திய தருணம் அது)

  அத்தகைய பிரதேசத்தில் தன் வேலை வாழ்க்கையை நன்றாகவே எழுதியிருந்தார் ஏகாந்தன் சார். அங்கு ஆரம்பித்து இன்னும் தொடர்ந்திருந்திருக்கணும். அவர் பார்த்த வேலையின் தன்மை காரணமாக நிறைய எழுதமுடியாது என்ற நிலையா? இல்லை அவற்றைப் பற்றி நினைத்து எழுத ஆரம்பித்து இடையில் வரும் அயர்ச்சியா? புரியலை. இருந்தாலும் தொடர்ந்து சுவாரசியமான சம்பவங்களை எழுதியிருக்கலாம். (வேலையின்போது அரசியல் தலைவர்களின் மறைவு, அதனால் ஏற்பட்ட பிரச்சனைகள் என்று நிகழ்வுகளுக்குப் பஞ்சமா என்ன?)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // இருந்தாலும் தொடர்ந்து சுவாரசியமான சம்பவங்களை எழுதியிருக்கலாம். (வேலையின்போது அரசியல் தலைவர்களின் மறைவு, அதனால் ஏற்பட்ட பிரச்சனைகள் என்று நிகழ்வுகளுக்குப் பஞ்சமா என்ன?) //

   அதே...  அதே....   இன்னும் எதிர்பார்க்கிறோம் ஏகாந்தன் ஸார்.

   நீக்கு
 14. தொடர்கள் எழுதுபவர்கள் படிப்பவர்களின் கருத்தை எதிர்பார்ப்பார்கள். பலர் எழுத விட்டுவிடுவதால், பிளாக்குகள் களையிழக்கின்றன

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தொடர்கள் என்றில்லை.  எதுவாயினும்.   யாரை வற்புறுத்த முடியும்?

   நீக்கு
 15. சைலண்ட் ஸ்பெக்டேடர்ஸ்.... இது எழுத்துக்கும் பொருந்தும். அரசியலுக்கும் பொருந்தும். நிறை குறைகளை பகிர்ந்துகொள்ளணும். அப்போதுதான் எழுதுபவர்களுக்கு ஆர்வம் அதிகமாகும். அதுபோல அரசியலில் வாக்களிக்கவேண்டும். அப்போது சும்மா இருந்துவிட்டு திருடன் ஆட்சிக்கு வந்துவிட்டானே என்று நொந்துகொள்ளமுடியுமா? எழுத்தை விமர்சிக்க விமர்சிக்க எழுத்து பிரகாசமடையும் நிறைய எழுத்தாளர்கள் உருவாகுவார்கள் என்பது என் எண்ணம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சரிதான் நீங்கள் சொல்வது...   கமெண்ட்ஸ் அப்படி வந்து நிறைந்தால் சந்தோஷம்தான்.

   நீக்கு
 16. அத்து மீறினான் - விளக்கம் சூப்பர். கேள்வி கேட்கணும்னு தோன்றியதும் சூப்பர், அதற்கு பதில் தந்ததும் சூப்பர்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நாம் அன்றாடம் / அடிக்கடி  உபயோகிக்கும் சில வார்த்தைகளை மறுபடி மறுபடி சொல்லிப் பார்த்து யோசித்தோமானால் எப்படி, என்ன அர்த்தம் வரும் என்று தோன்றும்! 

   நீக்கு
 17. சஞ்சலத் தாயும் சலித்த மகனும் - பகுதி நன்று. இந்த மாதிரி எழுத்துக்களை எல்லோரும் விரும்புவார்கள் என்று சொல்ல இயலாது. பழைமையை விரும்புபவர்கள் அதிலிருந்து வித்தியாசமாக யோசித்து எழுதினால் ஏற்றுக்கொள்வது கடினம் என்றே நினைக்கிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் அப்படி நினைக்கவில்லை.  வார்த்தைகள் சரளமாய் இபப்டி வந்தால் படிக்கும்போது சட்டென மனதுக்குள் சென்று விடுகின்றன.

   நீக்கு
 18. ‘கடைசி குரு’ நூல் குறித்த தங்கள் பார்வை சிறப்பு. தொகுப்பு நன்று.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!