Wednesday, December 29, 2010

அப்பள ரகசியம்...


முன்குறிப்பு : முந்தைய பதிவான புத்தகத் திருவிழாவில் நீங்கள் வாங்க விரும்பும் புத்தகப் பட்டியலை இன்னமும் சொல்லலாம்.

கல்யாண மெனுக்கள் பற்றியும் ஒரே மாதிரி பந்திகள் பற்றியும் முன்பு எழுதி இருந்தோம். அதைப் பற்றி பேசிக் கொண்டிருந்த போது ஆறேழு மாதங்கள் முன்பு தான் சென்று வந்த திருமணம் பற்றி மாமா சொல்லிக் கொண்டிருந்தார்.


அவருடைய பால்ய நண்பரின் மகன் திருமணம். மயிலையில் நடந்ததாம். மாப்பிள்ளைப் பெண் இருவரும் வெளி நாட்டில் பணி புரிபவர்கள். நுழைந்தவுடன் தக்காளி சூப்பும், கூட உள்ளங்கை சைஸில் கரு நீலத்தில் ஒரு மெனு கார்டும் கொடுத்தார்களாம்.கூடவே "Details of south indian marriages & importance" என்று சினிமா பாட்டு புத்தக சைசில் 25 பக்கத்தில் ஒரு சிறு புத்தகமும் எல்லோருக்கும். அதனுடன் கூட அழகிய ஒரு சின்னஞ்சிறு சுருக்குப் பை ஸ்டைலில் ஒரு பை. அதில் சிறிதளவு அட்சதை. மேலும் சாப்பிட்டவுடன் கை துடைக்க அழகிய சிறிய துண்டு ஒன்று!


மெனு கார்டில் பதிமூன்று வகை சிற்றுண்டிகள் பட்டியலிடப் பட்டிருந்ததாம். இரண்டு வகை சட்னி, மிளகாய்ப் பொடி, ஸ்வீட், தோசை, மசாலா தோசை, இட்லி, பூரி பொங்கல் இத்யாதி இத்யாதி ...


திருமணங்களில் ஒரு வழக்கம் உண்டு. தாலி கட்டி முடிந்ததும் விருந்தினர்கள் மணமகனை, மணமகளை மற்றும் அவர்கள் பெற்றோரை கண்டபடி கை குலுக்கி 'மாப்பிள்ளை வந்தாச்சா...மருமகள் வந்தாச்சா...நாத்தனார் வந்தாச்சா..அண்ணி வந்தாச்சா' என்றெல்லாம் கேட்டபடி அந்த 'சாதனையை' பாராட்டுவார்கள். நான் ஒரு திருமணத்தில் அப்படி கை குலுக்கச் சென்று ப்ரோகிதரிடம் கண்டனம் வாங்கியிருக்கிறேன். இந்தத் திருமணத்தில் மைக்கில் "சப்தபதி முடியும் வரை மாப்பிள்ளையையோ பெண்ணையோ யாரும் கை குலுக்கக் கூடாது" என்று அறிவித்த வண்ணம் இருந்தார்களாம்.


பரிமாறும் பணியாளர்கள் மார்பில் ARS Cooking Service என்று Electronic scrollingகில் அவரவர்கள் பெயர் ஓடிக் கொண்டிருந்தது ஒரு விசேஷமாம்.

மேடையில் மணமக்கள், ப்ரோகிதர் பெற்றோர் தவிர வீடியோ க்ராபர்களுக்கு மட்டுமே அனுமதி. மற்றவர்கள் கீழேதான். எல்லோருமே CC LCD டிவியில் திருமணத்தைக் கண்டு களித்தார்களாம். எல்லோரும் மேடையில் ஏறி என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் மூடி விடும் மற்ற திருமணங்களிலிருந்து வித்யாசமாக எல்லோரும் நன்றாகப் பார்க்கும் வண்ணம் நடந்ததாம்.

சாப்பாடு என்ன மெனு என்று கேட்டேன். அதற்குள் கிளம்பி விட்டதால் அது தெரியாது என்றார்.

சாதரணமாக திருமணங்களுக்கு நூறு ரூபாய் (நூத்தியொரு ரூபாய்) மொய் எழுதுபவர்கள் இருப்பார்கள். அவர்கள் சங்கடப் படும் அளவு கிளம்பும்போது எல்லோருக்கும் நூற்றைம்பது ரூபாய்க்கும் அதிக பெறுமானமுள்ள தரமான Hand Bag ஒன்று வைத்துக் கொடுத்தார்களாம்.

எனக்கு ரொம்ப நாளாய்த் தெரியாத விஷயம் ஒன்று சமீபத்தில்தான் தெரிந்தது!

எவ்வளவோ செலவு செய்து நடத்தும் திருமண பந்திகளில் கூட சில சமயம் இன்னொரு அப்பளம் கேட்டால் தர மாட்டார்கள். 'என்னடா இவ்வளவு செலவு செய்பவர்கள் இது தர மாட்டேன் என்கிறார்களே' என்று தோன்றும். அல்லது இது யார் கேட்கப் போகிறார்கள் என்று சிக்கனமாக செய்து விட்டார்கள் என்றும் தோன்றும். இதை மீறி அதிகம் யோசித்ததில்லை. என்னவென்று பார்த்தால் ஒரு ஆளுக்கு ஒரு அப்பளம் என்பது பந்தியில் எவ்வளவு பேர் சாப்பிட்டார்கள் என்று கணக்கெடுக்கும் அளவுகோலாம். அப்பளத்தை (பெரும்பாலும்) வைத்துதான் இதை கணக்கெடுப்பார்களாம் .அட...இது தெரியலையே எனக்கு..!!


படங்கள் உதவி : நன்றி.... Zonkerala.com, Google, Dreamstime.com

பின்குறிப்பு : முந்தைய பதிவான புத்தகத் திருவிழாவில் நீங்கள் வாங்க விரும்பும் புத்தகப் பட்டியலை இன்னமும் சொல்லலாம்.

8 comments:

ஹுஸைனம்மா said...

விஷயம் நல்லாருந்தாலும், இடையிடையே வரும் உணவுப் படங்கள் சிந்தனையை வேறு பக்கம் இழுத்துச் சென்றன!! :-))

அப்பளமா கணக்குக்கு, வேற ஏதோ (வடை/ஜாங்கிரி போல) ஒண்ணுன்னு வேற எங்கியோ படிச்ச ஞாபகம்! அப்பலத்தை வச்சு எப்படி கணக்கெடுக்க முடியும்னு ஆச்சர்யமா இருக்கு. நிறைய உடைஞ்சும் நொறுங்கியும் போகுமே?

அப்பாதுரை said...

அப்பளக் கணக்கு புச்சு.
cc tvல வேறே ஏதாவது சேனல் தெரியுதானு பாத்திட்டிருப்பாங்க..

(ப்ரோகிதர் ஜோக் ஜிரிப்பு)

சாய் said...

ஹுஸைனம்மா நான் சொல்லவந்ததை முதல் பத்தியில் சொல்லிவிட்டார்.

மார்ச் 2003 நான் கடைசியாக இந்தியாவில் போன கல்யாணம். என் பெரியவன் மிக பெரிய சாப்பாட்டு ரசிகன். அவன் அந்த வருடமோ அல்லது அதற்கு அப்புறமாகவோ ஏதோ ஒரு அறுபதாம் கல்யாணம் அட்டென்ட் செய்துவிட்டு நேரே அடுப்பறையில் சென்று சமைத்தவரிடம் - மாமா சாப்பாடு சூப்பர் என்று சொன்னான்.

பத்மநாபன் said...

இலை க்கணக்கு தான் கேள்வி பட்டுருக்கிறேன்.

இப்பெல்லாம் தையலர் அளவு போல் தொழில்முறையாக கல்யாணம் செய்விக்கிறார்கள்..

டீ.வி நிகழ்ச்சி போல் கல்யாணங்களும் போரடிக்க ஆரம்பித்து விட்டது.. பந்தி ..கவர்...ஜூட் என மாறிவிட்டது..

ஹேமா said...

அப்பளக்கதை புதுசு.

அந்த வடையும் சாம்பாரும்....
க‌டவுளே...வடை பசிக்குது !

எல் கே said...

எனக்குத் தெரிந்த இலைதான் கணக்கு. இதில் இன்னொரு விஷயமும் இருக்கு. முழு காண்ட்ரேக்ட் கொடுத்து இருந்தால், அவர் சொன்ன அளவுக்கு மேல் செய்ய மாட்டார் எனவே இருநூறு இல்லை என்றால் இருநூறு அப்பளம்தான்.

இதுவே காண்ட்ரேக்ட் இல்லாமல், பெண் வேட்டாரே, சமையலுக்கு தனி ஆள் வைத்து சமைத்தால், இந்தப் பிரச்சனை வராது. ஆனால் இந்தக் காலத்தில் பலரும் காண்ட்ரேக்ட் விரும்புகின்றனர்

Madhavan Srinivasagopalan said...

மணி ஒன்பது.. இந்தப் பதிவ பாத்த வொடனே, பசி.. பசி..
சாப்பாடு சாப்பிட்டு வந்து மேல சொல்லுறேன்..

மோ.சி. பாலன் said...

எல்லோரும் சொன்னதுபோல் இலைக்கே என் ஓட்டும்.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!