சனி, 18 டிசம்பர், 2010

பயமா பாசமா...எதிர்பாராத அதிர்ச்சி அது...

பெரியப்பா இறந்து விட்டார் என்று தெரிந்தபோது சாந்தி அதிர்ந்துதான் போனாள்.

பெரியப்பா மகன் குமார்தான் ஃபோன் பேசினான்.ஒரு சிறு விபத்து என்பதற்காக முதலில் ஒரு மருத்துவமனையிலும், பின்னர் அங்கே ரொம்பக் காசு பிடுங்குகிறார்கள்என்று தோன்றியதாலும், அங்கே சிகிச்சை பார்க்க வந்த மருத்துவர்கள் மிக இள வயதினராகத் தெரிந்ததாலும் சில பேரை யோசனை கேட்டு இங்கு கொண்டு வந்து சேர்த்தார்கள். கணுக்காலில் ஒரு சிறு எலும்பு முறிவு அவளவுதான். ஆனால் இந்த மருத்துவமனையிலோ நோயாளியை பார்க்க உறவினர் நண்பர் என்று யாரையும் விடாமல் மறைத்து வைத்திருந்தது சோதனையாக இருந்தது.

பிபி அதிகமாக இருந்தது என்று அறுவை சிகிச்சையைத் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தார்கள். இவருக்கானால் வயது ஐம்பத்தாறு ஆனாலும் பிபி சுகர் என்று ஏதும் கிடையாது.

உறவினர்களை யாரும் பார்க்க முடியாத டென்ஷனில் அவர் கத்த, ஒரு வழியாய் அறுவை சிகிச்சை செய்திருந்தார்கள். அப்போதும் யாரையும் உள்ளே விடவில்லை. இரண்டு நாளில் பார்க்கலாம் என்று சொல்லியிருந்த நிலையில் இப்போது இப்படி ஒரு ஃபோன்.

"என்னடா ஆச்சு?"

"இல்லக்கா...எல்லாம் சரியாதான் இருக்குன்னாங்க...அப்பா கிட்ட ஃபோன்ல கூடப் பேசினோம். நல்லாத்தான் பேசினாரு..என்ன ஆச்சோ...ரெண்டு மணி நேரத்துல ஃபோன்...க்ரிடிகல்னாங்க...ஹை பிபின்னாங்க..." திணறித் திணறிப் பேசினான் குமார். அழுகையில் புதைந்த அவன் குரல் பல இடங்களில் தெளிவில்லாமல் இருந்தது.

"அப்புறம்.." சாந்தி குரல் நடுங்கியது. "சொல்லுடா...என்ன ஆச்சு சொல்லு..எப்படி இப்படி...அவருக்கு ஏதுடா பிபி?"

மறுமுனையில் குமார் குரலெடுத்து அழுதான். "தெரியலையேக்கா ... ஒருவேளை நம்மளை யாரும் பார்க்கவே விடாத டென்ஷன்லேயே BP ஏறிடுச்சோ என்னவோ தெரியலையே..."

"பெரியம்மா எங்கேடா?"

"உண்மையை இன்னும் சொல்லலைக்கா... இங்கதான் இருக்காங்க...நீங்களும் வாங்க...அம்மாவுக்கு ஆறுதலா இருக்கும்"

சாந்தி அங்கு போனபோது கணவர் இறந்தது தெரியாமல் அவர் கையைத் தடவியபடி "கவலைப் படாதீங்க...பெரியபாளையத்தம்மன் உங்களைக் கை விட மாட்டாங்க...காப்பாத்திடுவாங்க" என்று சொல்லிக் கொண்டிருந்த பெரியம்மாவைப் பார்த்ததும் கஷ்டமாக இருந்தது. குமாரிடம் சொல்லி உண்மையை உடனே எடுத்து சொல்லச் சொன்னாள்.

அப்புறம் நடந்தது எல்லாமே இப்போது நினைக்கும்போது வேகமாக நடந்தது போலவும் அப்போது யோசிக்கும்போது மிக மெதுவாக நடந்தது போலவும் உணர்வு.

தன வீடு வந்து விட்டாலும் அவ்வப்போது தொலைபேசியில் பெரியம்மாவுடன் பேசிக் கொண்டே இருந்தாள் சாந்தி. ஆறுதல் சொல்லிக் கொண்டே இருப்பாள். பெரியப்பா தினமும் புதிதாகக் காய்கறி வாங்கி வருவது, நறுக்கித் தருவது, ஊறுகாய் போடுவது எல்லாவற்றையும் நினைவு படுத்தி சொல்லிச் சொல்லி அழுதாள் பெரியம்மா.


"ஏம்பா ஆறுதல்ங்கற பேர்ல பெரியம்மாவை அழ விடறே.." என்று சாந்தியின் கணவன் கூடக் கடிந்து கொண்டான்.

பத்தாம் நாள் காரியம் செய்வது பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்.

அதைப் பற்றி பேச சாந்தி அன்றும் பெரியம்மாவுக்கு தொலைபேசினாள்.


"சாந்தி...சாந்தி...நானே ஃபோன் செய்யணும்னு நினைச்சேன்.."

பெரியம்மாவின் குரலில் பதட்டம் இருந்தது. ஆனால் கிசுகிசுப்பாக இருந்தது.

"என்ன பெரியம்மா" ஆச்சர்யத்துடன் கேட்டாள் சாந்தி.

"சாந்தி..சாந்தி...அது...பெரியப்பா..." குரல் வரவில்லை பெரியம்மாவுக்கு.

"சொல்லுங்க.."ஊக்கினாள் சாந்தி.

"எப்படிடி சொல்றது...பயமா இருக்கு...காலைல எழுந்து பல்லு விளக்கிட்டு குமார் கிட்ட ஏதோ சொல்றதுக்காக ஹாலுக்கு வந்தேனா..." பெரியம்மா மூச்சை இழுத்துப் பிடிப்பது தெரிந்தது. குரலில் நடுக்கம் இருந்தது.

"அட சொல்லுங்க பெரியம்மா..."

"ஹால்ல அவர் உட்கார்ந்திருக்கார்டி...."

"எவர்?" சாந்தி குரலில் எதிர்பார்ப்பு எகிறியது. விடை தெரிந்துவிட்டது போல ஒரு நடுக்கம் உடம்பில் ஓடியது. வரப் போகும் பதிலை நம்ப முடியாது என்று மனதில் எண்ணம் தோன்றியது.

"உன் பெரியப்பாடி..." குரலில் நடுக்கமா, பயமா எதுவென்று சொல்ல முடியாமல் கிசுகிசுப்பாய் வார்த்த்தைகள் விட்டு விட்டு வந்தன.

"பெரியம்மா உளறாதீங்க...குமார் எங்க...அவன் கிட்ட ஃபோனைக் குடுங்க..."

"அவன்....அவன்... அங்க இருக்காண்டி...வர மாட்டான்.." இலேசான அழுகையுடன் வந்தது பெரியம்மா குரல்.

"எங்க...எங்க இருக்கான்...என்ன பெரியம்மா..என்ன ஆச்சு உங்களுக்கு...வேற யார் இருக்கா அங்க..."

"குமார்...அவர் எதிர்ல உறைஞ்சிப் போய் உட்கார்ந்திருக்கான். அவர் கைல கன்னத்துல காயம்லாம் இருந்ததே அதைக் காணோமடி..."

சாந்தியால் நம்ப முடியவில்லை. பேச்சு வரவில்லை. அவள் கணவர் கூட மின் மயானத்துக்கு சென்று வந்து ஆஜானுபாகுவான பெரியப்பா உடல் ஒன்றரை மணி நேரத்தில் வெறும் சாம்பலாக பெட்டியில் கலெக்ட் செய்தார்கள் என்று சொல்லிக் கொண்டே இருந்தாரே......பெரியம்மாவுக்கு புத்தி பேதலித்து விட்டதோ...உளறுகிறாளே ...

"காய் கொண்டு வா நறுக்கனுங்கறார்... நாயை அவுத்து வெளில விடச் சொல்றாரு...யாருக்கும் பேச்சே வரலை..."

ஃபோனை கையால் மூடிக் கொண்டு கணவனிடம் சொன்னாள்.

நடந்ததைக் கேட்ட அவள் கணவனும் நம்பவில்லை.

சிரித்தான்.

சாந்தியின் செல் ஒலித்தது. அவள் பேசிக் கொண்டிருந்தது லேண்ட் லைனில்.

செல்லில் "Periyappa calling.." என்று வர சாந்தி திகைப்புடன் அதை நோக்கினாள்.

"பெரியம்மா! பெரியப்பா செல் யார் கிட்ட இருக்கு..எனக்கு அதிலேருந்து கால் வருது.." என்றாள் லேண்ட் லைனில்.

"அவர் கைலதாண்டி இருக்கு...யாருக்கோ அடிச்சிகிட்டு இருந்தார்...உனக்குத்தானா..ஐயோ ஃபோனை வச்சிடுடி...பயமா இருக்கு..."

இப்போது செல்ஃபோன் தானாகவே அட்டென்ட் செய்யப் பட்டது. அதிலிருந்து பெரியப்பா குரல் ஒலித்தது.

"என்ன சாந்தி...என்ன நம்ப மாட்டேங்கறே...பெரியம்மா கிட்ட என்ன சந்தேகம் உனக்கு.."

"நான்...நான்...பெரி...பெரி..." குரல் குழற லேண்ட் லைனை அதன் இடத்தில் சாத்தினாள் சாந்தி.

செல்ஃபோன் ஆஃப் ஆக, சாந்தியின் கணவன் "சா...ந்தி..." என்று பதட்டத்துடன் கிட்டத்தட்ட அலறினான்.

திரும்பி ஹாலைப் பார்த்தவள் கண்கள் இருண்டன. சோபாவில் பெரியப்பா.


"என்ன மாப்பிள்ளை..பேச மாட்டேங்கறீங்க..... நாந்தான் நம்புங்க..."

".........................."

"சொல்லுங்க மாப்பிள்ளை...என்னமோ சொல்ல வரீங்க...வாயைத் திறந்து திறந்து மூடினா என்ன அர்த்தம்?"

"கன்னத்துல காயத்தைக் காணோமே..." என்னமோ பேச நினைத்து பேசாமல் இருக்க முடியாமல் உளறினான் சாந்தியின் கணவன்.

"அதுவா...இதோ...." என்று இடது கன்னத்தை கொசுவை விரட்டுவது போலத் தட்ட, அங்கே ஒரு காயம்...

"என்ன...காய்கறி நறுக்கவா...எங்கே காய்..என்ன காய் வச்சிருக்கீங்க...அதென்ன மாப்பிள்ளை கன்னத்து காயத்தையே பார்க்கறீங்க.."

"இந்தப் பக்கம்...இந்தக் கன்னத்துலதானே காயம் இருந்தது....காய்...ஒண்ணும் இல்லை... நறுக்க வேணாம்...நானே...நானே..."வாய் குழற குழற உளறினான் சாந்தி கணவன்.

"இதுல என்ன பிரச்னை மாப்பிள்ளை...இந்தக் கன்னமா...இதோ..."என்ற பெரியப்பா இடது கன்னத்தை தடவி, வலது கன்னத்தில் ஓட்டுவது போல தட்ட, காயம் அங்கே தோன்றி சிவப்பு நிறம் தோன்றியது.

சாந்தி கணவன் மயக்கமானான் . சாந்தி ஏற்கெனவே மயக்கமாகியிருந்தாள்.

படங்கள் : நன்றி கூகிள்.

17 கருத்துகள்:

 1. கிறிஸ்துமஸ் நேரத்துல, halloween நேரத்து கதையை சொல்லி - பீதியை கிளப்புறீங்களே..... அவ்வ்வ்வ்......

  பதிலளிநீக்கு
 2. பயங்காட்டும் பாசம்.

  மிரள வைக்காதீங்கப்பா:)!

  பதிலளிநீக்கு
 3. என்ன மாதிரி மனுஷ ஜென்மங்களுக்கு புரியுற மாதிரி கதை சொல்லுங்க சார்..

  படம் பாத்தப்ப ஏதோ வொயிட்ட டிரான்ச்பெரண்டா தெரியுது.. சரியா ஆனா புரியல

  பதிலளிநீக்கு
 4. அப்புறம் யார் தான் காய வெட்டினது?

  பதிலளிநீக்கு
 5. திகிலான பதிவு. என்ன அடிக்கடி ஆவி பதிவாவே இருக்கே!
  இந்த பதிவிலிருந்து உடலுக்குத்தான் மதிப்பு பாசம் எல்லாம் என்று தெரிகிறது. உடலில்லாமல் உயிர் மட்டும் வந்தால், மனைவியாவது, மகனாவது; எல்லோரும் தெரித்து ஓடுவார்கள்!!
  அதுசரி, பெரியப்பா ஏன் எல்லாரிடமும் காய் கட் பண்றேன்னு கேட்கிறார்?

  பதிலளிநீக்கு
 6. அந்த சோஃபாவுக்கு ஏத்த மாதிரி ஆவி இல்ல.ஆஜானுபாகுவான பெரியப்பா ஆவியானதும் இளைத்து விட்டாரே!

  சூப்பர் திகில். இப்படி நடக்கச் சாத்தியக் கூறுகள் இருக்கு.

  பதிலளிநீக்கு
 7. பெரியப்பாவுக்கு எக்கச்சக்க ஊறுகாய் சாப்பிட்டு பிபி ஏறியிருக்குமோ!!

  பதிலளிநீக்கு
 8. ரொம்ப திகிலாத்தான் இருக்கு. லேபில் அனுபவம், அமானுஷ்யம், சிறுகதை ன்னு போட்ருக்கீங்களே... இது அனுபவமா, சிறுகதையா? ;-)

  பதிலளிநீக்கு
 9. நன்றி LK,

  நன்றி Chitra, மனசுல வந்தபோது எழுதிட்டோம்...!

  நன்றி ரமேஷ்....அவ்வளவு திகிலாவா இருந்திச்சு?!

  பயம் காட்டும் பாசம் கலந்த பயம்....ஆஹா...நன்றி ராமலக்ஷ்மி,

  என்ன மாதவன், புரியலையா...ஏன்?

  நன்றி Jai, முதல் வருகை...அடிக்கடி வாருங்கள்.

  நன்றி அப்பாதுரை...திகில் வரையறைக்குள் வருதா...

  ஹா ஹா ஹா HVL, நன்றி..மிளகாய் வாங்கப் போன பழைய மாமியார் ஜோக் ஞாபகம் வருது...!

  ஹேமா, பேயைப் பார்த்து ஓடிட்டீங்க போல...கதை பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே...

  நன்றி geetha santhanam, திகில் (போன்ற) பதிவுகள் இன்னும் வரும்..! காய் நறுக்கக் கேக்கறதைக் கேக்கறீங்களா...வந்தவர் ஏதாவது பேசணும் இல்லே...!

  வாங்க வல்லிசிம்ஹன்...ஹா..ஹா........நெருப்பில் எரித்ததில் கொழுப்புல்லாம் கரைந்து போய் இளைச்சிட்டார் போலும்! கூகிள் இளைத்த பேய்ப் படம்தான் கொடுத்தார்..என்ன செய்ய...!

  அமைதிச்சாரல், வாங்க...திகில் கதையை துப்பறியும் கதையா மாற்ற முயற்சி செய்கிறீர்கள். அடிக்கடி வாங்க..

  பதிலளிநீக்கு
 10. வானம்பாடிகள், RVS,

  லேபிளில் இருந்த 'அனுபவம் 'வார்த்தையை கெந்தி எடுத்து கேட்டிருப்பதற்கு நன்றி. பாதி அனுபவம் என்று கொள்ளலாம். எந்தப்பாதி என்று உங்களுக்கே தெரியும்...!! எல்லாமே ஏதோ ஒரு அனுபவம்தான்...அந்த வகையிலும் ஒரு சுவாரஸ்யத்துக்காகவும் அனுபவம் என்று லேபிளில் குறிப்பிடப் பட்டது.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!