செவ்வாய், 14 டிசம்பர், 2010

அலமேலு

"என்னங்க...வேலைக்காரிக்கு யார் கிட்டயாவது சொன்னீங்களா?" கடைக்குக் கிளம்பிக் கொண்டிருந்த செல்வராசுவிடம் மனைவி கேட்டாள்.

"சொல்லியிருக்கேன் சுசி...எங்க...இதோ அதோங்கறாங்க..."


புது வீடு மாறி பதினைந்து நாளாகிறது. முன்பு இருந்த வீட்டில் வேலைக்காரி பிடித்ததே பெரிய கதை. வீடு மாற்றும் கவலையை விட அப்போதிலிருந்தே இதுதான் பெரிய கவலையாக இருந்தது.

பழைய வீட்டு வேலைக்காரியையே இங்கே வர முடியுமா என்று கேட்ட போது மறுத்து விட்டாள்.

"தொலைவுங்க...கூட அது நம்ம ஏரியா இல்லீங்க...அங்கத்தி ஆளுங்க கோச்சுக்கும்..."

அப்படியானால் ஆட்டோ ஸ்டேண்ட் போல நிறைய இருப்பார்கள் போல, உடனே கிடைத்து விடுவார்கள் என்று தேற்றிக் கொண்டார்கள். ம்..ஹூம்.

கடைத் தெருவில் பழைய வேலைக் காரியைப் பார்த்தார் செல்வராசு. 

"நல்லாருக்கீங்களாய்யா .. அம்மா சொகமா? ஆளு கிடைச்சுதாங்கையா?"

"எங்கேம்மா...இன்னும் இல்லை ...தெரிஞ்சவங்க யாரும் இருந்தா சொல்லேன்...நீயே வரலாம். வர மாட்டேங்கறே ..."

"அடப் பாவமே...வினும்மா கூட ரொம்பக் க்கஷ்டப் படுமே...எந்தத் தெரு சொன்னீங்க"

வினும்மா என்று அவள் குறிப்பிட்டது இவர் மகள் விநோதினியை.

தெரு பெயர் சொன்னார்.

"அட..அங்கேயா...தெரு முனைல ஒரு குடிசை பார்த்திருக்கீங்களா.."

"ஆமாம் தெரியும் தெரியும்...அலமேலு அம்மாதானே..கேட்டேனே பார்க்கறேன்னாங்களே தவிர வரலை.."

"பார்த்துட்டீங்களா...பரவாயில்லை சாமி...மறுபடி பார்த்து என் பேர் சொல்லுங்க...அவங்க எனக்கு மாமியார் முறைதான்..அவிங்க வர மாட்டாங்கையா...அவிங்களுக்குக் கீழே பதினைந்து பேர் இருக்காங்க..அவிங்கள்ள ஒருத்திய அனுப்புவாக..."

'இது வேறயா' என்று நினைத்தபடி "சரிம்மா" என்று வீடு திரும்பினார் செல்வராசு. 

காய்கறியை சுசியிடம் கொடுத்து விட்டு அவளிடம் நடந்ததைச் சொல்லி, "நீ போய்க் குடிசைல சொல்லேன்" முன்னர் அலமேலுவைப் பார்த்த போதே ஏனோ ஒரு பயம்தான் ஏற்பட்டது இவருக்கு.

"நானா...அட..நீங்கதான முன்னமே பாத்துருக்கேன்னு சொன்னீங்க...நீங்களே மறுபடி போய்ப் பாருங்க"

போனார். தயக்கத்துடன் குடிசை முன்பு நின்று குரல் கொடுத்தார்.
                                    
  
அள்ளிச் செருகிய கொண்டையுடன் தோன்றினாள் அலமேலு. "இன்னா..?"

சிபாரிசைச் சொன்னார்.

"அது சொல்லிச்சா...நீ முன்னமே வந்திருக்கே இல்லே...சரி, சரி பார்க்கறேன்...வூட்டுலதான இருப்பீய...?"

"ஆமாம்மா... "

"சரி போ..பன்னண்டு மணிக்கு அப்பால சரோசா வரும். அனுப்பறேன்.."

சுசியிடம் நடந்ததைச் சொன்னார்.

காத்திருந்தார்கள்.

பனிரெண்டரை மணிக்கு மேல் ஒரு மாது உள்ளே நுழைந்தாள்.

"ஆரும்மா வூட்டுல.."

"யாரது"

"அலமேலும்மா அனுப்பிச்சுது...ஆளு வேணும்னு கேட்டீங்களாமே..."

"நீங்கதான்.... நீதான் சரோஜாவா?"

"அ ஆங்... ஆமாம் வூட்ல எத்தினி பேரு?"

"அஞ்சு பேரு... நானு, இவ என் மனைவி, என் பொண்ணு, மாப்பிள்ளை அவ பையன்....சின்னப் பையன்தான்..." கடைசி வரியை ஏன் சொன்னார் என்று செல்வராசுவுக்கே ஆச்சர்யமேற்பட்டது.

"டிவி இருக்கா.."

"அதை ஏன் கேக்கறே...அதான இதோ பார்த்துகிட்டு இருக்கோமே .. எவ்வளோ கேக்கறே சம்பளம்..அதை சொல்லு" சுசி கேட்டாள்.

கேள்வியை லட்சியம் செய்யவில்லை சரோஜா.

"காலைல என்ன டிஃபன் செய்வீங்க"

செல்வராசு சுசியைப் பார்த்தார். 'என்னது இது?'

சுசிக்கு வந்த ஆளை விட மனமில்லை போலும். ஏற்கெனவே வந்து வந்து வராமல் போன ஆட்களை நினைத்துக் கொண்டாள்.

"எப்பவுமே காலைல இட்லிதான்...எப்பவாவது பொங்கல்...அதுல பாத்திரம் ரொம்ப விழாதும்மா"

"தொட்டுக்க..?"

"சட்னி, மிளகாய்ப் பொடிதான்..." சுசியும் யோசிக்காமல் 'சட்'டென சொல்லி விட்டு "ஏன் கேக்கறே" என்றாள்.

"சாம்பார்லாம் செய்ய மாட்டீங்களா.." என்றவள் இப்போதுதான் முதல் அடி எடுத்து உள்ளே வைத்தாள்.

"ஏம்மா பாத்திரம் தேய்க்கதானே வந்துருக்கே..." சுசி பொறுக்க முடியாமல் கேட்டே விட்டாள்.

உள்ளே அளவெடுத்துக் கொண்டிருந்த சரோஜா கிச்சன் மற்றும் பாத்ரூம், பாத்திரம் தேய்க்குமிடம் என்று சூபர்வைஸ் செய்தாள்.

"இங்கதான் தேய்க்கணுமா"

"ஆமாம்"

திரும்பி பாத்ரூம், கிச்சன் என்று அளவெடுத்தாள்.

சுசியும் செல்வராசுவும் சஸ்பென்சாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

"சரி நாளைலேருந்து வர்றேன்...இப்போ ஏதாவது டிஃபன் இருக்கா"

"இல்லை"

இளக்காரமாகப் பார்த்து விட்டு வெளியேறினாள் சரோஜா.

ஏனோ இருவருக்குமே ஒரு பெருமூச்சு வந்தது. இனி தினமும் அந்தப் பெருமூச்சு எப்போ விடுவோமோ என்று கவலையும் வந்தது.
   
அடுத்த நாள் முதல் சரோஜா வேலைக்கு வரத் தொடங்கி விட்டாள். அதிரடிதான். போய் வேலை செய்யுமிடத்தில் உட்கார்ந்து விடுவாள். திரும்பிப் பார்ப்பாள். சுசி பாத்திரக் கூடையை எடுத்துக் கொண்டு போய் சரோஜா பக்கத்தில் வைப்பாள். 

அங்கிருந்தே டிவியை ஒரு கண்ணால் பார்த்த படியே வேலை தொடங்கும். வேலையைப் பார்த்த சுசி ஆடிப் போனாள். பாத்திரத்தை எடுக்க வேண்டியது..ஒரு திருப்பு திருப்ப வேண்டியது..குழாயில் காட்ட வேண்டியது....

செல்வராசுவை 'என்னங்க இது' என்ற பார்வை பார்த்தாள் சுசி.

மெல்ல மெல்ல தைரியமாக 'மிஞ்சியிருந்தால்தான் டிஃபனோ சாப்பாடோ கொடுப்போம்' என்றும் சொல்லி விட்டாள் சுசி.

வேலைக்கு ஆள் கிடைத்து விட்டது என்று நிம்மதியாக இருக்க முடியவில்லை. ஏதோ ஒரு சங்கடம். மகள் வினு ஆஃபீசிலிருந்து திரும்பி வேலைகளில் குறை காணத் தொடங்கினாள்.

இடையில் ஓரிரு நாள் கடைத் தெருவில் வெற்றிலையை அதக்கிய படி அலமேலும்மா "என்ன சரோசா வாராளா... ஆரு வூட்டுக்கும் வராது அது..நான் சொன்னதாலே உங்க வூட்டுக்கு வருது.." என்ற போது செல்வராசுவுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.

பாதி வேலைகளை சுசியே செய்ய வேண்டி வர, நொந்து போனாள் சுசி.

"ஏங்க நிறுத்திடலாமா...வேற ஆள் பார்க்கலாங்க..."

"ஐயோ நான் மாட்டேன்...இவளை விடு...அலமேலு என்ன சொல்வாளோ..அப்புறம் அடுத்த ஆள் வேற கிடைக்கறது கஷ்டம்...முன்னமே பட்டோம் இல்லை.."

"இப்ப மட்டும் என்ன வாழுதாம்" சுசி நொடித்துக் கொண்டு உள்ளே போனாள்.

இடையில் மேல் வீட்டுக்கு வந்து கொண்டிருந்த ராதையைக் கேட்டுப் பார்த்தாள். அவள் பதிலேதும் சொல்லாமல் தாண்டிச் சென்று கொண்டே இருந்தாள்.

ஒரு கட்டத்தில் இதற்கு மேல் பொறுக்க முடியாது என்பது போல சுசி, செல்வராசுவிடமிருந்து பணம் வங்கிக் கொண்டு சரோஜாவிடம் சென்றாள்.

"இந்தா..இது வரைப் பார்த்ததற்குக் காசு... நாளை முதல் நீ வர வேண்டாம்..."

தைரியமாகச் சொல்லி விட்டு வந்து விட்டாள். சரோஜா விரோதமாக செல்வராசுவை ஒரு பார்வை பார்த்தாள். பிறகு சென்று விட்டாள்.

மாலை வெளியே ஏதோ கூச்சல் கொஞ்ச நேரமாய்க் கேட்கிறதே என்று எழுந்து வெளியே வந்தார் செல்வராசு. எதிர் வீட்டுக் காரர்கள் பக்கத்து வீட்டுக் காரர்கள் இவர்கள் வீட்டையே பார்த்துக் கொண்டிருக்க, அலமேலு தெருவில் நின்று கோபமாகக் கத்திக் கொண்டிருந்தாள்...

"என் கிட்ட வந்து ஆள் வேணும்னு கேக்கத் தோணிச்சி இல்லே...நிறுத்தறேன்னு சுளுவா அவ கிட்ட சொல்லிட்டியே...என் கிட்ட சொல்ல வேணாம்...உன் வூட்டுக்கு அனுப்பினதுக்கு அடுத்த தெருல கேட்டாங்க அவுங்க வூட்டுக்காவது அனுப்பிருப்பேன்...மருமவ சொன்னாளேன்னு எல்ப் செஞ்சதுதான் ராங்காயிடிச்சி... இனி யார் வருவா உன் வூட்டுக்கு..நானும் பாக்கறேன்..."

என்னடா இது வம்பாப் போச்சு என்று நினைத்துக் கொண்டார் செல்வராசு. அவள் அகலும் வரைக் காத்திருந்து பின்னர் கடைத்தெருவுக்குக் கிளம்பினார்.

கடைத்தெருவில் பழைய வேலைக்காரி தென்படவே அவளிடம் சொன்னார். அவளும் கோபிப்பாளோ என்று நினைத்தபோது,

"அத்த விடு சாமி...வேற ஆள் வந்தா சொல்றேன்.." என்று சொல்லிப் போனது கொஞ்சம் ஆறுதலாய் இருந்தது.

அக்கம்பக்க ஆட்கள் அனுதாபமாய்ப் பார்க்கிறார்களா கேலியாய்ப் பார்க்கிறார்களா என்றே தெரியவில்லை! அவர்களுக்கும் இந்த அனுபவம் இல்லாமலா இருந்திருக்கும்? அலமேலுவைதான் தவிர்க்கவும் முடியவில்லை. சந்திக்கவும் முடியவில்லை. வேறு ஆட்களும் இன்னும் கிடைத்த பாடில்லை.

பத்து நாள் கழிந்திருக்கும். கடைத் தெருவில் நின்றுகொண்டிருந்த போது சுசி ஃபோன் செய்தாள்."சீக்கிரம் வாங்களேன்...அலமேலு வீட்டைத் தூக்கிட்டாங்க.."

அசுவாரஸ்யமாய் வீட்டை நெருங்கிய போது தெரு முனையில் பெரிய வண்டி தன் ராட்சதக் கைகளால் அலமேலு குடிசையைத் தூக்கி விட்டிருக்க, அலமேலு புலம்பிக் கொண்டிருந்தாள்.

ஒருபக்கம் 'அப்பாடா இனி இவள் தொல்லை தெருவில் நடக்கும்போதெல்லாம் இருக்காது' என்று கொஞ்சம் நிம்மதியாய் இருந்தபோதும் கொஞ்சம் பாவமாகவும் இருந்தது. 'எங்கே போவாள் இவள் இனி..?'

"அட விடுங்க சார்...வேற பொறம்போக்குல மறுபடி குடிசை போட்டுடுவாங்க இவங்க..." இவர் மனதைப் படித்தவர் போல பக்கத்து வீட்டுக்காரர் பைக்கை வெளியில் கொண்டு வந்து ஸ்டார்ட் செய்து ஏறிப் போனார்.

'உங்களுக்குத் தெரிஞ்சி யாராவது வீட்டு வேலை செய்ய ஆள் இருக்காங்களா...?'
(படங்கள் : கூகிளில் சுட்டவை. நன்றி கூகிளாண்டவர்)
                    

29 கருத்துகள்:

 1. நம்ம வேலையை ஓரளவு நாமதான் பாக்கனும்னு ஒரு கொள்கை வச்சிக்கிட்டா என்னிக்குமே நல்லதுதான்.

  பதிலளிநீக்கு
 2. // நம்ம வேலையை ஓரளவு நாமதான் பாக்கனும்னு ஒரு கொள்கை வச்சிக்கிட்டா என்னிக்குமே நல்லதுதான்.//

  Repeattu..

  பதிலளிநீக்கு
 3. வீட்டு வேலைக்கு ஆள் கிடைப்பது குதிரைக் கொம்புதான். இந்த ஒரே வேலைக்கு தான் வேலை செய்ய வருபவர்கள் கண்டிஷன் போடுவார்கள். பாவம் செல்வராசும் சுசியும் ;-)

  பதிலளிநீக்கு
 4. அட!!!!! இவ்வளவு கஸ்டமா

  பதிலளிநீக்கு
 5. நம் வீட்டு வேலைகளை நாமே பார்த்துக்கறதே தீர்வு.

  பதிலளிநீக்கு
 6. உங்கள் சரோஜா எவ்வளவோ மேல். எங்கள் பழனியம்மாள் டாடா ஸ்கை இல்லையா என்று கேட்டார்கள்!

  பதிலளிநீக்கு
 7. சாதாரண சலுகைகளின் பின்னே எத்தனை சூட்சுமங்கள்!

  >>>டிவி இருக்கா?

  படித்தபோது நினைவுக்கு வந்தது. எங்கள் அப்பா வழிப்பாட்டியின் நக்கலும் நகைச்சுவையும் அருமையாக இருக்கும். (தமிழும்)
  காரைக்காலில் வீட்டு வேலை செய்ய வந்த பெண்மணி இப்படித்தான் கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தாள்.

  "காலைல காபி கொடுப்பீங்களா? டிபன் கொடுப்பீங்களா? சாயந்திரம் வீட்டு வெலை செஞ்சதும் சோறு கொடுக்கணும். வருசத்துக்கு ஒரு புதுச் சேலை கொடுக்கணும்..."

  எல்லாவற்றையும் கேட்டுவிட்டு எங்கள் பாட்டி சொன்னார்: "இதெல்லாம் கிடைக்கிற மாதிரி ஒரு வீடு இருந்தா சொல்லு, நானும் உன் கூட வரேன்"

  பதிலளிநீக்கு
 8. //அப்பாதுரை said...எங்கள் அப்பா வழிப்பாட்டியின் நக்கலும் நகைச்சுவையும் அருமையாக இருக்கும்//

  அப்படியா, நான் அவ்வளவாக அனுபவப்பட்டதில்லை.

  அதேபோல், என் அம்மாவும் நேற்று சொன்னார்கள் - பாட்டி நன்றாக சமைப்பார்கள் என்று. எனக்கு நினைவே இல்லை ?

  நான் என் அம்மாவின் சமையலில் குளிர் காய்வதுபோல் அவர்கள் தன் தாயை பற்றி நினைத்து பார்த்தார்கள். சடாரென்று பாட்டியின் "சேனை மசியல்" நினைவுக்கு வந்து விட்டது என் அம்மாவிற்கு.

  கீது, அதுவும் வரும் என் ப்ளோகில் - From Dharma's Kitchen என்று

  பதிலளிநீக்கு
 9. ரைட்டு!!!! நல்லா இருக்குதுங்க.

  பதிலளிநீக்கு
 10. செல்வராசு,
  வினு என்கிற வினோதினி,
  வினும்மா சுசி,
  அலமேலு,
  சரோஜா,
  ராதை
  -- எத்தனை பாத்திரங்கள்!..

  பதிலளிநீக்கு
 11. ம்கும். நானே தேடி தேடி இன்னைக்குதான் 700ரூக்கு ஒரு அம்மணிய வரச்சொன்னது:)))

  பதிலளிநீக்கு
 12. ஆஹா... இங்கயும் வேலைக்காரி வம்பா...என் ப்ளாக்லயும் இதேதாங்க ஓடுது... வீட்டுக்கு வீடு வாசப்படி

  பதிலளிநீக்கு
 13. சார்,

  நான் நல்ல பத்து பாத்திரம் தேய்ப்பேன். டிப்பானும் நானே பண்ணிக்கொள்வேன். பண்ணிக்கொண்டு பாத்திரத்தையும் தேய்த்து வைத்து விடுவேன்.

  Conference கால் செய்துக்கொண்டே வீட்டை பெருக்கி / மொழுகி விடுவேன் ? அந்தக்காலத்தில் எங்கள் வீட்டு வேலைக்காரி ஷர்ட் காலரை தேய்த்தே கிழித்துவிடுவாளோ என்று நானே பெங்களூர் குளிரில் தோய்ப்பேன்

  டி.வி. சீரியல் பிடிக்காது அதனால் அந்த பிரச்னையும் இல்லை.

  சார் வேலை சார் வேலை.

  பதிலளிநீக்கு
 14. //RVS Said: இந்த ஒரே வேலைக்கு தான் வேலை செய்ய வருபவர்கள் கண்டிஷன் போடுவார்கள். //

  ஏன் ஆர்.வி.எஸ். நானும் நீங்களும் இருக்கும் ஐ.டி. இண்டஸ்ட்ரி எப்படி ? அதில் ஆட்களை எடுத்து வைத்துக்கொள்வதை விட இந்த வேலைக்காரிகள் பெட்டெர் !!

  ஒரே சமயத்தில் ஐந்து ஆறு appointment லெட்டர், வீட்டிற்கு போய் அழைத்து வர கார், மதியம் சாயங்கால ஸ்நாக்ஸ் என்றாலும் குரங்கை விட தாவும் மனித ஜந்துக்கள்

  பதிலளிநீக்கு
 15. Very good....seemingly it is a very common issue everywhere in India...sad....

  பதிலளிநீக்கு
 16. அட! அது யாரு விசு!! புரோஃபைல் பார்த்தா ஒரே ஒரு ஆளுதான் இவரு யாருன்னு பார்த்திருக்காங்க! அடிக்கடி வருக, கருத்துரைகள் கூறுக என்று கேட்டுக்கொள்கிறோம்!

  பதிலளிநீக்கு
 17. நடக்கிறத நல்லாச் சொல்லியிருக்கீங்க நகைச்சுவையோட. அருமை ஸ்ரீராம்:)!

  விசு யார் என இரண்டாவது ஆளாக நானும் பார்த்து விட்டு வந்தேன்:))!

  பதிலளிநீக்கு
 18. வேலை செய்ய வரவங்க கிட்ட வேலை வாங்க எல்லாம் தனி சாமர்த்தியம் வேணுங்க. அது எனக்கு சுத்தமா கிடையாது. இப்ப இந்த பதிவை படிச்ச உடனே ஜுரம் வராத குறைதான் எனக்கு. அதனால என் வேலையே எல்லாம் நானே செஞ்சுக்கறதுன்னு தீர்மானமே பண்ணிட்டேன். நல்ல வேளை! இந்த மாதிரி எல்லாம் ஒரு அனுபவம் ஏற்படாம முன்கூட்டியே நான் எச்சரிக்கை ஆனதுக்கு உங்களுக்கு தான் ரொம்ப ரொம்ப நன்றி சொல்லணும். நன்றி!

  பதிலளிநீக்கு
 19. ஒவ்வொரு முறை விடுமுறைக்குப் போகும்போதும் இந்த வேலைக்காரிகளால் என் சகோதரிகள் மற்றும் அம்மா படும் அவஸ்தையைப் பார்த்து இந்த விஷயத்தில் குவைத் சொர்கம் என்று தோன்றும். 'அதிதி தேவோ பவ' என்ற ஒரு ஹிந்தி படத்தை குவைத் ஏர்லைன்ஸ் விமானப் பயணத்தில் பார்த்தேன். இந்த வேலைக்காரி விஷயமும் அதில் நகைச்சுவையோடு சொல்லப்பட்டிருக்கும்.
  துரை, இந்தப் பதிவைப் படிக்கும்போது எனக்கும் பாட்டி நினைவுதான் வந்தது.

  பதிலளிநீக்கு
 20. தொடப்பத்தில் (வாறுகட்டை?) வரைந்திருக்கும் மனித உருவம் நன்றாக இருக்கு. வித்தியாசமான கற்பனை.

  பதிலளிநீக்கு
 21. நன்றி பெ.சொ.வி.
  எல்லாவற்றையும் நாமே செய்வது சாத்தியமில்லை என்று தோன்றுகிறது.

  ஹேமா, இங்கு நிறைய பேருக்கு இருக்கும் அனுபவம் அது...

  நன்றி மாதவன்,

  உண்மைதான் ஆர் வி எஸ், நீங்கள் சொல்வது சரிதான்.

  ரொம்பக் கஷ்டம் கல்பனா,

  நாம் பார்க்க நினைத்தாலும் வீட்டுப் பெண்களுக்கு வேலையை சுலபமாக்கிக் கொடுக்க வேண்டியுள்ளதே தமிழ் உதயம்,

  வருக Gopi Ramamoorthy, நன்றி.

  ஆமாம் பாஸ்கரன், அனுபவங்கள் பலவிதம்!

  வாங்க அப்பாதுரை, நன்றி...பாட்டியின் கமெண்ட் காதில் ஒலிப்பது போல இருக்கிறது..இதெல்லாம் தஞ்சாவூர் ஸ்பெஷல்..!

  நன்றி சாய்,

  கணக்கில் ஒன்று குறைகிறது ஜீவி சார், பழைய வேலைக்காரி...!

  நன்றி வானம்பாடிகள்...பொதுவான அனுபவப் பகிர்வுதானே...

  வாங்க அப்பாவி தங்கமணி, வீட்டுல வயசானவங்க இருந்தா அவங்க படற கஷ்டம்தான் ரொம்ப இருக்கும். அவங்களுக்கு உதவ நினைக்கரப்போதான் இப்படி வம்பு எல்லாம்..!

  சாய்...ஒரு நாளில் மூன்று நான்கு வீடுகள் பார்க்கும் அவர்கள் வேலை வேக வேகமாக செய்யும்போது தரம் குறைந்து விடுவது இயற்கை. அதனால் சிறப்பாகச் செய்ய வேண்டியவற்றை நாமே செய்து கொள்வது நல்லதுதான்.
  ஐ டி இண்டஸ்ட்ரியோடு ஒப்பிட்டு சொல்லியிருப்பது நேர்த்தி. பிறரையும் நம்மைப் போல் நினைப்பது நல்ல குணம்.

  உண்மைதான் Balamurali.

  வாங்க visu... நீங்க 'அந்த' விசுதானே ....

  நன்றி ராமலக்ஷ்மி,

  நன்றி meenakshi, இது பொதுவான அனுபவமாக எழுதப் பட்டதுதான்..ஓரளவு உண்மையில் நடப்பதும் கூட..!

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி geetha santhanam,

  பதிலளிநீக்கு
 22. அந்த பழைய வேலைக்கார அம்மாவைக் கணக்கில் தான் எடுத்துக் கொண்டேன்.
  நீங்கள் அவருக்கு ஒரு பெயர் கொடுக்காததினால், பெயரில்லா பழைய வேலைக்காரி என்று அழைப்பானேன் என்று தான் அவரை கணக்கில் இருந்து நீக்கினேன்.
  நீங்களும் படு உன்னிப்பாகத் தான் இருக்கிறீர்கள்!

  பதிலளிநீக்கு
 23. எங்கள் பக்கத்து பிளாக்-இல் ஒரு அம்மா. அவர்கள் வேலைக்குச் செல்வதால் அந்த அம்மாவின் வயதான அம்மாவிற்கு எல்லாப் பணிவிடைகளையும் செய்தவர் லட்சுமி என்ற ஒரு வேலைக்கார அம்மா. வயதான அம்மா அவர் வாழ்க்கையிலிருந்து விடைபெற்ற போது சொன்ன கடைசி வார்த்தை "லட்சுமிக்கு அம்பது ரூபா கொடுடி.."

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!