ஞாயிறு, 5 டிசம்பர், 2010

பேராசிரியர் கல்கி


--------- பாஹே எழுதுகிறார் ------------


தமிழ் எழுத்துத் துறையில் நவீன எழுத்துக்கு வித்திட்டவர் 'கல்கி' அவர்களே.
    
அவரின் நினைவு தினம் டிசம்பர் ஐந்து.

1954 இல் மறைந்தார். அதற்குமுன் சுமார் பதினைந்து ஆண்டுகள் தமிழில் பல சாதனைகளைப் படைத்தவர்.

அவரால் உருவானவர்கள் பின்னால் பிரபலத்துவம் பெற்ற பல எழுத்தாளர்கள். பலர் ஏகலைவர்களாக எழுத்துத் துறைக்கு ஈர்க்கப் பட்டவர்கள்.

துவக்கக் காலத்தில் ஜெமினி வாசனுடன் இணைந்து பணியாற்றினார். விகடன் ஆசிரியராக இருந்து பின்னர் கருத்து வேறுபாட்டில் இருவரும் பிரிய நேரிட்டாலும் அதிலும் கண்ணியம் காக்கப் பட்டது. ஜெமினி நிறுவனம் 'சம்சாரம்' படம் வெளியிட்டபோது அதைத் தாக்கி விமர்சித்தார் கல்கி. நட்பு இதற்குத் தடையாக இருக்கவில்லை.

1940 வாக்கில் 'கல்கி' பிறந்தது. தமிழில் நளினமான நகைச்சுவையைக் கையாண்டவர் 'கல்கி; அதுவரை ஆங்கிலத்தில் மட்டுமே எழுதிக் கொண்டிருந்த பலரைத் தமிழிலும் எழுத வைத்தவர். முக்கியமானவர் எஸ்விவி.

கருத்து வேறுபாடுகள், கட்சி மாற்சர்யங்களை மீறி, பாராட்ட வேண்டியவர்களை வஞ்சனையின்றிப் புகழ்ந்த பெருந்தன்மை அவருடையது.

சி என் அண்ணாதுரையின் 'ஓர் இரவு' படம் வெளியான போது 'தமிழ்நாட்டின் பெர்னார்ட் ஷா' என்று அவரைப் புகழ்ந்தார்.

மஹாகவி பாரதிக்கு எட்டையபுரத்தில் மணிமண்டபம் எழுப்ப தம் எழுத்துலகச் செல்வாக்கை முழுதும் பயன்படுத்தி பலரையும் அதில் ஈடுபட வைத்தார்.

விடுதலைப் போராட்டக் காலத்தில் அவருடைய பங்குப் பணி கணிசமானது.

காந்திஜியின் அஹிம்சையை வழிமொழிந்தது போலவே நேதாஜியின் ஆயுதப் போராட்டத்தையும் புகழத் தெரிந்தவர்.

'ரட்லம் ஜங்க்ஷன்' என்ற சிறுகதையில் நேதாஜியின் மர்ம முடிவு பற்றி பூடகமாக எழுதி அவருக்குத் தன் அஞ்சலியைச் செலுத்தியவர். படித்திராதவர்கள் இதை அவசியம் தேடிப் பிடித்துப் படிக்க வேண்டும்.

ராஜாஜியின் அதி தீவிர ஆதரவாளர்; இதனால் பலரின் விரோதமும் சம்பாத்தியம்.

முப்பதுகளில் ராஜாஜி திருச்செங்கோட்டில் தங்கி ஹரிஜன முன்னேற்றத்துக்கு உழைத்தபோது தீண்டாமை ஒழிப்பாக 'விமோசனம்' இதழில் ஆசிரியப் பொறுப்பேற்றுத் திறம்பட நடத்தியவர்.

வரலாற்றுப் புதினங்களின் முன்னோடி.'சிவகாமியின் சபதம்', 'பொன்னியின் செல்வன்', 'மோகினித்தீவு', போன்றவற்றோடு 'கள்வனின் காதலி' போன்ற சமூக நாவல்களும் படைத்தார். இக்கதை படமாயிற்று. சிவாஜி, பானுமதி நாயக, நாயகியாக நடித்தவர்கள். "வெயிற்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு" என்ற பானுமதியின் பாடல் அப்படத்தின் சிறப்புகளில் ஒன்று.

எம் ஜி ஆர் பின்னாளில் பெரும் பொருட்செலவில் 'சிவகாமியின் சபதம்' அல்லது 'பொன்னியின் செல்வன்' இரண்டில் ஒன்றைப் படமாக்க திட்டமிட்டது ஏனோ நிறைவேறவில்லை.
   
திரு வி க வின் மாணவர் கல்கி. அவர் பத்திரிகையின் பெயரே தன் ஆசிரியர் பெயரை முன்னிறுத்தியது என்றும் ஒரு செய்தி உண்டு. இதற்கு மறுப்பும் உண்டு.

ஆனந்த விகடனில் அக்கால அட்டைப் படங்கள் ஒரு நகைச்சுவைத் துணுக்கோடுதான் வெளிவந்தன. அதை முதல் முறையாக மாற்றி 'கல்கி'யின் உருவம் தாங்கி அவர் மறைவை ஒட்டி விகடனில் வாசன் மனம் உருகி எழுதிய அஞ்சலிக் கட்டுரை 'நெஞ்சு நிறைந்த துயரத்துடன் இதை எழுதுகிறேன்' என்று துவங்கும். எப்போதும் அட்டையில் சிரிப்புடன் இருக்கும் 'விகடன் சிம்பல்' அவ்விதழில் கண்ணீர் சொரிந்து காட்சி தந்தது.

குற்றால முனிவர் டி.கே.சி யுடன் கல்கிக்கு ஆழ்ந்த நட்பு உண்டு. ஆச்சிக் கை தோசை பற்றி நிறைய புகழ்ந்து எழுதி இருக்கிறார்.
  
எம் எஸ் திரைவானில் ஜொலிக்க ஆரம்ப வித்திட்டவர்களில் கல்கி முக்கியமானவர். அக்கால கல்கி இதழ்களில் தவறாமல் ஒரு கால் பக்க விளம்பரம் இருக்கும். பம்பாய், கல்கத்தா, புது டெல்லி தமிழ்ச் சங்கங்களின் வளர்ச்சிக்காக எம் எஸ் உதவும் கச்சேரி பற்றியவை அவை. வேறு பல பொதுநல அமைப்புகளுக்கும் தன் இசையால் உதவியவர் எம் எஸ் என்றால், அதை உலகறியச் செய்தவர் கல்கி.

எம் எஸ் தன் 'மீரா' பட வருவாய் முழுக்க கல்கி இதழின் வளர்ச்சிக்கே துவக்கக் காலத்தில் கொடுத்து உதவியதும் வரலாறு.

கல்கி வளர்ச்சிக்கு சதாசிவம் உழைப்பும் கணிசமானது.

குறைந்தபட்சம் 'அது ஒரு பொற்காலம்' என்ற கி ராஜேந்திரனின் நூலையாவது படிப்பவர்க்கு மேற்காணும் தகவல்கள் கிடைக்கக் கூடும். இதை எழுதுகிறவனின் தகப்பனார் காலமான தேதி 1954, அக்டோபர் 24; இவனின் ஸ்வீகார ஞானத் தந்தையான கல்கி அடுத்த நாற்பத்திரண்டு நாளில் காலமானபோது இவன் அனுபவித்தத் துயரம் மிக அதிகம்.

எழுத்துலகப் பிதாமகனுக்கு எழுத்துலக ஆர்வலர்கள் அஞ்சலி செலுத்துவோம். நமக்கு அது ஒரு நன்றிக் கடன்.

கல்கி வாழ்கிறார். வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
             

10 கருத்துகள்:

 1. பல விஷயங்கள் புதிது எனக்கு. கல்கியின் "பார்த்திபன் கனவு நாவல் விட்டு போய் இருக்கிறது . அதேப போல் த்யாக பூமி விட்டுப் போச்சு ..

  பதிலளிநீக்கு
 2. //எழுத்துலகப் பிதாமகனுக்கு எழுத்துலக ஆர்வலர்கள் அஞ்சலி செலுத்துவோம். நமக்கு அது ஒரு நன்றிக் கடன்.
  கல்கி வாழ்கிறார். வாழ்ந்து கொண்டிருக்கிறார்.//

  நிச்சயமாக. நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள். அருமையான பகிர்வுக்கு நன்றி ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு
 3. ஞாபகம் வைத்து வெளியிட்டமைக்கு மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
 4. பொன்னியில் செல்வன் படித்திருக்கிறேன்..
  நல்லதொரு நாவல்..

  பதிலளிநீக்கு
 5. கல்கி பற்றிய நினைவுத் தொகுப்பு அருமை. அவருக்கு சங்கீதத்தில் ஞானம் உண்டு. அவர் நகைச்சுவை கலந்த எழுத்துக்கள்,கட்டுரைகள் இன்றும் படிக்க சுவாரஸ்யமானவை. சுதந்திர தாகத்தை அடிநாதமாய் கொண்டவை அவரின் பல கதைகள்.
  பொன்னியின் செல்வன் தஞ்சைக் கோவில் போல் காலம் கடந்து நிலைக்கும்..
  அவரின் 'பொய்மான்கரடு'
  படித்திருக்கிறீர்களோ?'

  பதிலளிநீக்கு
 6. //விகடன் ஆசிரியராக இருந்து பின்னர் கருத்து வேறுபாட்டில் இருவரும் பிரிய நேரிட்டாலும் அதிலும் கண்ணியம் காக்கப் பட்டது.//

  அது ஆனந்தவிகடனில் தன்னையே கரைத்துக் கொண்டு எல்லாமுமாக கல்கி இருந்த காலம். ஆரம்பத்திலிருந்தே ராஜாஜியிடம் கல்கிக்கு சிஷ்ய மனோபாவம். தேசப்பிதாவின் அறைகூவல் படி தனிநபர் சத்தியாகிரகத்தில் ஈடுபட விரும்பிய கல்கி தன் விருப்பத்தை ஆ.வி.யின் அதிபர் எஸ்.எஸ்.வாசனிடம் சொல்லி அனுமதி கேட்கிறார். தனிநபர் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டால் சிறை நிச்சயம்; கல்கியின் சிறைவாசம் பத்திரிகைக்கு பெருத்த இழப்பாகிப் போய்விடும் என்று வாசன் இதற்கு மறுக்கிறார். தேச விடுதலையையே இலட்சியமாகக் கொண்ட கல்கி, வேலையை இராஜிநாமா செய்து விட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை செல்கிறார்.

  ஆனந்தவிகடன் தாத்தா ஒரே ஒரு இதழில் மட்டும் வழக்கம் போல சிரித்துக் கொண்டிருக்க மாட்டார்.
  கல்கி காலமான பொழுது தாத்தா கலங்கிக் கண்ணீர் விடுகிற மாதிரி சித்திரம் போட்டு தனது துக்கத்தைச் சொன்னது ஆனந்தவிகடன்!

  இதே நேரத்தில் இன்னொரு பத்திரிகையில் நடந்த இன்னொரு நிகழ்ச்சி.
  'தினமணி' ஆசிரியர் டி.எஸ்.சொக்கலிங்கம் அவர்கள் தனிநபர் சத்தியாகிரகப் போரில் குதிக்கிறார்.

  சிறைவாசம் ஏற்கும் முன் திரு. ஏ.என்.சிவராமன் அவர்களை பத்திரிகைக்கு ஆசிரியராக்கி விட்டு
  சிறையேகினார்.

  தேச சுதந்திரப் போரில் தமிழ்நாட்டுத் சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வரலாறு எந்த மாநிலத்திற்கும் கொஞ்சமும் சளைத்ததில்லை!

  பதிலளிநீக்கு
 7. கல்கி தபால் தலை நன்று.
  கல்கி எழுதியதை அதிகம் படித்ததில்லை. தமிழ்ப் பத்திரிகையுலகில் அவருடைய கைத்தடங்கள் ஏராளம் என்று படித்திருக்கிறேன். நினைவு வைத்து எழுதியிருக்கிறீர்களே, பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 8. //ரட்லம் ஜங்க்ஷன்' என்ற சிறுகதையில் நேதாஜியின் மர்ம முடிவு பற்றி பூடகமாக எழுதி அவருக்குத் தன் அஞ்சலியைச் செலுத்தியவர். படித்திராதவர்கள் இதை அவசியம் தேடிப் பிடித்துப் படிக்க வேண்டும்.//

  இது கேட்டதில்லை; எந்தத் தொகுப்பில் இருக்கு? படிக்கணும். தேடறேன்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!