திங்கள், 24 ஜனவரி, 2011

ஜே கே 12

ஜே கே 11 (தொடர்ச்சி)

விழிப்புணர்வு அடைதல் ஒரு மிக மெதுவான முறைபாடாக இருப்பது ஏன்?
 
(நாம் விழிப்புணர்வுக்கு பல தடைகளை ஏற்படுத்தி வைத்திருக்கிறோம். விருப்பு, வெறுப்பு, ஆசை, இலட்சியம் இப்படியாக பலப் பல...)

கேள்வி கேட்பவர்: நாம் நம்முடைய பயம் வெறுப்பு இவற்றை வெற்றி கொள்ள வாழ் நாள் போதாது என்று நினைக்கிறேன்.

ஜே கே: நீங்கள் மீண்டும் ஒத்தி வைப்பது என்ற பாணியிலேயே எண்ணமிடுகிறீர்கள்.  வெறுப்பு என்பதன் தாக்கத்தின் ஆழம், அதன் கீழ்மை மற்றும் விளைவு இவற்றைப் பற்றி ஒவ்வொருவரும் உணர்ந்திருக்கிறோமா? நீங்கள் இதை உண்மையில் ஆழமாக   உணர்ந்தால் அப்போது நீங்கள் வெறுப்பு எப்போது முடிவுக்கு வரும் என்று கவலைப் பட்டுக் கொண்டு இருக்க மாட்டீர்கள். ஏனென்றால் அப்போதே அந்தத் தெளிவு  மனிதனுக்கு  உண்மைத் தொடர்பு நிலையையும் ஒத்துழைக்கும் தன்மையையும் அளிக்கக் கூடிய ஒன்றை உருவாக்கிவிடுகிறது.  ஒருவர் உண்மையாக வன்முறையையும்  வெறுப்பையும் அவற்றின்   பலப்பல முகங்களுடன் உணர்ந்திருப்பாராகில் அந்த வன்முறையை, அந்த வெறுப்பை  முடிக்க  ஒரு கால அவகாசம் தேவைப்படுமா என்ன? 

கேள்வியாளர்: இல்லை, இல்லை.  வெறும் கால அவகாசம் மட்டும் போதாது.  அதை முடிவுக்குக் கொண்டு வர ஒரு வழி முறை  தெரிந்திருக்க வேண்டும்.  

ஜே கே: நாட்கள் கழிவதால் மட்டும் வெறுப்பு இல்லாமல் போய் விடாது.  அது சாமர்த்தியமாக மறைக்கப் பட்டு இருக்கும்.  அல்லது கட்டுப் பாட்டுக்குள் இருக்கும்.  எச்சரிக்கையுடன் கண்காணிக்கப் பட்டு வரும். எனினும் பயமோ வெறுப்போ தொடர்ந்து இருந்து கொண்டுதான் இருக்கும்.  வெறுப்பை  முடிவுக்குக் கொண்டுவர ஒரு நடை முறை, ஒரு வழிமுறை, ஒரு சாதனம் சாத்தியமா?  அதை அடக்கியாள உங்களுக்கு அது கற்றுக் கொடுக்கும்.  அதைக் கட்டுப்பாட்டில் வைக்க உங்களுக்கு உதவும்.  அதை சமாளிக்க அல்லது வெற்றி கொள்ள உங்களுக்கு வேண்டியிருக்கும் பலத்தை அது அதிகரித்துக் கொடுக்கும். ஆனால் மனிதர்களுக்கு உண்மையான சுதந்திரத்தை அளிக்கக் கூடிய அன்பு என்பதை அது உருவாக்க முடியாது.  வெறுப்பு என்பது நம்மை அழிக்கும் கொடிய விஷம் என்று நாம் உள் மனம் வரை உணராது போனால் எந்த நடை முறையும் எந்த கட்டுப்பாட்டு மையமும் அதை அழிக்க இயலாது.

கேட்பவர்: வெறுப்பு விஷம் என்பதை அறிவார்ந்த நிலையில் உணரகிறோம்தான்.  ஆனால் அதையும் மீறி வெறுப்பை உமிழ்ந்துகொண்டு இருக்கிறோம்.

ஜே கே: இப்படி ஏன் நடக்கிறது? அறிவுநிலையில் அதீத வளர்ச்சியும் ஆசை என்ற விஷயத்தில் இன்னும் ஆதி மனிதனின் (அறிவற்ற) நிலையும் ஒரு சேர இருப்பதுதான் காரணமா?  அழகுக்கும் விகாரத்துக்கும் இணக்கம்  இருக்க முடியாது.  (அதாவது நல்லதும் கெட்டதும் ஒரே சமயத்தில் ஒரே மனித மனத்தில் இணைந்து வாழ முடியாது)  வெறுப்பை முடிவுக்குக் கொண்டு வருவது என்பது எந்த வழிமுறையையும் சார்ந்தது அல்ல. வெறுப்புக்கும் பிடிமானத்துக்கும் இடையில் ஊசலாடுமாறு நாம் நம்மை வளர்த்துக் கொண்ட வழியைப் பற்றிய முழுமையான அறிதல் மட்டுமே வெறுப்பை முடிவுக்குக் கொண்டு வர உதவும்.  பிடிக்கும் பிடிக்காது என்ற பிளவு ஏன் ஏற்படுகிறது?

கேள்வியாளர்: அன்பு இன்மை தான் காரணம்.

ஜே கே: எவ்வளவு விரைவாக எங்கோ கேட்டதை திருப்பிச் சொல்லி திருப்தியடைகிறோம் நாம்!  ஒருவர் சரியாக வாழ்ந்தால் பிளவு வராது,  அறிவின் விளக்கத்தால் வெறுப்பு முடிவுக்கு வரும், பழக்க வழக்கம்தான் இதற்குக் காரணம் தாக்கங்கள் இல்லாதிருந்தால் உண்மையான அன்பு விளக்கம் பெறும் இப்படியாக எங்கோ கேட்டதை, யாரோ சொன்னதை நீங்கள் மீண்டும் மீண்டும் கிளிப்பிள்ளைகளாக திருப்பிச் சொல்கிறீர்கள் என்பதை உணர்கிறீர்களா?  இதற்கு என்ன மதிப்பு இருக்கிறது?  எதுவும் இல்லை.  உங்களில் ஒவ்வொருவரும் இந்தப் பிளவைப் பற்றி தெரிந்திருக்கிறீர்களா?  தயவு செய்து விடையளிக்க அவசரப் படாதீர்கள். விடை எதுவும் தர வேண்டாம்.  உங்களுக்குள் என்ன நிகழ்கிறது என்று சற்று நிதானமாகப் பாருங்கள்.

இதுவா அதுவா என்ற குழப்பத்தில் நாம் இருக்கிறோம்.  வெறுப்பும் இருக்கிறது அதைக் குறித்த சகிப்பின்மையும் இருக்கிறது.  இந்தப் பிளவு ஏன் ஏற்பட்டது என்பது குறித்த தெளிவும் இருக்கிறது.  பல் வேறு தாக்கங்களால் இம்மாதிரியான மன நிலை ஒன்றை நாம்  அடைந்திருக்கிறோம்.  காரணங்களை ஆராய்வதால் மட்டுமே வெறுப்பினின்று அல்லது அச்சத்தினின்று  விடுதலை வந்து விடாது.  பட்டினிக்குக் காரணம் பொருளாதார மடத்தனம், பேராசை, பங்கீட்டில் தவறு என்று தெரிந்து கொள்வதால் மட்டும் பட்டினி பிரச்சினை தீர்ந்து விடுமா? நீங்கள் உண்மையில் பசியாக இருந்தால் அதன் காரணங்களை அறிவதால் மட்டும் உங்கள் பசி மறைந்து விடுமா?  அது போலவே வெறுப்பு, அச்சம் ஆகியவற்றின் காரணங்களை அறிதல் மட்டுமே அவற்றை முடிவுக்குக் கொண்டுவர முடியாது. அவற்றை எது முடிவுக்குக் கொண்டு வரும் என்றால், தேர்ந்தெடுத்தல் ஏதும் இல்லாத விழிப்புணர்வு தான். வெறுப்பை அடக்கியாளச் செய்யப்படும் எல்லா அறிவு  சார்ந்த  முனைப்புக்களும் முடிவுக்கு வருவது தான்.  

கேட்பவர்: இந்த வெறுப்பைப் பற்றி நாங்கள் அவ்வளவு விளக்கமாக அறிந்திருக்கவில்லை.

ஜே கே; ஒன்றைப் பற்றி அறிந்திருப்பது அதை வளர்த்துக்கொள்ள அல்லது அழித்துவிட நம்மை முனையச் செய்கிறது.  அது பிரச்சினையை மேலும் பலப் படுத்துமே தவிர முடிவுக்குக் கொண்டுவராது.  இந்த நடை முறைகளைப் பற்றி நீங்கள் விருப்பு வெறுப்பின்றி அறிந்திருக்க வேண்டும்.  அமைதியாக, இயல்பாக உணர்ந்திருக்க வேண்டும். இந்த விழிப்புணர்வில் புதிதாக ஒரு சக்தி பிறக்கிறது.  இது எந்த முயற்சியையும்  எந்த விதமான போராட்டத்தையும் அடிப்படையாகக் கொண்டதல்ல. இது மட்டுமே  வதைக்கும் பல்வேறு தாக்கங்களிருந்து உங்களை விடுபடச் செய்யும்.
                                

7 கருத்துகள்:

  1. .நல்ல பதிவு.தேர்ந்தெடுத்துள்ள கேள்வி பதில்களும் அருமை.
    தொடரவும் வாழ்த்துக்களுடன்...

    பதிலளிநீக்கு
  2. வெறுப்பு என்று இல்லை - எந்த உணர்வையும் நாம் கட்டுக்குள் வைத்தால் தொடர்ந்து விழிப்புடன் இருக்கலாம் என்று நினைக்கிறேன். கட்டுப்பட்ட நிலைக்கும் கட்டுங்கடங்காத நிலைக்கும் ஆன வேறுபாட்டையும் அதை அறிவதெப்படி என்பதையும். ஜேகே மட்டுமல்ல பிற ஞானிகளும் அதிகம் விவரிக்காமல் போனது துரதிர்ஷ்டமே. கட்டுக்கடங்காமல் போனபின் தான் தெரிந்து கொள்கிறோம்! 'தேர்தெடுத்தல் சாராத' விழிப்புணர்வு சாதாரண மனிதருக்கு ஏற்படாது என்று நினைக்கிறேன்; அதே நேரம் சாதாரண மனிதனுக்கு விழிப்புணர்வு தேவையென்றும் தேர்ந்தெடுத்தல் நம் இயக்கத்தின் இயல்பான செயல் என்றும் நினைக்கிறேன். வண்டி ஓடிக்கொண்டிருக்கும் பொழுதே டயர் மாற்றுவது சாத்தியமா தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  3. மனதால் அறிந்தும், அறியாப்படாமலும் இருக்கும் உண்மைகளை அழகாக வெளி கொண்டு வருகிறார் ஜே.கே.

    பதிலளிநீக்கு
  4. அருமையான பகிர்வு. பயனுள்ள கருத்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. உண்மைதான்.. காரணமற்றும் வெறுக்கிறோம்.. ஏன் என்பது பற்றி யோசிக்காமல்..வழிநடத்தப்பட்ட வழியிலேயே சிந்திக்கிறோம்..:(((

    பதிலளிநீக்கு
  6. சரியாகப் புரிந்துகொண்டால் உடனடியாக தடுக்கும் உணர்வுகளைச் சரிசெய்துகொள்ளமுடியும் !

    பதிலளிநீக்கு
  7. கேள்விகளும், பதில்களும் மிகவும் அருமை. தொடருங்கள்!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!